ஸ்பெஷல்

ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முடிவு

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய தொடர்களை நிறுத்தப்போவதாக அந்த தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 'சத்யா' தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை வென்ற 'சிந்துரா பிந்து' என்ற தொடரின் மறுஆக்கம் தான் தமிழில் 'சத்யா' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது.

நகரத்தில் ஆண் சுபாவம் கொண்ட பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த பெண் திருமணமாகி கணவன், குடும்பம், உறவுகள் போன்ற சிக்கல்களை கடப்பதுதான் முழுக்கதையின் அம்சம்.

இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் ஆயிஷாவும், அவரது கணவனாக விஷ்ணுவும் நடிக்கின்றனர். இவர்கள் நிஜ வாழ்க்கை ஜோடிகள் என்பது இந்த தொடருக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

ரெளடி பேபியாக என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரது மனங்களையும் வென்றவர் விஷ்ணு.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் திரைக்கதை இருந்ததால், பலரால் இந்த தொடர் விரும்பி பார்க்கப்பட்டது.

இதேபோன்று 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடர் 2018 முதல் ஜீ தமிழில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டாலும், ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை.

உருவ கேலியால் மனமுடைந்த பெண் திருமண வாழ்வில் நுழைந்து சந்திக்கும் பிரச்னைகளே இந்த கதையின் மையம். இதில் நாயகியாக அஷ்வினியும் அவரது கணவராக புவியரசுவும் நடித்து வந்தனர்.

கணவன் மனைவி உறவின் ஆழம், கதைக்கேற்ப காமெடி, வில்லத்தனம் என கலவையான திரைக்கதையால் மக்கள் மனங்களை வென்றாள் ராஜகுமாரி.

இவ்வாறு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இரு தொடர்களை நிறுத்துவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜீ தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், உங்கள் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சத்யா ஆகிய தொடர்கள் நிறுத்தப்படுகின்றன. 

இந்த இரு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும். தங்கள் ஆதரவுக்கு நன்றி என்று பதிவிடப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த முடிவு ரசிகர்ளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தொடருக்கு பதிலாக செம்பருத்தி தொடரை நிறுத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆரம்ப காலகட்டங்களில் 'செம்பருத்தி' தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆதி - பார்வதி இடையேயான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ஆனால் நாளடைவில் முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றம், சுவாரஸ்யமற்ற கதையின் போக்கு போன்ற காரணங்களால் மக்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஆயிரத்து நூறு எபிஸோடுகளைக் கடந்து செம்பருத்தி தொடர் செல்வதால், அதனை ஜவ்வாக இழுக்காமல் மக்களிடம் வரவேற்பு இருக்கும்போதே முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் யூ டியூப்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக... மக்கள் மனங்களை வென்ற தொடர் எது என்பதை அறியாமல் ஜீ தமிழ் முடிவெடுத்துள்ளது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

ஜீ தமிழில் சத்யா - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT