அறிவிப்புகளால் ஆயிற்றா?

இந்தியாவில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் வறுமையிலிருந்து மீள்வதற்காக மாத ஊதியம் வழங்கப்படும் திட்டம் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால்

இந்தியாவில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் வறுமையிலிருந்து மீள்வதற்காக மாத ஊதியம் வழங்கப்படும் திட்டம் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கூறியது நாடு முழுவதிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, உயர் ஜாதியினர் மத்தியில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அரசுத் துறைகள் அனைத்திலும் வழங்கப்படும் என்று நிறைவேற்றிய சட்டமும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அதே போன்று, ஜனவரி 31-ஆம் தேதி கூடிய இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். இதன் மீதும் நாடு முழுவதிலும் விவாதம் காரசாரமாகத் தொடங்கும்.
நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெருகியிருக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.  2018-ஆம் ஆண்டு இறுதியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கீழ்நோக்கி சரிந்து 0.7 அளவைத் தொட்டுள்ளது என்ற மதிப்பீடு உலக அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அண்மையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியோடு வரவேற்று மக்கள் பாராட்டுவதற்குப் பதிலாக அவநம்பிக்கையோடு விவாதத்தில் ஈடுபடுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.  இன்னும் சில மாதங்களுக்குள் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், இத்தகைய வாக்குறுதிகள், பிரகடனங்கள் ஆகியவற்றை தேர்தலுக்காக அறிவிக்கப்படும் வழக்கமான வாக்குறுதிகள் என மக்கள் வரவேற்பதாக மக்கள் இல்லை.
இந்திய நாடு அரசியல் சுதந்திரம் பெற்றவுடன், அன்று பொறுப்பேற்றிருந்த மத்திய அரசின் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேருவும், அவரது அரசும் சந்தித்த சோதனைகளுடன் இன்றைய சோதனைகளை ஒப்பிட முடியாது. அன்று அரசியல் சுதந்திரத்தைப் பெற்றாலும், நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவை இரு நாடு எனப் பிரித்தது பெரும் கவலையை ஏற்படுத்தியது. மதக் கலவரங்களால் நடந்த கொலைகள், கொள்ளைகள், இடம்பெயர்ந்த அலங்கோலம் ஆகிய அனைத்தும் ஓர் ஊழிக்கால தாண்டவத்தைக் காட்டிக் கொண்டிருந்தன.
இவற்றையும்விட விவசாயத்திலும், நெசவுத் துறையிலும் கட்டடக் கலையிலும் பல நூறு ஆண்டுகளாக உலகையே ஈர்க்கும் நாடாக விளங்கிய இந்தியா, விடுதலை பெற்ற மக்களுக்கு காசு கொடுத்தாலும் பசி தணிக்கும் தானியம் கொடுக்க முடியாத வறட்சியில் சிக்குண்டு தத்தளித்தது.  கடும் பசியால் வாடிய மக்கள், நியாயவிலைக் கடைகளில் மணிக்கணக்கில் நிற்க நேரிட்டது.
அன்றைய உலகில் நிலவிய நிலவரப்படி,  அமெரிக்கா ஒன்றுதான் அளவற்ற தானியத்தை, எண்ணற்ற வாகனங்களை, இதர தேவைப் பொருள்களை விற்கக்கூடிய நாடாக இருந்தது. ஆனால், இந்திய நாட்டின் கையில் அவற்றை வாங்குவதற்கான டாலர் நாணயம் இல்லை. எனவே, பிஎல்480 அமெரிக்கச் சட்டத்தின்படி தானியத்தை பல நிபந்தனைகளோடு கடனாகப் பெற்று நெருக்கடியைச் சமாளித்தனர்.
அன்று கோரமாக எரிந்த வகுப்புவாதக் கலவரத்தீயை அணைத்து அன்றைய தலைவர்கள், காந்தியடிகளின் ஒத்துழைப்போடு அமைதியை மீட்ட  அந்த அரிய சாதனையை அடக்கத்தோடு நாமும், நம் சந்ததியும் புரிந்துகொள்ள வேண்டும். அதே போன்று பண்டித ஜவாஹர்லால் நேரு உலக நாடுகளால், பல நாட்டு மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தலைவராகவே மதிக்கப்பட்டார். 
இருப்பினும் நிர்வாகப் பொறுப்பு என்பது எவ்வளவு சிரமங்களைக் கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்து சுதந்திரப் போராட்ட இயக்க அனுபவமுடைய சர்தார் வல்லபபாய் படேல், ராஜாஜி, காமராஜர், பி.சி.ராய்,  டாக்டர் ராஜேந்திர பிரசாத் என மேலும் பல புகழ் பெற்ற ஒரு படைவரிசை தலைமை மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்ததால், பசியால் துவண்ட இந்திய நாடு மத வெறுப்பால் வெந்து கொண்டிருந்த நிலையில், கூட்டுத் தலைமையின் ஒன்றுபட்ட முயற்சியால் நெருப்பாற்றை இந்தியா கடக்க முடிந்தது. அதன் பின்னர், படிப்படியாக பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டே வருகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பிறந்து, சுதந்திரம் பெற்ற பின் பலவகை ஆட்சிகளைப் பார்த்த பின்பும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பேற்றைப் பெற்ற மக்கள் அதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
நேருவின் காலத்துக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்திரா காந்தி, வறுமையை ஒழிப்போம் என்று முழங்கியதையும் கேட்டோம்; வங்கிகளை அரசுடைமை ஆக்கியதையும் பார்த்தோம்; கிழக்கு வங்க மக்களின் விடுதலைக்கு உதவிய வேள்வியின் தாயாகவும் பார்த்தோம். ஆனால், அவரும் வகுப்புவாத வெறிக்குப் பலியாக நேரிட்டது.
2014-இல் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் ரூ.15லட்சம் வழங்க முடியும் என்று முழங்கியதை மாற்றத்தை விரும்பிய மக்கள் நம்பினார்கள்; வாக்களித்தார்கள்; ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் அனைவருக்கும் மாத ஊதியம் என்ற ராகுல் காந்தியின் அதிரடி அறிவிப்பை நம்ப முடியாமல் விவாதிப்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. ஏனெனில் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்திலும் வசதி படைத்த கோடீஸ்வர குடும்பங்கள்தான் வளர்ந்தன. இரண்டாவது உலகப் போரில் தொடங்கிய, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி என்று சம்பளத்தோடு வழங்கப்படுவது இன்றும் நீடிப்பதே பஞ்சமும் படியும் நம்மோடு பிறந்ததைக் காட்டுகிறது.
இதைத்தான் அமர்த்தியா சென், இந்தியாவில் மாத ஊதியம் வாங்கக் கூடிய குடும்பங்கள் எத்தனை என்றும், எத்தனை கோடிப் பேர் மாத ஊதியமே பார்க்காதவர்கள் என்ற கணக்கையும் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பணியில் சேர்ந்து மாத ஊதியம், போனஸ், ஓய்வூதியம் என்ற ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்கள் இந்தியாவில் 10%க்கு மேல் இல்லை. மீதமுள்ள 90% பேருக்கு என்ன வேலையை, எப்படி, யார் வழங்குவது? தனியார் துறையில், அவர்களது உற்பத்திச் செலவுக்கு உட்பட்டுத்தான் பணிக்கு நபர்களை நியமிப்பார்கள்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அண்மையில் நடந்தது; போராட்டம் நீடித்ததால், ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தவுடன் லட்சக்கணக்கில் நீண்ட வரிசையில் ரூ.10,000 கொடுத்தால் போதும் எனக் கூறியபடி நின்றதைக் கண்டோம். இதே போன்று, காவல் துறை, சுகாதாரத் துறை, ராணுவம் ஆகியவற்றிலும் 200 இடங்களுக்கு, 30,000, 40,000 பேர் எனப் போட்டி போடுகின்றனர். எடுக்கப்படுவோர் 200 பேர்; ஏமாற்றத்துடன் வீடு திரும்புவோர் 2 லட்சம் பேர். இந்த நிலையைப் புள்ளிவிவரங்களை வைத்து, கட்சி மீதான பக்திக் கண் கொண்டு விவாதித்தால் பலன் தராது.
இதுவரை உலக நாடுகள் எதிலும் ஏழைகள் அனைவருக்கும் மாத ஊதியம் உண்டு என்று எந்த அரசும் அறிவித்ததாகத்தெரியவில்லை. போல்பார்ட் ஒருவர்தான், கம்போடிய நாட்டுக்கு நாணயமே தேவையில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தார்; எதிர்த்தோரைக் கொன்று குவித்தார்; உலகப் பொதுவுடைமை இயக்கத்துக்கே அவப்பெயரைத் தேடித் தந்தார்.
எனவே, ராகுல் காந்தி போன்றவர்கள் துணிச்சலுடன் ஒரு புதிய முயற்சிக்காக ஒரு முழக்கக்தை எழுப்புவதை, நாட்டு மக்களுக்காக நல்லன நாடும் நல்ல இளைஞர் எனப் பாராட்டலாம். ஆனால், பொருளாதார மாற்றங்கள் என்பது நல்ல எண்ணத்தால் மட்டும் பூத்துக் காய்த்து, பழுத்துவிடாது. அந்த நல்ல எண்ணத்துக்கு கடின உழைப்பும் மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
அதற்கு முதல் தேவை மக்கள் அதை நம்ப வேண்டும். மக்களின் நம்பிக்கை அணுசக்தியைவிட ஆக்கத்துக்கு அதிகம் உதவும். அந்த நம்பிக்கையை உருவாக்க, அவரது கட்சியிலேயே மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற பல்துறை அனுபவம் உள்ள வல்லுநர்கள் இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் போன்றவர்களையும் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை, ஏழைகள் எல்லோருக்கும் மாத ஊதியம் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற திட்டம் வகுக்கும்படி செய்தால், அறிவுக்குப் பொருத்தமாக இருக்கும்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, அதாவது ஆட்சியில் இல்லாதபோதே, சுபாஷ் சந்திர போஸ் ஐந்தாண்டு திட்டக்குழுவை அமைத்தார் என்பதையும் பாடமாக ஏற்று, தான் அறிவித்த கருத்துக்கு வலுசேர்க்க இத்தகைய முயற்சியை ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டும்.
இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு கருப்புத் தங்கம், அதாவது எரிபொருள் இறக்குமதி தீர்மானிக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கிறது. அதே போன்று, மஞ்சள் உலோகமான தங்கம் தன் மாய வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறது. இவை போதாதென்று, ஹவாலா, பிட் காயின் போன்ற கள்ள நோட்டுகளும் இந்தியாவுக்குள் புழங்குகின்றன. இவற்றுடன் மத பக்தியால் பல கோயில்கள், மடங்கள் பெற்று வரும் காணிக்கை போதாதென்று, சுவாமி சிலைகளையே திருடி, கடத்தி விற்றுவரும் நாட்டில் நல்லதை நாடினால் மட்டும் போதாது. அதற்காகப் போராடும் கூட்டுச் சக்தியை முதலில் திரட்ட வேண்டும்.
விவாதமாக நேரத்தை வீணாக்காது யோசனைகளாகப் பெறுவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்ய வேண்டும்; இல்லையேல் தேர்தல் ஒலிபெருக்கி சத்தத்தில் அவரது வாக்குறுதி மேலும் ஒன்றாகக் கருதப்படும்.

கட்டுரையாளர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 
மூத்த தலைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com