திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாமே!

பெருமைமிக்கப் பெரியோர்களின் பிறப்பு மட்டுமல்ல, அவர்களின் இறப்பும்கூட கொண்டாடப் படுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; மனித குலத்தின் உயர்வுக்காகவே வாழ்கின்றனர்.

பெருமைமிக்கப் பெரியோர்களின் பிறப்பு மட்டுமல்ல, அவர்களின் இறப்பும்கூட கொண்டாடப் படுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; மனித குலத்தின் உயர்வுக்காகவே வாழ்கின்றனர். மக்களுக்காக வாழ்கின்றவர்களை உலகம் எப்போதும் மறப்பதில்லை.
இந்த நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் குறைவில்லை. அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்; நமக்கெல்லாம் வழிகாட்டிகள்; அவர்களுக்கு மரணமில்லை; மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அதுதான். அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காகவா? இல்லை; இதன் மூலம் நமக்கு நாமே புதுவாழ்வு பெறுகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்; நம்பிக்கையும், அடுத்தவர் நலனில் அக்கறையும் கொள்கிறோம்; மனித சமுதாயத்துக்கு நமது கடமையும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த நாள்களில் ஏழைகளுக்கு உணவு, உடை அளிப்பது; ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது; கவியரங்கம், கருத்தரங்கங்கள் நடத்துவது; போற்றிப் பாடல்கள் பாடுவது; இத்துடன் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தொடக்கத்தினை யொட்டி சிறையில் ஏழு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்; ஆனாலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் அனுபவித்திருந்தும் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. இது பற்றிய ஆர்ப்பாட்டமும், முறையீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கருணை அடிப்படையில் அன்றைய அரசு விடுவித்தது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் கேள்வி எழுந்தபோது, கருணையில் பாரபட்சமெல்லாம் இல்லை என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் தண்டனைக் கைதிகளில் சுமார் 1,800 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில்  அறிவித்தார். தண்டனை காலத்துக்கு முன்பே கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அவரது ஒப்புதலின்படியே அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டு தருமபுரி பேருந்து எரிப்பில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவியர்  3 பேர் எரிந்து சாம்பலாயினர். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்யக் கோரி அரசு சார்பில் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரையை முதலில் ஆளுநர் நிராகரித்துவிட்டார். சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் ஆளுநருக்கு தமிழக அரசு மனுச் செய்தது. அதில், பேருந்து எரிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததல்ல. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்பதால் நல்லெண்ண அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், 3 பேரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் 18 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும் அனுப்பியது. ஆனாலும், அவர்களை விடுதலை செய்ய இதுவரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.
இந்தியாவில் மரண தண்டனைக்குள்ளாகி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துவிட்டுக் காத்திருந்த 50 பேரின் சார்பாக கடந்த 2005 அக்டோபர் 17-ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
மரண தண்டனை சிறைவாசிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து, அவர்கள் வாழ வழி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவர்களைச் சுமையாகக் கருதாமல் மனிதச் சொத்தாக மதித்து நல்வழிப்படுத்த ஆவன செய்ய வேண்டும். இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய காலத்தைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்... என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.
தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருந்தபோதிலும் உள்துறை அமைச்சகம் செய்யும் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுக்க முடியும். இதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றார்.
உலகில் யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வாழும் சூழ்நிலையும், வாய்ப்புகளுமே அவனைக் குற்றவாளியாக்குகின்றன என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. குற்றங்களின் தன்மைக்கேற்ப தண்டனையும் காலம் காலமாக இருந்து வருவதுதான். காலத்திற்கேற்பவும், ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களுக்கேற்பவும் தண்டனை மாறுபடுகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் யானையால் மிதித்தும், கழுவேற்றியும், கொலைவாளால் வெட்டியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் சில அரபு நாடுகளில் மரண தண்டனைக் கைதிகளைப் பொது இடத்தில் நிறுத்தி பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்லும் முறையும், பொது இடத்தில் தூக்கில் போடும் முறையும் இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் 8 குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர, போதைப் பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அவ்வாறு தண்டனை அனுபவித்தவர் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
மரண தண்டனை விதிப்பது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகியவற்றை மீறிய செயலாகாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறியுள்ளது. அத்துடன் இது பன்னாட்டு உடன்படிக்கையை மீறிய செயலாகாது.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளோடு முடியாது. ஆயுளின் இறுதிவரை தண்டனைதான் என்று கூறியுள்ளது. அப்படியானால் தூக்குத் தண்டனை தேவையில்லை என்றாகிறது. தூக்குத் தண்டனையின் நோக்கம் குற்றவாளி உலகில் நடமாடக் கூடாது என்பதுதான்; ஆயுள் முழுவதும் சிறையில் கிடக்கும்போது, குற்றவாளிக்கு அந்தத் தண்டனையே போதும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாகரிக காலத்தில் பழைமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கலாமா? பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பது பழங்காலச் சட்டம். வீட்டைக் கொளுத்தியவனுக்குத் தண்டனை, அவன் வீட்டைக் கொளுத்துவது என்று இப்போது சட்டம் இல்லை. அதே போன்று உயிருக்குப் பதில் உயிர் என்னும் மரண தண்டனை இருக்கலாமா?
இந்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மனித உயிர்களுக்கு எதிரான மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டும் என உலக நாடுகளுக்கு பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின் பொன்விழாவில் ஐ.நா. பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பல உலக நாடுகள் மரண தண்டனையை விலக்கிக் கொண்டுள்ளன. தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகள் பிறந்து, வாழ்ந்து, உபதேசித்த நாடு; அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே!
இங்கே தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைவிட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இது பற்றி நீதிபதிகளே பலமுறை தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையை அரசியல் கலக்காமல் மனிதநேயத்துடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஞானிக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்றார் ஆஸ்கார் ஒயில்டு. இதை, சட்டத்தின் ஆட்சி என்பது ஞானிகள், பாவிகள் ஆகிய இருவருக்குமானது என்று தன் தீர்ப்பு ஒன்றில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார். 
தவறு செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்கே அரசும், சட்டங்களும் வழிகாட்ட வேண்டும். சீர்திருத்தச் சாலைகளாக சிறைகள் இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாகச் செயல்படக் கூடாது. திருந்தி வாழ்வதற்கான தீர்ப்புகளாக தண்டனைகள் இருக்க வேண்டும்; ஒழித்துக் கட்டும் ஒருவழிப் பாதையாய் இருக்கக் கூடாது. 

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com