சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தேர்தலை நியாயமாக நடத்த...

By பெ. சிதம்பரநாதன்| DIN | Published: 30th April 2019 02:40 AM


நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த மேதைகளுக்குக் கற்பனையில்கூடத் தோன்றாத ஒரு கருத்து, நமது ஜனநாயகத்தை அண்மைக்காலமாக ஆட்டிப்படைக்கிறது.
அரசியல் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டுத்தான், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், மத்தியில் பிரதமரையும், மாநிலங்களில் முதல்வரையும் தேர்ந்தெடுப்பார்கள்.
பெரும்பான்மை என்பது தனித்த ஓர் அரசியல் கட்சிக்குக் கிடைப்பது இப்போது சாத்தியமில்லை. 1952-இல் நடந்த முதல் தேர்தலிலேயே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் எம்.எல்.ஏ.வாக இல்லாத ராஜாஜியை முதலமைச்சராக்கி சுயேச்சைகளின் ஆதரவுடன்தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்டது. 
ஒத்த மனப்பான்மையுடைய கட்சிகள் ஓர் அணியாக இணைந்து இந்தப் பெரும்பான்மையை உருவாக்கலாம் என்பது அரசியல் சட்டத்தில் இல்லை என்றாலும், அரசியல் சட்டம் அதனைத் தடுக்கவில்லை. 
மத்தியில் ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மைக்கு 272 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அறுதிப் பெரும்பான்மை பெறுகிற கூட்டணியே ஆளும் கூட்டணியாகிறது. கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பினால்தான் அறுதிப் பெரும்பான்மையே உருவாக்கப்படுகிறது. பெரும்பான்மைக்கான முந்தைய அர்த்தம் வேறு, புதிய அர்த்தம் வேறு. இப்படிப்பட்ட பெரும்பான்மை தரும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் தரப்படுகின்றன.
இவ்வாறு கூட்டணியால் அறுதிப் பெரும்பான்மை பெறப்படுகிறபோது, அதில் உள்ள அனுகூலத்தைப் போலவே ஆபத்தும் உள்ளது. கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் சுயநலத்துக்காகக் கூட்டணியை விட்டு விலகுமானால், அறுதிப் பெரும்பான்மை என்பது நிலைகுலைந்து ஆட்சி கவிழ்ந்துவிடும்.
ஆளும் கட்சியின் சகோதர கட்சிகள் இரவலாகக் கொடுத்த ஆதரவால்தான், மத்திய ஆட்சி ஐந்தாண்டுக் கால ஆயுட்காலத்தை நிறைவு செய்கிறது.
இந்த ஐந்தாண்டுக் காலத்திற்குள் நாட்டின் நிலவரங்கள் மாறுகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி ஆட்சியைக் கவிழ்க்கவோ, கைப்பற்றவோ திட்டமிடுகின்றன. தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றன.
ஆளும் கூட்டணிக் கட்சியைப் போலவே எதிர்க்கட்சி கூட்டணியும் மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கிறது. தங்கள் ஆட்சி தொடர்ந்தால், சிறு-குறு விவசாயிகளுக்கு மானியமாக ரூ.6,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் வரவு வைக்கப்படும் என்கிறது பாஜக.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியோ விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஐந்து கோடி மக்களுக்கும் மாதம் தலா ரூ.6,000 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.72,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இவ்வாறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களைக் கவர்வது நல்ல ஆரோக்கியமான நடைமுறைதான். ஆனாலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பேச்சுகளோ மலிவானதாகி வெறுப்பு அரசியலை வளர்க்கின்றன.  வெறுப்புப் பேச்சுகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சி, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கிறது. 
இந்தத் தேர்தலில் அப்படி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விசித்திரமானது. எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் அந்தப் பேச்சுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று ஆளும்கட்சித் தலைவர் வழக்குத் தொடுக்கிறார். 
இந்த வழக்கில் நீதிபதி தந்த தீர்ப்பு என்னவென்றால், ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிப் பேசிக் கொள்வதால், ஒரு தரப்பை மட்டும் நீதிமன்றம் தடைசெய்ய முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அப்படியானால், இரு தரப்பினருமே தாங்களாகவே சமரசமாகிவிட வேண்டுமே தவிர, சட்டத்தின் மூலம் ஒரு தரப்புக்கு வாய்ப்பூட்டுப் போட நீதிமன்றத்தை உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்தத் தீர்ப்பின் நோக்கம். 
தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் ஆணையத்தின் விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. ஆளும் கட்சியின் கூட்டணி ஆட்சி மீது முக்கியமான நான்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
முதலாவதாக, ஆளும்கட்சியின் கூட்டணி ஆட்சி, எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட வருமான வரித் துறையை ஏவிவிடுகிறது. இரண்டாவதாக, அவர்களின் வீடுகளில் திடீர் சோதனைகள் செய்து, அவர்களுடைய சொத்து ஆவணங்களைக் கைப்பற்றவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஊழல் பணத்தைக் கையகப்படுத்தவும் அமலாக்கத் துறையை ஆளும் கூட்டணிக் கட்சி உபயோகப்படுத்துகிறது. மூன்றாவதாக, வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி அவதூறு பரப்பி தேர்தலில் தோற்கடிக்க, வருமானவரித் துறை, அமலாக்கத் துறையின் அறிக்கைகளைச் சாதகமாகப் பெற்று, அந்தத் தொகுதிகளில் தேர்தலையே ரத்து செய்ய ஆளும் கூட்டணிக் கட்சி தேர்தல் ஆணையத்தைப்  பயன்படுத்துகிறது. நான்காவதாக, ஆளும்கட்சியின் கூட்டணி ஆட்சி, காவல் துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவிவிட்டு, அடக்கு முறையை உபயோகிக்கிறது. 
இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் பரிசீலிக்கப்படுவதற்குத் தகுதியான குற்றச் சாட்டுகள்தான். வழக்குகளாக இவை தாக்கல் செய்யப்படுமானால் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்குக் காலதாமதமாகலாம். அதற்குள் தேர்தலே நடந்து முடிந்துவிடும். 
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜனநாயகத்தின் ஆன்மாவாக உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் எப்படி நடத்துவது? 
நீதிமன்றமே கையறு நிலையில்தான் நிற்க வேண்டியுள்ளது. தார்மிகமாகத்தான் நீதிபதிகள் பேச வேண்டியுள்ளது. ஏறக்குறைய உபதேசங்களாகத்தான் அவர்கள் உத்தரவிட வேண்டியுள்ளது. வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல், சுதந்திரமாகவும், சுயமாகவும் சிந்தனை செய்து தங்களுக்கு விருப்பப்பட்ட ஒருவரை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பது நியாயமானது.  இதுவரை அப்படிப்பட்ட நியாயமான ஒன்றைப் பற்றி நாம் பரிசீலிக்கவும் இல்லை. பரீட்சை செய்து பார்க்கவும் இல்லை. அது என்ன?
தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசு உருவாக்கியது அல்ல. நீதிமன்றம், சட்டப்பேரவை, அரசு அதிகாரிகள் ஆகிய மூன்றையும் அரசியல் சாசனம்தான் உருவாக்கியுள்ளது. 1990-இல் டி.என். சேஷன் பதவியேற்கும் வரை, இந்த மூன்றுக்கும் சமமாக உள்ள தேர்தல் ஆணையத்தைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. அரசியல் சாசனம்தான் அதனையும் உருவாக்கியுள்ளது. அதற்குரிய சகல அதிகாரங்களையும், அதை உருவாக்கிய அரசியல் சாசனத்தில் இருந்துதான் அது பெறுகிறது. 
தேர்தலை மத்திய அரசுதான் நடத்துவதாக நாம் நினைக்கிறோம். அரசியல் சாசனப்படி தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. இதை நடத்துவதற்குத் தேவையான ராணுவம், காவல் துறை, அரசு அலுவலர்கள் ஆகிய அனைத்தையும் தமக்கான உரிமையின் மூலம் தேர்தல் ஆணையம் பெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்துக்கு இவற்றைச் சலுகைகளாகத் தரவில்லை. 
வாக்குச்சாவடிகளை அரசியல் கட்சிகள் கைப்பற்றுதல், வாக்குகளை விலைக்கு வாங்கப் பணம் விநியோகம் செய்தல், வேட்பாளர்களைக் கடத்திக் கொண்டு போகுதல் போன்ற காரணங்களால் பாதிப்பு வராமல் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உத்தரவாதப்படுத்தி தேர்தல் ஆணையம்தான் அதை நடத்த வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேசத்தின் மாநில அதிகாரங்கள் மாவட்டங்களின் அதிகாரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் கையகப்படுத்துகிறது. அதனால்தான் காவல் துறை தலைவருக்கு (டிஜிபி) தேர்தல் ஆணையம் மாறுதல் உத்தரவு தருகிறது. மாவட்ட ஆட்சியருக்கு மாறுதல் உத்தரவு தருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு அரசு அலுவலர்கள் பணிந்து வேலை செய்ய வேண்டும் என்பது சட்டம்.
இவ்வாறான அதிகாரங்களைக் கொண்ட தேர்தல் ஆணையம், இன்னொன்றையும் கோரிப் பெறலாம். மத்திய ஆட்சி, மாநில ஆட்சிகள் ஆகிய அனைத்தையும் ராஜிநாமா செய்ய வைத்து, எதிர்க்கட்சிகளைப் போலவே ஆளும் கூட்டணிக் கட்சிகளும் சமமாகத் தேர்தலில் கலந்து கொள்ளுமாறு செய்யலாம்.  அதற்குரிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு ஆணையமே கோரிக்கை வைக்கலாம். 
இந்த நடவடிக்கை எடுக்கப்படுமானால், எதிர்க்கட்சிகள் இதை நிச்சயம் வரவேற்கும். ஆளும் கூட்டணிக் கட்சிகள்தான் இதற்குத் தயங்கும். தடுக்கவும் செய்யலாம். மக்கள் கவனத்துக்கு இதைக் கொண்டு போனால், இதனைப் பற்றிய விவாதம் பொதுத் தளத்தில் நடக்கும். அதன் முடிவு தேர்தல் ஆணையத்துக்கே ஆதரவாக இருக்கும். 
தேர்தல் நடக்கும் ஒரு மாத காலத்துக்கு மட்டும் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலைமையை தேர்தல் ஆணையம் உருவாக்கலாம். தேர்தலை நடத்திய பின்னர் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டணிக் கட்சியிடம்  ஆட்சியை ஒப்படைக்கலாம். 
தேர்தல் ஆணையத்துக்கு இத்தகைய புது அதிகாரம் ஆயுதமாகக் கிடைக்குமானால், வருமான வரித் துறையையோ, அமலாக்கத் துறையையோ, காவல்துறையையோ ஆளும் கூட்டணி ஆட்சி ஏவிவிடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வாய்ப்பே இருக்காது. தேர்தல் ஆணையமும் திருவாளர் பரிசுத்தமாகிவிடும்.
கட்டுரையாளர்:
பொறுப்பாசிரியர்,
ஓம் சக்தி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கீரை வாங்கலையோ கீரை...
மனைவியின் மாண்பு 
வீடுதோறும் நூலகம்...
போராட்டம், எது சிறந்தது?
ஆரம்பக் கல்வியே அடித்தளம்