முடியவில்லை புரட்சி!

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான், வரலாற்றில் இதுவரை கண்டிராத கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் கார்ட்டோமை

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான், வரலாற்றில் இதுவரை கண்டிராத கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் கார்ட்டோமை நோக்கி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சாரை சாரையாக வந்து குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த அதிபர் அல்-பஷீர் ராணுவப் புரட்சியின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், இப்போது ராணுவத்துக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரப் பங்கீடு ஒப்பந்தத்தின் வாயிலாக மீண்டும் மக்களாட்சியை நோக்கிய முதல் அடியை நாடு எடுத்துவைத்திருக்கிறது என்பதுதான் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.
ராணுவ அதிகாரியாக இருந்த அல்-பஷீர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதிக் அல்-மஹ்தி தலைமையிலான அரசை 1989-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரது 30 ஆண்டுகால ஆட்சியில் ஊழல், போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள். தார்ஃபுர் என்ற பகுதியில் அரபு அல்லாத இனக் குழுக்களின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
சூடான் வரலாற்றில் அழியாத கறையாகப் பார்க்கப்படும் இந்தக் கொடூரத்தைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. இத்தனைக்குப் பிறகும் அவரது போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த டிசம்பரில் தொடங்கியது மக்கள் புரட்சி. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, சாமானிய மக்களும் அதிபருக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சர்வதேச நாடுகளின் கவனம் மீண்டும் சூடானை நோக்கி திரும்பிய சூழ்நிலையில்,  அதிபருக்கு எதிராக ராணுவம் செயல்பட்டு, 2019 ஏப்ரல் 11-ஆம் தேதி அல்-பஷீரை அதிகாரபூர்வமாக பதவியிலிருந்து அகற்றியது.
இதைத் தொடர்ந்து ராணுவ கவுன்சில் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், அதில் இழுபறி நீடித்த நிலையில், படிப்படியாக ராணுவம் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அல்-பஷீரின் ஆட்சியைவிட ராணுவத்தின் ஆட்சி நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றது. 
புரட்சி வென்றது என்ற மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூட நேரமின்றி, ராணுவத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும். மீண்டும் அடக்குமுறை, போராட்டக்காரர்கள் கைது, கிளர்ச்சியாளர்கள் படுகொலை என சூடானின் வரலாற்றுப் பக்கங்களில் ரத்தம் தோய்ந்த அத்தியாயங்கள் மீண்டும் மீண்டும் பதிவாயின. கடந்த டிசம்பரில் மக்கள் புரட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை பொதுமக்கள் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், கடந்த ஜூனில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 120.
இச்சூழ்நிலையில் ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் எத்தியோப்பியாவின் தலையீட்டில் ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 17-ஆம் தேதி அதிகாரப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆட்சியை நடத்துவதற்கு ஓர் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த 11 உறுப்பினர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்படும்; இந்தக் குழுவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியைச் சேர்ந்த 6 பேர், ராணுவ கவுன்சிலை சேர்ந்த 5 பேர் இடம்பெறுவர்; நாடாளுமன்றத்துக்கு அடுத்த தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால நிர்வாகத்துக்கு முதல் 21 மாதங்கள் ராணுவ மேஜரும், அடுத்த 18 மாதங்கள் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த பிரதிநிதியும் தலைமை வகிப்பார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சூடானில் 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் மக்களாட்சியை நோக்கிய பயணத்தில் முதல் அடியை அந்த நாடு எடுத்து வைத்துள்ளதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதை முழு வெற்றியாக சூடான் மக்களால் ஏற்க இயலவில்லை. நாங்கள் புதிய சூடானை பெற்றுள்ளோம். இதுவரை இல்லாத கொண்டாட்டமான மனநிலை நிலவுகிறது. ஆனாலும், நாங்கள் பாதி வெற்றியைத்தான் பெற்றிருக்கிறோம். நாட்டின் அதிகாரம் முழுமையாக மக்களாட்சியின் வசம் எப்போது ஒப்படைக்கப்படுமோ அன்றைய தினத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்பதுதான் தலைநகரில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கருத்து.
30 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அதிபர் அல்-பஷீரையே ஆட்டம்காணச் செய்தது அந்நாட்டின் மக்கள் சக்தி. ஆதலால், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் புதிய இடைக்கால நிர்வாகத்தில் தங்களது அதிகார வரம்புக்குள் ராணுவ கவுன்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மக்களாட்சியை மண்ணில் புதைத்து சர்வாதிகாரம் உருவாகலாம்; ஆனால், மக்கள் புரட்சியின் முன் அந்த சர்வாதிகாரம் நீடிக்காது என்பதுதான் உலகத்தின் சரித்திரம் சொல்லும் உண்மை. அந்த வகையில் சூடான் மக்கள் சொல்லும் செய்தி இதுதான், புரட்சி முடிந்து விடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com