"ஆயா ராம் கயா ராம்'

"ஆயா ராம் கயா ராம்' என்பது வார்த்தை இன்றிலிருந்து

"ஆயா ராம் கயா ராம்' என்பது வார்த்தை இன்றிலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல்வாதிகளின் பதவி ஆசையை வெளிப்படுத்த உருவான சொலவடை. ஹரியாணாவில் பட்டோடி சட்டப்பேரவையின் உறுப்பினராக 1967-இல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கயா லால் என்பவர் இரண்டு வாரங்களுக்குள் மூன்று தடவை கட்சி மாறி சாதனை படைத்தார். தாய்க் கட்சிக்கு மீண்டும் திரும்பிய கயா லால் மீண்டும் கட்சி மாறி எதிர்க்கட்சிக்குப் போனதை ஊடகங்களுக்குச் சொன்ன ராவ் பிரேந்திர சிங் என்ற காங்கிரஸ் தலைவர், "போன மச்சான் திரும்பி வந்தான்' என்பதை, கயா லாலின் பெயருடன் தொடர்புபடுத்தி "ஆயா ராம் கயா ராம்' (வந்த ராம், சென்ற ராம்) என வேடிக்கையாகச் சொன்னார். அன்று முதல் இது கட்சி தாவும் அரசியல்வாதிகளின் அடையாளச் சொல்லாகி விட்டது. இப்போது அதுவே வேறொரு வகையில் பெங்களூரில் மையம் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் 1972-இல் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறி அதிமுகவை தொடங்கியபோது, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறிப் பயணித்த "ஆயா ராம், கயா ராம்'கள் பலர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஏற்பட்ட ஜானகி அணி, ஜெயலலிதா அணிப் பிளவில் இங்கும் அங்குமாக மாறியவர்கள் வெகு சிலர் மட்டுமே. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி பிளவுபட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விலக்கிக்  கொண்டுவிடாமல் கூவத்தூரில் பாதுகாக்கப்பட்டார்களே தவிர, இங்குமங்கும் ஆதரவை மாற்றிக் கொண்டவர்கள்  சிலர்தான்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியும் துரோகமும் இரட்டைக் குழந்தைகள். அவர் தந்தை தேவெ கெளடா கர்நாடகத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாத தலைவர். தொடர்ந்து மத்தியில் ஜனதாதள ஆட்சிகள் கவிழ, மூப்பனார் இந்தியப் பிரதமர் ஆவார் என்கிற கணிப்பை பொய்யாக்கி கருணாநிதியின் ஆசியுடன் 1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை இந்தியாவின் 11-ஆவது பிரதமராகப் பணியாற்றி இந்திய வரலாற்றில் தென்னகத்திலிருந்து வந்த இரண்டாவது பிரதமர் என இடம்பிடித்தார்.

தேவெ கெளடாவின் மகன் குமாரசாமி முதல் முறை முதல்வரானது ஒரு விசித்திரமான அரசியல் நிகழ்வு. 1996 பொதுத் தேர்தலில் கனகபுரா தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரசாமி, 1998-இல் அங்கே தோற்றது மட்டுமல்லாமல் தன்னுடைய டெபாசிட் தொகையையும் பறி கொடுத்தார். தொகுதி மாறினாலும், 1999-இல் மீண்டும் தோல்வி, 2004-இல் ராமநகரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரைப் பார்த்து அதிர்ஷ்ட தேவதை சிரித்தது.

2004 தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மும்முனைப் போட்டியில் யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கர்நாடகத்தைத் தாயகமாக கொள்ளாத காங்கிரஸ்காரர் தரம் சிங் தன்னுடைய சாமர்த்தியத்தால் முதல்வரானார் (சீமான்கள் கவனிக்க...). தன்னுடைய 42 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் 28.1.2006-இல் குமாரசாமி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தார். இந்த கவிழ்ப்புக்கு பின்னணியில் பா.ஜ.க. இருந்தது என்பதைப் பின் நிகழ்வுகள் உறுதி செய்தன.

2009-ஆம் ஆண்டு வரை ஆயுள்காலமுள்ள சட்டப்பேரவையில் 4.2.2006-இல் குமாரசாமி பா.ஜ.க வுடன் ஒரு விநோதமான ஒப்பந்தத்தை செய்து கொண்டு முதல்வர் ஆனார். அதாவது, மீதியுள்ள ஆட்சிக்காலத்தில், பாதி நாள்கள் குமாரசாமியும் மீதி நாள்கள் பா.ஜ.க.வின் எடியூரப்பாவும் முதல்வராக பொறுப்பேற்க ஒப்பந்தம் செய்து கொண்டார். "நாடு ஆறு மாசம் காடு ஆறு மாசம்' என்ற  ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4.2.2006 குமாரசாமி தன் லட்சியக் கனவான முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தார்.

ஆட்சி ருசி கண்ட குமாரசாமி, 3.10.2007-இல் பதவி விலகப் போவதாக 27.9.2007-இல் அறிவித்தார். ஆனால், அக்டோபர் 4-ஆம் தேதி அவர் பதவி விலக மறுத்து 8-ஆம் தேதி ஆளுநரிடம் ராஜிநாமாவை சமர்ப்பித்தார். ஆனால், பா.ஜ.க.வுடன் சமாதானம் செய்து கொண்டதைத் தொடர்ந்து 12.11.2007-இல் எடியூரப்பா கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதல்வராகப் பதவி ஏற்றார். ஆனால், 7 நாள்களில் குமாரசாமி காலைவார, நவம்பர் 19-இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

2018-இல் நடந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 224 தொகுதிகளில் குமாரசாமியின் ம.ஜ.த. பெற்றது என்னவோ வெறும் 37 இடங்கள்தான். 104 இடங்களைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு குறிப்பாக அதன் தலைவர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் ஆதரவாக இருந்தாலும் இடையூறாக உச்சநீதிமன்றம் வந்தது. குதிரை பேரத்தில் ஈடுபட முடியாமல் எடியூரப்பா 36.35 சதவீத வாக்குகளைப் பெற்றும்கூட, வெறும் 18.3 சதவீத வாக்குகளைப் பெற்ற ம.ஜ.த.வின் குமாரசாமியிடம் காங்கிரஸ் ஆசியுடன் பதவியைப் பறி கொடுத்தார்.

இதற்கு முக்கிய காரணம், 38.14 சதவீத வாக்குகளுடன் 80 இடங்களை அள்ளிய காங்கிரஸ் "தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்' என்ற எண்ணத்தில் தானே முன்வந்து குமாரசாமி முதல்வராக நிபந்தனையற்ற ஆதரவை கேட்காமலே அறிவித்தது. இதற்குப் பின்னணியாக கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மீண்டும் பதவிக்கு வரக் கூடாது என்ற காங்கிரஸ் தலைவர்களின் உள்ளடி வேலை என்றும் நம்பப்படுகிறது. "சி.டி.'க்களை வெளியிட்டு தன் அரசியல் எதிரிகளைக் கலக்கிய குமாரசாமி இன்றைக்கு தன் வழியிலேயே தன்னை எதிர்த்துக் கலகம் செய்யும் ராஜிநாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்களையும் அவர்கள் பின்னால் அணி திரளும் மற்றவர்களையும் கண்டு இரண்டாம் முறையாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்.

தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். 222 உறுப்பினர்கள் உள்ள ஒரு அவையில் 113 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நிலையான அரசு தர முடியாது என்பது அரசியல் பாலபாடம். பதவி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இந்த அடிப்படைக் கணக்கு மறந்து போவதில் ஒன்றும் வியப்பில்லை. 

"கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பதுபோல, 113 இடங்கள் கிடைத்தால் முதல்வராக முடியும் என்ற நிலையில், எடியூரப்பாவுக்கு கிடைத்ததோ 104 இடங்கள்தான். 2 சுயேச்சைகளை விலைக்கு வாங்கினாலும் இன்னும் 7 இடங்கள் வேண்டும். காங்கிரஸ் பரம எதிரி; குமாரசாமி ஆசை காட்டி மோசம் செய்தவர்.

முதல்வராகி கர்நாடகத்தின் முதல் குதிரை பேரத்தை அரங்கேற்ற துணிந்தார். உடன் சட்டப்பேரவையைக் கூட்டச் சொல்லி அவர் நினைப்பில் மண்ணைப் போட்டது உச்சநீதிமன்றம். 2007-இல் 7 நாள்களும், 2008-லிருந்து 3 ஆண்டுகளும், 2018-இல் 2 நாள்களும் ஆக முதல்வர் பதவி அவருடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. 

1952-இல் 152 இடங்களுடன் முதன்மைக் கட்சியாக இருந்த காங்கிரஸ், 19 இடங்கள் வாங்கிய உழைப்பாளர் கட்சியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு பிற கட்சிகளுடனும், சுயேச்சைகளுடனும் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது; உழைப்பாளர் கட்சியும் 18 சுயேச்சைகளும் நாளடைவில் காங்கிரஸ் ஜோதியில் கலந்தனர். பிரதான எதிர்க்கட்சிகளுடன் ஆளும் கட்சி கூட்டணி அமைக்கும்போது கட்சிகள் காணாமல் போகும் என்பதற்கு இந்திய அரசியலில் பல உதாரணங்கள் உள்ளன.  

திமுகவின் பிரதான எதிரியான காங்கிரஸ் 1969-இல் பிளவுபட,  1971-இல் திமுகவுடன்  இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றிகளை அள்ளியது. காமராஜர் மறைய,  திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். விலக, அதிமுக பக்கம்  காங்கிரஸ் திரும்பியது. 

பிரதமர் மொரார்ஜியின் வற்புறுத்தலால் 1979-இல் தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில் இந்திராவை ஆதரிக்க, எம்.ஜி.ஆர். தயங்க, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் கருணாநிதி. மிசா கொடுமைகளை மறந்து 1980-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் திமுக கூட்டணி அமைத்து வெற்றியை அள்ளியது; எனினும், உடனே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 50:50 என்ற பேரத்துடன் போட்டியிட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. 

காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், மதிமுக, லட்சிய திமுக கட்சிகள் குறுகிய தேர்தல் ஆதாயங்களைக் கருதி பிரதான கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துத் தங்கள் சுய முகத்தை இழந்தன என்பதுதான் வரலாற்று உண்மை. அதிமுக, திமுக என்று மாறி மாறிக் கூட்டணி வைத்ததன் விளைவாகத் தனது தனித்தன்மையை இழந்து நிற்கிறது காங்கிரஸ். கம்யூனிஸ்டுகளின் நிலைமையும் அதுதான்.

மதிமுக அநேகமாகத் திமுகவுடன் இணைந்துவிட்டது போலத்தான். திமுக சின்னத்தில் போட்டியிட்டதன் அடுத்தகட்ட நகர்வு இணைப்பாகத்தானே இருக்க முடியும்? மாறிமாறிக் கூட்டணி வைத்தும் பாமக மட்டும்தான் தனது வாக்கு வங்கியை இழக்காமல் இருக்கிறது.

தமிழகத்தில் பாமகவைப் போலவே, கர்நாடகத்தில் இந்த விதிக்கு விலக்காகத் திகழ்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம். பாஜகவுடனும் காங்கிரஸூடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்தும்கூட அந்தக் கட்சி இன்னும் ஓர் அரசியல் சக்தியாகத் தொடர்கிறது என்பதே ஆச்சரியம்தான். அடுத்த சுற்று அரசியல் மாற்றத்தில்தான் தேயப் போவது காங்கிரஸா, மதச்சார்பற்ற ஜனதா தளமா என்பது தெரியும். அடுத்த தேர்தல் வரும் வரை "ஆயா ராம், கயா ராம்' விளையாட்டு தொடரும்...!

கட்டுரையாளர்:மூத்த வழக்குரைஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com