ஸ்பெஷல்

சின்னத்திரையில் 'செம்பருத்தி' படைத்த வரலாறு: தொலைக்காட்சியின் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் முடிவதற்கு முன்பே மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

வார நாள்களில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  தொடர் இன்னும் முடிவுக்கு வராததால் புதிய காட்சிகள் அடங்கிய எபிஸோடுகள் வழக்கம் போன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரு தொடர் முடிவதற்கு முன்பே மறு ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு முடிந்து சில மாதங்கள் ஆன மெட்டி ஒலி, சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, தங்கம், திருமதி செல்வம், கங்கா யமுனா சரஸ்வதி, வைரநெஞ்சம், நாயகி போன்ற தொடர்கள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தந்த தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

தற்போது முடிவதற்கு முன்பே மறு ஒளிபரப்பு செய்யப்படுவதால், செம்பருத்தி தொடர் மற்ற தொடர்கள் படைக்காத சாதனையை சின்னத் திரையில் புரிந்துள்ளது.

செம்பருத்தி தொடரின் ஆரம்பகால எபிஸோடுகளை பார்க்காத ரசிகர்களை திருப்திப் படுத்தும் வகையிலும், பழைய ஆதியான கார்த்திக் ராஜ் நடிப்பில் ஆதி-பார்வதி காதல் காட்சிகளைக் காணும் ஆர்வம் கொண்ட ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் மூலம் இழந்த ரசிகர்களை இது மீண்டும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை செம்பருத்தி குழுவிற்கு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளை இயக்குநர் மேற்கொண்டுள்ளார்.

ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமன் சிறையில் இருந்து விடுதலையானதும், அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு வருகிறது. 

அகிலாண்டேஸ்வரியாக மாறும் முயற்சியில் ஐஸ்வர்யா மேற்கொண்டுவந்த செயல்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தாததால், அதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்து பார்வதியுடன் ஐஸ்வர்யா இணக்கமானது போன்று திரைக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செம்பருத்தி தொடரில் நாள்தோறும் மக்கள் முன்பு தோன்றும் முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. தற்போது அதனை இயக்குநர் குறைத்திருப்பது தெரிகிறது.

எஜமானி மாமியார் - வேலைக்காரி மருமகள் இடையே நடக்கும் பிரச்னைகளை திரைக்கதையாக அமைத்து வந்த நிலையில், தற்போது பார்வதி பணக்கார வீட்டுப் பெண், அதுவும் மாமியார் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள், அந்த உண்மையை பார்வதி அறிந்துகொள்வது என திருப்பங்களுடன் கதை நகரத் தொடங்கியுள்ளது. 

இது ரசிகர்களிடையே தொடரின் மீது இருந்த பழைய ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். அகிலாண்டேஸ்வரிடம் அவரது அண்ணன் பரமேஸ்வரன் பார்வதி யாருடைய மகள் என்பது பற்றிய உண்மையை உடைத்து மருமகளாக ஏற்றுக்கொள்ளச் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சமீபத்திய எபிஸோடுகளுக்கான முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள முன்னோட்டக் காட்சியில், தாம் யாருடைய மகள் என்ற உண்மையை அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லக்  கூடாது என அவரது உண்மையான தந்தையிடமே பார்வதி சத்தியம் வாங்குகிறார். 

இதனால் வளர்ப்பு தந்தையான கார் ஓட்டுநர் சுந்தரம் ஆவேசத்துடன் உண்மையை வெளிப்படுத்த செல்லும்போது, அவரிடமும் பார்வதி சத்தியம் வாங்கிக்கொள்கிறார். 

தான் ஒரு வேலைக்காரி என்று தெரிந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே முழுதாக என்னை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். மாறாக நான் வேலைக்காரியல்ல, செல்வந்தரின் மகள் என்று அறிந்த பின்பு என்னை ஏற்றுக்கொள்வது சரியானதல்ல என்பது போன்ற விளக்கத்தை பார்வதி கொடுக்கிறார்.

இதன் மூலம் தொடர் இன்னும் நீளும் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவை ரசிகர்களை அதிருப்திக்கு உட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஒரு தொடர் மக்கள் மத்தியில் நல்ல நிலையில் இருக்கும்போதே முடிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் நிலைக்கும். மாறாக அதனை ஜவ்வாக இழுத்து மக்கள் வெறுக்கத் தொடங்கிய பிறகு முடிவுக்கு கொண்டுவந்தால் அது மக்கள் மனங்களில் இருந்தே மறைந்துவிடும். இதனை புரிந்துகொண்டு செம்பருத்தி மலர வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT