ஜனநாயகத் தேரில் மக்கள்!

ஜனநாயகம் என்பது மக்களே தனக்கு விரும்பியவர்களைத் தேர்ந்தெடுப்பது என்கிற மக்களாட்சி தத்துவம்தான். டெமாக்கிரசி என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது. டெமா என்பது மக்கள் என்பதையும்


ஜனநாயகம் என்பது மக்களே தனக்கு விரும்பியவர்களைத் தேர்ந்தெடுப்பது என்கிற மக்களாட்சி தத்துவம்தான். டெமாக்கிரசி என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது. டெமா என்பது மக்கள் என்பதையும், கிரேசி என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் வரையறுத்துச் சொல்கிறது. 
ஜனநாயகம் என்பதை நேரடி ஜனநாயகம் என்றும், மறைமுக ஜனநாயகம் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துக் கூறலாம். இவற்றில், ஜனநாயகம் முக்கிய மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக மக்களாட்சி தத்துவத்தை அறிவிக்கிறது. சமத்துவம், மக்கள் இறைமை, சுயாட்சி என்கிற மூன்று கூறுகள் ஜனநாயகத்தினுடைய இன்றியமையாத சக்திமிக்க ஒன்றாக அமைந்திருக்கிறது. மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில், ஜனநாயகமானது ஓர் அரசியல் முறை என்பதும், அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தை தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்கு செயல்படுத்தாது, தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்குச் செயல்படுத்துகிறார்கள் என்பதுமே ஆகும். 
ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களைக் கூறி, ஜனநாயகத்தின் கட்டமைப்பை மேம்படுத்துகிறார்கள். சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகிறது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்.
வழி தவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தைப் பெற்றுக் கொண்டது என்று மிக ஆழமான ஒரு பார்வையைப் பதிவு செய்கிறார் தோமஸ் ஸ்கூப். ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி என்று மிகத் தெளிவாக அவர் வரையறுத்துச் சொல்கிறார். 
சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும், அதனை அமலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியே ஜனநாயகம் ஆகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மேலும், அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கிறது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும், இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிக முக்கிய விஷயங்களாக இடம்பெறுகின்றன. 
இனத்துவம் என்பது மனிதகுல வரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகிறது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போய் உள்ளன. இன்றுள்ள இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம். புதிய இனக் குழுக்களின் உருவாக்கம், இனக் குழுக்களுடைய இணைவு, இனக் குழுக்களின் மறைவு என்பது சமூகம் இயங்குதலின் தவிர்க்க முடியாத சக்திகளாகும். 
ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதில் இனத்துவத்தின் ஆதிக்கமும், அடையாளங்களும், வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் மாற்றத்திலும் இருப்பினும், பல்வேறு விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவற்றில் சாதக, பாதகங்கள் நிறைய உண்டு. உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான யுத்தங்கள் இதுவரைக்கும் கொடுமையான அழிவுகளைக் கொடுத்து துன்பங்களையும் பதிந்து வைத்திருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்று சொன்னால், இன முரண்பாடுகளினாலேயே ஏற்படுகின்றன. 
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில், ஐ.நா. சபையின் 1-ஆவது இனத்துவ மாநாடு இடம்பெற்றது. பின்னர், பல அரசு சார்பற்ற நிறுவனங்களால் இந்த மாநாடு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடையாளப்படுத்துதல் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. மனித குலத்தின் அடையாளப்படுத்துதல் புறத்தின் அடிப்படையில் மட்டும் வரைவிலக்கணப்படுத்தக் கூடியதல்ல. மனிதனின் அகம் சார்ந்த விஷயங்களும் இவற்றில்  மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
வலுவான இனத்துவ அடையாளங்களால் ஜனநாயகமயப்படுத்துதல் செயல்முறையானது கட்டியெழுப்பப்படுகிறது. அந்த வகையில் அதிகாரத்துவ ஆட்சி பலம் பொருந்தியதாக  இருக்க பல இனத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்ற சமூகம் என்பது, அதிகாரத்துவ ஆட்சியை உருவாக்காமல் இருக்க வழிவகுக்கும். பெரும்பான்மை சமூகம் தலைதூக்கத் தொடங்கி விட்டால், சிறுபான்மை சமூகம் நசுக்கப்பட்டு விடும். அதிகாரத்துவ ஆட்சியானது அடக்குமுறையை ஏவிவிடும். ஆனால் பல இனங்களால், பல சமூகங்களால், தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது அடக்குமுறைக்குப் பயன்படுத்த முடியாத ஒன்றாக ஆகி விடுகிறது. இதுவே ஜனநாயக கட்டமைப்பினை உருவாக்கும் பாதுகாப்பான அம்சங்களாகும். 
மேலும் வலுவான இனத்துவ அடையாளங்கள், பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதன் முழுமையான பொருள் என்னவென்றால், ஜனநாயகத்தன்மை கொண்டதே இவைதான் என்பது இவற்றின் உட்பொருளாகும். ஜனநாயக அரசியலில் இனத்துவ அடையாளம் என்பது முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 
மக்களாட்சி எனக் கூறப்படுகிற ஜனநாயகமானது, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், வாக்குரிமை, தேர்தல், சகிப்புத்தன்மை, சமத்துவம், ஊடகச் சுதந்திரம் போன்ற பல பண்புகளை உள்ளடக்கியதாகும். மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம் என ஆபிரஹாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை நோக்கிய மாற்றம், ஜனநாயகமயப்படுத்துதல் என்பதேயாகும். 
உலகில் ஜனநாயகமயப்படுத்தல் செயல்முறையானது 1798-இல் ஆரம்பமானது. 20-ஆம் நூற்றாண்டுகளில் போராட்டம் என்பவற்றின் ஊடாக மன்னராட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி என்பவற்றை எதிர்த்து, ஜனநாயக ரீதியான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இவற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஜனநாயகமயப்படுத்தல் நடைபெற்றது. ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் அதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறின.
இதனைத் தொடர்ந்து, லத்தீன், அமெரிக்க நாடுகளில் ஜனநாயக மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, தென்கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஜனநாயகத்துக்கு மாறின. 1970-களில் உலகில் 80 நாடுகள் ஜனநாயக நாடுகளாக பரிணமித்தன. இவையே ஒரு ஜனநாயக கூறுகளை புடம் போட்ட தங்கங்களாக வளர்ந்து நின்றன. வாக்களர்களே இறுதி எஜமானர்கள் என்ற கூற்று, உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
நாட்டின் பிரதமரோ, முதல்வரோ, அமைச்சரோ, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களோ அல்லது உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ எங்கள் வீட்டின் முற்றத்தில் நின்று, எனக்கு வாக்களியுங்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைப்பேன் என்கிற அந்த ஒற்றைச் சொல், இந்த நாட்டின் உச்சபட்ச அதிகார பீடத்தில் இருப்பவரையே, எங்கள் தெருவுக்கோ, எங்கள் ஊருக்கோ, எங்கள் மாவட்டத்துக்கோ வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறபோது, ஜனநாயகத்தின் மாண்பு எத்தகையது என்பது ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து கொள்கிற தருணம் அது. 
இவற்றில் உறுதியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு, தனித்துவமான பொருளாதாரம், பொதுவான வரலாறு, பொதுக் கலாசாரம், மதம், பொதுப் பாரம்பரியம், குழுசார் உள்ளுணர்வு போன்றவை இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாட்டை  விளக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான அம்சங்களாகும். 
தெற்கத்திய ராஜ்யங்களை வெற்றி கொண்ட பிறகு, கெட்டிஸ்பர்க்கில் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவில், மக்களால் மக்களைக் கொண்டு நடைபெறும் மக்கள் அரசாங்கம் என ஜனநாயகத்துக்கு புதிய விளக்கத்தை தந்த ஆபிரஹாம் லிங்கன், என்னைப் பொருத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையின், தீர்க்கமான முறையில் பொருள் கொள்கிறேன். ஜனநாயகம் என்பது ரத்தம் சிந்தாமல், மக்களின் பொருளாதார சமூக வாழ்க்கையில், புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயகத்துக்கு எனது விளக்கமாகும் என்றார் ஆபிரஹாம் லிங்கன். 
மேலும் அவர் கூறுகையில், இவ்வாறுதான் நான் ஜனநாயகத்தைக் காண்கிறேன். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துபவர்களால் மக்களின் பொருளாதார வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதில் ஜனநாயகம் சாதிக்குமானால், ரத்தம் சிந்தும் முறையை பின்பற்றாமல், மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்களேயானால் அதுதான் ஜனநாயகம் என்று கூறுவேன். ஜனநாயகம் என்பதை நிர்ணயிப்பதற்கு இதுவே உரைகல்லாகும் என்றார்.
 ஒரு பொருளின் தரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே ஆபிரஹாம் லிங்கனுடைய கருத்தாகும். தனி நபர்களின் சுதந்திரம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கமாகும். ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை, பொருளாதார சம உரிமைகளை நிலைநாட்டுவதுதான் அவசியமான ஒன்றாகும். வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஜனநாயகமும், மனித உரிமைகளும் வெற்றி கொண்டதாகவே கருதப்படும்.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com