நடுப்பக்கக் கட்டுரைகள்

தேர்வு நடத்துவோர் கவனத்துக்கு...

27th Aug 2019 01:38 AM | எஸ். ஸ்ரீதுரை

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆயுதப் படை, தீயணைப்புத் துறை போன்றவற்றில் உள்ள 8,000-த்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 2.70 லட்சம் தேர்வர்கள் எழுதியுள்ளனர்.
இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்வது இது முதல் முறை அல்ல. ஆனால், கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அவதிகளுக்கு உட்படாமல், ஆரோக்கியமான மனநிலையில் இத்தகைய தேர்வுகளை எதிர்கொள்ளும் சூழல் இருப்பதில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.
சென்னையில் மட்டும் பதின்மூன்று மையங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வில் 19,900 பேர் பங்கேற்றனர்;  அதில் அண்ணா பல்கலைக்கழக மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்வாளர்களின் கைப்பை, பணப் பை (மணி பர்ஸ்) உள்ளிட்ட உடைமைகளைத் தேர்வு எழுதும் அறைக்கு அருகில் வைப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக,  மையத்தின் அருகில் உள்ள காவல் துறை வாகனத்தில் அவற்றை வைத்து விட்டுச் செல்வதற்குக் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஆனால், தேர்வு முடிந்து திரும்பியவர்கள் தங்களது உடைமைகளைச் சரியாகக் கண்டுபிடித்து எடுத்துக்கொள்வதற்கு மிகவும் திணறியுள்ளனர். 
இது தவிர, சில தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களுக்குத் துணையாக  வந்த பெற்றோரும், மற்றவர்களும்  ஒதுங்கிக்கொள்ள இடம் ஏதும் ஒதுக்கப்படாததால், அவர்கள் அனைவரும் நீண்ட நேரம் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சீருடைப் பணியாளர் வாரியத் தேர்வுதான் என்றில்லை, வங்கிப் பணி, மத்திய-மாநில அரசுப் பணிகள் மற்றும்  நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஆகியவை நடக்கும் போதெல்லாம், தேர்வு எழுதுபவர்களும், அவர்களுக்குத் துணையாக வருபவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு  உள்ளாவது தொடர்கிறது. 
நீட் தேர்வுகளைப் பொருத்தமட்டில், தேர்வு மையம் ஒதுக்கப்படுவதிலிருந்தே இத்தகைய சிரமங்கள் தொடங்கி விடுகின்றன. கடந்த  ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. 
தேர்வு மையம் அமைந்துள்ள தொலைதூர மாநிலத்துக்குச் சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளை ஒழுங்கமைப்பதே சவாலாகிவிடும் நிலையில், தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் மனநிலை எவ்வளவு அலைக்கழிப்புக்குள்ளாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. வங்கித் தேர்வுகளுக்கான ஐ.பி.பி.எஸ். தேர்வு மையங்களும் பெரும்பாலும் நகரங்களை விட்டுத் தள்ளியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன.  தேர்வு தொடங்குவதற்குள் அந்த மையங்களைச் சென்றடைவதே பெரும் சவாலாக இருக்கும் சூழலில், ஒரு போட்டியாளர் எவ்வளவுதான் சிறப்பான முன் தயாரிப்புடன் வந்தாலும், தங்களது முழு அறிவுத் திறனையும் பயன்படுத்தி தேர்வினை எழுதுவது இயலாத ஒன்றாகும்.
தேர்வுகளில் காப்பி அடிப்பது,  ஆள் மாறாட்டம் செய்வது போன்ற முறைகேடுகளைத் தடுப்பற்காகத் தேர்வாளர்களுக்கு ஒருசில கெடுபிடிகள் விதிக்கப்படுவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால், அத்தகைய கெடுபிடிகளே அவர்களது உற்சாகத்தைக் குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. முதன்முதலாக நீட் தேர்வு நடத்தப்பட்ட போது, தேர்வு எழுத வந்த மாணவர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கியது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.  
போட்டித் தேர்வு எழுத வருபவர்கள் தங்களுடன் துணைக்கு வருபவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைத்துவிட்டு, அனுமதிச்சீட்டு மற்றும் எழுது பொருள்களை மட்டும் தங்களுடன் எடுத்துக் கொண்டு தேர்வு மையத்துக்குள் நுழைய முடியும். ஆனால்,  அவ்வாறு உடன் வருவதற்கு யாரும் இல்லாமல் தனியாக வருபவர்கள்  அவற்றை யாரிடம் ஒப்படைத்துவிட்டு வருவது? அத்தகையவர்களுக்காக தேர்வு மைய நிர்வாகிகள் பாதுகாப்பாகத் தனியறை ஒன்றை ஒதுக்க முன்வர வேண்டும். ஒருமுறை அந்தத் தனியறையில் தங்கள் உடைமைகளை வைத்துவிட்டு வருபவர்கள், தேர்வு முடிந் தபிறகே அவற்றை எடுத்துக்கொள்ள முடியும் என்ற நிபந்தனையுடன் இத்தகைய வசதியைச் செய்து தரலாம். 
அத்தகைய வசதி இல்லாத நிலையில், ஏதோ ஒரு பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தங்களது உடைமைகள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கவலையிலேயே தேர்வைச் சரியாக எழுத முடியாமல் போய்விடும்.  மேலும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள அரங்கம் அல்லது பெரிய அறை போன்றவற்றை உடன் வருபவர்கள் தங்குவதற்கு ஒதுக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த வளாகத்தில்  அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திலாவது அவர்கள் தங்க அனுமதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியாவது அங்கு செய்து தரப்பட வேண்டும்.
தேர்வு எழுதுபவர்களுடன் வரும் அனைவரையும் வளாகத்தின் உள்ளே நுழையக்கூட பல தேர்வு மைய நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இதனால், உட்காரக் கூட இடம் இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பல மூத்த குடிமக்கள் கஷ்டப்பட நேர்கிறது.  சில தனியார் பெருநிறுவனங்கள் நடத்தும் ஆளெடுப்பு நிகழ்வுகளுக்குத் தங்களின் வாரிசுகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் இத்தகைய அனுபவத்துக்கு உள்ளாகிறார்கள். நிறுவனத்துக்குள்ளே சென்ற தங்கள் வாரிசுகள், பல்வேறு சுற்றுத் தேர்வுகளை முடித்துவிட்டு எப்போது வெளியே வருவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல், நாளெல்லாம் தவித்தபடி பெற்றோர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பள்ளித் தேர்வுகள் முதல் போட்டித் தேர்வுகள் வரையில் முறைகேடுகளைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் களையெடுப்பது அவசியம்தான். எல்லா வகையான தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணித்தலும், தடுத்தலும் நிச்சயம் தேவைதான். அதே நேரம், தேர்வுகளுக்காக நீண்ட காலம்  கடுமையாகப் பயிற்சி மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், அவர்களுடன் தேர்வு மையத்துக்கு வந்து செல்லும் வயதானவர்களையும் கூடுதல் சிரமங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்காமல் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். 
போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய-மாநிலப் பணியாளர் தேர்வு வாரியங்கள், வங்கிப் பணியாளர் தேர்வு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  இந்த விஷயத்தில் இனியேனும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT