சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

இலங்கையே மாறுக!

By முனைவர் அருணன் கபிலன்| DIN | Published: 30th April 2019 02:39 AM


அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்துத்தான் இலங்கையைக் குறித்து மனத்துக்குள் கற்பனை செய்து கொண்ட அந்தக் காலத்திலேயே அந்தக் கதை நடந்த காலத்திலேயும்கூட,  இலங்கையில் அடிக்கடி ஏற்படுகிற கொடுமைகளையும் சேர்த்துப் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையை தனது பொன்னியின் செல்வன் புதினத்தில் இப்படித்தான் கல்கி அறிமுகப்படுத்துகிறார்.
கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப்பிரதேசம் காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப்பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன.
மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்! என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது என்று நம்மை மெய் மறக்கச் செய்யும் ஒரு வர்ணனையைத் தந்து விட்டு, இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை! என்பதோடு கூடுதலாக இன்னொரு செய்தியையும் சேர்த்து இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்ற பூமி. இந்தச் சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக்கொண்ட அசுரர்கள் வெகுகாலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள் என்றும் கதாபாத்திரங்களின் வழி சுட்டிக் காட்டி, யாரை அசுரர்கள் என்று சொல்லுகிறாய்? என மேலும் ஒரு கேள்வியைக் கேட்டு, யுத்தமே தொழிலாகக் கொண்டவர்களைத்தான் என்று அவர் அன்றைக்குத் தந்த பொருளுடைய பதில் இன்றைக்கும் பொருந்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், மனிதநேயத்துக்கு இது பொருந்தாமலே இருக்கிறது என்பதே வருத்தம்.
இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான ஓர் படைப்பு இப்படி மனிதக் குரூரங்களால் சீரழிவதைக் கண்டு உலகமே அதிர்ந்துதான் போகிறது. இன்று நேற்றல்ல. இதிகாச காலந்தொட்டே இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இராவணனின் சகோதரனாகிய குபேரன் தேவேந்திரனின் தேவலோகத்துக்கு இணையான ஒரு நகரமாகவே இந்தத் தீவினைப் படைத்தான் என்றும் அதற்கு அழகாபுரி என்று பெயரிட்டு ஆண்டுவந்தான் என்றும் அதை இராவணன் தனது அசுர வலிமையால் அபகரித்துத் தனதாக்கிக் கொண்டான் என்றும் பழங்கதைகள் கூறுகின்றன.
இன்றைக்கும் கிராமங்களில் இராமாயணக் கதையோடு சேர்த்து இலங்கையைப் பேசுகிறவர்கள், என்றைக்கு இராவணன் சீதையைக் கவர்ந்து இலங்கையில் சிறைவைத்து அதனால் அனுமனால் அது எரியூட்டப்பட்டதாகக் கதை சொன்னார்களோ, அன்றிலிருந்து அந்த மண்ணில் அவலங்களுக்குப் பஞ்சமில்லை.
இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி தாக்கக் கூடிய தீவாக இருந்தபோதிலும் அரக்க மனம் கொண்டவர்களால் ஏற்படுகிற செயற்கைப் பேரழிவுகளே காலங்காலமாக அந்தத் தீவினை அழித்துக் கொண்டு வருகின்றன. இந்துமகா சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் அந்தத்தீவு அடிக்கடி வன்முறைக் கொடுமைகளால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தானோ என்னவோ இது இந்தியாவின் கண்ணீர்த் துளி என்றும் வடிவமைப்பைச் சுட்டி அழைக்கப்படுகிறது போலும்.
பன்னாட்டு மக்களும் பலமொழிகள் கலாசாரத்தோடு இணைந்து இனிது வாழ ஆசைப்படுகிற அந்த அற்புதத் தீவில் அடிக்கடி அசுரத்தனங்கள் கோரமாகவே நர்த்தனமாடி விடுகின்றன. இலங்கை மண்ணில் அதிகமாகக் குருதி சிந்தியவர்கள் தமிழர்கள். அதற்குப் பிறகாவது இலங்கை திருந்தியிருக்கிறதா என்றால் அண்மையில் மீண்டும் தனது குரூரத்தைக் காட்டியிருக்கிறது அதே அசுரத்தனம்.
ஒட்டுமொத்த மானுடநேயத்துக்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகவே இலங்கை விளங்குகிறது. குண்டுவெடிப்பு, மரணம், பிணக்குவியல்கள் என்று சொற்றொடர்கள் இலங்கையில் அனுதினமும் பயன்படுத்தப்படுகின்றன. பச்சிளங்குழந்தைகள் தொடங்கி மனிதச் சதையைத் துளைத்தெடுத்து ருசிபார்க்கத் துடிக்கும் எல்லா எதிர்மறைச் சக்திகளும் அங்கே தங்களுக்கான வாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன போலும்.
எல்லாவுயிரையும் தம்முயிராகக் கருதும் தமிழ் மரபும் அங்கே வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. இலங்கையின் பிற்பகுதி வரலாற்றில் மலையகத் தோட்டங்களில் அந்த நாட்டின் வளர்ச்சிக்காகத் தமிழர்கள் பட்ட பாடு வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.இன்னும்கூட நம்பிக்கையோடு இலங்கை எங்கள் தேசம் என்கிற ஒருமித்த கருத்துணர்வோடுதான் உலகெங்கிலும் பரவி இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புத்தரின் புனிதத்தைத் தன்னுள் ஏந்திய அந்தப் பூமி  இலங்கை மாறுக. மானுடத்தைப் பேணுக.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கீரை வாங்கலையோ கீரை...
மனைவியின் மாண்பு 
வீடுதோறும் நூலகம்...
போராட்டம், எது சிறந்தது?
ஆரம்பக் கல்வியே அடித்தளம்