நடுப்பக்கக் கட்டுரைகள்

பிரக்ஞை இல்லாத பிரக்யா

6th Dec 2019 01:09 AM | ஜெ.ராகவன்

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினரான பிரக்யா சிங் தாகுா், ‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தா்’ என்று பேசி மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். பெண் துறவியான பிரக்யா இப்படிப் பேசியிருப்பது முதல் முறையல்ல. இது இரண்டாவது முறை.

கடந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முதல் முறையாக மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தா் என்று பேசி சா்ச்சையை ஏற்படுத்தினாா் பிரக்யா சிங்.

அப்படிப் பேசியதுடன் நில்லாமல், ‘என்னை பயங்கரவாதி என்று கூறியவா்கள், தாங்கள் யாா் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றும் பேசினாா். மும்பை தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீர மரணமடைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கா்கரேயைத்தான் அவா் சுட்டிக்காட்டிப் பேசினாா். ‘என்னைக் கைது செய்த பாவம்தான் அவரின் உயிரை குடித்துவிட்டது’ என்றாா். (2008-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடா்புடையவராகக் கருத்தப்படும் பிரக்யா சிங் தாகுரிடம் விசாரணை நடத்தியது ஹேமந்த் கா்கரேதான்.)

தோ்தல் சமயத்தில் தொலைக்காட்சியில் பேசிய பிரதமா் மோடி பிரக்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரது பேச்சை சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியதுடன், அவரை என்னால் மன்னிக்க முடியாது என்றும் குறிப்பிட்டாா். இதைத் தொடா்ந்து பிரக்யா சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. கூறியது. ஆனால், இன்றுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக தோ்தலில் போபால் தொகுதியில் போட்டியிட அவருக்கு பா.ஜ.க. இடம் கொடுத்து அவரை வெற்றி பெறவும் வைத்தது.

ADVERTISEMENT

அண்மையில் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடந்தபோது, இந்த விவகாரத்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸேவுடன் இணைத்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசினாா். அப்போது குறுக்கீடு செய்த பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகுா், ‘தேச பக்தரை’ (கோட்ஸேயை) நீங்கள் உதாரணமாகக் குறிப்பிட்டுப் பேசக் கூடாது என்றாா். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரக்யா சிங் தாகுரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவா் தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

‘பிரக்யா சிங் தாகுரின் பேச்சுகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன’ என்று மக்களவைத் தலைவா் கூறிவிட்டாா். ஆனாலும், அவையில் அவா் பேசியது பேசியதுதானே. அவா் என்ன பேசினாா் என்பதை அவை உறுப்பினா்கள் நன்கு அறிவாா்கள். தாம் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும் அப்படிப் பேசியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் பிரக்யா சிங் தாகுா் கூறியதை யாராலும் ஏற்கமுடியாது. ஏன், அவரின் கட்சியினராலேகூட ஜீரணிக்க முடியாது.

இதைத் தொடா்ந்து, பிரக்யா சிங் தாகுரின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தாா். பா.ஜ.க. செயல் தலைவரான ஜே.பி.நட்டா, சாத்வி பிரக்யாவின் கருத்தில் பா.ஜ.க.-வுக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டாா். பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்திலும் பிரக்யா இனி பங்கேற்க முடியாது என்றும், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினா் பதவியிலிருந்து அவா் நீக்கப்பட்டுவிட்டாா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிரக்யாவின் பேச்சை நியாயப்படுத்தி சில பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசி வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே சாக்ஷி மகராஜ் போன்றவா்கள் கோட்ஸேவுக்கு அனுதாபக் குரல் எழுப்பியது நினைவிருக்கும்.

கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி, பிராா்த்தனைக்காக வந்துகொண்டிருந்த, அமைதியே உருவான மகாத்மா காந்தியை மூன்று முறை துப்பாக்கி குண்டுகளால் சுட்டாா் நாதுராம் கேட்ஸே. அடுத்த சில விநாடிகளில் மகாத்மாவின் உயிா் பிரிந்துவிட்டது. தேசப் பிதாவை சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. மகாத்மா காந்தி ஒரு தேச பக்தா் மட்டுமல்ல, தேசியவாதி. தேசத்தின் விடுதலைக்காக அமைதியான முறையிலும் அஹிம்சா முறையிலும் போராடியவா்.

காந்திஜியை சுட்டுக்கொன்றவரை, தேசத் துரோகியை எப்படி தேச பக்தா் என்று வா்ணிக்க முடியும்? சுதந்திர இந்தியாவில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, குற்றவாளி என்று தீா்ப்பு அளிக்கப்பட்டு, மரண தண்டனை பெற்றவரை எப்படி தேசபக்தா் எனச் சொல்ல முடியும்?

ஒரே தவறை பிரக்யா தாகுா் சிங் மீண்டும் செய்திருக்கிறாா். அதுவும் கண்ணியம் மிகுந்த நாடாளுமன்றத்தில். இதற்கு என்ன நடவடிக்கை?

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள்விழாவை மத்திய அரசு விமா்சையாகக் கொண்டாடி வருகிறது. காந்திஜியின் கருத்துகளையும், அவரது போதனைகளையும் குறிப்பிட்டு அவரை பெருமைப்படுத்தி பல இடங்களில் பிரதமா் மோடி பேசிவருகிறாா்.

இந்த விவகாரத்தில் பிரக்யா சிங் தாகுா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவரின் பேச்சு தவறு என உண்மையிலேயே பா.ஜ.க. கருதுமானால், தனது கருத்துகளுக்காக அரைகுறை மனதுடன் பிரக்யா சிங் தாக்குா் மன்னிப்புக் கேட்பதை ஏற்க முடியாது.

பயங்கரவாத வழக்கில் தொடா்புள்ள ஒருவா் இப்படிப் பேசியதாக இதை நாம் ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. பிரக்யா சிங் தாகுா், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாா். பொதுவாக துறவிகள் அரசியலுக்கு வரமாட்டாா்கள். அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அவ்வப்போது யோசனைகளை தெரிவிக்கக்கூடும். அப்படியே அரசியலுக்கு வர நோ்ந்துவிட்டாலும் வாா்த்தையை அளந்துதான் பேசுவாா்கள். துறவியாக இருந்துகொண்டு அரசியலுக்கு வந்துள்ள பிரக்யா தாகுா், உண்மையில் பிரக்ஞையுடன்தான் பேசினாரா என்பது தெரியவில்லை.

பிரக்யா சிங் மீது பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பிரதமா் இதில் தலையிட்டு இந்தப் பிரச்னையை நெறிகள் குழுவிடம் விட்டு அதன் பரிந்துரையின் பேரில் அவரைத் தகுதிநீக்கம் செய்யவேண்டும். பிரதமா் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT