பச்சையப்பரின் நோக்கம் நிறைவேற...

ஆறு கல்லூரிகளையும், ஏழு உயர்நிலைப் பள்ளிகளையும் பராமரிப்பதற்காக வள்ளல் பச்சையப்பர் அளித்த பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்கள் முறையாகவும், நேர்மையாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஆறு கல்லூரிகளையும், ஏழு உயர்நிலைப் பள்ளிகளையும் பராமரிப்பதற்காக வள்ளல் பச்சையப்பர் அளித்த பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்கள் முறையாகவும், நேர்மையாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும். நிர்வாகச் சீர்கேடுகள் அடியோடு களையப்பட வேண்டும். இந்த திரண்ட செல்வத்தை வைத்து வள்ளல் பச்சையப்பர் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி தினமணியில் கட்டுரை எழுதியிருந்தேன். 
பச்சையப்பர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்களும் இவ்வாறே வலியுறுத்தியதையொட்டியும், அறங்காவலர் குழுவுக்குரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் பட்டியலில் பல தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்ட ஆணையை கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அன்று பிறப்பித்தது. இந்த ஆணையின்படி பச்சையப்பர் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக முன்னாள் நீதிபதி பி. சண்முகம் நியமிக்கப்பட்டார்.
கடந்த 7 மாதங்களாக நீதிபதி பி.சண்முகம், அவருக்குத் துணையாக நியமிக்கப்பட்ட  அலுவலர்களும் பச்சையப்பர் அறக்கட்டளை  நிர்வாகத்தில் நடைபெற்றவை குறித்து நுணுக்கி ஆராய்ந்து கடந்த ஆண்டு  மார்ச் 31-ஆம் தேதியன்று இடைக்கால அறிக்கையை அளித்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி முறைகேடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் அதிர்ச்சி தருகின்றன.   
பச்சையப்பர் அறக்கொடையாக அளித்த திரண்ட செல்வத்தை நிர்வகிப்பதற்காக 1841-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தலையிட்டு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. பச்சையப்பரின் சொத்துக்கள் மட்டுமல்லாது, 28 கொடையாளிகள் அளித்த சொத்துக்களும் பச்சையப்பர் அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
அதற்குப் பிறகு பல காலகட்டங்களில் ஒன்பது முறை உயர்நீதிமன்றம் தலையிட்டு காலத்திற்கேற்ற மாறுதல்களை தனது ஆணையில் செய்துள்ளது. இறுதியாக 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் புதிய திட்டம் ஒன்றை வகுத்தது.
அதன்படி பச்சையப்பர் அறக்கட்டளையின் நிறுவனர் நாளை ஆண்டுதோறும் தக்கவாறு அறங்காவலர்கள் கொண்டாடவேண்டும். பச்சையப்பருக்கு நன்றி செலுத்துவதற்காக இந்த விழாவை நடத்துவது மட்டுமல்ல, அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகளை அதிகாரப்பூர்வமான கணக்காயரின் சான்றிதழுடன் அச்சடித்து மக்களுக்கு வழங்குவதோடு அறக்கட்டளையின் செயற்பாடுகளை விளக்கிக் கூறவும் வேண்டும் என திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2016-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம்  தேதிக்குப் பிறகு  நிறுவனர் நாள் கொண்டாடப்படாதபோது 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதி ஆண்டுகளுக்குரிய வரவு- செலவுக் கணக்குகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், உயர்நீதிமன்ற ஆணையின்படி வரவு-செலவுத் திட்டத்தைச் சரிபார்க்க அறக்கட்டளைக்கு உள் கணக்காயரும், வெளி கணக்காயரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் விளைவாக, அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஊழலும், முறைகேடுகளும் எவ்விதத்  தடயமும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளன. முறையான கணக்குகளோ அல்லது விதிமுறைகளோ பின்பற்றப்படவில்லை. திரண்ட சொத்துக்கள், வங்கிகளில் நிரந்தர வைப்புநிதி ஆகியவை இருந்தபோதிலும் அறக்கட்டளையின் நிதிநிலை பெரும் சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகத்திலுள்ள சொத்துக்கள் மற்ற அறநிலையங்களின் நிதிகள் கண்டபடி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன. 
அறக்கட்டளைகளின் நோக்கங்களுக்கு எதிராக இவை செலவழிக்கப்பட்டுள்ளன. பச்சையப்பர் அறக்கட்டளையின் கீழ் இருந்த கோவிந்த நாயக்கர் சொத்துக்களின் வாடகை வருமானத்தில் ரூ.50 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
சென்னையிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை அம்மா அரங்கம் என்ற பெயரில் பெரிய கட்டடம் ஒன்று ரூ.28.93 கோடியில் கட்டப்பட்டது.
கல்வி நோக்கத்துக்காகக் கட்டப்பட்ட  இந்த அம்மா அரங்கம், திருமண விழாக்கள்,  குடும்ப விழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது; அதாவது, தனிப்பட்ட ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி என 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதன் மூலம் குத்தகைதாரர் மட்டுமே ஆதாயம் அடைவார்.
விழாவுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக பள்ளியின் விளையாட்டுத் திடல் மாற்றப்பட்டது. இதன் மூலம் அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.8.36 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகும். அதுமட்டுமல்ல,  அறக்கட்டளையின் மற்ற  அங்கங்களின் கணக்குகளிலிருந்து ரூ.8.77 கோடி அம்மா அரங்க கட்டடச் செலவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அறக்கட்டளையில் உள்ள பல்வேறு அங்கங்களிலிருந்து 2017-18-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.23.15 கோடி வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் பிற அங்கங்களின் நிதிகள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது. என்ன நோக்கத்துக்காக அவை அளிக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்துக்காக மட்டுமே செலவிடப்படவேண்டும்.
ஆனால், அறங்காவலர்கள் தங்கள் விருப்பம்போல் பல்வேறு நிதிகளை மாற்றிச் செலவழித்துள்ளனர். இத்தகைய  முறைகேடுகள் மேலும் பலவற்றை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பச்சையப்பர் அறக்கட்டளை நிர்வாகம் முறையான கணக்கு வழக்கு வைத்துக்கொள்வதற்கான வழியையோ அல்லது வரிச் சட்டங்களின் விதிகளையோ பின்பற்றவில்லை. ஆண்டுதோறும் வரவு-
செலவுக் கணக்குகளை அளிக்கவில்லை. வருமான வரி அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் அனுப்ப வேண்டிய கணக்குகளையும் அனுப்பத் தவறியுள்ளனர். அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்
களைக்  குறைந்த  வாடகைக்கோ, குறைந்த  குத்தகைக்கோ அளித்து அறக்கட்டளைக்குப்  பெரும் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 
இறுதியாக நீதிபதி பி.சண்முகம் கீழ்க்கண்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அவற்றில் முக்கியமானவை வருமாறு:- கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் மூலம் மட்டுமே அறங்காவலர்கள்  தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது  நியாயமானதல்ல. அறக்கட்டளையினால் பயன்பெறுவோரும் அறங்காவலர் குழுத் தேர்வில் பங்கெடுக்கும் வகையில்  அறக்கட்டளையின் சட்டம் திருத்தப்படவேண்டும்.
அறங்காவலராகப் போட்டியிடுபவர் சென்னை மாநகரில் ரூ.10,000-த்துக்கும் குறையாமல் சொத்துவரி செலுத்துபவராக இருக்கவேண்டும் என்ற விதிமுறையின் மூலம் செல்வம் படைத்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இது மாற்றப்படவேண்டும்.
சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இப்போது வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியும். திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.
கடந்த காலத்தில்  அறங்காவலர்களாக இருந்து பல்வேறு நிதி முறைகேடுகளிலும், நிர்வாக முறைகேடுகளிலும் ஈடுபட்டவர்கள் மீண்டும் அறங்காவலர்களாகப் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும்.
 கடந்த 2014 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பச்சையப்பர் அறக்கட்டளையினால் கட்டப்பட்ட கட்டடங்களை மற்றும்  கட்டட வேலைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்பீடு என்ன என்பதை ஆராய பொறியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
 அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் சொத்துக்களின் இப்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகைகள் வாங்கப்படவேண்டும்.
அறக்கட்டளைக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவை சரியான முறையில் மதிப்பிடப்படவோ, பட்டியலிடப்படவோ இல்லை. எனவே, நிலங்கள் கட்டடங்களாக மாற்றப்பட்டு நாளடைவில் ஆவணங்களிலிருந்து அகற்றப்படும் அபாயம் உள்ளது. பல்வேறு கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நகைகளின் மதிப்பீடு எவ்வளவு என்பது இதுவரை பட்டியலிடப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பச்சையப்பர் அறக்கட்டளையின் நிர்வாகம் கல்லூரிகள், அசையும் சொத்துக்கள், அறக்கட்டளை என மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் போன்ற அறிவுரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட அறிவுரைகளை உயர்நீதிமன்றம் ஆராய்ந்து உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் வரை, பச்சையப்பர் அறங்காவலர் குழுவுக்கான தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டு, மறு தேர்தல் வரை உயர்நீதிமன்றம் நியமித்த இடைக்கால நிர்வாகம் தொடர்வது பச்சையப்பரின் நோக்கங்களைச்  செம்மையாக நிறைவேற்ற உதவும்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com