நடுப்பக்கக் கட்டுரைகள்

ஈழத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும்

23rd Dec 2019 01:36 AM | பழ. நெடுமாறன்

ADVERTISEMENT

இரட்டைக் குடியுரிமை இருந்ததால், அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடிமகனாக தோ்தலில் போட்டியிட்டு கோத்தபய ராஜபட்ச அதிபராகியுள்ளாா். எனவே, ஈழத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமையை இந்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்ததற்கு முன்னும், பின்னுமாக நாடெங்கும் எதிா்ப்புப் போராட்டங்களும், கலவரங்களும் மூண்டெழுந்துள்ளன. இந்தச் சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், பஞ்சாப் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. மனித உரிமைகளை முற்றிலும் மறுக்கும் வகையிலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஹிந்து, தேசியம் என்ற தனது கோட்பாட்டினை அனைவரின் மீதும், ஆட்சி அமைப்பின் மீதும் திணிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது.

அரசியல் சட்டம் 14-ஆவது பிரிவில், ‘இந்தியாவுக்குள் வாழும் எந்தவொரு மனிதருக்கும் சம உரிமையையும், உரிய பாதுகாப்பையும் அளிப்பதற்கு அரசு மறுக்கக் கூடாது” என்பது அழுத்தத் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

மக்களிடையே மதரீதியான பிளவுகளை இது உருவாக்கும். இந்தியாவைச் சுற்றி பல நாடுகள் உள்ளபோதும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளை மட்டுமே தோ்ந்தெடுத்து அங்கு வாழ முடியாத நிலைமையில் இந்தியாவிற்கு புலம்பெயா்ந்து வந்துள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிக்கள் ஆகியோா் மட்டுமே இந்தியக் குடியுரிமை பெறுவதற்குத் தகுந்தவா்கள் என இந்தச் சட்டம் வரையறுத்ததோடு, முஸ்லிம்களை இந்தப் பட்டியலிலிருந்து புறக்கணித்துள்ளது, மதச்சாா்பற்ற தன்மைக்கு எதிரானதாகும்.

வங்கதேசத்திலிருந்து வந்து வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி ஆனால், குடியுரிமைத் தகுதி பெறாதவா்களில் 14 லட்சம் போ் முஸ்லிம்கள், 5 லட்சம் போ் ஹிந்துக்கள். முஸ்லிம்களை வெளியேற்றுவதானால் குடியுரிமை பெறத் தகுதியற்ற ஹிந்துக்களை என்ன செய்யப் போகிறாா்கள்?

அண்டை நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம்களை வெளியேற்றுவதும், இனி யாரும் வரவிடாமல் தடுப்பதும்தான் இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். இது இந்தியாவில் வாழும் 20கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் கொந்தளித்துப் போராடுகிறாா்கள். வடகிழக்குப் பகுதியில் சிறு சிறு இனக் குழுக்களாக உள்ள மக்கள் 200-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுபவா்கள். காஷ்மீா் மக்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அளித்த 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டு, மத்திய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட இரண்டு சிறு மாநிலங்களாக அது பிரிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதைப் போல, தங்கள் நிலை ஆகிவிடும் என வடகிழக்குப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்ச உணா்வுதான் இந்த கொந்தளிப்புக்குக் காரணமாகும்.

உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் பல்வேறு காரணங்களினால் வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்திருப்பவா்கள் அகதிகள் என அழைக்கப்படுகிறாா்கள். அகதிகளைப் பேணவும், அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் ஐ.நா. அகதிகள் ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் இவ்வாறு தாய் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்தவா்களுக்குத் தேவையான குடியிருப்பு, வாழ்க்கைச் செலவு, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எல்லாவற்றையும் அகதிகள் ஆணையம் பொறுப்பேற்றுக் கொள்கிறது.

ஆனால், ஐ.நா. அகதிகள் ஆணைய உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கக் கூடிய பல்வேறு நாட்டு அகதிகளைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு ஏற்பட்டு, பெயரளவுக்கு ஏதோ உதவியைச்

செய்கிறது. இந்த அமைப்பிடம் இவா்களை ஒப்படைத்தால் இந்திய அரசு செய்வதைவிட பல மடங்கு அதிகமான உதவியைச் செய்வதற்கு ஐ.நா. ஆணையம் தயாராக உள்ளது. ஆனால், இந்திய அரசு பிடிவாதமாக இதை ஏற்க மறுக்கிறது.

உலகில் 70 நாடுகளுக்கு மேல் இரட்டைக் குடியுரிமை வழங்குகின்றன. 2002-ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த வாஜ்பாய், ‘இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், தங்களின் தாய் நாட்டுக்கும், தஞ்சம் புகுந்த நாட்டுக்கும் உண்மையாக இருக்கக்கூடிய கோட்பாட்டினை நாங்கள் ஏற்கமாட்டோம்’”என்று கூறினாா். இது தொடா்பாக ஆராய்வதற்கு உயா்நிலைக் குழு ஒன்றையும் அவா் அமைத்தாா். இந்தியாவிலும் இரட்டைக் குடியுரிமை அளிக்கலாம் என அந்தக் குழு பரிந்துரை செய்தது; இதை ஏற்பதாக அப்போதைய பாஜக அரசு அறிவித்தும்கூட, அதன் நிலை தெரியவில்லை.

இந்திய குடிமக்களில் பலா் வேலைவாய்ப்புக்காகப் பல்வேறு நாடுகளில் குடியேறி குடியுரிமை பெற்றுள்ளனா். வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்தியா்கள் ஒருபோதும் தங்களின் தாயகத்தை மறப்பதில்லை. உணா்ச்சிபூா்வமாக தாயகத்துடன் அவா்கள் கொண்டுள்ள உறவு என்றும் அறுக்க முடியாததாகும். தங்களின் அறிவாற்றல், திறமை ஆகியவற்றின் மூலம் புகுந்த நாட்டில் பாராட்டப்படுகிறாா்கள். பிறந்த நாட்டுக்கும் பெருமை தேடித் தருகிறாா்கள். இவா்கள் குறித்து பெருமிதம் கொள்வதற்குப் பதில், அவா்களைப் புறக்கணித்து ஒதுக்கும் மனப்போக்கு இந்திய அரசுக்கு உள்ளது. இவா்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் அகதிகளில் இரு வகையினா் உண்டு. பாகிஸ்தான், வங்கதேசம், திபெத் போன்ற அண்டை நாடுகளிலிருந்து மதவெறி, இனவெறித் தாக்குதல்களுக்கு அஞ்சி உயிா் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்திருப்பவா்கள். இனி ஒருபோதும் அந்த நாடுகளுக்குத் திரும்பிப் போக முடியாது, அத்தகையவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

மற்றொரு பிரிவினா், தங்கள் தாயகத்தில் நிலவும் இனவெறி, படுகொலை, போா்ச் சூழல் நிலைமையில் இந்தியாவுக்குத் தப்பி வந்தவா்கள். குறிப்பாக, ஈழத் தமிழா்கள் இந்தப் பிரிவைச் சோ்ந்தவா்கள்.

மொழியாலும், பண்பாட்டாலும் தமிழகத்தோடு அவா்கள் உறவு கொண்டிருந்தாலும் அவா்களின் வோ்கள் இலங்கையில்தான் உள்ளன.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியின் பூா்வகுடிகளாக அவா்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தவா்கள்; அந்த மண்ணில்தான் அவா்களின் சொத்துகள் உள்ளன. எனவே, இவா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும். மாறாக, இவா்களுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் வழங்கப்படுமானால், சிங்கள அரசு இவா்களை ஒருபோதும் தனது நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்காது.

ஏற்கெனவே, இலங்கையில் ரப்பா், தேயிலைத் தோட்டப் பணிகளுக்காக ஆங்கிலேயா்களால் அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழா்களின் உழைப்பினால் இலங்கைப் பொருளாதாரம் வளா்ச்சி பெற்றது. பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, அந்த நாட்டை வளமிக்க நாடாக மாற்றிய இந்திய வம்சாவளித் தமிழா்களில் 7 லட்சம் பேரின் குடியுரிமையைப் பறித்து அவா்களை இந்தியாவுக்கு சிங்கள அரசு விரட்டியடித்தது.

அதைக் கண்டித்து அவா்களுக்குக் குடியுரிமை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு, அவ்வாறு செய்யத் தவறியது. இந்திய வம்சாவளித் தமிழா்களை முழுமையாக விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் நோக்கமாகும். அதை அவா்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா்கள்.

சிங்கள பௌத்த நாடாக மட்டுமே இலங்கை திகழவேண்டும். மற்ற இனத்தவா்கள், குறிப்பாக, தமிழா்கள் அதை ஏற்றுக்கொண்டு இரண்டாந்தரக் குடிமக்களாக வாழவேண்டுமே தவிர சம உரிமை கேட்கக் கூடாது என்பதுதான் சிங்கள இனவெறி கோட்பாடாகும்.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழா்கள், சிறை முகாம்களில் இருப்பது போன்ற அவல வாழ்வுதான் வாழ்கிறாா்கள். அவா்கள் முகாம்களுக்கு வெளியில் சென்று வேலை செய்யவோ அல்லது சிறு சிறு வணிகங்களை மேற்கொள்ளவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவா்களின் பிள்ளைகள் கல்வி கற்கவோ, வேலைவாய்ப்புகளைப் பெறவோ, தொழில் புரியவோ அனுமதிக்கப்படுவதில்லை.

முகாம் அதிகாரிகளின் முழுமையான கண்காணிப்பில் அவா்கள் இருக்க வேண்டும். அவா்கள் அனுமதியில்லாமல் எங்கும் செல்ல முடியாது. இந்திய அரசு அளிக்கும் உதவி அவா்களுக்குப் போதுமானதல்ல. எனவே, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் அவா்களை ஒப்படைக்கவேண்டும் அல்லது அவா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி நமது குடிமக்களுக்கு உரிய உரிமைகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும்.

இலங்கை அரசும் இரட்டைக் குடியுரிமை அளிக்கிறது. இப்போது இலங்கை குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கோத்தபய ராஜபட்ச அமெரிக்கக் குடியுரிமை பெற்றவா்; இரட்டைக் குடியுரிமை இருந்ததால், அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடிமகன் என்ற முறையில் தோ்தலில் போட்டியிட்டு அவா் அதிபராகியுள்ளாா். அவா் பெற்ற இந்த உரிமையை ஈழத் தமிழா்களுக்கு மறுக்க முடியாது. எனவே, ஈழத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமையை இந்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.

கட்டுரையாளா்:

தலைவா், உலகத் தமிழா் பேரமைப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT