ஸ்பெஷல்

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரி ப்ரோ: ரசிகர்களின் மனங்களை அள்ளியது எப்படி?

18th Jan 2021 01:29 PM | எழில்

ADVERTISEMENT

 

அனைவரும் எதிர்பார்த்தது போல பிக் பாஸ் பட்டத்தை நடிகர் ஆரி வென்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார். 

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

ADVERTISEMENT

ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், சோம், கேப்ரியலா, ரியோ என ஆறு பேர் கடைசி வாரப் போட்டியாளர்களாக இருந்தார்கள். 

இந்நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நடிகர் ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்றுள்ளார். ஆரிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. தனது மகளை அருகில் வைத்துக்கொண்டு பரிசுத்தொகையை ஆரி பெற்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரம்யா பாண்டியனே பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டியாளர்கள் பலரும் இதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்.

எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து ஆரிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இதனால் அவர்மீது ரசிகர்களிடம் அனுதாபம் ஏற்பட்டது. மேலும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் ஆரியிடம் இருந்த உறுதித்தன்மையும் ரசிகர்களை ஈர்த்தது. ஒரு குழுவினராகப் பலரும் சேர்ந்து ஆரியை ஒதுக்கியதால் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதினார்கள். 

ஒவ்வொரு வாரமும் ஆரி - பாலா மோதல்களைக் காண முடிந்தது. அனைத்திலும் ஆரியால் தீர்க்கமாக தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்க முடிந்தது. ஆரியின் பக்கமிருந்த நியாயம், அவர் வாதாடும் திறமை போன்றவற்றால் பாலாவும் பலமுறை ஆரியுடன் சமாதானம் ஆனார், மன்னிப்பு கேட்டார், நட்புக்கரம் நீட்டினார். ஆரியுடனான மோதல்கள் ரம்யா பாண்டியனுக்குப் பலவீனமாக அமைந்து விட்டன. யாருடனும் மோதாமல் இருந்த ரம்யா, ஆரியுடன் மட்டும் மோதியது அவருக்குண்டான வாக்குகளை ஆரி பக்கம் திருப்பிவிட்டது. ஆரியுடன் மோதியதால் அனிதாவும் போட்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆரிக்கு எதிரான நடவடிக்கைகளே சம்யுக்தாவுக்கும் சிக்கலை வரவழைத்து வெளியேற வைத்தது. அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள், ஆரியைத் தனிமைப்படுத்தியதும் தொடர்ந்து அவருடன் மோதியதும் ஆரிக்கே சாதகமாக அமைந்தன. இதனால் ஆரியை எதிர்த்தவர்கள் வாராவாரம் ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்கள்.

மேலும் பிக் பாஸில் முதல்முறையாக ஒரு போட்டியாளர் ஆவேசம் அடையாமல் சண்டை போடுவதை ஆரியிடம் பார்க்க முடிந்தது. இவரால் மட்டும் எப்படி நிலை தடுமாறாமல் வாக்குவாதம் செய்ய முடிகிறது என்று சக போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆச்சர்யப்பட்டார்கள். 

இவற்றைத் தாண்டி ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க முக்கியக் காரணம், அவருடைய நேர்மையான செயல்கள். ஆரியை நேர்மையாளராக மதிப்பிட போட்டியாளர்கள் மறுத்தாலும் மக்கள் முன் ஒரு நேர்மையாளராகவே அவர் தென்பட்டார். கமலும் ஆரியின் நேர்மையைப் பாராட்டியப் பேசியது அவருக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. 

பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஆரி மீதான தங்களது மரியாதையை வெளிப்படுத்தினார்கள். அதுவரை ஆரி பற்றிய மக்களின் எண்ணங்களைத் தெரியாமல் இருந்த போட்டியாளர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆரியை ஒவ்வொரு வாரமும் வெளியேற்றத் துடிப்பது ஏன், அவர் என்ன தவறு செய்தார் என்று ஷிவானியின் தாயார், தன் மகளிடம் கேட்டது ஓர் உதாரணம். இதனால் தான் கமலும் வார இறுதியில் ஆரிக்கு ஆதரவாகப் பேசி, போட்டியாளர்களுக்குக் கள நிலவரத்தைத் தெரியப்படுத்தினார். ஃபிரீஸ் டாஸ்க்கில் இல்லத்துக்குள் குடும்பத்தினர் வந்தபோது அனைவருமே ஆரிக்கு ஆதரவாகப் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதன் உட்கருத்து உங்களுக்குப் புரிகிறதா என்கிற கேள்வியைக் கேட்டார் கமல். தினமும் நாங்கள் பார்க்கும் ஆரியை மக்கள் பார்ப்பதில்லையோ என்று போட்டியாளர்கள் சிலர் பதில் அளித்தார்கள். இதனால் ஆரிக்கு உள்ள மக்கள் ஆதரவை அவர்கள் அறியாமல் இருப்பது எளிதாகத் தெரிந்தது.

என்ன நடந்தாலும் ஆரி அயோக்கியத்தனம் செய்ய மாட்டார், அவருடைய செயல்களில் நியாயம் தென்படும் என ரசிகர்கள் உணர்ந்தார்கள். இதுதான் ஆரிக்கு அதிக வாக்குகளைப் பெற வைத்தது. போட்டியாளர்கள் மீது அதிகக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்பது ஆரியின் பலவீனமாகச் சொல்லப்பட்டாலும் பிக் பாஸ் இல்லத்துக்கு வெளியே இந்தப் புகார் பெரிதாக எடுபடவில்லை. பிக் பாஸ் இல்லத்துக்குள் குழுவினராகச் செயல்பட்டவர்களையும் அநியாயம் செய்பவர்களையும் தனி ஆளாக ஆரி சமாளிக்கிறார் என்கிற எண்ணமே ரசிகர்களிடம் ஏற்பட்டது. ஆரி ப்ரோ என போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் அவரை அப்படியே அழைக்க விரும்பினார்கள்.

இதற்கு முன்பு பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரவ்வும் முகெனும் பெரிதளவில் சக போட்டியாளர்களிடம் மோதிக்கொள்ளவில்லை. போட்டியாளர்களிடம் அதிகம் முரண்படாமல் அவர்களால் கடைசி வரை தாக்குப்பிடித்து பட்டம் வெல்ல முடிந்தது. 2-வது பருவத்தில் ஐஸ்வர்யா தத்தா, ரித்விகாவுக்குக் கடும் சவாலை அளித்தார். அதிலும் ஒரு சிலரிடம் மட்டுமே ரித்விகா முரண்பட்டார்.

ஆனாலும் ஓவியா போல சக போட்டியாளர்கள் பலரிடமும் ஆரிக்குக் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் இருந்தன. ஒவ்வொரு வாரத்தையும் கடப்பது ஆரிக்கு எளிதாக அமையவில்லை. பலமுறை நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றார், தொடர்ந்து வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார். இவையெல்லாம் ஆரி மீது பார்வையாளர்களுக்குப் பரிதாப உணர்வை அளித்தனை. பலரும் ஒன்று சேர்ந்து ஆரிக்கு நெருக்கடி தரும்போது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வெகுண்டெழுந்தார்கள். ஆரியுடன் முரண்படுபவர்களைத் தாக்கி பதிவுகள் எழுதினார்கள். ஆரிக்கு எதிரானவர்களை வெளியேற்றினார்கள். இதனால் கடைசி வாரத்துக்கு முன்பே பிக் பாஸ் பட்டத்தை ஆரி வெல்வது உறுதியாகிவிட்டது. யாருக்கு 2-ம் இடம், 3-ம் இடம் என்பதில் தான் போட்டி இருந்தது.

மேலும், ரசிகர்களின் ஆதரவு பெற்ற ஒரு போட்டியாளர் பிக் பாஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்பதே அந்நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த விதத்தில் ஆரியின் வெற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பலனை அளித்துள்ளது. 
 

Tags : Bigg Boss Tamil Aari Arjunan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT