பேராபத்தின் ஆரம்பம்?

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்று அகிம்சையை போதித்த இறைத்தூதரை ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று (ஏப்.21) வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் இலங்கை கிறிஸ்தவ பெருமக்கள்.
பேராபத்தின் ஆரம்பம்?


"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்று அகிம்சையை போதித்த இறைத்தூதரை ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று (ஏப்.21) வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் இலங்கை கிறிஸ்தவ பெருமக்கள். திடீரென்று வெடித்த குண்டுகள் 321 உயிர்களைப் பலிகொண்டன. 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இலங்கையில் உடனே ஊரடங்கு.

ஒரு வாரம் உலகம் முழுவதும் அழுது புலம்பி கூக்குரலிடும். பிறகு மறந்து போகும். ஒரு பிள்ளைக்கு செப்டம்பர் 11 திருமணம் என்று பெற்றோர் கூறினர். அமெரிக்க குண்டு வெடிப்பு நாளா என்று கேட்டார்கள் பத்திரிகையை வாங்கியவர்கள். அஸ்தமனம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. ஒரு மகாகவி பாரதி உதயமான நாள் என்று யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை. அதே மாதிரி 26/11 என்றால் மும்பை குண்டு வெடிப்பு. இனி 21/4  (21.4.19)-ஐ எப்போதும் சரித்திரத்தின் முக்கிய  துக்க நாளாக நாட்குறிப்பாளர்கள் குறித்துக் கொள்வார்கள். பேராபத்தின் ஆரம்பம் என்பதை உணர மாட்டார்கள்.

 ஒரு வாரம் ஊரெல்லாம் கூடி ஒலிக்க ஓலமிட்டு, பிறகு நீரில் மூழ்கி நினைப்
பொழிந்து போவார்கள். ஆனால், "இது ஒரு பேராபத்தின் ஆரம்பம்' என்பதை உலக ஊடகவியலாளர்கள்கூட ஆழ்ந்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டை இந்த நேரத்தில் இப்போது நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிரிட்டிஷ் பேரரசுக்கும், ஜார் மன்னனின் ரஷியாவுக்கும் மோதல் இப்படித்தான் தொடங்கியது.
 ஜார் மன்னனின் ரஷியா தெற்குப்புறமாக இந்தியா நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம் அது. பிரிட்டிஷாருக்கும், ரஷியாவிற்குமான பகைபடுதீவிரமாக இருந்தது. கடுமையாக மோதிக்கொண்டனர். இந்தியாவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேலி பேசிய ஆங்கில எழுத்தாளன் ரூப்யார்ட் கிப்ளிங், இதை ஒரு "பெரிய விளையாட்டு' என்று வர்ணித்தான்.
இப்போது இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் அந்த "பெரிய விளையாட்டு' ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு முதலில் ஆசிய கண்டத்தின் புவி அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். ஆசியா என்பது மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள் நிறைந்த பிரதேசம். இது ஆப்கானிஸ்தானில் தொடங்கி காஷ்மீர் வரை நீளுகிறது. பிறகு இந்தப் பிரதேசம் 2,500 மைல்கள் (4,000) கி.மீ.) நீண்டு இந்திய துணைக் கண்டத்தின் வழியே பர்மா (இப்போது மியான்மர்)  வரை சுற்றி வளைகிறது. இந்தப் பகுதிதான் இந்த நூற்றாண்டின் உடனே பற்றி எரியக்கூடிய ஆபத்து மண்டலம்!

இப்போது உலகில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷியா ஆகிய நான்கும் அணுஆயுத சக்தி கொண்டவை.  இந்த நான்கு நாடுகளும் நீண்டநாள் பகையாளிகள். இந்தப் பகைதான் 21-ஆம் நூற்றாண்டின் சர்வதேச மோதல் மைதானம்.

இந்த எண்ணம் இப்போது வியப்பாக, ஏன் கேலியாகக்கூட இருக்கலாம்.
காரணம்,  மத்திய தெற்கு ஆசியாவும் இமயமலை பிரதேசமும்  உலகப் பார்வையில் தொலைதூர, பின்தங்கிய, கவர்ச்சிகரமான சுற்றுலா மையம் அவ்வளவுதான். இங்கே சூழ்ந்திருக்கும் ஆபத்தைக் கவனிக்க, உலக நாடுகளுக்கு நேரமுமில்லை. போதிய புவிஅரசியல் ஞானமுமில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள நிலையற்ற சமூக அமைப்புகளும், கசப்பான சச்சரவுகளும் குறித்து மீதமுள்ள மனித இனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை.
நூறாண்டுகளுக்கு முன்னால் இதே நிலைதான் இருந்தது. இந்தியாவின் வடமேற்கு எல்லையிலும் மத்திய ஆசியா
விலும் பிரிட்டிஷ், ரஷிய சாம்ராஜ்யங்களுக்குமிடையே "பெரிய விளையாட்டு' நடந்தது.

இன்றைக்கு இந்தப் பகுதிக்குப் பெயர் தெற்கு ஆசியா. இந்தப் பகுதியில் நடந்து கொண்டிருக்கும் ராஜதந்திர, அரசியல், பொருளாதார பதற்றங்கள்தான் உலகளாவிய பின்னிப் பிணையப்பட்ட ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய அஸ்திவாரமாக இருக்கப் போகிறது. இங்கே உலக மனித இனத்தின் கால் பகுதி இங்கேதான் வாசம் செய்கிறது.

1993-ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவுத் துறை ஒரு தீர்க்க தரிசன அபாய அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதி ஜம்மு-காஷ்மீர் பகுதி. இந்தப் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் இடையே தினமும் சண்டை நடந்து கொண்டேயிருக்கிறது. இங்கேதான் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அணுஆயுதப் போர் அபாயம் தொடங்கும் என்றது அந்த உளவுத்துறையின் அறிக்கை.

இதற்குச் சரியான உதாரணம் 1998-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை அணுஆயுத பரிசோதனை நடத்தி உலகத்தை நடுங்க வைத்தன. 1999-ஆம் ஆண்டின் வசந்த காலம் அது. இரு நாடுகளும் நடுத்தரமான ஏவுகணை பரிசோதனைகளை நடத்திக் காட்டின. அதைத் தொடர்ந்து காஷ்மீர் லடாக் பகுதியில் தினமும் குண்டுச் சத்தம்தான்.

உடனே பாகிஸ்தானும் ஆணு ஆயுத சோதனை நடத்தி "எங்களிடம் வாலாட்டாதே' என்று எச்சரித்தது.  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியபோது பல வல்லரசு நாடுகள் அந்த மகிழ்ச்சியைக்  கொண்டாட அன்றிரவே கேளிக்கை விருந்துக்குக்கூட ஏற்பாடு செய்து மகிழ்ந்தது ஒருகாலம்.

சீனா இன்னும் பழைய நினைப்பிலேயே இருக்கிறது. இந்தியா எப்போதுமே தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தேசம். இந்தத் தேசத்தில் ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும், நாடு என்றால் ஒன்றுபடும் தேசம் ( இன்றைய அரசியல் சூழல் நீங்கலாக) அவர்கள் எதிர்பாராத விதமாக 1962-இல் போர் நெறிமுறைகளை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தி இந்தியாவை தோல்வியுறச் செய்தனர்.

அப்போது நெறிமுறை தவறாத ஜவாஹர்லால் நேரு நிலைகுலைந்து போனார்.
உடனே,  இந்திய ராணுவத்தை பலப்படுத்த நினைத்தார். உள்ளம் உறுதியாக இருந்தாலும், சீனாவின் வரம்புமீறலை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் முயற்சியைத் தொடங்கினார். 1965-இல் லால்பகதூர் சாஸ்திரி என்ற "வாமன' பிரதமர் பாகிஸ்தானை போரில் வீழ்த்தினார். 

பொருளாதாரத்தில் வளம் மிகுந்த தேசம்தான் சீனா. ஆனால் உள்ளத்தளவில் முதிர்ச்சியடையாத தேசம். "பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்' என்பதை எப்போதுமே உணர்ந்ததேயில்லை.  வெறி எப்போதுமே சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும். தன் ஜனத்தொகையை குறைக்க இனி இரண்டாவது குழந்தையை இந்தத் தேசம் குடிமகனாக ஏற்காது என்று ஒரு கட்டத்தில் அறிவித்தது. விளைவு,  இன்றைக்கு அங்கே உழைக்க ஆளில்லை. ஏற்றுமதியெல்லாம் இந்தியா பக்கம் திரும்பியது.

"ஊசிமுனை நிலம் கூட தரமாட்டேன்' என்று கண்ணனிடம் கூறிய துரியோதனன் போன்று, "இந்தியாவில் ஆக்கிரமித்த நிலத்தில் ஒரு பகுதியைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்கிறது சீனா. இப்போது இஸ்லாமியர்களைக் கொண்டு ஒரு நிழல் யுத்த வெறியை சீனா தொடங்கியிருக்கிறது  என்பதை உலகம் இன்னும் உணரவே இல்லை. 
இந்த நிலையில் தெற்கு ஆசியப் பகுதிகளின் வல்லுநரான மூத்த பத்திரிகையாளர் எரிக் மர்கோலிஸ்,  "இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அணுஆயுதப் போர் இங்கேதான் தொடங்கும்' என்றார்.

"அப்படி ஒரு போர் நடந்தால், தொடக்கத்தில் 20 லட்சம் உயிர்களை பலிவாங்கி, 10 கோடி மக்களை படுகாயப்படுத்தும். இந்த போரானது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை நச்சுப் புகைகளால் மாசுபடுத்தும்' என்றது உலகப் புகழ் பெற்ற ராண்ட் ஆய்வு நிறுவனம்.

1998-ஆம் ஆண்டு ஐந்து அணுஆயுதங்களை வெடிக்கச் செய்து இந்தியா உலகத்தையே நடுங்கச் செய்தது. அதன் மூலம் ஆசியாவில் தன்னை ஒரு வல்லரசு சக்தியாகக் காட்டிக்கொண்டது. இந்த 17-ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்தியா நடத்திய "மிஷன் சக்தி' தேர்தல் பரப்பரப்பில் அமுங்கிப்போனது. ஆனால் உலகத்தின் உச்சியான இந்தப் பகுதியின் பதற்றத்துக்கான அறிகுறி இது.

ஆனால், பாரத நாட்டுக்கு ஒரு பெருமை உண்டு. பல நூற்றாண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை. "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. எதிராளிதான் தீர்மானிக்கிறான்' என்கிற ஒரு மேற்கோள் உண்டு.

நம்மை ஆயுதம் எடுக்க வைப்பது பாகிஸ்தான். அந்த நாட்டின் எஜமானன் இப்போது சீனா. இலங்கை இப்போது சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் நாடு.
சீனாவின் பேராசை என்பது ஆசிய நாடுகளின் முடிசூட சர்வ வல்லமை கொண்ட பேரரசனாகி "உலக காவல்காரன்' என்ற போலிப் போர்வையை (இது அமெரிக்காவைப் பற்றிய சீன வர்ணனை) போர்த்திக்கொண்டு அலைகிறது. அமெரிக்காவை மிரட்ட சீனா நினைப்பதன் முதல் ஒத்திகைதான் இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம்.

 இங்கே ஒரு புவி அரசியலையும் கவனிக்க வேண்டும். இந்திய எல்லைகளை ராஜதந்திரமாக சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறது சீனா.  எப்போது இலங்கையில் ராஜபட்ச அரசு ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்ததோ, அப்போதே சீனாவுக்கு கப்பம் கட்டும் குறுநிலமன்னன் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் தனது நிதி நெருக்கடியால் சீனாவிடம் கடன் வாங்கி அந்த நாட்டுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வெகுநாளாகிறது.

 சமீபத்தில் மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போது அந்த நாட்டின் புதிய அதிபர் இவ்வாறு கூறினார்: "எங்களுக்கும், இந்தியாவுக்கும் பகைத் தீயை மூட்டிவிட்டதே சீனாதான். இனி எங்களின் புதிய நண்பன் இந்தியாதான்.'
இந்தியாவின் 17-ஆவது மக்களவைத் தேர்தல் தொடங்கிய சமயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையை யாரும் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை. சீனா என்கிற கந்துவட்டிக்காரன் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். "மோடி பிரதமரானால்தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே  நல்லுறவு ஏற்படும்' என்றார். இதன் உட்பொருள் இரு தேசத்து நல்லுறவுக்கான
தீர்க்கதரிசனப்  பார்வை.

அதற்கு சீனா இஸ்லாமிய அடியாட்கள் படையை தேர்ந்தெடுக்கிறது. இந்த 
தீவிரவாத "ராணுவ' படைக்கு இரண்டு பிரிவுகள். 1. மிதவாதம். 2. தீவிரவாதம். தீவிரவாதம் குண்டுகளை வெடித்து உயிர்களைக் கொல்லும். 2. மிதவாதப் பிரிவு உலக நாடுகளில் ஊடுருவி, இஸ்லாமிய மக்கள்தொகையைப் பெருக வைத்து, உலகமே இஸ்லாமியமயமாக்கத் துடிக்கும். ஆனால், இஸ்லாமியப் படை வெறும் அம்புதான்; எய்யும் வீரன் சீனாதான்! 

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com