வீடுதோறும் நூலகம்...

ஓடும் பேருந்தில் பின்னிருக்கையில் உட்கார்ந்த இருவர் பேச்சுக்கிடையில் ஒரு பெண்மணி சொல்லிய தொடர் காற்றில் வந்து என் காதில் புகுந்து சிந்தை கவர்ந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி


ஓடும் பேருந்தில் பின்னிருக்கையில் உட்கார்ந்த இருவர் பேச்சுக்கிடையில் ஒரு பெண்மணி சொல்லிய தொடர் காற்றில் வந்து என் காதில் புகுந்து சிந்தை கவர்ந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி, அதுவொரு பழமொழி. எதற்குச் சொன்னாரோ? ஆனால், அது என்னுள் புகுந்து தந்த புதுமொழி,  வீட்டுக்கொரு நூலகம்.
இதுவும் நாளாக நாளாகப் பழக்கத்திற்கு வந்து பழமொழி ஆகவேண்டும்; அப்படி வந்தால்தான் அனைவருக்கும் கல்வி ஒளி பரவும். அறியாமை இருள் அகலும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். பல்கலைக்கழகத்தில் நூலகம் இல்லாமல் இருந்தால் எப்படி?
வீட்டை அகம் என்று சொல்வதும் உண்டு. புதிதாய்க் கட்டிக் குடிபோகும் பலர், பிள்ளைக்குப் பெயர் வைப்பதுபோல் வீட்டுக்கும் பெயர் வைப்பார்கள். இல்லம்என்றும் அகம் என்றும் முடியும் அந்தப் பெயர்கள். இல் என்றால் வீடு. அம் என்றால் அழகிய என்று பொருள் வரும். அகம் என்றால் உள்ளம் என்றும் பொருள். உள் இருப்பது உள்ளம். நூலை உள் வைத்திருப்பது நூலகம்.
ஊருக்கொரு நூலகம் வைத்து அந்தக் காலத்தில் அறிவை விரிவு செய்தார்கள். ஆளுக்கொரு செல்லிடப்பேசி வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியும் தேவையும் இருக்கும் இந்த நாளில், ஆளுக்கொரு நூலகம் இல்லாவிட்டாலும் வீட்டுக்கொரு நூலகம் கண்டிப்பாக வேண்டும் அல்லவா? 
வீட்டைத் திறப்பதற்குச் சாவி இருப்பதுபோல், மனதைத் திறக்கும் மந்திரச்சாவிதான் நூல் எனும் புத்தகம். இதயம்போல் திறந்து கிடக்கும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால், அது நம்மையே எடுத்துக்கொள்ளும் அதுவே, நம் இதயமும் ஆகிவிடும்.
அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு என்றார் பாரதிதாசன். அதற்குப் புத்தகங்களே பெருந்துணை. வீடு என்பது என்ன? நான்கு சுவர்களுக்கு நடுவில் இருக்கும் வெற்றிடம். அதனை வெற்றியிடமாக மாற்றிக்கொள்வதில்தான் நமது வாழ்க்கை சிறக்கிறது. நூல் என்பது என்ன? நான்கு பக்கங்களாக அச்சிடப்பட்டு விரிந்து கிடக்கும் இதயம்.
எல்லா நூல்களும் நன்னூல்கள்தான் என்றாலும், தமிழில் நன்னூல் என்றே ஓர் இலக்கண நூல் இருக்கிறது. அது, அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல்பயனே என்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு பயன்களையும் ஒரே நேரத்தில் நமக்கு எது தருகிறதோ, அது நூல். வீட்டுக்குள்ளே இன்னொரு உலகத்தையே நிரப்பித் தருவது நூல். பல நூல்கள் நிரம்பிய வீடு, பல்வேறு உலகங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடுஎன்றார் மகாகவி பாரதி. கவலை எங்கே இருந்து வருகிறது? தலைவலி தலையில் இருந்தும் பல் வலி பல்லில் இருந்தும், கால் வலி காலில் இருந்தும் வருவதுபோல், கவலை எங்கே இருந்து வருகிறது? மனதில் இருந்து வருகிறது. எதையோ ஒன்றை நினைந்து நினைந்து கவல்கிறதால் வருவது கவலை.
தலைவலிக்கு மாத்திரை இருக்கிறது. கால் வலிக்கு மருந்து இருக்கிறது. பல் வலிக்கு ஊசி போட்டுக்கொள்ளலாம். மனக் கவலைக்கு எது மருந்து? அது எந்தக் கடையில் கிடைக்கும்? அது புத்தகக் கடையில் கிடைக்கும்.
அன்பான உறவினர்கள் அளிக்கும் அன்பளிப்புத் தொகையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் ரூபாயில் நமக்குப் பிடித்த நூல்களை வாங்கி வரிசைப்படுத்தி அடுக்கிவைத்தால், அங்கே சரஸ்வதி வந்து கொலுவிருப்பாள். ஆண்டுக்கு ஒரு முறை பொம்மைகள் கொண்டு கொலு வைப்பதைப்போல்,  நாம் அன்றாடம் படிப்பதற்கு நூலகம் அமைப்பதே சரஸ்வதிக்குச் செய்யும் சரியான பூஜையாகும்.
இனிமேல், நமது இல்லத்துப் பிள்ளைகளின் பிறந்த நாள்களுக்குப் பரிசுகளாக பொம்மைகளை, விளையாட்டுப் பொருள்களை, விலையுயர்ந்த தின்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதை விடவும், நிரந்தரமான அறிவைத் தரும் நல்ல புத்தகங்களே வேண்டும் என்கிற கொள்கையை உருவாக்கிக் கொள்வோம். வீட்டுக்கொரு நூலகம் தானாக வந்துவிடும்.
ஒரே மாதிரியாக புத்தகங்கள் இரண்டு வந்துவிட்டதா? கவலை வேண்டாம். நமக்குள் இருக்கும் நண்பர்களுக்குள்ளேயே இருக்கும் இரண்டு புத்தகங்களில் ஒன்றைக் கொடுத்துப் பிறரிடம் இருந்து நம்மிடம் இல்லாதிருக்கும் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், படித்த புத்தகத்தைக் கொடுத்து நாம் படிக்காத புத்தகத்தை நமக்குள் பரிமாறிக் கொண்டு படித்து இன்புறலாம். படித்த புத்தகங்கள் குறித்து நண்பர்கள் ஒருங்குகூடி, வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ, கூடி விவாதித்துப் பேசி மகிழலாம்.
ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது, ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்பது ஆங்கிலப் பழமொழி; இதனை நாம் இப்படி மாற்றிப் புரிந்துகொள்வோம். ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது, ஒரு கோயிலின், கருவறைக் கதவு திறக்கப்படுகிறது. கோயிலில் தெய்வ தரிசனம்போல், புத்தகத்தில் அறிவு தரிசனமாகிறது. நமது ஆன்மா சிறப்படைகிறது. இன்னொரு உண்மையையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம். ஆலயங்கள்கூட, அருள் நூல்களால் கட்டமைக்கப்படுகிற வரலாறு நாம் அறிந்ததுதானே?
கிறிஸ்தவ தேவாலயங்களில் பைபிள் எனும் அருள் நூலும், இஸ்லாமிய மரபில் திருக்குர்ஆன் புனித நூலும், சைவத் திருக்கோயில்களில் பன்னிரு திருமுறைகளும், வைணவத் திருக்கோயில்களில் நாலாயிரத்திவ்ய பிரபந்தங்களும் போற்றப் பெறுவதன் நோக்கம் என்ன?
அதுபோல், வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என்கிறோம். எதற்கு? அழகுக்காகவா? எங்கள் வீட்டிலும் நூலகம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளவா?
அழகழகாக வாங்கிவைத்த இனிப்புகளைப் பார்த்தால் இனிக்குமா? ரசித்து, ருசித்துத் தின்றால்தானே இனிக்கும்? அதுபோல், அழகழகான புத்தகங்களை வாங்கி அருமையாக அடுக்கிவைத்தால் மட்டும் போதுமா? அன்றாடம் எடுத்துப் படிக்க வேண்டாமா?
வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதுபோல், ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதும் நமது நோக்கமாக இருப்பது நல்லது. நமது வீட்டில் உணவு உண்பதற்கு அப்பாவுக்கு ஒரு தட்டு இருக்கிறது; அம்மாவுக்கு ஒரு தட்டு இருக்கிறது; நம் உடன்பிறந்தவர்களுக்கும் தனித்தனி தட்டுகள் இருக்கின்றன. அதுபோல் ஒவ்வொருவருக்கும் உதவுகிற தனித் தனிப் புத்தகங்களும் இருக்க வேண்டும்.
ஒரு நூல் ஒரு ஆளை உருவாக்கும். ஆள் என்பது எண்ணிக்கைக்கு உரிய ஒரு நபர் என்பதன்று; என்றென்றும் நின்று வழிகாட்டும் ஆளுமை உடையவராக உருவாக்கும் என்பதே உண்மை.
திருக்குறள் நூல் வீ. முனுசாமியை, திருக்குறளார் ஆக்கியதுபோல், சிலப்பதிகாரமானது சிலம்புச்செல்வராக ம.பொ.சிவஞானத்தையும், சிலம்பொலியாக செல்லப்பனையும், கம்பராமாயணமானது கம்பன் அடிப்பொடியாக சா.கணேசனையும் உருவாக்கியதுபோல், நாம் எடுத்துப் பயிலும் தனித்துவமிக்க எந்தவொரு நூலும் நம்முள் புகுந்து நம்மை ஆளுமை மிக்கவர்களாக ஆக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
காலையில் பல் துலக்குவதுபோல், அன்றாடம் தொலைக்காட்சி பார்ப்பதுபோல், தினமும் படிக்கிற பழக்கமும் நமக்கு வேண்டும். நாளுக்கு மூன்றுவேளை சாப்பிடுகிற நாம் வாரத்திற்கு ஒரு புத்தகத்தையாவது வாசித்துவிட வேண்டும். சாப்பிடுகிற உணவு நம் உடலுக்குள் புகுந்து ஆற்றலாக மாறுவதுபோல், வாசிக்கிற புத்தகத்தின் அனுபவ அறிவு நம் மூளைக்குள் புகுந்து மன ஆற்றலை வளர்த்து விடுகிறது.
சுவாசிக்க சுவாசிக்க நாம் உயிரோடு இருக்கிறோம். வாசிக்க வாசிக்க நாம் அறிவோடு இருக்கிறோம் என்று பொருள். அப்படி இருந்துவிட்டால், நம்மைப் பார்த்து யாரும், அறிவிருக்கிறதா என்று கேட்க மாட்டார்கள்.
அப்படி யாரேனும் கேட்டால், இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமா? என்று கேளுங்கள். ஆத்திரத்தோடு, கொடுங்கள் பார்க்கலாம்என்று கேட்பார்கள். உடனே கொடுப்பதற்கு ஒரு திருக்குறளை வைத்துக்கொள்ளுங்கள். இதில் எங்கே அறிவு இருக்கிறது? என்று கோபமாகக் கேட்பார்கள். ஒன்றல்ல, பத்து இருக்கிறது. பத்துப்பத்தாக, 1330 குறள்கள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால், இந்தப் புத்தகத்தில், அதிகாரம் 43-ஐ எடுத்துப் பாருங்கள் என்று சொல்லுங்கள்.
அது என்ன என்று உங்களுக்கும் சந்தேகம் வருகிறதா? அதுதான் அறிவுடைமை அதிகாரம். அது நமக்கு அதிகாரம் உடைய அறிவைத் தருகிறது. இப்போது அந்தப் புத்தகத்தின் அறிவுடைமை நமது அறிவுடைமை ஆகிவிடுகிறது.
இப்படி, இதயமாற்று சிகிச்சைபோல், அறிவு மாற்றிச் சிகிச்சை தரும் அருமையான மருத்துவமனையாக, சரஸ்வதி குடியிருக்கும் கோயிலாக, அறிவாலயமாக, அன்பாலயமாக நமது வீட்டை ஆக்கிவிடும் அழகிய கலைக்கூடம்தான் நூலகம், இனிமேல் வீடு என்று இருந்தால் வாசல் இருப்பதுபோல், நூலகமும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாமும் இருப்போம்: நலமாக இருப்போம்.
வீட்டுக்கு ஒரு நூல் ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதைச் செயல்வடிவாக்கும் நல்ல குடும்பம், ஒரு பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை. 
கட்டுரையாளர்:
பேராசிரியர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com