ஸ்பெஷல்

பால்கே விருது வென்ற ரஜினி: ரசிகர்களை மயக்கிய ரகசியம்!

ச. ந. கண்ணன்

இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகுக்கு ரஜினி அறிமுகமாகி 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, அதிகச் சம்பளம் வாங்கும் நடிகராக, அதிக ரசிகர்களைக் கொண்டவராக உள்ளார் ரஜினி. இந்தியாவின் பிரபலமான மூன்று நடிகர்கள் என்றொரு பட்டியல் போட்டாலும் அதில் ரஜினிக்கு நிச்சயம் இடம் உண்டு. 

இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் - பைரவி. அந்தப் படம் பற்றிய சுவையான அனுபவங்களைச் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் ரஜினி.

கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு இயக்குநர் பாரதிராஜா சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி பேசியதாவது:

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார் கலைஞானம். ஒரு படம் தயாரிக்கிறேன் என்றார். சூப்பர். யார் ஹீரோ என்று கேட்டேன். நீங்கள் தான் ஹீரோ என்றார். கண்டக்டராக இருந்தேன். ஒரு வீடும் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலே போதும் என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். அதுவே எனக்குப் பெரிய விஷயம். சத்தியமாகச் சொல்கிறேன், ஹீரோவாகவேண்டும் என்று நான் ஆசைப்படவேயில்லை. வில்லனாகவே நடித்துவிடலாம் என எண்ணினேன். அப்போது என் சம்பளம் ரூ. 35,000. அவரிடம் 50,000 சம்பளம் கேட்டேன். தரமாட்டார் என எண்ணினேன். ஆனால், அடுத்த நாளே பணம் தந்தார். தாலியை விற்று பணம் தந்தார் என அப்போது எனக்கு சத்தியமாகத் தெரியாது. படத்தின் தலைப்பைக் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. உடனே ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம், பாதாள பைரவி. அபூர்வ ராகங்கள் படத்தில் என்னுடைய முதல் ஷாட்டில், பைரவி வீடு இதுதானே என்று கேட்பேன். இந்தப் படத்துக்கு பைரவி எனப் பெயர் வைத்தார். இதனால் ஏதோவொரு சக்தி என்னை இயக்குவதாக எண்ணினேன். அந்தப் படத்தில் கலைப்புலி தாணு, எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார். நான் வேண்டாம் என்றேன். கிரேட் எடுத்துவிடுகிறேன். சூப்பர் ஸ்டார் எடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். 

படம் வெளியான 2-வது நாள், படப்பிடிப்பில் இருந்த என்னை, பைரவி படம் ஓடிய ராஜகுமாரி திரையரங்குக்கு அழைத்துச் சென்றார் கலைஞானம். படம் ஹவுஸ்ஃபுல். கிளைமாக்ஸுக்குச் செம கைத்தட்டல். வெளியே வந்த என்னை ரசிகர்கள் அப்படியே தூக்கிவிட்டார்கள். நான் கதாநாயகன் ஆன பிறகு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னைச் சுற்றிக்கொண்டார்கள். இதன்பிறகு நான் ஓடிக்கொண்டே இருந்தேன் என்றார்.

80களில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் ரஜினியின் நடிப்பையும் அவருடைய இதர திறமைகளையும் வெளிப்படுத்தின. 

12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள மகேந்திரனின் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் ரஜினி. முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை. ரஜினியின் நடிப்பு மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். இன்றைய இயக்குநர்களுக்கு ரஜினியின் நடிப்பு பற்றி தெரிவதில்லை. அவருடைய ஸ்டைலைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளார்கள். காளி கதாபாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தினார். அருமையான நடிகர் என ரஜினியைப் பாராட்டியுள்ளார் மகேந்திரன்.

உன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்கிறேன் என முள்ளும் மலரும் பார்த்துவிட்டு ரஜினியைப் பாராட்டினார் கே. பாலசந்தர். எனக்கே இன்னொரு ரஜினியைக் காண்பித்தார் மகேந்திரன் என அப்படத்தைப் பற்றி எப்போது பேசினாலும் வியந்து பாராட்டுவார் ரஜினி.

*

தர்பார் பட விழாவில் தன்னுடைய வெற்றிப் பயணம் பற்றி ரஜினி கூறியதாவது:

இப்போதும் நான் தொடர்ந்து பணியாற்றுவதற்குக் காரணம் பணம் தான் (சிரிக்கிறார்). சீரியஸாகச் சொல்லவேண்டுமென்றால், சினிமா மீதான ஆர்வம் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. 

ஒரு நடிகராக நான் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளேன் எனக் கேட்கிறீர்கள். ஆரம்பத்தில் நான் கூச்ச சுபாவம் உள்ளவனாக, பதற்றம் கொண்டவனாக இருந்தேன். மற்றப்படி எல்லாமே இயக்குநரின் கையில் தான் உள்ளது. நான் இயக்குநர்களின் நடிகன். எனக்குத் தரப்பட்ட காட்சியின் சூழலுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது தான் நடிப்பாகும். மற்றபடி நான் மாறியதாக நினைக்கவில்லை. 

என்னுடைய பெரிய ஊக்கம், அமிதாப் பச்சன் தான். கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்பும் தான். எங்கள் நட்பை விளக்கும் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. அவருக்கு என்னைப் பிடிக்கும். நாங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தபோது, அவர் என்னிடம் சொன்னார், 60 வயதுக்குப் பிறகு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூன்று விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொள். தினமும் உடற்பயிற்சி செய். தொடர்ந்து வேலை செய். தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று விடு. அப்புறமாக, அரசியலுக்குள் நுழையாதே என்றார். சூழ்நிலை காரணமாக என்னால் மூன்றாம் அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் என முதல் முதலில் அழைத்த அனுபவம் இது. நாற்பது வருடங்களுக்கு முன்பு, 80களில், என்னுடைய படம் ஒன்றை திரையரங்கில் பார்க்கிறேன். அதில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று இடம்பெற்றிருந்தது. உடனே தயாரிப்பாளருக்குப் போன் செய்து, என்னைக் கேட்காமல் எப்படி இதுபோலச் செய்யலாம் என்று கேள்வி எழுப்பினேன். மக்கள் என்னை சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள் என்று நினைக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் எண்ணுகிறேன். என்னை ஏன் சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

80களில் பல அற்புதமான படங்களில் நடித்தார் ரஜினி. பல படங்கள் ரஜினியின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தின. ஆனால் 90களில் தனது பாதையைத் தெளிவாக வகுத்துக்கொண்டார். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு சாதித்தார். 

91-ல் தளபதி, மன்னன் படங்களில் நடித்தார். 92-ல் அண்ணாமலை படத்தின் அசுர வெற்றியும் சுரேஷ் கிருஷ்ணாவுடனான கூட்டணியும் ரஜினி திரை வாழ்க்கைக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது. 1994-ல் வீரா வெற்றியடைந்த பிறகு 1995-ல் பாட்ஷா வெளியானது. இன்றுவரை ரஜினிக்கு இப்படியொரு படம் அமையவில்லை எனும் விதமாக மிகப் பெரிய வெற்றியை அடைந்து ரஜினியின் அந்தஸ்தைப் பல மடங்கு உயர்த்தியது. பாட்ஷாவின் வசூலை அதன்பிறகு வெளியான படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.0 போன்ற படங்கள் தாண்டினாலும் ரசிகர்கள் மனத்தில் பாட்ஷா அளவுக்கு வேறெந்த படமும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால்தான் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் சமூகவலைத்தளங்களில் ஒரு பரபரப்பு ஏற்படும்.  

*

தமிழ்த் திரையுலகில் அதிக வசூலில் இன்றைக்கும் ரஜினியின் படங்கள் தான் முன்னணியில் உள்ளன. 69 வயதான பின்பும் வெகுஜனப் படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மேலும் பெரிதுபடுத்தி வருகிறார். 2010-களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் ரஜினி என்றால் யார் எனத் தெரியும். அந்தக் கூட்டத்தையும் ரஜினி கவர்ந்துள்ளார். 

சமீபகாலமாக ரஜினிக்கு ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியா போன்ற பகுதிகளிலும் புதிய ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். ரஜினிக்கு வயதானாலும் அவருடைய சினிமா வாழ்க்கையிலும் துளியும் தொய்வு ஏற்படவில்லை.

2007-ல் வெளியான சிவாஜி முதல் சமீபத்தில் வெளியான தர்பார் வரை ரஜினி நடித்த படங்களில் கோச்சடையான், லிங்கா, குசேலன் தவிர அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. சிவாஜி, எந்திரன், கபாலி, காலா, பேட்ட, தர்பார் என ரஜினியின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ரஜினியின் புகழ் இன்னும் குறையவில்லை என்பதற்கு ஆதாரங்களாக அமைந்துள்ளன. 

இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, இளம் இயக்குநர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ரஜினியின் துணிச்சல்.

2000-ம் ஆண்டு முதல் 2010 வரை ரஜினியின் படங்களை இயக்கியவர்கள் - சுரேஷ் கிருஷ்ணா, பி. வாசு, ஷங்கர் போன்ற மூத்த இயக்குநர்கள் மட்டுமே. 

ஆனால் 2010-க்குப் பிறகு ரஜினி முற்றிலும் புதிய பாதையில் பயணித்து வருகிறார். மூத்த இயக்குநர்களுக்குப் பதிலாக சமீபத்தில் வெற்றி கண்ட மற்றும் இளம் இயக்குநர்களை முழுதாக நம்புகிறார். இதனால் தான் கடந்த 9 வருடங்களில் ரஜினியின் படங்களை இயக்கும் பொறுப்புகள் - செளந்தர்யா ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், பா. இரஞ்சித், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ், சிவா ஆகியோருக்குக் கிடைத்துள்ளன. 

இவர்களில் ஷங்கரும் ரவிகுமாரும் மட்டுதான் அனுபவஸ்தர்கள். செளந்தர்யா, பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ், சிவா ஆகிய இயக்குநர்களிடம் முதல்முறையாக நடித்துள்ளார் ரஜினி.

ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டார், நம்பிக்கையுடன் இயக்குநர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைப்பதால் பல விதமான படங்களில் நடிப்பதோடு அதிக வெற்றிகளையும் பெற முடிகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற தர்பார் பட விழாவில் பேசிய ரஜினி, என்னுடைய சுறுசுறுப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் இவைதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், கொஞ்சமாகத் தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாகப் பேசுங்கள். இதை எல்லாம் செய்தால் சந்தோஷமாக வாழலாம் என்றார்.

ரஜினியின் திரையுலக வெற்றிகளுக்கான முக்கியக் காரணங்கள் என்று அவருடைய புத்திசாலித்தனமான முடிவுகளையும் உழைப்பையும் சொல்லலாம். அவை தான் ரஜினியைத் தொடர்ந்து வசூல் மன்னனாக நீடிக்க வைக்கிறது. பால்கே போன்ற உயரிய விருதுகள் வரைக்கும் அவரை உயர்த்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT