நோட்டாவுக்கு வாக்கு!

பொதுத் தேர்தல் வந்து விட்டால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் தமிழகத்தில் ஓரிரு கட்சிகள் நீங்கலாக ஏனைய கட்சிகள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு ஏற்ப அல்லது நிறைவேறாததற்கு ஏற்ப கட்டிய கரை

பொதுத் தேர்தல் வந்து விட்டால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் தமிழகத்தில் ஓரிரு கட்சிகள் நீங்கலாக ஏனைய கட்சிகள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு ஏற்ப அல்லது நிறைவேறாததற்கு ஏற்ப கட்டிய கரை வேட்டிகளை மாற்றிக் கொள்ளும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

போட்டியிட வேட்பாளாராக அறிவிப்பு வரும் என்று பல பெரும்புள்ளிகள் அண்மையில் இரவு வரை காத்தி ருந்து, அறிவிப்பு வராத நிலையில் ராயப்பேட்டை போக வேண்டிய வண்டி, தேனாம்பேட்டை போய் துண்டுகளை மாற்றிக் கொண்டனர். இப்படிச் செய்தது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஓரிடத்திலிருந்து வந்தால், உடனே மற்றொரு இடத்தில் தாலி கட்டி மணமகன் ஆகலாம் என்ற நம்பிக்கையில் மறுதாலி திருமணம், நாளும் பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூதாட்டம் நடக்கக் காரணம், ஒவ்வொருவரும் வைத்திருக்கும் வாக்குச்சீட்டுதான்;  சாதி, கட்சி, பணம், பதவி முதலிய ஏதேனும் ஒன்றினால் வாக்குச்சீட்டை தங்களுக்கு வாங்கி விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்  வாக்கு சீட்டு வைத்திருப்பவரை முதலீடாக வைத்து தேர்தல் நடைபெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதை வாக்குச்சீட்டு வைத்திருப்பவர் முறியடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு வழியைத் தந்துள்ளது.

"நோட்டா' என்பது "வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை' என்பதைத் தெரிவிக்கப் பயன்படும் வாய்ப்பாகும். இந்தத் தேர்வை வாக்குப்பதிவு பெயர்ப் பட்டியலில் சேர்க்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கடந்த 2013-ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுதான் "நோட்டா' வந்ததற்குச் சட்டப்பூர்வமான வரலாறாகும். 

வாக்குச்சீட்டில் உள்ள வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை "நோட்டா' மூலம் தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கூறி வாக்களிக்கும் தாள் மற்றும் இயந்திரத்திலும் "நோட்டா'வைச் சேர்க்க  உச்சநீதிமன்றம் 2013 செப்டம்பர் 27-ஆம் தேதி உத்தரவிட்டது. எனவே,  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசி இளஞ்சிவப்பு பொத்தானை அழுத்தினால்  நாம் வோட்டுப் போட்டதாக உச்சநீதிமன்ற ஆணை  ஏற்றுக் கொள்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதலில் "நோட்டா' சேர்க்கப்பட்டது. முதலில் இதன் எண்ணிக்கை குறைவாகத்தான் பதிவானது. சத்தீஸ்கர் -3.56 லட்சம்; புது தில்லி - 50,000;  மத்தியப் பிரதேசம் -5.9 லட்சம்; ராஜஸ்தான் 5.67 லட்சம் என "நோட்டா' வாக்குகள் பதிவாயின. 

2013-ஆம் ஆண்டு தில்லி உள்ளிட்ட மாநிலத் தேர்தலில் "நோட்டா' அறிமுகம் செய்யப்பட்டது. 2013- டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு தேர்தலில் "நோட்டா' அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் எண்ணிக்கையில், அதாவது  42,000 அளவு "நோட்டா' வாக்குகள் விழுந்தன. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் கணிசமாக "நோட்டா' வாக்குகள் விழுந்தன.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் "நோட்டா' பொத்தான் கடைசியில் அமைந்திருக்கும். "நோட்டா' பொத்தான் அழுத்தப்பட்டால், "அனைவருக்கும் எதிரான வாக்கு' என்று பொருளாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த "நோட்டா' பட்டன் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஓர் இந்தியரும் இந்த "நோட்டா' பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிப்பதாக அர்த்தம் கொள்ளப்படும்.

இந்தியாவில் நடைபெற்ற 16-ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 11 சதவீத "நோட்டா' வாக்குகள் பதிவாகின. அதன் எண்ணிக்கை 5,99,7054 ஆகும். 

கொலம்பியா, உக்ரைன், பிரேசில், வங்கதேசம், பின்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ் போன்ற நாடுகளில் "நோட்டா' வாக்கை அளிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, "நோட்டா'வில் உள்ள உண்மைத் தன்மையை அறிந்து இந்த நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

தற்போது நடைபெறும் தேர்தல் கண்ணாமூச்சியில் தமிழகத்துக்குக் கெட்ட பெயரை உண்டாக்கியவர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவாதவர்கள், ஊழல் மன்னர்கள் ஆகியோரை அப்புறப்படுத்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இளஞ்சிவப்பு பொத்தான் காத்திருக்கிறது. "கை விரலில் மையிட்டு வோட்டு போட்டார்' என்று பதிவானதும், உள்ளே சென்று அதே விரலில் "நோட்டா'வை அழுத்தினால் மனசாட்சிப்படி வோட்டு போட்டதாகி விடுகிறது.

ஒரு தேர்தலில் வாக்காளனுக்கு கிடைக்கும் "நோட்டா' வாக்கு, ராணுவ வீரனுக்கு துப்பாக்கியில் உள்ள தோட்டாவைப் போன்றது. தோட்டாவை ராணுவ வீரன் சரியான நேரத்தில் பயன்படுத்துவதைப் போன்று, வாக்காளனும் இதுதான் தருணம் என்று "நோட்டா'வை பயன்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் "நோட்டா' பொத்தானை எங்கே என்று தேடும் தேர்தலாக, நடக்கப் போகும் தேர்தல் அமைந்துவிட்டது.

ஒரு கட்சிக்காரர், "தியாகத் தழும்புகள் பெற்ற தங்களைப் போன்றவர்களை புறந்தள்ளி வாரிசு அரசியலை உண்டாக்கி வருகிறார்களே' என்று மனம் குமுறும் அவலத்துக்கும் "நோட்டா' காத்திருக்கிறது. 

இந்தத் தேர்தலில் "நோட்டா'வில் லட்சக்கணக்கான வாக்குகள் விழுந்தால், தூய்மையான அரசியலை தமிழகம் விரும்புகிறது என்பது வெளிச்சத்துக்கு வரும். அதை விரக்தியின் விளைவு என்றோ, எதிர்மறைச் சிந்தனையின் வெளிப்பாடு என்றோ கருதத் தேவையில்லை. மாற்றத்துக்கான அறைகூவல் என்றும், மக்களின் நியாயமான கோபம், வெறுப்பு, அதிருப்தியின் அடையாளம் என்றும்தான் கொள்ள வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com