ஸ்பெஷல்

ஜெமினி கணேசன் 101: தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாய்!

17th Nov 2021 01:40 PM

ADVERTISEMENT

 

தமிழர்களின் பொற்காலம் என்று கருதப்படும் சங்ககாலத்தின் சிறப்புகளாக வீரமும், காதலும் புகழ்ந்து பேசப்படுகிறது. இதை புறம், அகம் என்று இலக்கியங்கள் பிரித்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வீரம் அல்லது புறம் என்று அறியப்படும் வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் பலவிதமான உணர்வுகளை உருவகப்படுத்தி நடித்து புகழ்பெற்ற நடிகர்களாக 20-ஆம் நூற்றாண்டில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் விளங்கினார்கள். அவர்களுக்கு நடிகர் திலகம், புரட்சி நடிகர் ஆகிய பட்டங்களை ரசிகர்கள் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால், அகம் எனப்படும் காதல் என்ற மன உணர்வை அதிகமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்தி நடித்த காரணத்தால் "காதல் மன்னன்" பட்டம் பெற்ற ஒரே நடிகர் ஜெமினி கணேசன் மட்டுமே. அந்த வகையில் ஜெமினி கணேசன் மற்ற அனைத்து நடிகர்களிடம் இல்லாத தனித்துவம் பெறுகிறார்.

ஜெமினி கணேசன் 17.11.1920-இல் பிறந்தார். இன்று அவருடைய 101-வது பிறந்த நாள்.

ஜெமினி கணேசனைப் பற்றி அறிந்தும்-அறியாததுமான சில செய்திகள் இதோ:

ADVERTISEMENT

* புதுக்கோட்டை அரண்மனையில் பணியாற்றி வந்தவர் ராமசாமி ஐயர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குடியேறினார்.

* ஜெமினிக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் "கணபதி சுப்பிரமணியன் சர்மா'. பின்னர் அது ராமசாமி கணேசன் என்று மாறி இறுதியில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்று நிலை பெற்றது!

* அவரது தந்தை ஜெமினிக்கு 10 வயது இருக்கும்போது இறந்து விட்டதால் சித்தப்பா வீட்டில் வளர்ந்தார். சித்தப்பா இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொண்ட பிராமணரல்லாத பெண்ணின் மகளும் ஜெமினியும் ஒன்றாக வளர்ந்தனர். அந்த பெண்தான் முதன்முதலாக மருத்துவப் படிப்பு முடித்த பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர் முத்துலட்சுமி ரெட்டி.

* கணேஷ் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்து தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பணியாற்றி வரும்போதுதான் சினிமாவில் சேர ஆசை ஏற்பட்டு அவரது தூரத்து உறவினரான ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் தெரிவித்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.

* ஜெமினி ஸ்டுடியோவில் கணேசனுக்கு தரப்பட்ட முதல் வேலை இன்றைய கேஸ்டிங் டைரக்டர் எனப்படும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து குறிப்பு எழுதித் தரும் வேலைதான்.

* அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்து பின்னாளில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகளில் சிவாஜி கணேசன், எஸ். வி.ரங்காராவ், சாவித்திரி போன்றோர் அடங்குவர். ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்டு போகும்போது சிவாஜிக்கு பெயர் வி.சி. கணேசன் மட்டுமே. சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு "இந்த பையனின் கண்ணும், முகமும் அபாரமாக இருக்கிறது. நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார்', என்று கம்பெனிக்கு குறிப்பு எழுதி வைத்தார் ஜெமினி. சிவாஜியே இதை ஒருமுறை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

பார்த்தாலே பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசன் - சிவாஜி

* இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* தமிழில் மட்டுமே 97 படங்களில் நடித்துள்ள இவரின் முதல் படம் "மிஸ் மாலினி' (1947). 1950களில் தொடங்கி 60-வரை அதிகபட்சமாக 41 திரைப்படங்களிலும், 60-களில் 30 படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் "அவ்வை சண்முகி'(1996).

* ஜெமினி கணேசனுக்கு இந்திய அரசு ஒரு தபால்தலையும் வெளியிட்டு சிறப்பித்தது. தபால் தலையினை 2006-ஆம் ஆண்டுஅன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப் பிரிவில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசனின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்கள்.

மிஸ் மேரி ஹிந்திப் படத்தில் ஜெமினி கணேசன், மீனா குமாரி

* வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகிய தமிழ் நடிகைகள் உச்ச நடிகையாக வெற்றிக்கொடி நாட்டிய பாலிவுட் திரையுலகில் தமிழ் நடிகர்களை வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் பங்களிப்பு மிகக் குறைவே.

* அடுத்த வளர்ச்சியாக 1952-இல் வெளியான "தாயுள்ளம்' என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். அப்படத்தின் கதாநாயகன் ஆர்.எஸ்.மனோகர். கதாநாயகி எம்.வி.ராஜம்மா. பிற்காலத்தில் ஆர்.எஸ்.மனோகர் வில்லன் ஆகவும் ஜெமினி கதாநாயகன் ஆகவும் நிலைபெற்று விட்டனர்.

* "தாய் உள்ளம்' படத்திற்கு அடுத்த படியாக ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்'. இதில் ஜெமினி கணேசன் இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார்.

* கதாநாயகன் வேடத்தில் ஜெமினி நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான "பெண்'. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.

* ஜெமினி கணேசனின் சினிமா வாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953-ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்'. இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், தன்னுடன் நடித்த, நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை மணந்து கொண்டார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் ஜெமினி கணேசன் - சாவித்திரி - கமல் ஹாசன்

* ஜெமினி கணேசனை அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. "வஞ்சிக் கோட்டை வாலிபன்' திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது.

* ஆரம்ப காலப் படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. "பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர்.பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிப்பதற்காக, தன் பெயருடன் தான் திரையுலகில் நுழைந்த ஜெமினி நிறுவனத்தின் பெயரை முன்பகுதியில் இணைத்து ஜெமினி கணேசன் ஆனார். 
* சொந்தமாக ஜெமினி தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை' மட்டுமே. இது வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.

* ஜெமினி கணேசன் ஏராளமான படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்துள்ளார்." வீரபாண்டிய கட்டபொம்மன்'," கப்பலோட்டிய தமிழன்' என்ற படங்களின் பெயரை சொன்னதும் அது சிவாஜி படம்தானே என்று சொல்கிறோம். அந்தப் படங்களிலும் முக்கிய வேடத்தில் ஜெமினி நடித்துள்ளார்.

* "காதல் மன்னன்' என்ற பட்டம் மட்டுமல்ல "பிளேபாய்', "மன்மதன்' , "சாக்லேட் பாய்' போன்ற பல பட்டங்களையும் பெற்ற பிற்கால நடிகர்கள் அஜீத், அப்பாஸ், அரவிந்தசாமி, மாதவன் ஏன் கமல்ஹாசனுக்குக்கூட காதல் காட்சிகளில் நடிப்பதில் வழிகாட்டி ஜெமினி கணேசன் மட்டுமே. தமிழ் சினிமாவின் முதல் "சாக்லேட் பாய்' ஜெமினிதான்.

ராமு படத்தில் ஜெமினி கணேசன்- கே.ஆர். விஜயா

* ஒன்பது வேடங்களில் சிவாஜி நடித்த படம் "நவராத்திரி'. எம்.ஜி.ஆர் நடித்த படம் "நவரத்தினம்' . ஜெமினி ஒன்பது வேடத்தில் நடித்துள்ளார் என்பது பெரும்பாலோருக்கு தெரியாத செய்தி. "நான் அவனில்லை' படத்தில் ஒன்பது தோற்றங்களில் ஜெமினி நடித்துள்ளார்.

* நாதஸ்வர கலைஞராக நடித்த நடிகர்களில் "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் சிவாஜியின் நடிப்பைத்தான் அனைவரும் கூறுவார்கள். "கொஞ்சும் சலங்கை' படத்தில் காருகுறிச்சி அருணாச்சலம் நாதஸ்வர இசையில் ஜெமினி அற்புதமான முகபாவங்களை காட்டி நடித்துள்ளார் என்பதை நினைத்துப் பார்ப்போம்.

* ஜெமினிக்கு இந்தி மொழி மிக நன்றாகத தெரியும். 1980-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான "ஹம்லோக்' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் ஜெமினி தமிழில் முன் கதைச்சுருக்கம் தொகுத்தளித்தார்.

* இந்தி நடிகையாக கொடி கட்டிப் பறந்த ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி, ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக "நினைவெல்லாம் நித்யா' என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்.

ரேகா

* ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் "இதய மலர்' மட்டுமே. தாமரை மணாளன் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார்.

* "இதயமலர்' திரைப்படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான். 

* ஜெமினி-பாப்ஜி தம்பதிகளுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி ஆகிய 4 பெண்கள் பிறந்தனர். இவர்களில் நாராயணி தவிர மற்ற மூன்று பெண்களும் மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆனார்கள்.

* ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்புகளில் நடிக்க வந்த புஷ்பவல்லி ஜெமினி கணேசனை காதலித்து இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

* ஜெமினி-புஷ்பவல்லி தம்பதிகளுக்கு ராதா, ரேகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இவர்களில் ரேகா இந்தி திரை உலகில் நுழைந்து உச்சநிலை நடிகை ஆனார்.

* நடிகை சாவித்திரி "மனம் போல மாங்கல்யம்' என்ற படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக நடித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஒரு கோயிலில் சாவித்திரியையும் திருமணம் செய்து கொண்டார்.

* ஜெமினி-சாவித்திரி தம்பதிக்கு 1958-இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயர் வைக்கப்பட்டது. 1965-இல் இந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சதீஷ் என்று பெயரிடப்பட்டது. சதீஷ் இப்போது அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். மனைவி, குழந்தைகளுடன் அங்கேயே குடியேறி விட்டார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் ஜெமினி கணேசன்- கமல் ஹாசன்

* புகழ் பெற்ற இயக்குநர்களின் முதல் விருப்பத் தேர்வாக ஜெமினி விளங்கினார்.. இத்தகைய இயக்குநர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குநர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி', "பணமா பாசமா', "சின்னஞ்சிறு உலகம்' ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.

* புதுமை இயக்குநர் என அறியப்பட்ட ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான" கல்யாணப் பரிசு' திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குநரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்', "சுமைதாங்கி' போன்ற பலப் படங்களை இயக்கினார்.

* இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்', "பூவா தலையா', "இரு கோடுகள்', "வெள்ளி விழா', "புன்னகை', "கண்ணா நலமா', "நான் அவனில்லை' எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.

* முன்னாள் முதல்வர், புரட்சி நடிகர் என்று திரையுலகில் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆர் , ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார். அவருக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜூனியர் நடிகர்களான ஜெய்சங்கர், ஏ. வி. எம். ராஜன், முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இயல்பாக இணைந்து நடித்தார்.

* பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீப'" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்' என்ற பெயரில் வெளிவந்தது. அதற்குப் பிறகு இவர்கள் "ஆசை' , "மல்லிகா' , "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "பொன்னு விளையும் பூமி' , "வீரபாண்டிய கட்டபொம்மன்' , "மீண்ட சொர்க்கம்' ஆகியப் படங்களில் வெற்றிக் கொடி நாட்டினர்.

* "அபிநய சரஸ்வதி' என்ற பட்டம் பெற்ற நடிகை சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது ஜெமினி கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற "கல்யாணப்பரிசு' படமாகும். இதன் பின்னரும் இந்த ஜோடி "ஆடிப்பெருக்கு', "கைராசி', "பனித்திரை' , "பணமா பாசமா' போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.

* அந்தக் காலத்தின் முன்னணி நடிகையாக விளங்கிய அஞ்சலிதேவி, ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் மாய மந்திரங்கள் அடிப்படையில் அமைந்தவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்', "கணவனே கண் கண்ட தெய்வம்' ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

* சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்ட ஜெமினி கணேசன் 2005-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22-ஆம் நாள் மறைந்தார்.


தொகுப்பு: ரத்தினம் ராமசாமி

(2019 டிசம்பரில், தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளிவந்த கட்டுரை)

Tags : Gemini Ganesan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT