கீரை வாங்கலையோ கீரை...

பூ வாங்கலையா அம்மா? கீரை வாங்கலையோ கீரை, தாயி கோலமாவு, அம்மா செல்லம்மா வந்திருக்கேன் போன்ற குரல்கள் தற்போது ஏன் அதிகம்

பூ வாங்கலையா அம்மா? கீரை வாங்கலையோ கீரை, தாயி கோலமாவு, அம்மா செல்லம்மா வந்திருக்கேன் போன்ற குரல்கள் தற்போது ஏன் அதிகம் ஒலிப்பதில்லை? பூக்கார அம்மா, காய்கறி விற்பவர், கீரை விற்கும் பாட்டி, வெங்காயம் விற்பவர், பால் ஊற்றுபவர்-இப்படி சிறு சிறு வியாபாரிகள் கூடைகளில் பொருள்களைச் சுமந்து கொண்டு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ நம் வீடு தேடி வந்தார்கள். 
அவர்கள் கீரைக் கட்டையோ, காய்கறியையோ இயந்திரத்தனமாக விற்று விட்டுப் போக மாட்டார்கள். பழையதை, வாடி வதங்கியதைக் கொண்டுவர மாட்டார்கள். கூடையை இறக்கி வைத்து விட்டு கொஞ்ச நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர்தான் வியாபாரம் எல்லாம். 
பெரியவர்கள் இல்லாத வீடாக இருந்தால் குழந்தைக்கு உரம் எடுத்து விடுவார்கள்; குடலேற்றத்தைச் சரி செய்வார்கள்; சுளுக்கை நீவி எடுத்து விடுவார்கள். சுமையுடன் கூடவே தன் சோகத்தையும் நம்மிடம் இறக்கி வைத்து இளைப்பாறி விட்டுப் போவார்கள். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும்கூட பூச்சரத்தை வாசலில் வைத்து விட்டுப் போவார்கள். தொடர்ந்து அவர்களிடமே நாம் வாங்குவதால் நம் வீட்டு அங்கத்தினர் போல ஆகி விடுவார்கள். அவர்கள் ரூ.5 சொன்னால் நாம் ரூ.4-க்கு பேரம் பேசி, உரிமையுடன் காசைக் குறைத்துக் கொடுப்போம். கடைசியில் கொஞ்சம் கொசுறு போட்டால்தான் நமக்கு திருப்தி ஏற்படும்.
பால்காரர் மிதிவண்டியில் பாத்திரத்தைக் கட்டிக் கொண்டு வருவார். அவருடைய மிதிவண்டியின் மணி ஓசை கேட்டதும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து பால் வாங்க வேண்டும். பாலில் தண்ணீர் அதிகம் எனச் சண்டை போடுவோம்.
குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாதிருந்த கால கட்டத்தில் நம் வீட்டுக்கு திடீரென்று விருந்தினர் வந்துவிட்டால், பக்கத்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் பால் இரவல் வாங்க வேண்டும். அதற்கெல்லாம் ஒருவரும் கூச்சப்பட்டது கிடையாது. உரிமை எடுத்துக் கொள்ள முடிந்தது.
இப்போதோ குளிர்சாதனப் பெட்டி இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் அது வேலை செய்யாவிட்டால்கூட தவித்துப் போகிறோம். பால், தயிர், மாவு, காய்கறி, நெய் என ஒரு குட்டி உலகமே அதற்குள் இருக்கும். அத்தனையும் வீணாகிப் போய் விடும். 
முன்பு அதற்கு அவசியமில்லாமல் இருந்ததற்குக் காரணம், நாம் அன்றாடச் சமையலுக்குத் தேவையானவற்றை தினமும் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நம்மை நம்பி பல சிறு வியாபாரிகள் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போதோ இரவு 8 மணிக்குக் கூட வியாபாரம் ஏதும் ஆகாமல் கூடை நிறைய பழங்களை வைத்துக் கொண்டு, சாலையில் போவோர் யாராவது வந்து தன்னிடம் பழம் வாங்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் ஒட்டிய வயிறுகளையும், பஞ்சடைந்த கண்களையும் காண்கிறோம். ஆனாலும், அவர்களிடம் அதிகம் பேர் வாங்குவதில்லை.
ஏன் இந்த மாற்றம்? பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவதைப் போல இன்றைய நம் நுகர்வு கலாசாரம் மாறிவிட்டது. உணவு முதல் உடை வரை அனைத்தையும் வாங்குவதில் மாற்றம் வந்து விட்டது. நம் பணியின் தன்மை, கலாசார மாற்றம், உயர்-நடுத்தர குடும்பத்தினரின் எண்ணப் போக்கில் மாற்றம் என எல்லாமே காரணம்.
மளிகை சாமான் வாங்க மாதப் பட்டியல் எழுதும்போது, சமையல் அறையில் உள்ள எல்லா டப்பாக்களையும் அம்மா திறந்து பார்த்து எது தேவை, எவ்வளவு தேவை எனப் பார்த்து எழுதுவார். நாமும் கடைக்குப் போய் சாமான்களை வாங்கி சுமந்து வருவோம். இப்போதோ பெரிய அங்காடிகளுக்குப் போகிறோம். ஒரு கூடையை எடுத்துக் கொண்டு நம் கண்களில் படும் எல்லாவற்றையும் எடுத்து அதில் போட்டுக் கொள்கிறோம். அந்தப் பொருள் நமக்கு அவசியமா, அதன் விலை எவ்வளவு என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. 
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுபோய் பொழுதுபோக்கும் இடமாக இந்த அழகிய அங்காடிகள் மாறிவிட்டன. குழந்தைகள் கை காட்டுவதை எல்லாம் எடுத்துக் கூடையில் போட்டுக் கொள்கிறோம். தொலைக்காட்சி விளம்பரங்களில் காண்பிக்கப்படும் அனைத்தையும் குழந்தைகள் வாங்கித் தரச் சொல்கின்றனர்; நாமும் வாங்கிக் குவிக்கிறோம்.
வீட்டில் சமைக்க சோம்பல்பட்டு உணவகங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். இப்போது அதற்கும் நேரம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உணவை வரவழைக்கிறோம். 
முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று 100 புடவைகளைப் புரட்டிப் போட்டு அதில் ஒன்றைத் தேர்வு செய்ய பல மணி நேரம் ஆகும். ஒரு புடவையை விரித்துப் பார்ப்பார்கள், தங்கள் தோள் மீது போட்டுப் பார்ப்பார்கள், அந்தப் புடவை மின் விளக்கு வெளிச்சத்தில் எப்படித் தெரிகிறது, வெளியில் எப்படித் தெரிகிறது என்று பார்ப்பார்கள். லேசில் மனம் திருப்தி அடையாது. 
ஆனால், இன்று பெண்கள் ஆன்லைனில் உடை வாங்குகிறார்கள். செல்லிடப்பேசியில் புடவையின் நிறம் உள்பட எல்லாவற்றையும் பார்த்து பெண்கள் ஆர்டர் செய்கிறார்கள்.
குடும்ப மருத்துவர் என்று முன்பு இருந்ததும் இன்று இல்லை. குடும்ப மருத்துவர் என்றால் நம் அனைத்து உடல் தொடர்பான பிரச்னைகளுக்கும் அவர்தான் மருத்துவம் பார்ப்பார். அவர் கொடுத்த பாட்டில் மருந்தும், மாத்திரைப் பொடியும் நம்மை குணமாக்கியது. நமக்கு ஒவ்வாதது எது என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும்.  இப்போது அப்படி ஒருவரும் இல்லை. ஒருவருக்கு அதிகபட்சம் 5 நிமிஷங்கள் ஒதுக்கவே இன்றைய மருத்துவர்களால் முடியவில்லை. 
வேலைக்குப் போகும் பெண்கள் முதல் நாள் இரவே மறு நாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்கின்றனர். காலையில் தெருவில் விற்கப்படும் காய்களை வாங்கக்கூட நேரம் இருக்காது. பலரும் மிதிவண்டியில் வந்து வியாபாரம் செய்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போரால் சட்டென கீழே வந்து வாங்க முடியாது. விற்பவர்களும் பொறுமையாகக் காத்திருப்பது இல்லை. 
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரிய கோலம் போட முடியாது என்பதால், கோல மாவு விற்பனை குறைந்து வருகிறது. தனி வீடுகளில் இருப்போருக்கு பெரிய கோலம் போட நேரம் இல்லை.
காலம் கெட்டுக் கிடப்பதால் எவரையும் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க முடியவில்லை. முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு பாராட்டுவதற்கும் பயமாக உள்ளது. கொஞ்சம் சிரித்துப் பேசி பழகி விட்டால் உடனே பணம் கடனாகக் கேட்கிறார்கள். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிப்போம் என்னும் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் அவர்களும் வியாபார தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்களை வாழ வைக்க நாம் முயற்சிக்கும்போது அவர்களும் நம் நம்பிக்கையை முறிக்காமல் இருக்க வேண்டும். நுங்கு விற்பவர் இளசாக பொறுக்கி எடுக்க நம்மை அனுமதிக்க மாட்டார். அவரேதான் எடுத்துப் போடுவார். நாம் வீட்டிக்கு வந்து பார்த்தால் பத்தில் இரண்டு முற்றியதாக இருக்கும். கீரைக்கட்டை வீட்டிற்கு வந்து பிரித்தால் அந்தக் கட்டுக்குள் அழுகிய கீரைகளும், புல்லும் வைத்துக் கட்டப்பட்டிருக்கும்.
பழ வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வித்தையை எவ்வளவு லாவகமாகச் செய்கிறார் என்பதை ஒரு முகநூல் பதிவில் பார்த்து அதிர்ந்து போனேன். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நம் மகிழுந்தோ, பேருந்தோ நிற்கும்போது கொய்யா பழத்தோடும், பனங்கிழங்கோடும், பலாச்சுளைகளோடும் கண்களில் நாம் வாங்குவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஓடி வருபவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. துண்டு போடப்பட்ட மாங்காய் பத்தை வியாபாரம் செய்யும் ஒரு நபரால், தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? எனக்குள் எழுந்த  மிகப் பெரிய கேள்வி இது.
நம் வாழ்க்கை முறை மாற்றத்தாலும், மனிதர்கள் மீதுள்ள அவநம்பிக்கையாலும் இத்தகைய சிறு வியாபாரிகளின் வாழ்வில் ஒளி மங்கி வருகிறது. பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து புன்னகைப்பது என்பதே மறந்து போய் விட்டது. அக்கம்பக்கக்தினரிடம் ஓரிரு வார்த்தைகள் நலமா,  சௌக்கியமா என்று புன்சிரிப்புடன், மலர்ந்த முகத்துடன் விசாரித்தாலே அந்த நாள் இருவருக்கும் இனிய நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலையுடன் வெளியே வந்தால் மண்ணுலகமும் மகிழ்ச்சியாகத் தெரியும். 
வணிகமயமாக்கலின் விளைவாக பல சின்னச் சின்ன சந்தோஷங்களை நாம் இழந்திருக்கிறோம். இயந்திரத்தனமான வாழ்க்கையில் மரத்துப்போன உணர்வுகளுடனும், மறந்து போன மனித நேயத்துடனும் வாழ்கிறோம்.
பல கோடிகளுக்கு அதிபதி வாழ்க்கையில் தோற்றுப் போய் தன் முடிவைத் தேடிக் கொள்கிறார். தோல்வியால் துவண்டு போகிறார். மீண்டு எழுவேன் என்று நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால்,  அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் வாழ்க்கையை துணிச்சலோடு எதிர்கொள்கிறார்கள். நாமும் கொஞ்சம் ஈர இதயத்துடன் அவர்களை வாழ வைப்போம். 
பணத்தோடுதான் பணம் சேர வேண்டுமா? ஏழை வியாபாரிகளின் வீட்டிலும் நம் புண்ணியத்தால் உலை கொதிக்கட்டும். முடிந்தவரை அவர்களிடம் பொருள்களை வாங்குவோம். பன்னாட்டு வர்த்தகச் சந்தை என்னும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான சிறு வியாபாரிகளுக்குப் புத்துயிர் கொடுப்போம்.

கட்டுரையாளர்
பேராசிரியர் (ஓய்வு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com