பயங்கரவாதத்தை முறியடிக்க...

மத வெறியால் மனிதர்கள் கணக்கின்றி கொல்லப்படுவது


மத வெறியால் மனிதர்கள் கணக்கின்றி கொல்லப்படுவது பல தேசங்களிலும் நடந்து வருகிறது. மதங்கள் அனைத்தும் நல்ல பண்புகளை மட்டுமே மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனப் போதிக்கின்றன. ஆனாலும், மனிதர்களில் சிலரது மூளை முழுவதும் விஷக் கருத்துகளும், வெறித்தனமும் ஆக்கிரமிப்பதால் உயிர்களின் மதிப்பை உணர்ந்து கொள்ளும் தன்மையற்று இருக்கிறார்கள். மனிதத்தை மறந்த இவர்களுக்கு எந்த மத அடையாளமும் கிடையாது. இப்படிப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

இந்தப் பூவுலகில் அமைதியைக் குலைத்து, மனிதர்களை வேட்டையாடச் சொல்லி இவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் இயக்கம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் வேரோடு அழிக்க வேண்டும். இது போன்ற வெறியாட்டங்கள் ஒருபுறமிருக்க, அன்றாடம் நடக்கும் கொலைகளைப் பற்றிய செய்திகள் நம்மைக் கவலை அடையச் செய்கின்றன. சொத்துத் தகராறு மற்றும் கலப்புத் திருமணங்களால்  உறவினர்களாலேயே மனிதர்கள் கொல்லப்படும் அவலம் ஒருபுறம்; மறுபுறம், முன் விரோதம் அல்லது வேறு காரணங்களுக்காக  உறவு அல்லாதவர்களும் கொல்லப்படுகிறார்கள்.

மனிதர்களின் இரக்கமற்ற செயல்களுக்கு விலங்குகளும் பலியாகின்றன. குடிபோதையில் இருந்த ஒருவர் தெரு நாயை அடித்துத் துன்புறுத்தி, அதன் கால்களைக் கட்டி சாலை வழியாக இழுத்துச் சென்று கழிவு நீர் கால்வாயில் வீசியுள்ளார். கால்கள் கட்டப்பட்ட நிலையில் தப்பிக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்ட நிலையில் அது இறந்திருக்கிறது. அந்தக் குடிகாரரை காவல் துறை கைது செய்துள்ளது. இதனை ஒருவர் ஒளிப்படமாக எடுத்து அலைபேசியில் மற்றவர்களுக்குப் பகிரவே, நாய் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குடிகாரருக்கு போதையால் புத்தி மழுங்கி வக்கிரம் ஏற்பட்டதென்றால்,  நாய் கொல்லப்படும் வரை ஒளிப்படம் எடுக்கத் தெரிந்தவருக்கு நாயைக் காப்பாற்றத் தோன்றாதது, போதையின்றியே அவர் மனதிலும் வக்கிரம் ஒளிந்திருப்பதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது. காவல் துறை இவரையும் சேர்த்தல்லவா கைது செய்திருக்க வேண்டும்?

இரக்கமற்ற மனப்பாங்கு கொண்ட இப்படிப்பட்ட தனி மனிதர்களுக்கும், இனப்படுகொலை செய்பவர்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. இவர்களின் காட்டுமிராண்டித்தனத்துக்கு வீட்டில் அல்லது அண்மைச் சமூகத்தில் ஒருவரோ, பலரோ ஏதாவது ஒரு வகையில் நிச்சயமாகக் காரணமாக இருப்பர். இது போன்ற சம்பவங்களைப் பற்றி நமக்குத் தெரிய வரும்போது வளரும் பிராயத்தில் இருக்கும் இளம் தலைமுறையினரைப் பக்குவப்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மனித உயிர்களிடமும், விலங்குகளிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். தான் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கும் நேரத்தில் தன்னைச் சேர்ந்தவர்களும், சேராதவர்களும்கூட நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் எனில் சண்டைகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் இடமே இருக்காது.

இலங்கை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உயிர்கள் பலியானதை அறிந்தவுடன் மதச்சார்பற்று வேதனை அடையாதோர் இருக்க முடியாது.  இந்த மாதிரியான சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் அறிந்த பின்னரும், சம்பவத்துக்காக வருத்தப்படுவாரேயானால் ஜாதி, மத வேறுபாடுகளை மீறி அவருக்குள் இருக்கும் மனிதர்கள் மீதான அக்கறை, அன்பை புரிந்து கொள்ளலாம்.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் கூட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் அன்பையும், இரக்கத்தையும் ஒவ்வொருவருடனும் பழகும்போது, தாங்களே கற்றுக் கொண்டதுடன், பெரியவர்களின் நடைமுறைகளில் இருந்தும் கற்றுக் கொண்டனர். ஒருவருக்கொருவர் பங்கிட்டுச் சாப்பிடுவதிலும், ஒன்றாக அமர்ந்து படித்தும், விளையாடியும், தூங்கியும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். 

ஒருவருக்கு பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில் மற்றவர்கள் அவற்றுக்குத் தீர்வு காண்பதை தங்களின் கடமையாகக் கொண்டிருந்தனர். பள்ளியில் மட்டுமின்றி, அண்டை வீட்டாரிடமும் ஜாதி, மத பாகுபாடின்றி கலந்து உறவாடினர். மாமா, அத்தை, சித்தி என்று உறவு முறை கூறி அழைத்து மகிழ்ந்தனர்.

அப்படிப்பட்ட காலச் சூழல் தற்போது இல்லை. அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளே உள்ளனர். உறவுகளுடனான அவர்களின் வட்டம் சுருங்கி விட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். அறிதிறன் பேசியில் ("ஸ்மார்ட் போன்') துரத்துவது, அடிப்பது, சுடுவது போன்ற விளையாட்டுகளில் உயிர்களிடத்து அன்பும், இரக்கமும் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தொலைந்து போய் விடுகிறது. பல தரப்பு மக்களுடன் பழகுவது குறைந்து விட்டதால், நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.

மனிதர்கள் அனைவரிடமும் வேறுபாடின்றிப் பழகுவதற்கும், அன்பைப் பரிமாறுவதற்கும், உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்குமான இணக்கமான சூழல் வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும் அருகி வருகிறது. எனவே, குழந்தைகளுடன் தங்களின் நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டும். அவர்களுடன் விளையாடி மகிழ வேண்டும். தம்முடைய பெற்றோர், மூதாதையர் காலத்து நடைமுறைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். விடுமுறைகளில் வெளியூர்களில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும். பள்ளிகளிலும் ஆசிரியர்கள் ஜாதி,மத வேறுபாடின்றி எல்லா மக்களுடனும் கலந்து பழகுவதன் அவசியத்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அன்பு, இரக்கம், மனிதாபிமானம் ஆகியவற்றை இளம் வயதிலேயே அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

மத வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கத்துடன் வாழும் சமூகத்தினர்களின் உறவுப் பாலத்தை பயங்கரவாதம் என்னும் பெரும் ஆயுதம் ஏந்தி துண்டிக்க முற்படுவோரின் முயற்சியை முறியடிக்க சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கைகோர்க்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியத் திருநாட்டில் மக்களிடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஓங்கி வளருமேயானால், பயங்கரவாதம் மூலம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முடியாது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com