சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: சிலோனுக்கு வலை வீசிய சீனா; நேரடி ரிப்போர்ட்- 5

28th Mar 2022 12:16 PM | கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

இலங்கை பனானா ஸ்டேட்டிலிருந்து பனானா ரிபப்ளிக் (Banana Republic) ஆகிவிட்டது. இலங்கையில் பகல் நேரப் பயணத்தில், கொழும்பிலிருந்து மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, ரத்தினபுரி என்ற மலைப்பகுதி மட்டுமல்லாமல் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கொழும்பு திரும்பும் வரை ஒவ்வொரு பெட்ரோல் டீசல் நிரப்பும் நிலையத்திலும் வாகனங்களுடன் மக்களுக்குத் தேவைப்படும் சிறு அளவு பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக கேன்களோடு பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பெண்களும், வயதானவர்களும் அங்கே சிரமப்பட்டதைப் பார்க்க முடிந்தது.

பல வாகனங்கள் எண்ணெய்ப் பற்றாக்குறையால், ஓடாமலேயே பல நாள்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

இலங்கை அரசு இந்தியாவிடம் இரண்டு மாதங்களாகப் போராடி கடன் தொகை பெற்றுச் சென்றுள்ளது. மறுபடியும் சீனாவிடம் கையேந்தவும், பஞ்ச பாண்டவர்கள் என்று சொல்லக்கூடிய ராஜபட்ச சகோதரர்கள் தயாராகி விட்டார்கள். இனி தீவை சீனாவிற்கு விற்றுவிடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. சீனாவின் கை ஓங்கும்போது இந்தியாவிற்கும் பெரும் ஆபத்து என்கிற வகையில் இலங்கை சென்றுகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  சீனக் கடனைச் செலுத்த சீனாவிடமே 100 கோடி டாலர் கடன் வாங்கும் இலங்கை

இதற்கிடையே ராஜபட்சவின் உடல்நிலை சரியில்லை என்கிறார்கள். அவர் நிகழ்ச்சிகளுக்குகூட நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். ராஜபட்ச சகோதரர்களிடையே சரியான, ஒற்றுமையான கருத்துகளும் இல்லை என்கிற நிலை இருப்பதால் இலங்கையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்லமுடியவில்லை. 

இதையும் படிக்க | எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1

இலங்கையின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரான அமிர்தலிங்கம் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் அடிக்கடி சந்திப்பதுண்டு. 1984 கட்டத்தில் ஒருநாள் அவர் சொன்ன நினைவு. இந்தியா 1947-ல் விடுதலை பெறுகிறது. இலங்கை 1948-ல் விடுதலை பெறுகிறது. ஓராண்டு கழித்து இரண்டு நாடுகளை விட்டும் பிரிட்டிஷார் வெளியே செல்கின்றனர்.

வெளியேறும்போது, மவுண்ட்பேட்டன்  ஆங்கிலேயர்களிடம்  'ஏன் அங்கே (இலங்கையில்) வடக்கே கிழக்கே இருக்கிற தமிழர்கள், அதேபோல மத்திய பக்கத்தில் உள்ள இந்தியாவிலிருந்து சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள் எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாமே’ என்று சொன்னதாக செய்தி உண்டு.

அப்போது, இந்தியாவில் சமஸ்தானங்கள் இணைப்புப் பிரச்னை இருந்தது. ஹைதராபாத் நிஜாம் இடையூறு செய்தார். சர்தார் வல்லபபாய் படேல் கடுமையாகப் போராடி, தமிழ்நாடு முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமியிடம் அதற்கான முயற்சிகளை எடுத்து இணைக்க வேண்டிய நிலை.

பாகிஸ்தான் பிரிவுடன் இந்தப் பிரச்னைகளும் இருந்ததால் இதில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக அமிர்தலிங்கம் கூறினார்.

மேலும், அவர் அன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவோடு இணைந்ததிருந்தால், 1983-இல் இந்த இனச்சிக்கல் வந்திருக்காது. இனிமேல் அதைப் பேசி பயனில்லை. இனி தமிழருக்குத் தனிநாடுதான் தீர்வு. வேறு வழியில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை, தந்தை செல்வா முன்னெடுத்துத் தனி நாடுதான் அமைக்க வேண்டும் என 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அதற்குப் பிறகு தம்பி (பிரபாகரன்) தலைமையில் போராடியதும் தனி நாட்டிற்காகத்தான். தனக்கென்று ஒரு மண்ணும்  நாடும்  இல்லையென்றால் தமிழர்களால் இனி வாழ முடியாது’ எனத் தெரிவித்தார்.

இப்படி இலங்கையின் நிலைமையைத் தொடர்ந்து பார்த்தால், பல்வேறு சிக்கல்கள்தான். தேயிலை அதிகமாக விளைகிறது, அதிகமான சுற்றுலா பயணத்தை மேம்படுத்தலாம். சாலை வசதியில்லாமல், சுற்றுலாப் பயணிகள் யார் வருவார்கள்? வசதியான ரயில் பயணங்கள்கூட கிடைக்காது. சுற்றுலாவை அந்தத் தீவில் விரிவாக்க அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. தேயிலையை அதிகளவில் விற்பனை செய்யக் கூடிய அளவில் உலக சந்தைக்குக் கொண்டுபோகலாம். 

இதையும் படிக்க | எரியும் இலங்கை: அழிக்கப்படுகிறதா இந்து கோயில்கள்? நேரடி ரிப்போர்ட் - 2

பண்டாரநாயக முதல் இன்றைய ராஜபட்ச வரை யாருக்கும் நிர்வாகத் திறமை இல்லை. தமிழரை அழிக்க மட்டுமே இவர்கள் ஆட்சியில் இருந்தனர்.

நல்ல வகையில் பொருளாதாரத்தை மீட்டு, அந்தச் சின்ன தீவில் சரியாகத் திட்டமிட்டால் பொருளாதார வளர்ச்சி இருக்கும். மக்கள்தொகையும் குறைவு. அரசுக்குப் பொதுவாக எதிலேயும் ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை எனலாம்.

பொருளாதாரத்தில் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இலங்கையில் இத்தகைய நிலைமைகள் ஏற்படுகின்றன. அதனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத் துறைமுகங்களையும் மற்ற இயற்கை வளங்களையும்  விற்க வேண்டிய கையறுநிலைக்கு இலங்கை தள்ளப்படுகிறது.

இனிமேல் இலங்கை எழுந்து வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்தியாவிடம் கடன் கேட்கக் கையை நீட்டிவிட்டு மறு கையை சீனாவிடம் நீட்டிவிட்டார்கள்.

இந்தியா தற்போது தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக இருக்கும் நிலையில் இலங்கைக்கு உதவியது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னை மிகவும் உணர்வுபூர்வமானது, ஆனால், அதுவே இரு தரப்பிலும் கசப்புணர்வைத் தூண்டவும் காரணமாக இருக்கிறது.

கடந்த ஜனவரி 13 ஆம் தேதி இலங்கைக்கான இந்திய தூதரகம்,  900 மில்லியன் டாலர்களை (ரூ. 6,800 கோடி) இலங்கைக்கு இந்தியா வழங்குவதாக அறிவித்தது.

இருப்பினும் கைவசம் டாலர்கள் இல்லை. இலங்கை ஆப்பிள்கள் போன்ற 30 பொருள்களை வாங்க வசதி இல்லாத காரணத்தால் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.

மேலும், தினமும் அங்கு  ஏழரை மணி நேரம் மின்வெட்டு என்ற அவதியுடன் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வருவதால் 1983 இனக் கலகத்தின்போது ராமேஸ்வரத்துக்கு சாரைசாரையாக அகதிகள் வந்ததைப் போல மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்த பொருளாதார நெருக்கடியால் சில தமிழ் குடும்பங்கள் ராமேஸ்வரத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். 

இதையும் படிக்க | எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், சீனாவுடன் மிகவும் நெருங்கிய இலங்கை, வருமானம் இல்லாத வளர்ச்சித் திட்டங்களுக்கு அதனிடமிருந்து அளவுக்கு மீறி கடன் வாங்கியதுதான்.

இப்போது இலங்கை சீனாவிடம், கடன் தவணையை நீட்டிக்கும்படி கேட்பதுடன் மேற்கொண்டு கடனையும் கேட்கிறது. இதை வாய்ப்பாக மாற்றி சீனா இலங்கையின் விமான நிலையங்கள், துறைமுகங்களைத் தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறது. இதனால் இலங்கையில் அரசியல் பிளவுகள் அதிகரித்து வருகின்றன.

மேலும், சீனா வளரும் நாடுகளுக்கு தாராளமாகக் கடன் கொடுத்து, அவர்களைக் கடனாளியாக்கி, அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிப்பது  உலகறிந்த விஷயம்.

சீனாவிற்கு நடப்பாண்டில் மட்டும் இலங்கை 4.4 பில்லியன் டாலர் கடன் தவணை கட்ட வேண்டும். இந்தியாவிற்கு மாற்றாக சீனாவுடன் நெருங்கிய இலங்கை, இன்று அதனால் ஏற்பட்ட விபரீத பலனை அனுபவிக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இதையும் படிக்க | என்னதான் நடக்கிறது இலங்கையில்?

இலங்கையின் ஏற்றுமதி ஆண்டுக்கு 12 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிலிருந்து ஆண்டுதோறும் அனுப்பிவந்த 7.1 மில்லியன் டாலர் பணம் 4.6 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. இப்படி ஏற்றுமதி வருமான சரிவு ஒரு பக்கம்.

மறுபக்கம், ஏற்றுமதி வருமானம் பாதாளத்துக்கு சரிந்ததால், பெட்ரோல், உரம், உணவு, சிமெண்ட், மருந்து போன்ற மற்ற அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி இல்லாத நிலை. இதனால் பொருள்களின் தட்டுப்பாடு, விலை ஏற்றம் போன்ற கட்டுக்கடங்காத பிரச்னைகள் உருவாகின. இது போதாதென்று, ரஷியா - உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து இலங்கையின் பொருளாதாரம் திவால் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 0.9 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி உதவியைச் செய்தது. கடந்த வாரம் இந்திய அரசின் உந்துதலால், இந்திய ஸ்டேட் பாங்க் 1.0 பில்லியன் டாலர் கடனுதவி அறிவித்திருக்கிறது. கடந்த டிசம்பரில் சீனா 1.5 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்தது. ஆனால், இதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரம் சீரடையும் என்று கூறமுடியாது.

இலங்கையை முழுமையாக கபளீகரம் செய்யவே சீனா முயலும். அந்த ஆபத்திலிருந்து இலங்கையை இந்தியா காப்பாற்றியாக வேண்டும். இலங்கை த் தமிழர்களின் நலனுக்கும், நம் நாட்டின் பாதுகாப்புக்கும் அது அவசியம். இதை மனதில் கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும்.

                                                                                                                              (தொடரும்)

இதையும் படிக்க | எரியும் இலங்கை: வரலாறு காணாத விலைவாசி உயர்வு; நேரடி ரிப்போர்ட்- 4

ADVERTISEMENT
ADVERTISEMENT