ஸ்பெஷல்

விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

விகதகுமாரன்

கதை முழுவதையும் கேட்டபின், கேள்விக்கு மன்னன் விக்ரமாதித்தன் சரியான பதிலளித்ததும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறிக் கொள்ளும். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்குவான், காளி கோவிலை நோக்கி. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, ஏறத்தாழ 24 முறை!

கடைசியாகக் கதையைக் கேட்டுக்கொண்டு கேள்விக்குப் பதிலளிப்பதைப் போல பாவனை செய்துகொண்டே, வேதாளம் வாய்பார்த்துக்கொண்டிருக்க, கோவிலுக்குள் சென்றுவிடுவான்  விக்ரமாதித்தன். வேதாளமாக இருந்த புட்பதத்தனும் அவன் மனைவி தேவதத்தையும் சாபம் நீங்கப் பெற, அவர்களின் மூலம் முனிவனின் துர்நோக்கத்தையறிந்து அவனையும் வெட்டி வீழ்த்தி, மகிழ்வுற்ற காளியின் வரத்தைப் பயன்படுத்தி, ஏற்கெனவே உயிரிழந்த 999 மன்னர்களையும் உயிர் பெறச் செய்வான் விக்ரமாதித்தன்.

இதுதான் விக்ரம்+ஆதித்தன் கதையின் ரத்தினச் சுருக்கம்.

தமிழ்த் திரையுலகில் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் மீண்டும்  மீண்டும் முயன்று கொண்டேயிருந்த கமல்ஹாசன் என்ற விக்ரமாதித்தனும் விக்ரம்-2வில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுக் காட்டியுள்ளார்.

1986 மே மாதம் 29 ஆம் நாள் வெளியானது கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம். சரியாக 36 ஆண்டுகளுக்குப் பிறகு, துணிந்து அதே பெயரில் மீண்டும் ஒரு படமெடுத்து வெளியிட்டு வென்றிருக்கிறார். வெற்றி என்றால் முன்பின் காணாத அளவு வெற்றி. கமல்ஹாசனேகூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவருடைய அண்மைக் காலப் பேச்சுகளும் அதை  உறுதிப்படுத்துவதாகத்தான் இருக்கின்றன.

அக்னிபுத்ர என்ற ராக்கெட்டை சுகிர்தராஜா (சத்யராஜ்) என்ற சர்வதேச கடத்தல்காரன் கடத்திச் சென்றுவிடுகிறான். அதை மீட்கும் பொறுப்பு சி.ஐ.டி. விக்ரமிடம் (கமலிடம்) ஒப்படைக்கப்படுகிறது. உடனடியாக, மனைவியுடன் தேனிலவில் இருந்த விக்ரமைக் கொல்ல சுகிர்தராஜா கும்பல் மேற்கொள்ளும் முயற்சியில் விக்ரமின் மனைவி (அம்பிகா) கொல்லப்படுகிறார்.

கடத்திய ராக்கெட் வைக்கப்பட்டுள்ள சலாமியா நாட்டுக்கு விக்ரம் செல்ல, ராக்கெட்டில் புரோக்ராம்களை மாற்றுவதற்காகக் கணினி வல்லுநர் பிரீத்தி (லிசி) உடன் செல்கிறார். சலாமியாவின் மன்னனாக அம்ஜத்கான், தங்கை இளவரசி இனிமாஸியாக டிம்பிள் கபாடியா. இரு பெண்களுமே விக்ரமைக் காதலிப்பதில் போட்டிபோடுகிறார்கள்.

இவற்றுக்கு நடுவே ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நிறைய போராடி,  கன்னாபின்னா  மொழி பேசும் சலாமியாவிலிருந்து வில்லனால் தில்லி நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டைத் திசைதிருப்பி கடலில் விழச் செய்து பணி முடிக்கும் விக்ரம், படத்தில் கடைசியாக, துரத்திக்கொண்டுவரும் இரு பெண்களிடமிருந்தும்  தப்பியோடுவார்.

முதல் பகுதியின் முடிவில் 'காணாமல்போய்விட்டதாக'க் கூறப்படும் விக்ரம் மற்றும் 3 ரகசிய ஏஜெண்ட்கள்தான், 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்து, இரண்டாவது அத்தியாயத்தை இப்போது நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த முறை மேலும் மூவர் இறந்துவிட்டனர். மிச்சமிருக்கும் விக்ரம் மட்டும் மூன்றாவது பகுதியிலும் வரக் கூடும், கூடுமென்ன, வருவார். வந்து ரோலக்ஸ் / சாரைப் பழி வாங்குவார். அதற்கு முன் ரோலக்ஸ் / சார் என்னவெல்லாம் செய்யப் போகிறார், விக்ரமின் பேரக் குழந்தை என்னவாக வளர்வார், விக்ரம் எவ்வாறு எதிரிகளை அதிரடிப்பார் என்பனவெல்லாம் இனி லோகேஷ் கனகராஜுடைய கவலை!

அப்போது மிகவும் எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது விக்ரம். ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்தும் மதுரையில் அரசரடி - ஆரப்பாளையம்  சாலையிலுள்ள மதி திரையங்கில் (இப்போதும் இருக்கிறதா, தெரியவில்லை)  வரிசையில் காத்துக் கிடந்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பார்த்தால்... ப்ச். ஓபனிங் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும், ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல (திரைப்பட உருவாக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா பெரும் பங்காற்றியிருந்தார்). ஆனால், ஏனோ கமலின் வெற்றிப் படங்களில் ஒன்றாக எப்போதும் கருதப்படவில்லை. தமிழில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தப் படம், அந்தக் காலத்தில் வசூலித்தது எவ்வளவு என்பதை கமல்ஹாசன்  சொன்னால் (தயாரிப்பு அவர்தான்) வேண்டுமானால் சரியாகத் தெரிய வரலாம்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம்(மாதித்தன்), அதன் பிறகும், கடந்த 36 ஆண்டுகளில், அவருடைய செலவிலும் அடுத்தவர்கள் செலவிலும்  நிறைய சோதனை முயற்சிகளைத் திரையில் செய்து பார்த்திருக்கிறார்... பேசும் படம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், குணா, குருதிப்புனல், ஹே ராம், மும்பை எக்ஸ்பிரஸ் (அந்தக் காலத்திலேயே டார்க் காமெடி!) அவ்வை சண்முகி, ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம்... எனப் பட்டியல் நீளும். இவற்றில் வெற்றிகளும் உண்டு, படுதோல்விகளும் உண்டு. மருதநாயகம் போன்ற நிறைவேறாத ஆசைகளையும் இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவுக்கும் நடுவில்தான் தன்னையும் திரைப்படத்தையும் முற்றிலுமாக புதிய - இளைய இயக்குநர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும்  தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மட்டும் இயங்கிய 'சகலகலாவல்ல' கமல்ஹாசன், இந்த முறை - இரண்டாம் விக்ரமில் - யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறார் (முதல் விக்ரம் படத்தின் இயக்கத்தை அப்போது புதிய இளைய இயக்குநராக இருந்த மணிரத்னத்திடம் கொடுப்பதாக இருந்ததாகவும் ஆனாலும் பெரிய வேலை என்பதால் ஒப்படைக்கத் தயங்கியே இயக்குநர் ராஜசேகரிடம் தந்ததாகவும் கூறுவார்கள்). ரூ. 300 கோடியையெல்லாம் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது விக்ரமின் திரையரங்க வசூல். இன்னமும்கூட பல ஊர்களில் அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

உறுதியாக நவீன கால விக்ரமாதித்தன் இத்துடன் திருப்தியுற மாட்டார். இந்த வெற்றியில் பெற்றதையும்கூட இங்கேயே, மீண்டும் முருங்கை மரங்கள் மீதேறி வேதாளங்களைத் துழாவி, சோதித்துப் பார்க்கத் தொடங்கிவிடுவார். இவற்றுக்கான  அறிகுறிகள்தான் மீண்டும் சபாஷ் நாயுடு, இந்தியன் - 2 பற்றிய செய்திகளெல்லாம் வெளிவரத் தொடங்கியிருப்பது!

விக்ரம் - 3 வருவது மட்டும் உறுதி. ஏனென்றால், இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தோல்வி ஏன் என்பதைப் பற்றிப் பேச ரோலக்ஸ் சூர்யா நடத்திய மெகா மாபியா கும்பல் கூட்டத்திற்குள்ளேயே புகுந்து தானும் ஒருவராகக்  கலந்துகொண்டுவிட்டு வெளியே வருகிறார் விக்ரம். தோற்றத்தில் இருக்கிறது  புதுப் படத்துக்கான லீட்.

கென்னத் பிரானா

விக்ரமின் முகத் தோற்றம் மாறியிருக்கிறது - திரைப்படமாக எடுக்கப்பட்ட அகதா கிறிஸ்டியின் நாவல்களில் ஒன்றான மர்டர் ஆன் தி ஓரியன்ட்  எக்ஸ்பிரஸில் (2017) வரும் பெல்ஜியத் துப்பறிவாளர் ஹெர்க்யூல் பொயர்  (படத்தில் இயக்கி நடித்திருப்பவர் கென்னத் பிரானா) வைத்திருக்கும்  வித்தியாசமான மீசை!

நிறைவில் ஒரு சொல்: விக்ரம்-1 வெளியான இதே 1986 ஆம் ஆண்டில் இந்தப் படத்தின் இயக்குநரான அதே ராஜசேகரின் இயக்கத்தில், தமிழின் முதல் 70 எம்எம் என்ற சிறப்புத் தகுதியுடன் வெளியான பிரம்மாண்டமான  மாவீரன் (ரஜினியே இணைந்து தயாரித்தும்  ஊற்றிக்கொண்ட) திரைப்படத்தின்  பெயரில்  மறுபடியும் ஒரு  மாவீரனை எடுத்து வெற்றி பெற விழைய வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT