ஸ்பெஷல்

'எப்போ பார்த்தாலும் பூஜையா!': ஆன்மிக தொடராக மாறும் 'செம்பருத்தி' - கடுப்பில் ரசிகர்கள்

19th Oct 2021 04:53 PM

ADVERTISEMENT


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் கடந்த சில நாள்களாக பூஜை நடைபெறும் காட்சிகளே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

குடும்ப நலன் வேண்டி பூஜை நடத்த திட்டமிடுவது, அதற்கான ஏற்பாடுகளை செய்வது, பூஜையில் தடங்கல்களை ஏற்படுத்துவது, பின்னர் அதனை தெய்வக்குத்தமாக்கி ஒரு வார காட்சிகளை கடத்துவது என செம்பருத்தியின் போக்கு மாறி வருவது ரசிகர்களை மேலும் சலிப்படையவே வைக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு செம்பருத்தி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணிற்கும், நகரத்து இளைஞனுக்கும் இடையிலான காதலை குடும்ப பின்னணியில் இருந்து பேசும் கதையம்சம் கொண்டதாக இருந்தது செம்பருத்தி.

ADVERTISEMENT

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடரின் ஆரம்பகட்டம் முதலே மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. பணக்கார வீட்டில் சமையல் செய்யும் பணிப்பெண்ணாக சேரும் கதையின் நாயகி பார்வதி, அந்த வீட்டின் மூத்த மகனால் காதல் வயப்படுகிறாள் இது 2018-ஆம் ஆண்டு முழுக்க ஒளிபரப்பப்பட்டு வந்த கதை. 

பின்னர் குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்துகொண்டு, பணக்கார வாழ்வை உதறித்தள்ளி மனதிற்கு பிடித்த காதலியுடன் வாழ்வைத் தொடங்குவது என்று 2019-ம் ஆண்டு முழுக்கக் கடந்தது.

இதில் ஆதி பார்வதி திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி எதிர்பாராத தருணத்தில் திருமணத்தை நடத்துவது என்று திருமணக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. திருமணக் காட்சிகள் மட்டும் வடமாநில திருமணம் போன்று கிட்டத்தட்ட 15 நாள்களுக்கு ஓடியது.

தாலி கட்டிக்கொண்டு ஒரே வீட்டில் இருவரும் கணவன் மனைவியாக ஆதியும் பார்வதியும் வாழ்ந்து வந்தனர். ஆனால் அது அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாது என்ற சுவாரசியத்தில் சில மாதங்கள் கழிந்தன. திருமண விவகாரம் தெரிந்து அகிலாண்டேஸ்வரிக்கு பிடிக்காததால் ஆதியும் - பார்வதியும் தனிக்குடித்தனம் செல்வது என்று கதை விரிந்தது.

பின்னர் சுயமாக மீண்டும் தொழிலைத் தொடங்குவது, இடையிடையே மருமகளான பார்வதி மாமியார் அகிலாண்டேஸ்வரியை தெய்வமாக போற்றிப் பாடுவது. வேலைக்காரியை மருமகளாக ஏற்றுக்கொண்டால் ஆதிக்கடவூர் வம்சத்திற்கு இழுக்கு என்று மாமியார் அகிலாண்டேஸ்வரி பிடிவாதமாக இருப்பது என்று இடையிடையே காட்சிகள் நகர 2020-ம் நகர்ந்தது.

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் பார்வதியின் குணத்தைப் புரிந்துகொண்ட அகிலாண்டேஸ்வரி, மகனைப் பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் இருவரையும் வீட்டில் சேர்த்துக்கொள்கிறார். இடையில் வனஜாவின் சூழ்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள். அதனை சமாளித்து வெளியே வருவது போன்ற காட்சிகள் ஓரளவு ரசிகர்களை தக்க வைத்தது.

ஆனால் அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் சென்றதும் மூத்த மற்றும் இளைய மருமகள்களுக்கு இடையிலான அதிகாரப்போட்டியில் ஐஸ்வர்யா செய்யும் காரியங்கள். அதனை தடுக்க ஆதி, அருண் உடன் சேர்ந்துகொண்டு பார்வதி செய்யும் செயல்கள் ரசிகர்களிடையே சலிப்பையே ஏற்படுத்தியது எனலாம்.

அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் சென்றதுமே தொடர் முடியப்போகிறது என்ற மனநிலைக்கு வந்துவிட்ட ரசிகர்கள் அதற்கு பிறகும் ஜவ்வாக தொடரை இழுப்பதை விரும்பவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒவ்வொரு புரோமோவிலும் வரும் ரசிகர்கள் கருத்துகள்.

மேலும், ஒரு தொடரில் அதிகபட்சமான முதன்மை கதாபாத்திரங்களை மாற்றியதும் செம்பருத்தி தொடராகத் தான் இருக்கும். ரசிகர்களின் மனதில் பதிந்த கதாபாத்திரங்கள் நீக்கப்பட்டு புதிதாக பிரதியீடு செய்யப்படும் நடிகர் நன்கு நடித்தாலும் கூட அதனை அவ்வளது எளிதில் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்போதே கதையை முடிக்காமல், மாமியார் அகிலாண்டேஸ்வரியின் தொலைந்துபோன அண்ணன் கிடைப்பது, அவரது மகள் பார்வதி தான் என்று புதிய சிக்கலை உருவாக்குவது, அந்த உண்மையையும் தெரிந்துகொண்ட பார்வதி அதனை குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுப்பது என எந்தவித அடிப்படையும் இல்லாமல் கதையை நீட்டித்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்தை நோக்கமாகக் கொண்டு செம்பருத்தி தொடர் செல்கிறதா? என்ற கேள்வி ரசிகள் மத்தியில் எழுகிறது.

Tags : serial Zee Tamil Sembaruthi tamil serial
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT