வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான வழிகளை யோசித்தபோது, அதற்கான பல விஷயங்கள் அவருக்கு முன் வந்தன. சற்றே திகைத்தவர், சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கும்கூட வழிகள் இருக்குமே என நினைத்தார். தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை.
எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும். பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம். அதுவரை பொறுமை காப்பது அவசியம். எதிலும் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கவே கூடாது. வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாறு உண்டு. நம் வாழ்வு எப்போதும் பிறருக்குப் பயன் தருவதாக அமைய வேண்டும்.
கல்லூரி ஒன்றில் வாய்ப்புகள் பற்றிய உரையாற்ற வந்த ஒருவரின் பேச்சை சரிவரக் கேட்காமல் செல்லிடப்பேசியில் பலர் மூழ்கியிருந்தனர்.
திடீரென்று பேச வந்த நபர், தான் உரையாற்றிய பகுதியில் இருந்து கேள்வி ஒன்றைக் கேட்டார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் சரியான பதில் கூற அவனுக்கு அவர் நிறுவனத்தில் வேலை வழங்குவதாகக் கூறினாராம். இதுதான் வாய்ப்பு என்பது. பெட்டிக் கடை வைத்தவர்கள் வணிக வளாகம் வைக்கும் அளவுக்கு உயர்வதற்கு காரணம் , கிடைத்த வாய்ப்பை ஈடுபாட்டுடன் செய்வ தால் மட்டுமே. புதுப்பித்துக் கொள்பவர்கள், நவீனமாகச் சிந்திப்பவர்களால் மட்டுமே போட்டிகள் நிறைந்த இந்த உலகில் சாதிக்க முடியும்.
மாற்றங்களே நம் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய சூழலாக இருந்தாலும் அதைச் சவாலுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உலகத்துக்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே உலகை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவர்கள்.
நீண்ட தூர பயணத்துக்கு முன்பதிவு செய்வதுபோல, நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். எண்ணங்களே நம் நடத்தையைத் தீர்மானிக்கின்றன. தினந்தோறும் மனதில் என்னால் முடியும் என்ற மந்திரச் சொல்லைச் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்பிக்கை ஒரு நாளும் பொய்க்காது.
தன்னம்பிக்கை மிகுந்த மனிதராக உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் பெயரைப் பதிலாக பலரும் கூறினர். ஒரே ஒருவர் மட்டும் நானே எனக்குப் பிடித்த மனிதர் என்று சொன்னாராம். முதலில் நம்மை நமக்கு பிடிக்க வேண்டும். நம்மை நாமே அங்கீகரிக்கும்போது, மற்றவர்களையும் மதிக்க கற்றுக் கொள்வோம்.
நம்மை பின் தள்ளும் பலவீனமான வார்த்தைகளில் இருந்து தள்ளிச் சென்று விடுங்கள். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவையே நிராகரித்த உலகம் இது. சாதனையாளர்களின் பின்னாலான வாழ்க்கை பெரும்பாலும் நிராகரிப்புகளால் ஆனதுதான்.
தளராத மனமும், விடாமுயற்சியும் இருப்பவர்களை தோல்வி ஒருபோதும் நெருங்குவதில்லை. ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழி நடத்துகின்றன. நம்மால் முடியும் என்ற ஆழ் மனதின் எண்ணங்களே அதிர்வலையை உண்டாக்குகின்றன. கடின உழைப்பு அதனை உண்மையாக்குகிறது.
சிறிய தோல்வியிலேயே துவண்டு விடும் பதின்பருவப் பிள்ளைகள் தற்கொலையைத் தேடிச் செல்கின்றனர். ஒரு விநாடியில் தான் எடுக்கும் இது போன்ற விபரீத முடிவால், தன் பெற்றோர் ஆயுள் முழுவதும் படும் வேதனைகளை அறிவரோ? எதுவுமே நிரந்தரமில்லை என்றபோது துன்பங்களும் எப்படி நிரந்தரமாகும். தற்கொலை தீர்வல்ல; அது கோழைத்தனம்.
விரக்தியான சிந்தனைகள் தோன்றும்போது நமக்குப் பிடித்தவர்களிடம் ஒரு நிமிஷம் பேசி விட்டால் போதும்; மனம் அமைதியாகும். மனம் வேதனை அடையும் நேரங்களில் அதனைக் கடந்து போவதற்கு மடை மாற்றம் செய்யும் வேலைகளில் நம்மை ஈடுபடுத்தலாம். புத்தகங்களை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.அவை நம்பிக்கையுடன் நடைபோட வைக்கும்.
நமக்கான சிக்கல்களே பெரிதென்று நினைப்பவர்கள் சாலையோரம் நடந்து சென்று பாருங்கள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்கள் படும் வேதனைகள் புரியும்.
வலிகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால், வலிகள் மட்டுமே வாழ்க்கை இல்லை. வலிகளின் தன்மை மட்டுமே சிறியது, பெரியது என மனிதருக்கு, மனிதர் மாறுபடும். வலிகள் என்பது முன்னேற்றத்துக்கான வழிகள்.
உயர்ந்த நிலையை அடைய சிக்கல்களைத் தீர்க்கும் மனநிலை தேவை. அசைக்க இயலாத நம்பிக்கை நம்மை ஆளுமையாக்கும். தன்னம்பிக்கை உள்ளவரும் , தன் மீது நம்பிக்கை உள்ளவரும் தோற்றதே இல்லை. அடுத்தவர் என்ன செய்கிறார் என்று யோசிப்பதைவிட, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பவரே நம்பிக்கைவாதி. மிகப் பெரிய மகிழ்ச்சிகள் நம்மிடமே உள்ளன.
நம்பிக்கை, முயற்சி, உழைப்பு போன்றவற்றால் அமையும் வாழ்க்கை ருசிக்கும். பிறரது வாழ்க்கைக்கு துன்பம் தராத செயல்கள் மேலும் சிறப்பாகும். செய்து முடிக்கப்படும் வரை எதுவும் தெரிவதில்லை. ஆனால், நிறைவுற்ற பிறகு அதன் பிரம்மாண்டம் நம்மை அடுத்தகட்ட நகர்வுக்கு இழுத்துச் செல்லும். அதற்குத் தேவை நம்பிக்கையே.
நம்பிக்கையில் தடங்கல்கள் வந்தால் தடுமாறக் கூடாது. சின்ன சின்ன வெற்றிகளாக அடைந்து வரும்போது, பெரிய வெற்றிகள் எளிதாகும். இந்த உலகத்தில் முடியாது என்று எதுவுமே இல்லை. சரியான திட்டமிடலில் இருக்கிறது வெற்றியின் ரகசியம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வோம்.