இளைஞர்களே...பொறுப்பேற்கத் தயாரா?

இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடி. இந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 1.5 கோடி புதிய வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிப்பார்கள் என்று

இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடி. இந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 1.5 கோடி புதிய வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 1.7 சதவீதமாகும்.
ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முறையாக வாக்களிக்கவரும் வாக்காளர்கள், தங்கள் கனவுகளைப் பிரதிபலிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதை நிறைவேற்றுபவர்களாக இளம் தலைமுறைத் தலைவர்கள்தான் இருப்பார்கள் என்று அவர்கள் கருதுவதில் வியப்பேதும் இருக்கமுடியாது. ஆனால், அரசியல் கட்சிகளின் கணக்குகளில் தலைவர்களின் வயதுகளுக்கு மட்டும் வயது வரம்பே இருப்பதில்லை. இதை ஒவ்வொரு தேர்தலிலும் நம்மால் பார்க்க முடிகிறது.
பதவிக் காலம் நிறைவடைய உள்ள 16-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 12 பேர் மட்டுமே 30 வயதுக்கும் குறைவானவர்கள். 204 பேரின் வயது 30 முதல் 55 வரை. 212 பேர் 56 முதல் 70 வயது வரையிலானவர்கள். 41 பேரின் வயது 70-க்கும் மேல். இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் கீழே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்னும்போது, அதைப் பிரதிபலிக்கும் வகையில் வேட்பாளர்களின் வயதும் இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், எத்தனைக் கட்சிகள் இதைக் கருத்தில் கொள்கின்றன என்பது கேள்விக்குறியே.
இன்றைக்கு இளைய சமுதாயத்தினரில் 80 சதவீதம் பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதாக அண்மையில் ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. புதிய வாக்காளர்களில் 90 சதவீதக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை இளைஞர்களுக்குப் போதிய வாய்ப்பு தருவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. அப்படியே தந்தாலும் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கே பெரும்பாலும் வாய்ப்புகள் சென்றடைகின்றன என்ற வருத்தமும் யாரையும் விட்டுவைக்கவில்லை.
வயது முதிர்ந்த தலைவர்களின் அரசியல் அனுபவம் அவசியமானது என்றாலும், முதுமை காரணமாக எழும் உடல் பாதிப்புகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பதும் முக்கியம். அவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடுவது சிரமம். சுற்றுப்பயணம் செய்ய முடியாது. நினைவாற்றல் குறையவும் வாய்ப்பு உண்டு. உடலுக்கும் மனதுக்கும் மூப்பு சோர்வைக் கொண்டுவந்து விடுகிறது. எல்லாத் துறைகளிலும் ஓய்வுபெறும் வயதை 58 அல்லது 60 என்று நிர்ணயித்துவிட்டு அரசியலுக்கு மட்டும் ஓய்வுபெறும் வயது இல்லை என்பது விந்தைதான். 
தமிழகத்தைப் பொருத்தமட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197. இதில் 18 வயது முடிந்ததிலிருந்து முதல் முறையாக வோட்டு போடப் போகும் புதிய வாக்காளர்கள் என்ற பட்டியலில் வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் 45 லட்சம் ஆகும். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப்  போகும் இளைஞர்களின் வோட்டு பெருமளவில் யாருக்குக் கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்  என்று கூறிய பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 6.2 சதவீதம்பேர் வேலை கிடைக்காமல் உள்ளனர். இந்திய அளவில் நகர்ப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 7.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.8 சதவீதமாகவும் உள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்பில் இந்தப் பிரச்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் இருப்பதைப் போல நம் நாட்டில் இரண்டு முறை அல்லது பத்தாண்டுகளுக்கு மேல் யாரும் மத்திய-மாநில அமைச்சர்களாகவோ, முதல்வர்கள், பிரதமராகவோ பதவி வகிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம். இதனால், குறைந்தபட்சம் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளிலாவது இளைஞர்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். கட்சிப் பொறுப்புகளில் அடிமட்டத்தில் உள்ள கிளைச் செயலாளர்களிலிருந்து அகில இந்தியச் செயலாளர்கள் வரை மூன்று முறைக்கு மேல் தொடர முடியாது என்ற விதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உண்டு. இதுபோல் மற்ற கட்சிகளிலும்கூட அமல்படுத்தப்பட்டால் கட்சி பொறுப்புகளுக்கும்கூட புதிய இளைஞர்கள் பொறுப்புக்கு வருவது ஏதுவாக இருக்கும்.
அவ்வாறு பொறுப்புக்கு வரும்போது மக்கள் பிரதிநிதித்துவ உரிமையிலும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இப்போது நடைபெறும் தேர்தலில்கூட புதிதாகச் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வெற்றியைத் தீர்மானிக்கப் போகும் வாக்காளர்களே இவர்கள்தான் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்சி அரசியலிலும் இளைஞர்களை பொறுப்புகளுக்கு கொண்டுவருவது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com