மீன் வேண்டாம், தூண்டில் போதும்!

உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும்  இரு பெரும் பிரச்னைகள் கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும்தான். கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மாதிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  


உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும்  இரு பெரும் பிரச்னைகள் கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும்தான். கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மாதிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வேலைவாய்ப்பின்மை பிரச்னை  உள்ளதாக அந்த அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சுமார் 4 கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
வேலையில்லாத் திண்டாட்டமும், திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்காமையும் இந்தியாவில் அதிகமான மக்களின் வறுமைக்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. நமது நாட்டில் வேலை என்பது பிழைப்புக்கான சாதனமாகவும், ஒரு சொத்தாகவும், கெளரவத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.  எனவே, வேலை இல்லை என்பது வாழ்க்கையை இழப்பது போலாகிறது.
வேலையின்மை சிக்கலுக்கு பொருளாதார காரணம் மட்டுமின்றி வேறு சில சமூகக் காரணங்களும் உள்ளன.  பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்கள், உள்நாட்டுத் தேவை சரிவு, மக்கள்தொகை பெருக்கம், நாட்டில் கல்வி வசதிகள் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகாதது, ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிலையங்களிலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வருவது ஆகியவை  வேலையின்மைக்கு முக்கியக் காரணமாகும்.
வேலையின்மை என்பது தான் நாட்டில் நிலவும் தீவிரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும், நக்ஸலைட்டுகள் உருவாவதற்கும், ஜாதி சண்டைகளுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும்  காரணமாக உள்ளது.  அது நம் நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தி விடுகிறது. 
படித்தவர்கள் அனைவரும் கறைபடியாத வெள்ளைச் சட்டை அதிகார (அரசு) வர்க்க வேலையையே விரும்புகின்றனர்.  அவர்கள் சுயத்தொழிலில் ஈடுபட அஞ்சுகின்றனர். அதனால், தொழில்முனைவோர் போதுமான அளவில் இல்லை.   
கடந்த ஆண்டு "நாஸ்காம்' வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 லட்சம்  பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வெளியே வந்தாலும், அவர்களில் கால் பங்கு நபர்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் ஒரு ஊரில் ஒரே ஒரு பொறியியல் பட்டதாரி இருப்பார். ஆனால், இப்போதோ வீடுதோறும் பல பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர்.  கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியேறினாலும் 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் திண்டாடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஏட்டுக் கல்வியை மட்டுமே அவர்கள் கற்ற கல்வி நிறுவனங்கள் போதித்துள்ளதால் பலர் "கூரியர் பாயாகவும்', வீட்டுக்கே உணவு கொண்டு வரும் வேலையிலும், ஓட்டுநர்களாகவும், துணிக் கடை, மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில், "டெலிகாலர்'களாகவும், வரவேற்பாளர்களாகவும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பவர்களாகவும் தாங்கள் படித்த படிப்புக்கும், வேலைக்கும் தொடர்பில்லாமல் வங்கிகளில் கடன் வாங்கி படித்த பின் வட்டியையும் கட்ட முடியாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறஹார்கள்.
இந்தியாவில் 80 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். இந்திய அளவில்  நகர்ப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களின்  எண்ணிக்கை 7.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில்  5.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 6.2 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல்  உள்ளனர். அதாவது, தமிழகத்தில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். 
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  இந்தத் திட்டம்  எந்த அளவுக்கு வெற்றி அடையும் என்பது அதன் செயல்பாட்டில் உள்ளது. 
"மீன் வேண்டாம், தூண்டில் போதும்' எனப் பிரபல சொலவடை உண்டு.  எனவே, வறுமையில் வாடுபவர்களுக்கு பணத்தைக் கொடுத்து கட்டிப் போடுவதைவிட, அவரவருக்குத் தெரிந்த சிறு தொழில் தொடங்குவதற்கான ஊக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.
நாட்டில் வறுமை குறைய வேண்டுமானால் மாற்று வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.   வேலைவாய்ப்பைப் பெருக்குதல் என்பது வளமான பொருளாதாரத்தின் அடையாளமாகும்.  வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது என்பது அரசின் மக்கள் நல நடவடிக்கை மட்டுமல்லாது பொருளாதார வளர்ச்சியின் உத்தியுமாகும். 
முழு வேலைவாய்ப்பு என்பது மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்துவதுமாகும். மக்களின் வாழ்வாதாரத்தை வேலைவாய்ப்பு தீர்மானித்து, வருவாயின் அளவை நிர்ணயித்து  பொருளாதார நடவடிக்கைகளை அறியவும், தேசிய வருமானத்துக்கான காரணமான பொருளாதார நடவடிக்கைகளின் பங்களிப்பைக் கணக்கிடவும் உதவுகிறது.   நல்லாட்சியைத் தீர்மானிப்பதற்கான அளவுகோலாகவும் பயன்படுகிறது. எனவே, வேலைவாய்ப்பு என்பது பொருளாதார வளாகத்தின் நுழைவு வாயிலாகும்.
வேலையின்மை என்பது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள கால வெடிகுண்டு போன்றது.   இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்கினாலொழிய வறுமை ஒழியாது.   மனித வள ஆற்றலுக்கேற்ப வேலைவாய்ப்பை அதிகரிப்பதும், வேலைக்குத் தகுதியற்றோரைத் தகுதியுடையோராக்கி வேலையின்மையைக் குறைப்பதும்  திறமையான நல்லாட்சிக்கு அடையாளமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com