விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்!

அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மன நிறைவுகொள்ள முடியாத வகையில், வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது


அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மன நிறைவுகொள்ள முடியாத வகையில், வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது, சமூக ஊடகங்கள் வழியே மக்களிடையே பரப்பப்பட்டது ஒரு மோசமான  சூழலை உண்டாக்கியது. இன்னொன்று, மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒரு பெண் அதிகாரி முறையான அனுமதி இல்லாமல் சென்று அங்கேயே சில மணி நேரம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்பரப்பி, பொன்னமராவதி ஆகிய இரண்டு சம்பவங்களுக்கும் பின்னணியில் இருப்பது ஜாதி வெறி என்பது தெளிவாகத் தெரிகிறது. மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஊர்ஜிதமாகி தொடர் நடவடிக்கைகளை தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த மூன்று சம்பவங்களும் தமிழகத்துக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருவருக்கத்தக்க வகையில் பேசப்பட்ட குரல் பதிவுகள், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ் அப்') மூலம் பரப்பப்பட்டதன் விளைவாக கொந்தளித்துப்போன அந்தச் சமூக மக்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. உரையாடலில் வெளிப்பட்டது கீழ்மையான ஜாதி வெறியும் வன்மமும்தான். தனி நபர்களின் இத்தகைய கீழ்மை எண்ணமும் ஜாதி வெறியும் கூட்டு பலம் பெற்று அரசியல் பின்னணியில் சேரும்போது என்னவாக மாறுகிறது என்பதே அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த தலித்துகள் மீதான வன்முறை வெளிப்பாடு ஆகும்.
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொன்பரப்பியில் நடந்த வன்முறையில் பானை சின்னம் வரையப்பட்டிருந்த வீடுகளே முதல் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை சூழலில் தடுக்க யாருமற்ற தருணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த இத்தகைய வன்முறைகளை நூற்றுக்கணக்கான காவல் துறையினர் ஒரு தொகுதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் நாளிலும்கூட ஜாதிய சக்திகளால் நடத்தமுடியும் என்றால், ஒவ்வொரு நாளும் அவை எவ்வளவு பலம் பெற்று வருகின்றன என்பதையே பொன்பரப்பி சம்பவம் காட்டுகிறது. 
அரசியல் ரீதியான போட்டிகளைச் சமாளிக்க முடியாதவர்கள், அதை வன்முறையால் வெற்றிகொள்ள நினைப்பதும் அதைத் தடுக்க முடியாத நிலையில் நமது அரசியல் அமைப்பு இருப்பதும் வெளிப்பட்டுள்ளது. மேலும், 70 ஆண்டுகால இந்திய ஜனநாயகமும் இவ்வளவு பெரிய அரசும் நடவடிக்கை எடுக்க  முடியாமல் ஜாதி முன் அடங்கிப் போகும் இடத்தில்தான் இருக்கின்றன என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது. வாக்குப்பதிவு நாளில்  ஒரு முதியவரின் கை விரல் வெட்டப்பட்டது என்பது அப்பட்டமான குறியீடுதான். "ஜாதியின் முன் உங்கள் சக்தி என்ன' என்று இந்திய அரசை நோக்கி எழுப்பும் கேள்விதான் இது. 
"மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்சீல் வைக்கப்பட்டுள்ள அறைக்கு நான் செல்லவில்லை என்றும் ஆவணங்கள் வைத்துள்ள அறைக்குத்தான் சென்றேன்' என்றும் ஒரு பெண் அதிகாரி கூறும் மர்மம் என்ன? 
இது தொடர்பாக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் விசாரணை நடத்தினார்.  அந்தப் பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றுவது உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பெண் வட்டாட்சியர் வெறும் கருவி மட்டும்தான் என்பது அரசியல் கட்சிகளின் கருத்தாக உள்ளது.
இது "ஓர் அதிகாரி உள்ளே போனார், வெளியே வந்தார் என்கிற விவகாரம் அல்ல. வாக்களித்து விட்டுக் காத்திருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவிட்டது' என்றுதான் அர்த்தம். தேர்தல் ஆணையம் நியமிக்கும் அதிகாரிகளே  இந்திய ஜனநாயகத்தின் அஸ்தி
வாரத்தை அசைத்துப் பார்க்கும் செயலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஓர் அதிகாரி மட்டும் பலிகடா ஆக்கப்படாமல் அத்துமீறல் நடக்காமல் தடுக்கத் தவறிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தச் சம்பவத்தை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களின் பாதுகாப்பை ஒரு மாத காலம் உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமையாகும்.
தமிழகத்தில்  ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசியல் கட்சியும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக மாற்றுவோம் என்கிற அறிவிப்புடன்தான் பதவி ஏற்கின்றன. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் நாம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும்தான் இருந்தோம் என்பதுதானே உண்மை?  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகட்டும், அனைவருக்கும் எழுத்தறிவு ஏற்படுத்தும் முயற்சியான இலவசப் பள்ளிக் கல்வியாகட்டும், மதிய உணவுத் திட்டமாகட்டும் இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலமாகத்  தமிழ்நாடுதான் திகழ்கிறது.
ஜாதியக் கட்டமைப்பை உடைத்தெறிந்து, இந்தியாவிலேயே முதன்முறையாக தியாகி வைத்தியநாத ஐயரின் தலைமையில் "ஹரிஜன ஆலயப் பிரவேசம்' நடந்த மாநிலம் நமது தமிழகம்தான். தேர்தல் முறை சீர்திருத்தம் என்று எடுத்துக் கொண்டாலும் நமது தமிழகத்தைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையர்களான டி.என்.சேஷன், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபாலசுவாமி ஆகியோரின் பங்களிப்புகளைப்  பாராட்டாதவர்களே இல்லை. பிற மாநிலங்களைப் போல கள்ள வாக்குப் போடுவது, வாக்குச்சாவடிகளைக்  கைப்பற்றுவது, தேர்தல் வன்முறைகள் போன்றவை இல்லாத மாநிலம் என்கிற பெயர் தமிழகத்துக்கு உண்டு.
அப்படிப்பட்ட தமிழகத்தில் இதுபோன்ற தலைக்குனிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் என்பதைப் பார்க்கும்போது, வருங்காலம் குறித்த அச்சம் எழுகிறது. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com