திங்கள்கிழமை 22 ஜூலை 2019

நாடகங்களின் பிதாமகன்!

By ஒளவை அருள்| DIN | Published: 23rd April 2019 01:52 AM

உலகில் தோன்றிய  மாமேதைகளுள் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஷேக்ஸ்பியரின் 455-ஆவது பிறந்தநாள் இன்று (23.4.19). மனிதர்களின் நடத்தைப் பாங்கு மற்றும் உணர்வெழுச்சிகளின் கூறுகள் ஒவ்வொன்றும் குறித்துப் பெருங்காப்பியம் செய்த மாமேதை அவர்.
ஆங்கில சொற்களஞ்சிய வரலாற்றிலேயே மிக உயர்ந்ததான 27,870 வேறுபாடான சொற்களை உள்ளடக்கிய 9,36,433 (ஏறத்தாழ 10 இலட்சம்)   சொற்களால் அவர் தமது செம்மாந்த 37 நாடகங்களைக் கட்டமைத்துள்ளார். கி.பி.1623-ஆம் ஆண்டு வரையிலும் ஆங்கில மொழிக்குக் கிடைத்திருந்த சொல்வளத்தின் 40 சதவீதம் அந்த அளவு எனில்  அது மிகையாகாது. இத்தனைக்கும் அவர் அத்தனை சொற்களை அறிந்திருந்தமைக்கு உதவும் வகையில் அகராதி ஒன்றுகூட அவரிடம் இருந்ததில்லை.
இதனை இன்னமும் விரிவானதொரு பார்வையில் முன்வைக்கப் முற்படுவோமானால், சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரைதான் இருக்கக் கூடும். வேண்டுமானால் ஐயாயிரம் சொற்கள் வரை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியலாம்.
மிகப்பெரிய எழுத்தாளர்களைப் பொருத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாக இருக்கலாம். மில்டன் அறிந்திருந்த சொற்றொதொகுதியின் எண்ணிக்கை பத்தாயிரம் என்றும் ஹோமர் ஒன்பதனாயிரம் சொற்களைக் கையாண்டதாகவும் அறிகிறோம். மன்னர் ஜேம்ஸ் பைபிள் எட்டாயிரம் சொற்களைக் கொண்டது. வெப்ஸ்டரின் மூன்றாம் உலகளாவிய அகராதி 4,50,000 சொற்களையும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 6,15,000 சொற்களையும் தொகுத்துள்ளன.
இன்றைய நிலையில் ஆங்கில மொழி 20 லட்சம் சொற்களைக் கொண்டு கோலோச்சுகிறது. அதனையடுத்து, ஜெர்மன் மொழி 1,86,000 சொற்களையும், ரஷிய மொழி 36,000 சொற்களையும், பிரெஞ்சு மொழி 1,26,000 சொற்களையும் கொண்டுள்ளன. இவற்றை நோக்கும்போது 16-ஆம் நூற்றாண்டைய ஷேக்ஸ்பியர் தற்கால ஜெர்மன் மொழியில் உள்ள மொத்த சொற்களைப்போல ஐந்து மடங்கு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.
பலரால் ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் ஷேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள், ஷேக்ஸ்பியரின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஷேக்ஸ்பியர் மட்டும் 60 பக்கங்களில் (பத்து சதவீதம்) தனியாட்சி புரிகிறார். ஆங்கில மொழிக்கு அவர் 1,700 புதிய சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. அவ்வகையில் சிலவற்றைக் குறிப்பிடலாம். சுருங்கக் கூறல் அறிவாற்றலின் ஆன்மா , ஆள் பாதி ஆடை பாதி , கடன் கொடுப்பவனும், கடன் பெறுபவனும் இல்லை, ஈவிரக்கமற்ற கொடூரக் கொலை , மின்னுவதெல்லாம் பொன்னல்ல, வாய் கிழியும் வரை சிரி, தீய கூட்டணி, பேந்த விழிக்கும் பேதைகள் போன்றவையாகும்.
ஷேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல்முறை, அவர் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் பேராவல், கையறுநிலை, பொறாமை, பேராசை, வீரம் செறிந்த காதல், மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்வெழுச்சிகளை சாகாவரம் பெற்ற நாடகங்களாக வளம் கொழிக்கும் இலக்கியப் பொன்னேடுகளாக மாற்றமுறச் செய்தது. ஆகவே, மனித வாழ்நிலையில் அவருடைய நாடகங்களில் காண முடியாத உணர்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை.
ஷேக்ஸ்பியர் உன்னதமானதொரு மேதை. தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட பூதாகரமான எந்திரங்களோ, பேரண்டப் பெருவெளியில் மனிதன் தனது எல்லை கட்டிய அறிவைக் கொண்டு துருவி அறிந்த அறிவாக்கமோ, கேட்கப்படாத மெல்லிசை என்று கிரீஸ் நாட்டுப் பழஞ்சின்னங்களை கீட்ஸ் குறிப்பிட்டானே அதன் இனிமையோ, எல்ஜின் பளிங்குகளின் எழில்நலமோ, உள்ளத்தை உருக்கவல்ல பீத்தோவனின் இசையோ ஷேக்ஸ்பியரின் எழுச்சிமிகு பாடல்கள் முன்னே போட்டியிட்டு வெற்றிகொள்ள வல்லவை அல்ல! 
ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல், விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம், பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவலைகள், சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை;  புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும்போது மட்டுமே மூளைக்கு எட்டக் கூடியவை! என்று சுவாமி விபுலானந்தர் தன்னுடைய மதங்க சூளாமணியில் கவிநயமாக ஷேக்ஸ்பியரை அணிநயமாக்கியது நம் நெஞ்சை உருக்கும்.
இதுவரை ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய 250 ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பற்றிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. முதன்முதலாக 1870-ஆம் ஆண்டு வி. விசுவநாதப் பிள்ளை வணிகபுரி வணிகன் என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்தார். அவர் அந்நாளைய ஆங்கில அரசின் மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகப் பேராசான் பம்மல் சம்பந்தம் முதலியார், பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை சுகுணவிலாஸ சபா மூலமாகப் பொதுமக்களுக்கு அரங்கேற்றினார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பயங்கரவாதத்தை முறியடிக்க...
"ஆயா ராம் கயா ராம்'
இந்தியாவின் ‘உயிர்நாடி’ காக்க...
பொதுநலச் சிந்தனையே சிறப்பு
சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!