18 ஆகஸ்ட் 2019

"சூப்பர் ஓவரில்' சிக்கிய கோப்பை!

By எஸ்.ஸ்ரீதுரை| DIN | Published: 18th July 2019 02:12 AM


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்து முடிந்துள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெற்ற இந்தப் போட்டி புதிய சாம்பியனை உலகுக்குக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையிலான இறுதி ஆட்டம், நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த அனைவரையும் சுமார் எட்டு மணி நேரம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்றே சொல்லவேண்டும்.

ஐந்து நாள்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களின் முதல் நான்கு நாள்கள் பெரும்பாலும் சலிப்பூட்டுவதாக அமைவதும், இறுதிநாள் ஆட்டம் மட்டும் சற்றே விறுவிறுப்பாக இருப்பதும் நாம் அறிந்ததுதான். அதிலும், யாருக்கும் வெற்றி-தோல்வி இன்றி  "டிரா'வில் முடிவடையும் வாய்ப்பு மட்டுமே இருக்குமெனில், அந்த ஐந்தாம் நாள் ஆட்டமும் சுவாரசியமற்றதாகவே இருக்கும். 

டெஸ்ட் ஆட்டங்களுக்கு ஒரு மாற்று வடிவாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், தொடக்கத்தில் இரு அணிகளும் தலா 60 ஓவர்கள் விளையாடவேண்டியிருந்தது. இதனால், பல ஒரு நாள் ஆட்டங்கள் இரண்டாம் நாளும் தொடர்ந்து விளையாடப்பட்டன. 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் தலா 50 ஓவர்கள் விளையாடும் முறை வந்தது. ஆட்டம் ஒரே நாளில் முடிந்து விடுவதால் விறுவிறுப்பு கூடியது.  இந்த முறை  இந்தியா-நியூஸிலாந்து அரை இறுதி ஆட்டம் போன்று இரண்டாம் நாளும் ஆட்டம் தொடர்வது வெகு அபூர்வமான ஒரு நிகழ்வாகும்.

உண்மையைச் சொல்வதென்றால், இங்கிலாந்து- நியூஸிலாந்து இடையிலான இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம், 20 ஓவர் போட்டிகளுக்கே சவால் விடும்படி மிகவும் விறுவிறுப்பாகவும், பந்துக்குப் பந்து பரபரப்பைக் கூட்டுவதாகவும் அமைந்தது. இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அந்த இரண்டு அணிகளும் முதல்முறையாக அதை வென்று, தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடினர்.
இரு அணிகளும் தாங்கள் முதலில் விளையாடிய ஐம்பது ஓவர்களில் மட்டுமின்றி, பின்னர் ஆடிய சூப்பர் ஓவரிலும் ஒரே மாதிரியான ரன்களை எட்டியிருந்ததன் மூலம், பார்வையாளர்களின் இதயத் துடிப்பினை விநாடிக்கு விநாடி அதிகரிக்கச் செய்தனர். இரண்டு அணிகளும் சமமான திறமையை வெளிப்படுத்தின. ஆனால், இருவரில் யார் அதிக எண்ணிக்கையில் பவுண்டரிகளை அடித்தனர் என்ற அடிப்படையில் உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

எனினும், பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரை முடிவு செய்யும் இந்த விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. "சூப்பர் ஓவர்கள் முடிந்த பின்னரும் சமநிலை தொடர்ந்தால் (கால்பந்து ஆட்டங்களைப் போல) மேலும் கூடுதலாக சூப்பர் ஓவர் அளிக்கலாம்' என்ற யோசனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்வைத்துள்ளார். இங்கிலாந்து, நியூஸிலாந்து இரு அணிகளையுமே கூட்டு சாம்பியன்களாக அறிவித்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்ற அதேநேரத்தில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் உள்ளங்களையும் நியூஸிலாந்து வீரகள் வென்று விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட்டை விளையாடத்தொடங்கி, 44 ஆண்டுகள் கடந்த பின்னர் அதன் முழுப் பயனை கிரிக்கெட் ரசிகர்கள் நுகர்ந்தனர் என்றால் அது மிகையாகாது.

இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவடைந்தபோது சோர்வுடன் காணப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தொடர்ந்து சூப்பர் ஓவரில் விளையாடியது அவரது தணியாத ஆர்வத்தை எடுத்துக்காட்டியது.

பொதுவாக, இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டங்களில்  சில அணிகள் 50 ஓவர்களில் 300-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தன. நாள்கள் செல்லச் செல்ல ஆடுகளங்களின் தன்மை மாறத் தொடங்கியது. 250 ரன்கள் எடுப்பதே சிரமமாக இருந்தது. அனுபவம் குறைந்த ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய இந்திய அணி, வெறும் 224 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஏதாவது ஒரு சாதாரண அணி, பலம் வாய்ந்த ஓர் அணிக்கு அதிர்ச்சி கொடுப்பது வழக்கம். ஆனால்,  பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி எல்லா ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவியது சற்றே ஏமாற்றமளித்தது. பலம் பொருந்திய தென்னாப்பிரிக்கா அணி மோசமாக விளையாடியதும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெறாததும் இந்த உலகக் கோப்பையின்  அதிர்ச்சிகள் எனலாம். 

இந்தப் போட்டியில் வீரர்கள் கேன் வில்லியம்ஸன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்,  மிச்செல் ஸ்டார்க்,  வார்னர், ஷகிப் அல் ஹஸன், லஸித் மலிங்கா ஆகியோருடன் இந்தியாவின் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, பாண்டியா மற்றும் மஹேந்திர சிங் தோனி போன்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அரை இறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்தியா அடைந்த தோல்விக்கு விராட்  கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய இருவருமே பொறுப்பு என விமர்சனம் எழுந்துள்ளது. நடு வரிசையை ("மிடில் ஆர்டர்') இந்த இருவரும் சரியாக உருவாக்கத் தவறிய காரணத்தால், தொடக்க நிலை வீரர்கள் விரைவில் "அவுட்' ஆனால், மொத்த அணியும் திணற வேண்டியிருந்தது. இது அனுபவம் மிக்க தோனியின் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஊடகங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

வெற்றி பெறும்போது பெரிய தவறுகள் மறக்கப்படுவதும், தோல்வி ஏற்படும்போது சிறிய தவறுகள்கூட பெரிதுபடுத்தப்படுவதும் இயல்புதான். எது எப்படியாயினும், இந்திய அணியின் பலங்களையும் பலவீனங்களையும் ஆராய்ந்து சரிசெய்ய வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடனடி  கடமையாகும். 

இப்போதைக்கு, நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்தை வாழ்த்துவோம். அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கல்விச் சாலையும், சிறைச் சாலையும்
முதியவர்களைப் போற்றுவோம் 
பயிர்க் காப்பீடு, நிறுவனங்களுக்கு அறுவடை
சாகசக் கலை காப்பாற்றப்படுமா?
சவால்களைச் சந்திப்போம்