ஸ்பெஷல்

ஒரே மாதத்தில் முதலிடம் பிடித்த சன் டிவி தொடர்! மனங்களை வென்றது எப்படி?

22nd Nov 2021 06:06 PM

ADVERTISEMENT


சன் தொலைக்காட்சியில் வாரநாள்களில் நாள்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் மற்ற தொடர்களை பின்னுக்குத் தள்ளி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அக்டோபர் 25-ஆம் தேதி முதல்தான் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

கதை சொல்வதில் நாடகங்கள் முன்னோடியானவை. திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரங்களை விட தொடர்களில் அதிக அளவிலான பாத்திரங்கள் மூலம் கதையை நாள்தோறும் வற்றாமல் நகர்த்த முடியும். அதனால் தொடர்கள் பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் ஆரம்பம் முதலே தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதன் முதன்மை கதாபாத்திரங்களுக்காகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. 

கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாட்டால் தொடர்களுக்கான படப்பிடிப்பு தடைபட்டிருந்த நிலையிலும், பழைய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டன. நல்ல தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதற்கு அந்த காலகட்டம் சான்று. தற்போது தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. 

ADVERTISEMENT

அதன் வாயிலாக பல்வேறு தொலைக்காட்சிகளில் புதிய தொடர்கள் அறிமுகமாகி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் 'கயல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து வந்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்து வந்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார். 

தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்து பொருப்புகளையும் சுமக்கும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்னைகளும், நிகழ்வுகளுமே ’கயல்’ தொடரின் மையக் கதை.  கயலின் நண்பராக எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார். 

கயல் குடும்பத்தில் தாய், இரு சகோதரிகள், இரு சகோதரன் என அனைவரது தேவைகளையும் ஒற்றைப் பெண்ணாக பூர்த்தி செய்பவராக உள்ளார். பல நடுத்தரப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கயல் சந்திப்பதால் அதிகப்படியான மக்கள் கயல் பாத்திரத்தை தங்கள் வாழ்வில் பொருத்திக்கொள்கின்றனர்.  இதுவே இந்த தொடரின் ஆரம்ப வெற்றியாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் மூத்த அண்ணனாக வரும் மூர்த்தி கதாபாத்திரம் திருமணம் ஆன பிறகும் மனைவியை குடும்ப உறுப்பினரின் தயவிலேயே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள கையாகாத கணவர்மார்கள் இன்றளவும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் உள்ளனர். தற்போது அவர் கயல் தயவில் உணவகம் நடத்துகிறார்.

நடுத்தரக் குடும்பத்தை பிரதிபலிக்கும் தாய், பாசத்திற்காகவும், குறும்புகளுக்கு இரு சகோதரிகள், அவர்களை அதட்டி வம்பிழுக்கும் இளைய சகோதரன் என்று எல்லா குடும்பங்களும் சந்தித்த கதாபாத்திரங்களே இதில் அடங்கியுள்ளனர். இதனால் பலதரப்பட்ட இளைய சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருப்பதே அதன் முக்கிய பலம். இவர்கள் அனைவருக்குமே அடைக்கலமாக செயல்படும் கயல் அக்குடும்பத்தின் பாட்ஷா என்றே சொல்லலாம்.

கடனுக்காக வட்டிக்காரர்களுக்கு பதிலளிக்கத் திணறுவது, குடும்பத்தினரின் தவறுகளுக்கு முன்னின்று தீர்வு காண்பது, பணியிடங்களில் வெறியர்களால் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது என்று குடும்பத்தின் பிரச்சனைகளையும் சமூகத்தின் பிரச்சனைகளையும் கயல் என்ற ஒரே கதாபாத்திரத்தின் மூலம் பேசுவதால் இதன் ஒவ்வொரு நாள் எபிஸோடும் பார்வையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறது.

காதல் காட்சிகள்

கயல் - எழில் பாத்திரங்களுக்கு இடையான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் உருவாகியுள்ளனர். கயல் தனியார் மருத்துவமனையில் செவிலியர். எழில் தொழிலதிபராக வருகிறார். எனினும் வழக்கமான நடுத்தரப் பெண்ணுக்கும், தொழிலதிபரின் மகனுக்கான காதல் காட்சிகளாக இல்லாமல் காதலை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துக்கொள்வது ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

கல்லூரி நாள்கள் முதலே இருவரும் நண்பர்களாக இருந்து வருவதால், இருவரும் பரஸ்பரம் எந்தவித ஒளிவுமறைவுமின்றி குடும்ப பிரச்னைகளையும் பகிர்ந்துகொள்வது, பிரதிபலன் பாராமல் ஒருவருக்கொருவர் உதவுவது என்று நட்பின் இலக்கணம் மாறாமலும் காட்சிகள் வருவது பாராட்டுக்குரியது.

இவை யாவும் இருவரும் காதலை வெளிப்படுத்துக்கொண்டு வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மனதில் உருவாக்குவதே இந்த தொடரின் இன்னொரு முக்கிய வெற்றியாகவும் உள்ளது.

இந்த சிறப்பம்சங்கள் மூலம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தற்போது ஒளிபரப்பாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கயல் தொடர் கடந்த வாரம் 10.66 புள்ளிகளைப் பெற்று ரேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

முன்பிருந்து ஒளிபரப்பான சுந்தரி 9.97 புள்ளிகளையும், வானத்தைப்போல 9.80 புள்ளிகளையும் அடுத்தடுத்து பெற்றுள்ளன.

கயல் தொடரை இயக்குநர் பி.செல்வம் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அழகு தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : kayal கயல் Suntv சன் தொலைக்காட்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT