ஸ்பெஷல்

திலீப் குமார்: மகத்தான படங்களும் மறக்க முடியாத நினைவுகளும்

எழில்

சுதந்திர இந்தியாவில் திரைப்படங்கள் மக்களின் பெரிய பொழுதுபோக்காக இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஜொலித்த திரை நட்சத்திரங்கள் காலம் கடந்து பேசப்பட்டார்கள். குறைந்த படங்களில் நடித்தாலும் நீண்ட காலம் வாழ்ந்து, தான் நடித்த படங்கள், அதன் கதாபாத்திரங்களால் 1940களின் இறுதியில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் பேசப்பட்டு வருபவர் திலீப் குமார். இன்று அவர் மறைந்தாலும் அவருடைய மகத்தான படங்களையும் அதன் நினைவுகளையும் சுலபத்தில் மறந்துவிட முடியுமா?

1922-ல் இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள (அன்றைக்கு பிரிட்டிஷ் இந்தியா) பெஷாவரில் சர்வார் அலி கான் - ஆயிஷா பேகமுக்குப் பிறந்தவர் முகமது யூசுப் கான் என்கிற திலீப் குமார். பெற்றோரின் 12 குழந்தைகளில் இவரும் ஒருவர். பெஷாவர், நாசிக்கில் பழத்தோட்டங்களை வைத்திருந்தார் அலி கான். பிறகு மும்பையிலுள்ள செம்பூருக்கு இடம்பெயர்ந்தார்கள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் அவர்களிடமிருந்து பிரிந்து புணேவுக்குச் சென்ற திலீப் குமார், ராணுவ கிளப்பில் கேன்டீன் ஒப்பந்தக்காரராகப் பணியாற்றினார். திலீப் குமாரின் குணம் தான் அவரை பாலிவுட்டுக்கு அழைத்து வந்தது. 1943-ல் பாம்பே டாக்கீஸைச் சேர்ந்த தேவிகா ராணி, புணே கேன்டீனில் சாப்பிட வந்தபோது திலீப் குமாரைக் கண்டார். பணிவுடன் அவர் உபசரித்ததைக் கண்டு நடிக்க விருப்பமா எனக் கேட்டுள்ளார். என் தந்தை சம்மதித்தால் எனக்கும் சம்மதமே எனப் பதில் அளித்தார் திலீப் குமார். ரூ. 5000 சேமிப்புடன் வீட்டுக்குத் திரும்பினார். ஆனால் நடிப்புக்கு மறுப்பு சொல்லிவிட்டார் தந்தை. பெஷாவரில் அண்டை வீட்டுக்காரராக இருந்த நடிகர் பிரித்விராஜ் கபூரிடம் உதவி கோரினார் திலீப் குமார். அவருடைய தலையீட்டால் திரைத்துறைக்குச் செல்ல சம்மதித்தார் தந்தை. இதன்பிறகுதான் யூசுப் கான் என்கிற பெயரை திலீப் குமார் என மாற்றினார் தேவிகா ராணி. மாதச் சம்பளம் ரூ. 1250 என்கிற ஒப்பந்தத்துடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் திலீப் குமார். 

1944-ல் ஜுவார் பாதா என்கிற படத்தில் நடிகராக அறிமுகமானார். வரிசையாக முதல் மூன்று படங்கள் தோல்வியடைந்தன. 1947-ல் வெளியான ஜுக்னு வெற்றி பெற்று ரூ. 50 லட்சம் வசூலித்தது. அதுதான் திருப்புமுனை. திரைத்துறைக்கு வந்த நான்கு வருடங்களில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் திலீப் குமார். 1948-ல் ஐந்து படங்கள் வெளிவந்தன. நதியா கீ பார் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ராஜ் கபூர், தேவ் ஆனந்த் வரிசையில் திலீப் குமாரை நிறுத்தியது. அடுத்த பத்து வருடங்களுக்கு அதாவது 1950களில் மூவரும் பாலிவுட்டை ஆண்டார்கள். பாலிவுட்டின் பொற்காலம் அது. 

1949-ல் திலீப் குமார், ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த அந்தாஸ் மகத்தான வெற்றியை அடைந்தது. அதுவரை பாலிவுட் பார்க்காத ஒரு வெற்றி என மதிப்பிடப்பட்டது. இந்த ஒரு படத்தில் தான் திலீப் குமாரும் ராஜ் கபூரும் இணைந்து நடித்தார்கள்.

1950கள் திலீப் குமாருக்கு மகத்தானதாக அமைந்தன. ஜகன், பாபுல் (1950), தரானா, தீதர் (1951), ஆன் (1952), ஃபுட்பாத் (1953), அமர், தாக் (1954), தேவ்தாஸ், அஸாத் உரன் கடோலா (1955), முசாஃபிர், நயா தர் (1957), யாஹுதி, மதுமதி (1958), பைஹம் (1959) என வரிசையாக வெற்றிப் படங்களை அளித்து தன் பேர், புகழை பலமடங்கு பெரிதாக்கினார். 1955-ல் வெளிவந்த தேவ்தாஸ் படம் வரலாற்றில் இடம்பிடித்தது. திலீப் குமாரின் நடிப்பு போற்றப்பட்டது. இந்தியப் படங்களில் 25 மிகச்சிறந்த நடிப்புக்கான பட்டியலில் திலீப் குமாரின் தேவ்தாஸுக்கு ஓர் இடம் அளித்தது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 

இத்தனை வெற்றிப் படங்களை அளித்த பிறகும் 1960களின் தொடக்கத்தில் திலீப் குமார் என்றால் நினைவில் கொள்ளும்படியான ஒரு படத்தில் நடித்தார். முஹல் இ அஸாம். அதே வருடத்தில் வெளியான கோஹினூர் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு வெளியான படம். முஹமது ரஃபி, ஷம்சத் பேகம், பதே குலாம் அலி கானுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடிய 12 பாடல்கள், பாலிவுட்டின் மகத்தான பாடல்களாகப் புகழ்பெற்றன. 1960 ஆகஸ்ட் 5 அன்று வெளியான வரலாற்றுப் புனைவான முஹல் இ அஸாம், வரலாறு காணாத வெற்றியை அப்போது படைத்தது. இதன் சாதனையை முறியடிக்க 15 வருடங்கள் ஆகின. 

1960களில் குங்கா ஜமுனா (1961), ராம் அவுர் ஷ்யாம் (1967) போன்ற வெற்றிப் படங்கள் அமைந்தன. 1960களிலேயே படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் திலீப் குமார். 70களில் எண்ணிக்கை மேலும் குறைந்தது. 1960களின் இறுதியில் ராஜேஷ் கண்ணாவின் காதல் படங்களும் கோபக்கார இளைஞனாக திரையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த அமிதாப் பச்சனின் வரவும் திலீப் குமாரின் திரை வாழ்க்கையைப் பாதித்தன. 1976-ல் பைராக் படத்தில் நடித்த பிறகு ஐந்து வருடங்கள் படங்களில் எதுவும் திலீப் குமார் நடிக்கவில்லை. 1980களில் பாலிவுட்டின் பாதை மாறியது. அதிகப் பொருட்செலவில் படங்கள் எடுக்கப்பட்டதால் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் கதைக்கும் வியாபாரத்துக்கும் தேவைப்பட்டார்கள். இந்த மாற்றத்துக்குத் தன்னையும் உட்படுத்திக்கொண்டதால் கிராந்தி (1981), விதாதா, ஷக்தி (1982) எனப் பல வெற்றிப் படங்கள் அவருக்குக் கிடைத்தன. 1980களில் அமிதாப் பச்சன், அனில் கபூர், ஷஷி கபூர், சத்ருகன் சின்ஹா, சஞ்சய் தத், ஷம்மி கபூர், ரிஷி கபூர், ஜீதேந்திரா போன்றவர்களுடன் இணைந்து நடித்தார். 1980களில் பல படங்களில் நடித்த திலீப் குமார், 90களில் சில படங்களில் நடித்துவிட்டுக் 1998-ல் நடித்த குயிலா படமே அவருடைய கடைசிப் படமாக அமைந்தது. 2000-க்குப் பிறகும் சில படங்களில் நடித்தார். அவை வெளிவரவில்லை. முஹல் இ அஸாம் படம் 2004-ல் வண்ணப்படமாக மீண்டும் வெளிவந்தது. 

மனைவியுடன்...

நடிகை மதுபாலாவை ஏழு வருடங்கள் காதலித்தார் திலீப் குமார். ஆனால் மதுபாலாவின் தந்தைக்கு அதில் விருப்பம் இல்லாததால் அது பெரிய சர்ச்சையில் முடிந்தது. முஹல் இ அஸாம் படத்துக்குப் பிறகு மதுபாலாவுடன் திலீப் குமார் இணைந்து நடிக்கவில்லை. 1966-ல் தன்னை விடவும் 22 வருடங்கள் இளையவரான சாய்ரா பானுவைத் திருமணம் செய்துகொண்டார் திலீப் குமார். அப்போது திலீப்புக்கு 44 வயது சாய்ரா பானுவுக்கு 22 வயது. 1983-ல் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்மா சஹிபாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவு இரு வருடங்களில் முறிந்தது. திலீப் குமார், சாய்ரா பானுவுக்குக் குழந்தைகள் இல்லை. 

திலீப் குமார் இரு படங்களை இயக்கியதாகச் சொல்லப்படுவதுண்டு. 1966-ல் வெளியான தில் தியா தர்த் லியாவின் இயக்குநராக அப்துல் ரஷித் அறியப்பட்டாலும் திலீப் குமார் பின்னாலில் இருந்து இயக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. முஹல் இ அஸாம் படத்துக்குப் பிறகு திலீப் குமார் நடித்த படம் இது. பல வருடங்கள் கழித்து ஜாக்கி ஷெராப்புடன் இணைந்து கலிங்கா என்கிற படத்தை இயக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் வெளிவரவே இல்லை. இன்றைய முன்னணி நடிகர்கள் போலவே அன்றைக்கும் ஒரு படத்தின் எல்லா வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட திலீப் குமார், கடைசி வரை ஒரு படத்தையும் இயக்காதது ஆச்சர்யம்தான். இஸ்லாமியரான திலீப் குமார், தான் நடித்த 60-க்கும் மேற்பட்ட படங்களில் முஹல் இ அஸாம் படத்தில் மட்டுதான் இஸ்லாமியராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 

40கள் முதல் 90கள் வரை திலீப் குமாரின் நடிப்பு பல நடிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு கதாபாத்திரத்தை முறைப்படி எப்படி நடிக்க வேண்டும், உடல்மொழி எப்படி இருக்கவேண்டும் என்பதைத் துல்லியமாகச் செய்வார். முஹல் இ அஸாம் படத்தின் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார் திலீப் குமார். இதற்காக ஸ்டூடியோ முழுக்க ஓடி, தடுமாறி விழுந்து நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டார். இந்தக் காட்சி அவருக்குப் பெரிய பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. 2015-ல் திலீப் குமார் - தி சப்ஸ்டென்ஸ் அண்ட் தி ஷேடோ என்கிற சுயசரிதையை வெளியிட்டார். அதில் மெத்தட் ஆக்டிங் என்பது பற்றி விரிவாக எழுதினார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அதற்கான நடிப்புக்கும் ஒரு வழிமுறை உண்டு என்பார். படப்பிடிப்பில் தீவிரமான, சோகமான காட்சிகளில் திலீப் குமார் நடிக்கும்போது அங்கும் யாருக்கும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க முடியாது. மயான அமைதி நிலவும் சூழலில் தான் தன் நடிப்பை வெளிப்படுத்துவார். ஒருமுறை சோகமான காட்சியில் திலீப் குமார் நடிக்க இருந்தபோது ஒருசிலர் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, இந்தச் சூழலில் தன்னால் தீவிரமாக நடிக்க முடியாது என அங்கிருந்து வெளியேறிவிட்டார். 

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். மகத்தான படங்கள், கை நிறைய விருதுகள், உலகம் முழுக்க ரசிகர்கள் என ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் திலீப் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT