நடுப்பக்கக் கட்டுரைகள்

நரகம் இல்லாத நகரத்தை நோக்கி...

26th Dec 2019 01:38 AM | பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

ADVERTISEMENT

மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி நீண்ட காலமாக நகரங்களுக்குக் குடிபெயர்வதனால் அதிகரித்து வரும் நகரமயமாக்கல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்தம் நல்வாழ்வு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் தனி மனிதன் முதல்  அரசாங்கம் வரை அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்கிறது.

சுத்தமான நீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை இல்லாத நகர அமைப்புகள் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களின் காரணிகளாக பொது சுகாதாரத்துக்கு சவாலாக விளங்குகிறது. நகர வாழ்வோடு தொடர்புடைய சமூகம், சுற்றுச்சூழல், பழக்கவழக்கம் சார்ந்த காற்று மாசுபாடு, மோசமான உணவு, உடல் செயல்பாடு முதலானவை வாழ்வியல் சார்ந்த நோய்களின் மூலமாக விளங்குகின்றன. சாலை பாதுகாப்பு, வன்முறை முதலானவையும்  மனநலப் பிரச்னைகளின் ஆரம்பப் புள்ளிகளாக விளங்குகின்றன.

ஆரோக்கியம் என்பது மருத்துவ சேவைகளுக்கு அப்பாற்பட்ட வீட்டு வசதி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி அமைப்புகள், பசுமைப் பூங்காக்கள் போன்ற உள்கட்டமைப்பினையும் வேலைவாய்ப்பு, கல்வி, சத்துணவினையும் சார்ந்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 82 கோடிக்கும் அதிகமான மக்கள் பசியுடன் வாழும் உலகில், நகர மக்களின் ஆரோக்கிய உணவினை தீர்மானிக்கும் காரணிகளாக வறுமை, காலநிலை மாற்றத்தினால் உண்டாகும் உணவுப் பற்றாக்குறை, அறியாமை, சத்தான உணவு கிடைக்காதது, உடல் பருமனை ஊக்குவிக்கும் சூழலில் வாழ்வது, அதிக எண்ணிக்கையிலான துரித உணவு விற்பனை நிலையங்கள்,  அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவை உண்பது போன்றவை திகழ்கின்றன.

ADVERTISEMENT

மிக நீண்ட நேரம் வேலை செய்பவர்களும் வீட்டு சமையலுக்கு மாற்றாக உண்ண நினைப்பவர்களும்  சாப்பிடுவதற்கு நேரத்தை முதலீடு செய்யத் தவிர்ப்பவர்களும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பல துரித உணவுக் கூடங்களை நாடி ஆரோக்கிய உணவை உறுதி செய்யத் தவறுகின்றனர். சீரான உணவுப் பழக்கவழக்கத்தின்  மூலம் மக்கள் ஆரோக்கியமான உணவினை உறுதி செய்ய முடியும்.

உடல் செயல்பாடு உடல் பருமனைக் குறைத்து உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், சில புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. உலகெங்கிலும் நான்கில் ஒரு பெரியவருக்கும் நான்கில் மூன்று இளம் பருவத்தினருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உடல் செயல்பாடு இல்லை என்பது தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. பசுமையான இடங்கள் குறைந்த நகரங்களில் உடற்பயிற்சி மூலம் உடல் செயல் பாட்டினை மேம்படுத்த முடியும்.

முதுமையடையும் உலகினில் மற்ற எல்லா வயதினரையும்விட வேகமாக வளர்ந்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை (60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) தற்போதைய 96.2 கோடியிலிருந்து  2050-ஆம் ஆண்டில்  இரு மடங்காகவும் (210 கோடி) 2100-ஆம் ஆண்டுக்குள் மும்மடங்காக (310 கோடி) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆரோக்கியமாக வாழ வீடு, நகர்ப்புற வசதி, பொது போக்குவரத்து, சுகாதாரம்,  சமூக ஆதரவு ஆகியவை  எல்லா வயதினரின் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாதபோது, நகரங்கள் வளர்ச்சியினை எட்டுதல் கடினமானதாக இருக்கும்.

நம்மில் பத்தில் ஒன்பது பேர் ஒவ்வொரு நாளும் சுவாசிக்கும் மாசுபட்ட காற்று, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8,70,000 அகால மரணங்களுக்கு காரணமான புகையிலைப் புகையினை  புகையில்லா இடங்கள் நிறுவுதல் மூலம் குறைக்கலாம்.

தரமற்ற சாலைகள், வாகனங்கள், வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல்,  தலைக் கவசம் - சீட் பெல்ட் அணியத் தவறுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் சாலை விபத்துகள் 5 முதல் 29 வயது வரை உள்ளவர்களின் மரணத்துக்கு முக்கியக் காரணமான அமைகிறது. ஆண்டுதோறும்  13.5 இலட்சம் மனித மரணத்தையும் 5 கோடி மனித உடல் காயத்தையும் ஏற்படுத்தும் சாலை விபத்துகள் குறித்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்துதல்,  விபத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பினை வலுப்படுத்துதல் மூலம் சாலை விபத்துகளின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

வறுமை, வேலையின்மை, கூட்டம், ஒலி மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, பசுமையான இடங்களின் பற்றாக்குறை ஆகிய நகரவாசிகளின் சவால்கள் மன நோயை உருவாக்கலாம் அல்லது தீவிரப்படுத்தலாம். நகர்ப்புற இடங்களை நல்ல மன ஆரோக்கியத்துக்கு உகந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் இந்தச் சவால்களைச் சமாளிக்கலாம்.

ஆரோக்கியத்துக்கு ஆபத்தினை உருவாக்கும் வறுமை, சமூகப் பாதுகாப்பு, குடும்பச் செயலிழப்பு, மனநலப் பிரச்னைகள்,  மதுப்பழக்கம் முதலிய வன்முறையின் விளைவுகள். வன்முறை என்பது இறப்பு, காயங்களைத் தாண்டி புகை பிடித்தல், மது - போதைப்பொருள் பழக்கம், பாலியல் கொடுமைகள், மனநலக் கோளாறுகள், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும்  புற்றுநோய்கள், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், பால்வினை நோய்த்தொற்றுகள் போன்ற நோய்களுக்கான ஆபத்தையும்  அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சியின் தரவுகள் 2050-க்குள் மேலும் 250 கோடி மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என்பதைக் கணித்துக் கொடுத்திருக்கிறது. அதனை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகள், திட்டங்கள் வடிவமைத்து அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நகர வடிவமைப்பு சார்ந்த மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் எளிய செயல்பாட்டுத் தளங்களைக் கொண்டதாக தேசிய, உலகளாவிய இலக்குகளை அடையும் வண்ணம் இருக்க வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT