ஆரம்பக் கல்வியே அடித்தளம் 

கல்வியை மேம்படுத்தித்தான் ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும் என்ற கோட்பாட்டினை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

கல்வியை மேம்படுத்தித்தான் ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும் என்ற கோட்பாட்டினை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. நம் நாட்டிலும் இதை ஏற்றுக் கொண்டு, கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பள்ளி, கல்லூரிகளை அதிகம் உருவாக்குதல், தேவையான அளவில் ஆசிரியர்களை பணி அமர்த்துதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, குழந்தைகளுக்கு நமது ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியே.  நல்ல முறையில் கல்வி கற்று, நமது குழந்தைகள் பெரியவர்களாகி உயர் கல்வி நிலையில் சிறந்த மாணவர்களாக வலம் வருவது அவசியம். ஜான் டிவே எனும் கல்வி தத்துவ மேதை 1897-ஆம் ஆண்டில் கூறியது கவனிக்கத்தக்கது: ஒரு பள்ளியின் ஆசிரியர் குழந்தைப் பருவ மாணவர்களுக்கு சில எண்ணங்களையும், பழக்கங்களையும் உருவாக்குவதற்காக மட்டும் இல்லை.  ஆனால், நம் சமூகத்தின் தரமான உறுப்பினராக அவரிடம் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சில எண்ணங்களை உருவாக்கி, அந்த எண்ணங்களுக்கு எப்படி அடிபணிய வேண்டும் என்பதைப் புரியவைக்க வேண்டும் எனக் கூறினார் அவர்.
அந்த காலகட்டத்தில்தான் உளவியல்எனப்படும் சைக்காலஜி ஒரு சிறந்த விஞ்ஞான அறிவியலாக உருவாகி வளர்ந்து வந்தது.  இதை பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஜான் டிவேயின் தத்துவார்த்தமான வேண்டுகோள். அடுத்த நூறு ஆண்டுகளில், உலகின் எல்லா நாடுகளிலும் கல்வியின் தரம் உயர உளவியல் நடவடிக்கைகள் கல்வி நிலையங்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில், குழந்தைகளைக் காக்கும் இணைச் சட்டம் 2013-இன்படி பள்ளிகள், தேசிய சுகாதார இயக்கம், காவல் துறை மற்றும் உளவியலையும் பாதுகாக்கும் நடைமுறை குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சமூகம், குழந்தைகளின் மனநிலையையும், மற்ற நடவடிக்கைகளையும் சீரமைத்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பதை அந்த நாடு உணர்ந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் இதுபோன்ற நிலைமை இன்று வரை உருவாக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கையின் முதல் வரைவு அறிக்கையில், ஒரு குழந்தையின் கற்கும் குணம் பிறந்த உடனே ஆரம்பமாகிறது எனக் கூறப்பட்டுள்ளது.  குழந்தைகள் பள்ளிகளில்தான் கற்க ஆரம்பிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நம்மில் பலர்  உள்ளோம்.  மொழிகள், எண்கள் பற்றிய அறிவு மற்றும் அலசி ஆராயும் குணங்கள் பள்ளிக் கல்வியில் உருவாகின்றன.  
ஆனால், இது போன்றவற்றைக் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைக் குணாதிசயங்கள் பள்ளிகளுக்கு வரும் முன்பே குழந்தைகளுக்கு உரித்தாகுகின்றன. இது நமக்குத் தெரியாமலேயே குழந்தைகளுக்கு உருவாகின்றன. விவரங்களை அறிந்துகொள்ளும் அடிப்படைத் திறமை ஒரு குழந்தை பள்ளியில் சேருவதற்கு முன்பே, ஒரு வயது முதல் மூன்று வயது வரை உருவாகி வளர்ந்து விடுகிறது. மேலும், மூளைக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் மூளையின் பின் பகுதிகளும் எண்ண ஓட்டங்களை உருவாக்கி, ஒரு குழந்தையின் சிந்தனைக்கான அடிப்படைத் திறமைகள் 85 சதவீதம், அதாவது 6 வயதுக்குள் முழுமை அடைகின்றன என தேசிய கல்விக் கொள்கையின் அறிக்கை கூறுகிறது.  இது சரியல்ல எனப் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஒரு மனிதன் பிறந்து, 1,000 நாள்களில் அவனது மூளையின் அடிப்படை வளர்ச்சி உருவாகிறது என உலகின் எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதற்கான தரமான ஆராய்ச்சிக் கட்டுரை தி லான்செட் எனப்படும் விஞ்ஞான இதழில் 2007-ம் ஆண்டில் வெளியானது.
நமது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று நாம் குழந்தைகளின் பள்ளிக் கல்வியை உருவாக்கினால், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான செயலாக அது இருக்காது. குழந்தைகள் பிறந்து 1,000 நாள்களில் மூளையின் அறிவூட்டப் பகுதியில் எண்ண ஓட்ட அடிப்படைகளும், பிறருடன் உறவாடும் குணங்களும் உருவாகின்றன. கண் விழிகள் செயல்படுவதும், செவிகள் கேட்கும் தன்மையைப் பெறுவதும் குழந்தை பிறந்து இரண்டு மாதம் முதல் ஐந்தாம் மாதம் வரை நடந்தேறுகிறது.  பின் அந்தத் திறமை வளர்ந்து பள்ளி செல்லும் வரை நடக்கிறது.
தாயின் கருவில் குழந்தை வளரும்போதும், பிறந்த உடனேயும் மூளையின் வளர்ச்சி உருவாகும்.  குழந்தைகளின்  பெற்றோர் மற்றும் மூதாதையரின் ஜீன்ஸ் எனப்படும் மரபணுக்களின் குணாதிசயங்களும், குழந்தைகள் வளரும் சூழ்நிலையும் குழந்தைகளின் குணங்களையும், திறமைகளையும் உருவாக்குகின்றன.
இதுபோன்ற விஞ்ஞான ரீதியிலான விவரங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.  ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னால், தாயின் வயிற்றில் வளரும்போது, மூன்று கட்டங்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
முதலாவது கட்டம், கரு உருவாகும் 2 வாரங்கள்;  அடுத்தது, 2 வாரங்கள் முதல் 8 வாரங்களை உள்ளடக்கிய கரு கட்டம்; மூன்றாவதாக, 9-ஆவது வாரம் முதல் குழந்தை பிறக்கும் வரை சிசு கால கட்டமாகும்.
தாயின் வயிற்றில் இருக்கும்போதே, உணர்ச்சிபூர்வமான புரிதல்களை கருக் குழந்தை உணரமுடியும். பார்த்தல், கேட்டல் ஆகியவற்றுக்கான வளர்ச்சிகள் இரண்டாம் கட்டத்திலும், தாயின் வயிற்றைத் தொடும்போது ஏற்படும் உணர்ச்சிகள் 5 முதல் 8 வாரங்களில் குழந்தைக்குப் புரியும்.  இரண்டாம் கட்டத்திலேயே பல லட்சம் நியூரான்ஸ் எனப்படும் மூளையின் செல்கள் உருவாகி விடுகின்றன. பிறந்த நிலையிலேயே தனது தாயின் குரலையும், தொடும் உணர்ச்சியையும் ஒரு குழந்தையால் உணரமுடியும்.
இவற்றைப் புரிந்துகொள்ளும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விவரம், கருவுற்ற தாய் புகை பிடித்தாலோ, மது அருந்தினாலோ, தவறான மருந்துகளை உட்கொண்டாலோ, மோசமான சுற்றுச்சூழ்நிலையில் இருந்தாலோ அது குழந்தையைப் பாதித்து விடும்.  தனது வயிற்றுக்கு உள்ளேதானே குழந்தை அடங்கியுள்ளது எனும் தவறான கருத்து சரியல்ல என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. 
இதற்கான உதாரணம், அமெரிக்காவில் ஆண்டுக்கு 1,00,000 முதல் 3,75,000 கொக்கைன் எனப்படும் போதை வஸ்துவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.  இதற்கு காரணம் இக்குழந்தைகள் கருவில் இருக்கும்போதே, கருவுற்ற தாய்மார்கள் கொக்கைன் அருந்துவதுதான் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிறந்தபின், அவர்களுக்குள்ள முதல் கடுமையான மூளை மற்றும் பிற உறுப்புகளின் ஒருங்கிணைந்த வேலை, மொழியைக் கற்றுக் கொள்வதுதான் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.  ஆனால், குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உதவியுடன் மிகவும் எளிதாக தங்கள் தாய்மொழியைக் கற்றுக் கொள்கின்றனர்.  இது குழந்தைகளின் சுய முயற்சியால் நடக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள அவர்களுக்குள் உள்ள திறமை பிறப்பிலேயே அவர்களுக்குள்ள ஆற்றல் என்பது உளநூல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு.
இதே திறமையை முன்வைத்து ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளை கற்க வைத்தால் மிகச் சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாவார்கள்.  ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் கண்டிப்புடன் பாடங்களைப் போதிப்பதால் மாணவர்களில் பலர் பாதிக்கப்படுகின்றனர்.  கல்வி கற்பது மாணவர்களுக்கு செளகரியமான, அன்புள்ள மற்றும் நம்பிக்கை வைத்துள்ள சூழ்நிலையில்தான் சிறப்பாக அமையும்.
ஆனால், இன்றைய நமது பள்ளிகளில் மாணவர்களுக்கு  ஒன்றும் தெரியாது,  அதனால், அவர்களைக் கண்டித்து மிகவும் கட்டாயப்படுத்தித்தான் கல்வி கற்கச் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.  இது மாணவர்களைப் பாதிக்கிறது. ஏழைக் குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் பலர், பள்ளிப் படிப்பை நிறுத்திவிடும் மன நிலைமை அவர்களது ஆரம்பப் பள்ளிகளிலேயே உருவாகி விடுகிறது.
வகுப்புகளில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக் கொண்டு கற்க வேண்டும் என நம் ஆசிரியர்களில் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், மாணவர்கள் வகுப்பறையில் ஒருவருக்கொருவர் நேசத்துடன் இணைந்து கல்வியைக் கற்பது நல்ல பலனை அளிக்கும் என்பது அனுபவம் தந்த பாடம்.
புத்தகங்களைப் படிக்கும் மாணவர்களில் பலர் நன்றாகப் புரிந்து கொள்வதும், சிலர் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதும் உண்டு. புரிந்துகொண்ட மாணவர்கள், தங்களுடன் நண்பர்களாகப் பழகி தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்கள் சிலர் பாடங்களைப் புரிந்துகொள்ளாத நிலைமையில், அவர்களுக்குப் பாடங்களை விளக்குவது இயல்பான ஒன்று. இதுபோன்ற நட்புடனான அணுகுமுறையும், ஆரம்பப் பள்ளி மாணவர்களை சிறப்பாக நடத்தி, ஒற்றுமையுடன் சக மாணவர்களுடன் பழகச் செய்யும் குணாதிசயங்களை உருவாக்கும் ஆசிரியர்களால் நடந்தேறுகிறது.  எனவே, நம் மாணவர் சமுதாயம் மற்றும் கல்வி ஆகியவை சிறப்படைய அடிப்படைத் தேவை இளம் மாணவர்களைப் பற்றி மேலே நாம் விவரித்த விவரங்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்வதே.  கல்வித் துறையும், மத்திய-மாநில அரசுகளும் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசரக் கட்டாயம்.
 கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com