உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!

இப்படியே லண்டன் பெருமை பேசிகொண்டே இருந்தால் அங்கு அனாச்சாரம் என்பதே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது...
உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!

1. மனித வாழ்வில் சுற்றுலா அவசியமா?

மிக அவசியம், நாம் நமது வாழ்க்கை வட்டத்தை விட்டு நம்மை வெளியே கொண்டு செல்வது சுற்றுலா மட்டுமே.சுற்றுலா செல்லும்போது எத்தனை விதங்களில் மனிதர்கள், என்ன என்ன குணங்கள்,அவர்களின் வாழ்க்கை முறை, உணவு கலாச்சாரம் எல்லாம் பார்க்கும் போது நாம் கடலளவு வாழ்க்கையில் துளி அளவு வாழ்ந்த உண்மை நம்மை மேலும் சுவாரசியமாக வாழ தூண்டுகிறது.

2 . சுற்றுலா எந்த வகை ?

ஒரு பயிற்சி நோக்கமாக சென்றதால் இதை தொழில் சுற்றுலாவாக வகை படுத்தலாம்.ஆனால் பயிற்சி, தொழில் தாண்டி எல்லை இல்லா அனுபவம் பெற்றதால் இன்ப சுற்றுலாவாக உணர முடிந்தது.

3 . எத்தனை முறை சுற்றுலா சென்றுள்ளீர்கள்?

தனியாக உலக சுற்றுலா ஒருமுறை, குடும்பத்தோடு உள்ளூர் சுற்றுலா இரண்டு முறை. உள்ளூர் சுற்றுலா மகிழ்ச்சியால் நிரம்பியது,உலக சுற்றுலா மகிழ்சி மற்றும் அறிவால் நிரம்பியது.

4 . மறக்க முடியாத சுற்றுலா எது?

என்னுடைய தனிமை சுற்றுலாவான உலக சுற்றுலாதான் அது லண்டன். உண்மையில் படித்த காலத்தில் பெறாத கல்வி,வாழ்ந்த காலத்தில் கிடைக்காத சந்தோசம், கோடி கொடுத்தாலும்  கிடைக்காத அனுபவம் அது...

5 . மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தின் சுவாரஸ்யம் என்ன?

லண்டன், நான் தங்கியிருந்த வீட்டின் முன்...
லண்டன், நான் தங்கியிருந்த வீட்டின் முன்...

லண்டன் நேரம் காலை 6 மணி, அக்டோபர் மாதம், மங்கலான வெளிச்சம் மூச்சு விட்டால் மூக்கில் புகை வருகிறது பேசினால் வாயில் புகைவருகிறது. லண்டன் வாழ் மக்களுக்கு பழகிப்போன இது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. கதவைத் திறந்தேன் கடும் குளிர் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருந்தது (வீட்டுக்குள் கொதிநீர் ஹீட்டர் இயங்குவதால் வெளியில் இருக்கும் தாக்கம் உள்ளே தெரியாது) நேரம் காலை 7.30. ஒரு மனிதர் மிக சுறுசுறுப்பாக இயங்கினார் அவர்தான் தபால்காரர் (நன்றாக கவனிக்க காலை 7.30) ஒரு கையில் தபால், இன்னொரு கையில் ஒரு சிறு குச்சி, காரணம் அங்கு அதிகமாக வீடுகளில் நாய் வளப்பார்கள். தபால் கதவு துவாரத்தில் போடும்போது ஒரு பாதுகாப்பு கருதி அந்த குச்சி.

வெளியே என் கண்கள் வியந்த இன்னொரு நிகழ்வு எங்கு பார்த்தாழும் வெள்ளைப் பருத்தியை பரத்தி வைத்தது போல் ஐஸ்கட்டிகள் பரவிக் கிடக்கிறது. கார், மரம், செடி, நடைபாதை உள்பட. அங்கு இதை ‘ஸ்னோ’ என்று சொல்கிறார்கள், ஆனால் சாலை மட்டும் யானை கருப்பில் ஜொலித்தது ஆச்சரியம்! எப்படி என்று அங்கு இருக்கும் நண்பரிடம் கேட்டேன் அவர் சொன்னார்... இங்கு வானிலை அறிக்கை மிகத் துல்லியமாக இருக்கும். நாளை ஐஸ் கொட்டப்போகிறது என்று அறிவிக்கபட்டால் உடனே அரசு ஊழியர்கள் ஒரு வாகனத்தில் வந்து ஒரு ரசாயன உப்பை சாலையில் தூவிவிடுவார்கள், நள்ளிரவில் ஐஸ் விழும்போது அந்த உப்பில் பட்டு நொடிப் பொழுதில் ஐஸ் கரைந்து விடுகிறது என்றார். விபத்து பாதுகாப்பு மேலாண்மை கண்டு வியந்து போனேன், தமிழ்நாட்டில் வருடம் 3 மாதம் பெய்யும் மழையையும் நமது நிலையையும் நினைத்து நொந்து போனேன் வாழ்க லண்டன் நிர்வாகம்.

இங்கு உணவுப் பொருளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவோடு ஒப்பிடும் போது விலை அதிகம் ஆனால் எந்த பொருளும் இல்லை என்ற பேச்சே இல்லை. இறைச்சி, காய்கறிகள் என்று எதை எடுத்தாழும் இரண்டு முறை ஒன்று புதியது, இன்னொன்று பதப்படுத்தப் பட்டது, தரம் சுத்தம் என்று சொன்னால் பாராட்டியே ஆகவேண்டும்.

நான் உணவருந்திய ரெஸ்டாரெண்ட்...
நான் உணவருந்திய ரெஸ்டாரெண்ட்...

காலை உணவை முடித்து விட்டு(லண்டன்) தமிழ் நண்பரோடு வெளியே கிளம்ப தயாரானேன். அப்போது அவர் மின்மீட்டரில் இருந்து பென்டிரைவ் போன்ற ஒன்றை எடுத்தார் என்ன என்று கேட்டேன், அதற்கு அவர் இது பிரீபெய்டு எலக்ட்ரிக் கார்டு நமது தேவைக்கு ரீசார்ச் செய்து பயன்படுத்தலாம் இதே போன்று சமையல் கேஸ் உண்டு, போஸ்ட் பெய்ட் சிஸ்டமும் உண்டு, எது வேண்டும் என்பது நமது விருப்பம் ஆக மின்சாரமும், கேஸும் சட்டை பாக்கெட்டில் என்றார். வியந்து போனேன் போகலாமா என்றார் சுய நினைவுக்கு வந்தேன்.

இங்கு வீட்டை விட்டு வந்தால் சாலையில் தான் குளிரை உணர முடியும் பிறகு பஸ்சில், கடைகளில் பெரும்பாலும் ஹீட்டர் தான். அப்படியே பேசிக்கொண்டு பஸ் ஸ்டாப் வந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய பஸ் தடம் எண் 109 இன்னும் 5 நிமிடத்தில் வரும் என்பதாக டிஜிட்டல் போர்டு சொன்னது. ஆச்சரியம் சரியாக 5 நிமிடத்தில் அதே தடம் எண் வந்து மிக அமைதியாக நின்றது. தமிழ்நாட்டுக் காரன் ஆச்சரியப்படத்தான் வேண்டும். ஒரு நபருக்கு 1 பவுண்டு கட்டணம் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் (அட நல்லா இருக்கே) தவிர ஒன் டே பாஸ் வாங்கிகொள்ளலாம் அன்லிமிடட் பயணமாம் (நம்ம ஊர் மாதிரி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், சாதாரணம் இப்படி இம்சை இல்லை) ஒன் டே பாஸில் ஒரு சிறப்பு... பஸ், ரயில் இரண்டுக்கும் ஒரே பாஸ்  ( நம்ம ஊர்ல இப்போ தான் அத யோசிக்கிறாங்க... எப்படியும் 10 வருசம் ஆகும்) ஆஹா! சொல்ல மறந்துடேன் தெரியாத ஆண் பெண் அருகருகே அமரலாம். நோ அப்ஜக்க்ஷன். எனது நண்பர் ஒரு பெல்லை அழுத்தினார் பஸ் நின்றது அந்த இடம்தான் க்ரைடன். இந்த இடம் ஒரு குட்டி தமிழ்நாடு. இலங்கை தமிழர்கள் கடைகள் உண்டு. நம்ம ஊர் கடலை மிட்டாய், கருவாடு வாங்கலாம். அது போக தினதந்தி, தினமலர், நக்கீரன், குமுதம் என் பார்வையில் பட்டது. பெரும்பாலான பொருள் பெயர் தமிழில் உண்டு (இலங்கை இறக்குமதி) முக்கியமாக வேலை செய்பவர்கள் தமிழர்கள் தான் (இந்தியா, இலங்கை).இந்த கடையில் தமிழ் காசாளர் (கேஷியர்) இவருக்கும் அங்கு கஸ்டமராக வந்த ஒரு ஆங்கில பெண்மணி (கற்பமாக உள்ளார்) க்கும் இடையில் நடந்த ஒரு சுவரஷ்யமான ஆங்கில உரையாடல் கேட்டு ஆச்சரிய பட்டேன்.

அந்த கேஷியர் அந்த பெண் எடுத்து வந்த பொருளுக்கு பில் போட்டு பணம் வாங்கும்போது கேட்கிறார் ‘உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை பையனா? பெண்னா?’ என்று உடனே அந்த பெண் முக மகிழ்ச்சியோடு ‘இது பையன்’ என்றார் உடனே கேஷியர் உங்களுக்கு சந்தோசமா? என்றார். அதற்கு அவள் நிச்சயமாக என்றாள். பிறகு கேஷியர் அந்த பெண்ணிடம் வாழ்த்துகள் என்றார் உரையாடல் முடிந்தது. இதில் இரண்டு விசயம் தெளிவாகிறது ஒன்று மிக சோஷியலாக பேசும் உரிமை அங்கு உண்டு, இரண்டு, ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறியும் உரிமை அவளுக்கு உண்டு என்பதே. நான் ஆச்சரியப் பட்டது சரிதானே?.

அடுத்த கடைக்குச் சென்றோம் சினிமா சிடி கடை இலங்கை தமிழருடையது. தமிழ்நாட்டில் புதிய படம் ஒன்று ரிலீஸ் ஆனால் அதே நாளில் அதே படம் இங்கு சிடி யாக வெளியாகும் விலை 2 பவுண்டு. அடுத்ததாக  ‘பே பாய்ண்ட்’ என்று மஞ்சள் நிற போர்டு வைத்த கடைக்குச் சென்றோம் இது ஆங்கிலேயர் கடை இந்த கடையின் உள்ளே செல்லும் போது ...ஒரு டீன் ஏஜ் பையன் ஒருவன் எந்து நண்பரை வழி மறித்து அவர் காதில் ஏதோ சொன்னான். அதற்கு எனது நண்பர் சிரித்த முகத்தோடு ‘நோ ஸாரி’ என்று சொல்லிவிட்டு கடைக்கு உள்ளே சென்றுவிட்டார், என்ன என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னது... இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆல்கஹால், சிகரெட் வாங்கக் கூடாது, அவர்களுக்கு விற்பதும் குற்றம். கடைக்காரர் தேவைப்பட்டால் அடையாள அட்டை கேட்பார், காட்டினால்தான் கிடைக்கும்.அந்த பையன் 15 வயதுதான் இருக்கும்... என்னை சிகரெட் வாங்கித்தர கேட்டான், நான் முடியாது என்று சொல்லி விட்டேன் என்றார். பிறகு அந்த கடையில் 10 பவுண்டுக்கு எலக்ட்ரிக் ரீசார்ச் செய்தோம்.

தேம்ஸ் நதிக்கரையோரம்...
தேம்ஸ் நதிக்கரையோரம்...

எங்கள் வேலை முடிந்தது வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆன போது நான் சொன்னேன் பஸ்சில் வந்த தூரம் குறைவு அதனால் நடந்து செல்லலாமா என்றேன், அவரும் சரி என்றார். சாலையின் இருபுறமும் மரங்கள் சூழ, குளிர் காற்று எங்களை மோத கிராமத்தில் நடக்கும் உணர்வோடு நடக்க ஆரம்பித்தோம். அப்போது நான் கண்ட சம்பவம், ஒரு ஆங்கிலேயர் அதிகமாக மது மயக்கத்தில் தன்நிலை மறந்து நிற்கிறார், அவர் கால் சட்டை அவிழ்ந்து  விட்டது. அதை ஒரு காவல்துறை அதிகாரி சரி செய்கிறார். இந்த நிகழ்வை பார்த்த போது எனக்கு லத்தியை சுழற்றும் தமிழகக் காவல்துறை நினைவுக்கு வராமல் இல்லை. இன்னொன்றும் நினைவுக்கு வந்தது மனித உரிமை அமைப்பின் தாயகமே லண்டன்தான் என்று. அப்போது நண்பர் சொன்னார் ‘நடக்க முடிவு செய்து விட்டோம் பஸ் காசு மிச்சம் அதற்கு சாக்லேட் வாங்குவோமா’ என்றார், நானும் சரி என்றேன் கடைக்குள் நுழைந்தோம்...

ஒரு நடுதர வயது பெண் ஒரு சிப்ஸ் பாக்கெட், ஒரு சாக்லெட் பார் சிறியதும் கையில் வைத்து கொண்டு பணம் செலுத்த எங்களுக்கு முன் நின்றார், கடைக்காரர் சுமார் 1 பவுண்டு பெற்றுகொண்டு அந்த பெண்ணிடம் கேட்டார் (உரையாடல் ஆங்கிலத்தில்) இது உங்கள் மதிய உணவா? அதற்கு அவர் ஆம் என்றார் உடனே கடைக்காரர் விடவில்லை இது உங்களுக்கு போதுமா? என்றார் அதற்கு அந்த பெண்ணின் அற்புத பதிலோடு அந்த உரையாடல் நின்றது,  ஆம் என் நினைவலைகளையும் ஒரு நிமிடம் நிறுத்தியது அந்த பதில்...

இல்லை என்ற நிலைக்கு இது மேன்மையானது (ஸம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்) என்றார். போதும் என்ற மனம்  மிகப்பெரிய செல்வம் என்று எல்லா மதமும் சொல்கிறது. நாங்கள் வாங்கிய சாக்லெட் காலியாகிவிட்டது எங்கள் வீடும் வந்து விட்டது.

6 . சுற்றுலாவினால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது தாக்கங்கள் என்ன?

இதை முன்பு கூறியதை விட சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் ஏனென்றால் கேள்வி அப்படி... அங்கு வேலை செய்யும் தமிழர்கள், தமிழ் குடியுரிமை பெற்றவர்கள், சொந்த நாட்டுக்காரர்கள் போன்றோரிடம் நான் பேசியதில் எனக்கு கிடைத்த தகவல்கள், அனுபவங்களின் சுருக்க தொகுப்பு இதோ....
     

  • இந்த நாட்டில் அதிகமான மரம் உண்டு என்பது சிறப்பு , அதை விட சிறப்பு மரத்தை வெட்டுவது குற்றம். இந்தியாவில் மரம் மனிதனிடம் உயிர் பிச்சை கேட்பது நம் காதில் கேட்கிறது.
  •      
  • எவ்வளவு மழை பெய்தாழும் ஒரு கிளாஸ் தண்ணீர் சாலையில் தேங்காது என்ன ஒரு அற்புத நீர் மேலாண்மை.
  •     
  • குற்றவாளியாக இருந்தாலும் மனிதாபிமானத்தோடு அணுகும் காவல்துறை, அதிநவீன தொழில் நுட்பம் கைவசம் ஆகவே குற்றம் குறைவு, ஒரு சிம் கார்டு வேண்டுமானால் கடையில் சாக்லெட் வாங்குவது போன்று, நோ ஐடி நோ போட்டோ.
  • நாம் அந்த நாட்டு குடிமக்களிடம் தவறாக ஆங்கிலம் பேசிவிட்டால் அவர்கள் சிரிக்க மாட்டார்கள், மாறாக நாம் சொல்வதை விளங்கி அதற்கு பதில் அளிப்பார்கள்.(என்ன பெருந்தன்மை)
  • நான் இருந்த இடத்தில் ஒரு மிகப் பெரிய நூலகம் இருக்கிறது அதில் தமிழுக்கும் இடம் உண்டு, கலைஞர் எழுதிய புத்தகம், வைரமுத்து கவிதைகள், சிறு கதைகள் காணக்கிடைத்தது ஆனந்தம்.
  • நாய், பூனையை பிள்ளை வளர்ப்பது போன்று வளர்க்கிறார்கள், இறுதியில் சொத்தையும் கொடுக்கிறார்கள் அந்நாட்டு குடிமக்கள்.
  • அங்கு உணவு மிக ஆரோக்கியம் என்பதற்கு உதாரணம் 80 வயதை கடந்த ஆண், பெண் கண் கண்ணாடி அணிவதும், கையில் குச்சி வைத்து நடப்பதும் அரிதிழும் அரிது.
  •      
  • ஒரு தெருவில் 50 வீடு இருந்தால் அந்த 50 வீட்டு வாசல்கள் ஒரே நேர் கோட்டில் இருக்கும்.
  •      
  • மது பிரியர்கள் அதிகம் ஆனால் பொது மக்களுக்கு அணு அளவும் பாதிப்பில்லை.
  •      
  • சாலையில் செல்லும் வாகனம் ஹாரன் எழுப்பினால் அது உலக அதிசயம்.
  •     
  • புதிய திரைப்படம், விளையாட்டு தவிர்த்து வீட்டில் தமிழர்களின் பொழுதுபோக்கு தீபம் டிவி.
  •      
  • அகதிகளாக இருப்பவர்கள், கல்வி பயிலும் அந்நிய நாட்டவர்கள் எலக்சன் கமிஷனில் பதிவு செய்தால் ஓட்டு போடும் உரிமை உண்டு.

எனக்கு தொழில் அனுபவத்தால் ஹிந்தி சரளமாகப் பேசுவேன் அதன் பலன் இங்கு உணர முடிந்தது, பஞ்சாப் சீக்கியர்கள், குஜராத் பட்டேல்கள், பாகிஸ்தானியர்கள் லண்டனில்  அதிகம் அவர்களிடம் நட்பாக பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாகிஸ்தானியர் அவர் பெயர் இம்தியாஸ், அவர் அதிகமாக புகை பிடிப்பவராகவும், தேநீர் அருந்துபவராகவும் இருந்தார்.அவரிடம் நான் சொன்னேன் இவை இரண்டுமே உங்கள் உடலுக்கு நல்லது அல்ல என்று....

அதற்கு அவர் திருக்குறள் போன்று 2 வரி பதில் சொன்னார், அவரையும் அவருடைய பதிலையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது. அப்படி என்ன சொன்னார்?

சாய் மேரா ஜிந்தஹி, சிகரெட் மேரா மௌத்.
( தேநீர் என் வாழ்வாதாரம், புகைத்தல் என் மரணம்)

அற்புதமான வாழ்வை இரண்டு விஷயங்களுக்காக  அற்பமாக சுருக்கி கொண்டவர்களை என்ன சொல்ல?

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷன் தமிழ் டிவி மட்டுமே அதில் ஒரு தொடர், அந்த தொடரில் வரும் பாடல் இன்னும் என் நினைவில் உண்டு..

"எத்தனை விதங்களில் மனிதர்கள், எத்தனை ரகங்களில் மனிதர்கள். என்னென்ன விதங்கள், என்னென்ன குணங்கள்..
அத்தனை விசித்திர மனிதர்கள்....”

சில மனிதர்கள் என்னை கடந்து போகும்போது இந்த பாடலின் பொருள் புரிகிறது.
 

லண்டனில் மூன்று WWW நம்பக்கூடாது என்பதாக அதிகம் சொல்லப் படுகிறது.

வொர்க் - வுமென் - வெதர்  என்பதுதான் .

இது விசுவாசம், கலாச்சாரம், காலநிலை சம்பந்தப்பட்ட விசயம் இந்த ரகசியத்துகுள் உள்ளே நுழைய நான் விரும்பவில்லை.

இப்படியே லண்டன் பெருமை பேசிகொண்டே இருந்தால் அங்கு அனாச்சாரம் என்பதே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது... ஆம் அப்படி என் மனதை நெருடும் செய்தியும் உண்டு.
      

  • அங்கு முன் பின் தெரியாத ஆணும் பெண்ணும் டேட்டிங் என்ற பெயரில் தனியாக பொழுதை கழிக்கும் அவலம் உண்டு, அதன் விளைவு 13-14 வயது சிறுமி ஆணுறை வாங்கியதை நேரில் பார்த்தேன்...
  •   
  • நம்ம ஊரில் (கிராமத்தில்)ஒரு தந்தை  தன் 10 வயது மகனிடம் பீடி வாங்கி வரச் சொல்வதை பார்த்தும், கேட்டும் இருப்போம். லண்டனில் ஒரு தந்தை தனது 10 வயது மகனிடம் தினசரி பேப்பர் வாங்கிவரச் சொல்வார். இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? சொல்கிறேன்..
  • அந்த பேப்பர் தி சன், நம்ம ஊரில் தினத்தந்தி போன்று. அதில் தினமும் 3ம் பக்கத்தில் ஒரு இளம் பெண்ணின் புகைப்படம் மேல் ஆடையும், மேல் உள் ஆடையும் இல்லாமல் வரும். இது அங்கு காலத்தின் கட்டாயம், நாகரீக சுதந்திரத்தின் உச்சம். இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் அந்த சிறுவன் அந்த 3ம் பக்கத்தை பார்க்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

மொத்தத்தில் லண்டன் ஆச்சரியத்தின் உச்சம். அந்த ஆச்சரியம் பார்க்கும் பார்வையை பொருத்து விரிவடையும்.

7 . சுற்றுலா திட்டமிடல் அவசியமா?

நிச்சயமாக அவசியம், காரணம் பொழுதுபோக்கு, கல்வி சார் மட்டுமல்லாமல் பொருளாதாரம் சேர்ந்துள்ளது, நம்முடைய இலக்கை பொருத்து அது மாறுபடும். விசேசங்களுக்கு திடீர் பயணம் செய்வது சுற்றுலாவாக ஆகாது அதற்கு திட்டமிடல் தேவை இல்லை.

8 . சுற்றுலா மூலம் நான் கற்றதும் பெற்றதும் என்ன?

உலக சுற்றுலாவில் கடல் கடந்து செல்வது போல் சில மனிதர்களையும், அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் கடந்து செல்லும் போது நமக்கு ஏற்படும் உணர்வுதான் அந்த சுற்றுலாவின் சிறப்பு அம்சம். அப்படி சில நிகழ்வுகளை இந்தியாவோடு ஒன்றி பார்க்கும் போது....

நான் ஒரு இந்தியனாக என்னுடைய உணர்வு...

ஒழுக்கம் சார்ந்த விசயத்தில் பெருமைபட்டேன்

தூய்மை விசயத்தில் வருத்தபட்டேன்

உரிமைகள் சார்ந்த விசயத்தில் ஆதங்கம் உண்டு

மனிதாபிமானத்தில் ஆச்சரியபட்டேன்

தொழில் நுட்பத்தில் நாம் பின்தங்கிய நிலையில் இருப்பது கண்டு ஏங்கினேன்

என்னுடைய உணர்வால், இயலாமையால் நான் சில இடங்களில் இந்தியாவுக்கு எதிராக இருக்கலாம், அயல்நாடு என்னை பிரம்மிக்க வைக்கலாம் ஆனால் எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன்...

காத்திருப்பேன் எம் தேசம் வல்லரசு ஆகும் வரை.

கட்டுரையாளர்: M.நெயினார் முஹம்மது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com