பெண்மையின் மென்மை எங்கே?

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை... என்று கூறுகிறது திருக்குறள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதன் பின்விளைவுகள் தீயனவாக இருக்கும் என்று தெரிந்த பின்பும்,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை... என்று கூறுகிறது திருக்குறள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதன் பின்விளைவுகள் தீயனவாக இருக்கும் என்று தெரிந்த பின்பும், அதனைச் செய்யத் துணிவது அறிவற்ற செயலாகும். புலன் இன்பங்களுக்கு வசப்பட்ட ஆண்கள், தாங்கள் விரும்பும் அச்சிற்றின்பங்களைப் பெறத் தடையாக இருப்பவர்கள் மீது கோபம் கொண்டு தாக்குவதும், கொலை செய்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன.
காலவெள்ளம் எத்தனையோ மாற்றங்களை நம் சமூகத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளது. அப்படிச் சேர்ந்தவற்றில் ஆண்-பெண் சமத்துவமும் ஒன்று. காலம் காலமாக ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதி நடத்தப்பட்ட பெண்கள் தற்போது கல்வி, நிர்வாகம், அரசியல், விளையாட்டு என்று பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு நேர்மறை விஷயங்களில் வளர்ச்சி பெற்று வந்த ஆண்-பெண் சமத்துவம், அப்படியே தொடர்ந்திருந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம்.
ஆனால், அண்மைக்காலமாக சில அதிர்வுச் செய்திகளைப் பார்க்கும்போது, இந்தச் சமத்துவம் எதிர்மறையாக வளர்ந்துவிடுமோ என்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.
ஆத்திரத்தில் ஒரு கணம் தன்வசமிழந்து ஒரு குற்றத்தை இழைத்துவிட்டுப் பிறகு வாழ்நாள் முழுவதும் துன்பப்படும் ஆண்கள் அநேகம். மரண தண்டனைக்குத் தப்பியவர்கள்கூட, தங்கள் மனசாட்சியின் கேள்விகளுக்குத் தப்ப முடியாமல், கூனிக் குறுகி வாழ்வதுண்டு. பெண்களில் சிலரும் அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதை ஒருவித படபடப்புடன் இன்றைய சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
காதலனுடன் வாழ்வதற்காகப் பெற்ற குழந்தைகளையே விஷம் வைத்துக் கொன்ற தாய், திருமணம் முடிந்த பிறகும் பழைய காதலனைக் கொண்டே தனது கணவனைக் கொல்லும் இளம் பெண், காதலனின் நண்பர்களுடன் செல்வதைத் தடுத்த தாயை அந்த நண்பர்களுடன் சேர்ந்து கொன்றவள், கூலிப்படையை ஏவித் தனது கணவனையே கொன்ற பெண் என்று மனதைப் பதறடிக்கும் குற்றங்களில் இந்தப் புனித பூமியில் பிறந்த சில பெண்களின் பெயர்கள் தினந்தோறும் அடிபடுவது மிகவும் அச்சமூட்டுகிறது. 
சென்ற வாரம் நடந்த மற்றொரு நிகழ்வு நம்மை மேலும் கலவரப்படுத்துகிறது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தன் கணவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருடன் கிடைத்த தொடர்பு நீடிப்பதற்காகத் தன் அப்பாவிக் கணவரை கூலிப் படையினர் மூலம் கொலை செய்துள்ளார். பின்னர், அவரைத் தேடுவது போல பாவனையும் செய்திருக்கிறார்.
ஆளரவம் அற்ற காட்டில் வீசப்பட்ட தன் கணவரது சடலத்தை அடையாளம் காட்டச் சென்றவர், துளியும் கண்ணீர் சிந்தாமல், அந்தச் சடலத்தைப் பார்த்துச் சிரித்திருக்கிறார்.அதிர்ந்து போன விசாரணை அதிகாரிகள் கேள்விக் கணைகளால் துளைக்க, கணவரைக் கொலை செய்ய அந்தப் பெண்ணே ஏற்பாடு செய்த உண்மை வெளிவந்திருக்கிறது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு சில உதாரணங்கள்தாம்.  தொடர்ந்து இதே போன்று  ஒவ்வொரு நாளும் நாம் பல செய்திகளைக் கேள்விப்படுகிறோம். 
தங்களைத் தவறான வழியில் செல்லத் தூண்டுபவர்களை விட்டுவிட்டு, தொட்டுத் தாலி கட்டிய கணவரையும், தான் பெற்ற குழந்தைகளையும், தாய்- தகப்பன் மற்றும் உறவினர்களையும் ஆள்வைத்துக் கொல்லத் துணிவதைக் கையறுநிலையில் பார்த்துச் செய்வதறியாமல்  திகைத்து நிற்கிறோம்.  வழக்கம்போல, இவற்றுக்கெல்லாம் காரணம் ஊடகங்கள், தொலைக்கட்சி நாடகங்கள் என்று குற்றஞ்சாட்டுவது எளிது. 
ஆனால், காலம் காலமாக ஆண்களுடன் ஒப்பிடுகையில், தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நமது பெண்ணினம் கடைப்பிடித்து வந்த தாய்மை உணர்வும் மென்மையும் எங்கே போனது என்றுதான் கேட்கத் தொன்றுகிறது. 
காய்கறி நறுக்கும் போது சிறிது ரத்தம் வெளியேறினாலும் பதைபதைத்துப் போகின்ற பெண் இனம், சாலையில் எவராவது அடிபட்டு விழுந்து கிடந்ததைப் பார்த்தாலும் நெஞ்சம் பதறித் துடிதுடித்துப் போகின்ற தாய்க்குலம், தன் உற்றார் உறவினர்களின் கதையையே முடிக்கத் துணிகின்ற அவலத்தை என்னவென்று சொல்வது?
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று இனியும் கேட்பது மடமைதான். நமது சமுதாயமும், நம்மை வாழவைக்கும் இந்தத் தேசமும் மேலும் முன்னேறிச் சாதனைகள் பல செய்வதற்கு ஆண்கள் மட்டும் உழைத்தால் போதாது. பல்வேறு களங்களில் பெண்களும் தங்களது பங்களிப்பைத் தருவது அவசியம். 
போர்முனைக்குச் செல்வதற்கும், காற்றைவிட விரைந்து செல்லும் போர் விமானங்களை இயக்குவதற்கும் நெஞ்சுரத்துடன் பெண்கள் பலர் முன்வருகின்ற காலத்தில், இனியும் பெண்களை ஆண்களுடன் பேசத் தயங்குபவர்களாய் வார்த்தெடுக்க முடியாது. ஆங்காங்கே பெண்களின் தலைமையின் கீழ் ஆண்கள் பணிபுரியும் காலகட்டம் இது.
எப்படிப் பார்த்தாலும், பெண்களின் அடிப்படை இயல்பு என்பது மென்மையும் கருணையுமே ஆகும். மென்மை என்ற காரணத்தினால் கோழையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
சிறுமை கண்டு பொங்குகின்ற நெஞ்சுரமும் துணிச்சலும் கொண்டவர்களாக நமது பெண்கள் வார்த்தெடுக்கப்படவேண்டும்.
அத்தகைய நெஞ்சுரம், துணிச்சல் ஆகியவற்றைக் கொண்டு உன்னதமான லட்சியங்களை அடைய முயற்சிப்பதே சரியாக இருக்கும். மாறாக, முறையற்ற தொடர்புகளை வளர்ப்பதும், அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல்  கொலை செய்யத் துணிவதும் துணிச்சல் ஆகாது. 
அத்தகைய துணிச்சல் என்பது திருவள்ளுவர் கூறியபடி, பேதைமை என்றே கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com