பறக்கும் படை சோதனை... நிறைவேறியதா நோக்கம்?

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி வரை ரூ.742.28 கோடியும், ரூ.238.87 கோடி மதிப்புள்ள


இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி வரை ரூ.742.28 கோடியும், ரூ.238.87 கோடி மதிப்புள்ள மது வகைகளும், ரூ.1,180.79 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும்,  ரூ.942.95 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருள்களும், ரூ.47.63 கோடி மதிப்பிலான பிற வகைப் பொருள்களும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3,152 கோடியாகும். தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பண விஷயத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முடிந்துவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தொடங்கிய தேர்தல் நெறிமுறைகள், தேர்தல் முடியும் வரை அதிகாரிகளால் முடிந்தவரை நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் ரூ.214.95 கோடி பணம், ரூ.3.54 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.38 லட்சம் மதிப்புள்ள  போதைப் பொருள்கள், ரூ.708 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவை, ரூ.8.18 கோடி மதிப்பிலான மற்றவை என ரூ.935.74 கோடி மதிப்புள்ள பொருள்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. குஜராத்தில் ரூ.545.49 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புது தில்லியில் ரூ.395.71 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத்தில் ரூ.11.36 கோடி மதிப்புள்ள மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.524.34 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்பது வேதனை அளிக்கும் விஷயமாகும். 
தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.137.27 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ரூ.42.29 கோடி மதிப்புள்ள மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; மற்ற மாநிலங்களைவிட இது அதிகம். யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை லட்சத்தீவில் மட்டுமே மிகக் குறைந்த அளவிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களைப் பொருத்தவரை சிக்கிம் மாநிலத்தில் மிகக் குறைந்த பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் சவாலான பணியாக இருந்தது பறக்கும் படையினரின் வாகன சோதனைதான். பறக்கும் படையினரின் வாகன சோதனை அரசியல்வாதிகளைக் காட்டிலும், பறக்கும் படையினருக்குத்தான் பெரும் சோதனையாக அமைந்திருந்தது என்பதே உண்மை. அப்படி என்ன பெரிய சோதனை அந்த அதிகாரிகளுக்கு நடந்திருக்கக்கூடும்?
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  தமிழகம் முழுவதும்  அரசியல்வாதிகளிடமிருந்து  பறக்கும் படையினர் கைப்பற்றிய ரொக்கம் மற்றும் பொருள்கள் என்பது மிகக் குறைந்த அளவுதான். மற்ற அனைத்துமே சாதாரண வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்துதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒரு பொருளின் மாவட்ட விநியோகஸ்தர் அந்தப் பொருளை மாவட்டத்திலுள்ள பல நூறு கடைகளுக்கு அனுப்பிவைத்து அதற்கான பணத்தை அந்த மாதக் கடைசியில் பெற்றுச் செல்வது வழக்கம். இதற்கான ஜிஎஸ்டி சரியாகக் கணக்கிடப்பட்டிருக்கும். ஆனால், அந்த விநியோகஸ்தர் மாத இறுதியில் அதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு வரும்போது உரிய பதிவேடுகள் இல்லை எனக் கூறி, பறக்கும் படையினர் அதைக் கைப்பற்றியுள்ள சம்பவங்கள் அதிகம் நடந்தேறியுள்ளன. ஆனால், அந்த விநியோகஸ்தர் அதற்கான கணக்குகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் காட்டி,  பணத்தை மீட்க சில காலம் பிடிக்கும்.
மேலும், நெல் போன்ற தானியங்களை விற்பனை செய்த விவசாயிகள் உள்ளிட்டோர்தான், தாங்கள் விற்ற பொருள்களுக்கு உரிய பணத்தைப் பெறுவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இதனால், விவசாயிகளின் அடுத்த சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகளும், வியாபாரிகளும்தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல.
இதற்கிடையே, இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசியல்வாதிகள் பயணித்த கார்கள் சோதனையிடப்பட்டு, அதில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. பறக்கும் படையில் பணியாற்றும்  அனைவருமே அரசுப் பணியாளர்கள் என்ற நிலையில், தேர்தல் காலம் என்பது வெறும் ஒரு மாதம் மட்டும்தான். அதற்குப் பிறகு, அவர்கள் ஏதோ ஓர் அரசு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது.
இத்தகைய நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் அல்லது அதற்கு இணையான பதவிகளைக் கொண்ட அரசுப் பணியாளர்களின் தலைமையில் செயல்படும் பறக்கும் படையினர் ஓர் அரசியல்வாதியின் வாகனத்தைச் சோதனையிடும்போது, "நாளை இவர் ஒன்றியக்குழுத் தலைவராகவோ, நகர்மன்றத் தலைவராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ ஆகிவிட்டால், நமது நிலை என்ன' என்ற கேள்விதான் அவர்களுக்கு எழும். அதன் பிறகு, அவர்கள் எந்த மனநிலையில் அந்த அரசியல்வாதியின் வாகனத்தைச் சோதனையிட முடியும்? 
இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடைபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளை அமல்படுத்துவது கேள்விக்குறியாகவே உள்ளது. 
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவதைவிட, வேறு மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லது வெளிமாநிலங்களில் அரசின் நேரடிப் பணியில் இல்லாமல் இருக்கும் துறையினருக்கு அந்தப் பணியை தேர்தல் ஆணையம் வழங்கினால், 
அதன் செயல்பாடு வெற்றிகரமாக நடந்தேறும். ஜனநாயகம் தழைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com