ஸ்பெஷல்

பிறந்த நாள்: ரசிகர்கள் கொண்டாடிய சூர்யாவின் படங்கள்!

எழில்

1997-ல் நேருக்கு நேர் படம், சூர்யாவை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. சிவகுமாரின் மகனாக இருந்ததால் சுலபமாக திரைத்துறைக்குள் நுழைந்த சூர்யாவுக்கு வெற்றிகள் சுலபமாகக் கிடைக்கவில்லை. தனது நடிப்பால், குணத்தால், உழைப்பால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார் சூர்யா.

இன்று தனது 46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யாவின் முக்கியமான படங்களைப் பார்க்கலாம்.

நந்தா

நந்தாவில் நடிப்பதற்கு முன்பு நேருக்கு நேர், காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வெற்றியை ருசித்தார். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் வசூலில் ஏமாற்றின. நடிப்புக்காகவும் எந்தப் படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரவில்லை. இந்த நிலையில் ஒரு பெரிய திருப்புமுனைக்காகக் காத்திருந்தார் சூர்யா.

பாலா இயக்கிய நந்தா, சூர்யா மீதான எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியது. நடிப்புக்கான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் அசத்துவார் என்கிற நம்பிக்கையை சூர்யா மீது விதைத்தது. சூர்யாவை ஒரு நடிகனாக முன்னிறுத்திய முதல் படம் என்பதால் நந்தா படத்தை அவரால் மறக்கவே முடியாது.

காக்க காக்க

சூர்யாவை வசூல் மன்னனாகக் காண்பித்த முதல் படம். படம் வெளிவருவதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களால் படத்துக்கு நல்ல கவனம் கிடைத்தது. இதனால் முதல் நாளன்று திரையரங்குகளில் ரசிகர்கள் வெள்ளம்.

ஆக்‌ஷன் கதாநாயகனாக, காவல்துறை அதிகாரியாக நடித்த சூர்யா, ரசிகர்களை ஏமாற்றவில்லை. அழகான பாடல்கள், அம்சமான காதல் காட்சிகள், ஆக்‌ஷன் பரபரப்புகள் என ரசிகர்களுக்குப் பெரிய விருந்து படைத்தது காக்க காக்க. அன்புசெல்வன் கதாபாத்திரம் சூர்யாவுக்கு அழகாகப் பொருந்தியது. கெளதம் மேனனுடனான கூட்டணியைத் தொடங்கி வைத்த படம் இது.

இரண்டே வருடங்களில் நந்தாவும் காக்க காக்கவும் சூர்யாவின் பாதையை மாற்றின. அந்தஸ்த்தை உயர்த்தின. பிரபல நட்சத்திரமானார் சூர்யா.

கஜினி

பிதாமகனில் நல்ல நடிகனாக இன்னொரு முறை நிரூபித்தார் சூர்யா. ஆய்த எழுத்து படத்தில் மணி ரத்னம் படக் கதாநாயகன் ஆனார். எனினும் இன்னொரு பெரிய வெற்றியை அளித்த படம், கஜினி தான்.

பழிவாங்கும் கதைதான் என்றாலும் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டதால் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அசினுடனான காதல் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? 

இந்தப் படத்தின் பெரிய வெற்றி, ஆமிர் கானை ஈர்த்தது. அதே முருகதாஸைக் கொண்டு ஹிந்தியில் கஜினியை உருவாக்கினார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் படம் மகத்தான வெற்றியை அடைந்தது. 

அயன்

செய்தித்தாள்களில் வரும் பரபரப்பான செய்திகளைக் கொண்டு கதை கோர்க்க இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு அழகாக வரும். இந்தியாவிலிருந்து போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்துவது, வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருள்களை இந்தியாவுக்குக் கடத்தி வருவது போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்ப்போம். அதைத்தான் அயன் கதையாக மாற்றினார்.

எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து ஆனந்த் இயக்கிய 2-வது படம் அயன். ஒரு வணிகப் படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போல அமைந்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை அயன். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் படத்தின் வெற்றியை இரட்டிப்பாக்கின. வாரணம் ஆயிரம் என்கிற அழகான படத்துக்குப் பிறகு சூர்யா நடித்த அயன், மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கே.வி. ஆனந்த் இறந்தபோது சூர்யா வெளியிட்ட இரங்கல் குறிப்பில், அயன் படத்தின் வெற்றி, அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் என்றார். 

சிங்கம்

ஹரியுடன் இணைந்து வேல் படத்தில் நடித்தார் சூர்யா. அதன் வெற்றியில் ஆச்சர்யப்பட்டு சிங்கம் படத்தில் ஹரியுடன் மீண்டும் இணைந்தார். 

சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை - ஆக்‌ஷன் படத்துக்கான சரியான கலவையாக அமைந்தன. இன்னொரு காவல் அதிகாரி வேடமென்றாலும் காக்க காக்க-வில் பார்த்த அன்பு செல்வன் இதில் இல்லை. துரை சிங்கம் வேடத்தில் அசத்தினார் சூர்யா. பாடல்களும் ஹிட்டாகி, படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

வாரணம் ஆயிரம் 

கெளதம் மேனன் - சூர்யா கூட்டணியில் அமைந்த இன்னொரு அழகான படம்.

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை வாரணம் ஆயிரம் படமாக மாற்றினார் கெளதம் மேனன். கல்லூரி மாணவர், காதலன், வயதானவர் என பல வேடங்களில் அசத்தினார் சூர்யா. சிக்ஸ் பேக் உடற்கட்டை வைத்து தன் பலத்தை நிரூபித்தார். 

அழகான காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என ரசிகர்களுக்கு ஓர் இதமான உணர்வை அளித்தது வாரணம் ஆயிரம். இதுபோன்ற இன்னொரு படத்தில் சூர்யா நடிக்கவேண்டும்.

சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டது. 

சூர்யாவின் நடிப்புக்குத் தேசிய விருது அளிப்பதுதான் சரியான அங்கீகாரமாக இருக்கும். நடிப்பில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வயதிலும் இருக்கவேண்டிய தோற்றத்துக்காகவும் அதிகமாக மெனக்கெட்டு அசத்தினார் சூர்யா (இது அவருக்குப் புதிதா என்ன?). 

சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையத்தளம் ஐஎம்டிபி. இதில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்தது. சூரரைப் போற்று படம், ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி, 366 படங்கள் கொண்ட சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. (எனினும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.)

*

2000 முதல் 2010 வரை சூர்யாவுக்கு நிறைய நல்ல படங்கள் அமைந்தன. அவருடைய கதைத் தேர்வில் உள்ள சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் காலக்கட்டம் தான் இன்றைக்கும் சூர்யாவுக்குப் பெரிதாக உதவுகிறது. சொல்லப்போனால் 2010-க்குப் பிறகு ஹிட் படங்களும் நல்ல படங்களும் சூர்யாவுக்கு அரிதாகவே கிடைத்தன. 

சூரரைப் போற்று படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளும் அடுத்ததாக வெளியாகவுள்ள பாண்டிராஜ், வெற்றிமாறனின் வாடிவாசல் படங்களும் சூர்யாவுக்குப் புதிய அத்தியாயத்தை எழுதட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT