ஸ்பெஷல்

அதிக விருப்பமான சின்னத்திரை கதாபாத்திரங்களின் பட்டியல்: முதலிடத்தில் யார் தெரியுமா?

தினமணி

நாள்தோறும் மக்களை நேரடியாக இல்லங்களில் சந்தித்து வரும் தமிழ் சின்னத் திரை தொடர்களில், மிகுந்த வரவேற்பு பெற்ற பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

சின்னத்திரை தொடரில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முதல் 5 கதாபாத்திரங்களின் பட்டியலையும், 5 ஆளுமைகளின் பட்டியலையும் ஆர்மேக்ஸ் மீடியா என்ற பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை பாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து அவர்களை ஆளுமை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வாரத்தின் ஏழு நாள்களும் தொடர்களும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுவதால், சின்னத் திரை கதாபாத்திரங்களும், தொகுப்பாளர்களும் நாள்தோறும் நேரடியாக மக்களை சந்திக்கின்றனர்.

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து தொடர்களும், நிகழ்ச்சிகளுமே முன்பை விட மிகுந்த பொருள் செலவு கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்பட்டு சிரத்தை எடுக்கின்றன.

இதன் விளைவாக திரைப்படங்களை ரசித்தவர்களில் பெரும்பாலானோர் சின்னத் திரை தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர். இதன் மூலம் சின்னத் திரை கலைஞர்களுக்கும் மக்களிடையே அங்கீகாரம் கிடைக்கிறது.

வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சின்னத் திரையில் மக்களை மகிழ்விப்பது, சின்னத் திரையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள் வெள்ளித் திரை நோக்கி செல்வது என ஆரோக்கியமான சூழலே தற்போது நிலவி வருகிறது.

கமல்ஹாசன், அர்ஜூன், விஜய் சேதுபதி, சூர்யா (நீங்களும் வெல்லலாம் ஒருகோடி), கரு.பழனியப்பன், பிரியா ராமன், சுஹாசினி போன்றவர்கள் வெள்ளித் திரையில் இருந்து சின்னத் திரையில் தொகுப்பாளர்களாகியுள்ளனர்.

சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த், சந்தானம், ரியோ, கவின், மிர்ச்சி செந்தில், ஜெகன், ரோபோ ஷங்கர், அஸ்வின், புகழ், சிவாங்கி, வாணிபோஜன், பிரியா பவானி ஷங்கர், பாலா என இன்னும் பலர் சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்றுள்ளனர். இந்த பட்டியல் இன்னும் நீண்டுகொண்டேதான் இருக்கப்போகிறது.

இவ்வாறு சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் இருக்கும் வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது யார் என்ற நிலையே நீடிக்கும் எனலாம்.

அந்தவகையில் சின்னத் திரையில் வரும் தொடர்களில் மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதுகுறித்து அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

பாரதி கண்ணம்மா தொடர்: கண்ணம்மா

அதில் முதலிடம் பிடித்துள்ளது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடரின் கண்ணம்மா கதாபாத்திரம். ரோஷ்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு தான் இந்த முதலிடம் கிடைத்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த கதாபாத்திரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. வினுஷா என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

ரோஜா தொடர்: ரோஜா

இரண்டாம் இடத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரின் ரோஜா கதாபாத்திரம் பிடித்துள்ளது. பிரியங்கா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கணவர் அர்ஜூன் உடனான இவரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ரோஜா தொடர்: அர்ஜூன்

மூன்றாம் இடத்தையும் ரோஜா தொடரே பெற்றுள்ளது. ரோஜாவின் கணவராக வரும் அர்ஜூன் மக்கள் மனதில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஷிபு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆயிரம் எபிஸோடுகளை இந்த தொடர் நெருங்குகிறது.

பாக்கியலட்சுமி தொடர்: பாக்கியலட்சுமி

நான்காவது இடத்தை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் பாக்கியலட்சுமி பெற்றுள்ளார். 2020 ஜூலை முதலே ஒளிபரப்பானாலும், மக்களிடையே இந்த தொடர் பேசுபொருளாகியுள்ளது. 

சுந்தரி தொடர்: சுந்தரி

இறுதியாக ஐந்தாவது இடத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரின் கதாபாத்திரம் பெற்றுள்ளது. இதில் சுந்தரியாக கேப்ரியெல்லா நடித்து வருகிறார். 2021 ஜனவரி முதலே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. படிப்பதற்கு துடிக்கும் வெள்ளந்தி கிராமத்து பெண் என்ற பழைய கதாபாத்திரமேயானாலும், சுந்தரி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மிகுந்த வரவேற்பை பெற்ற சின்னத்திரை ஆளுமைகள்:

இதேபோன்று மக்களைக் கவர்ந்த சின்னத் திரை ஆளுமைகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில் அனைவருமே விஜய் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் தான்.

முதலிடம் - குக் வித் கோமாளி - சிவாங்கி
இரண்டாம் இடம் - குக் வித் கோமாளி - புகழ்
மூன்றாம் இடம் - சூப்பர் சிங்கர் - மாகாபா ஆனந்த்
நான்காம் இடம் - பிக் பாஸ் - பிரியங்கா 
ஐந்தாம் இடம் - நீயா நானா - கோபிநாத்

சன், விஜய் தொலைக்காட்சிகளுக்கு இணையாக நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் தயாரித்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் எந்த கதாபாத்திரமும், ஆளுமைகளும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT