ஸ்பெஷல்

சிவகார்த்திகேயன்: எதிர் நீச்சல் போட்டுக் கனவை வென்றவர்!

17th Feb 2021 03:00 PM | எழில்

ADVERTISEMENT

 

கும்பகோணத்தைச் சேர்ந்த சிவகார்த்திகேயனின் தந்தை காவல்துறை அதிகாரி. கல்லூரிக் காலத்தில் தனக்குப் பிடிக்காத சூழலில் இருந்து வெளியேறி, சந்தோஷமாக இருப்பதற்கு உதவியது அவருடைய மிமிக்ரி திறமைதான். இதனால் கல்லூரி விழாக்களில் அனைவரையும் மகிழ்வித்தார் சிவகார்த்திகேயன். இதற்குக் கிடைத்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் யோசிக்க வைத்தன. இதுதான் தன்னுடைய தனித்திறமை என்பதை அவருக்கு உணர்த்தின. கல்லூரிக் காலத்தில் தந்தையை இழந்தபோது ஆறுதலாக இருந்தது அவருடைய தனித்திறமைகளும் அதற்குக் கிடைத்த வரவேற்புகளுமே. 

இன்ஜினியரிங் முடித்தவுடன் எம்.பி.ஏ. படிக்க எண்ணினார் சிவகார்த்திகேயன். மதுரையில் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 3-ம் பருவத்தின் தேர்வில் கலந்துகொண்டார். இதற்கெல்லாம் ஊக்கமாக இருந்தது நண்பர்களே. 1200 பேர் கலந்துகொண்ட கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தேர்வில் சிவகார்த்திகேயனின் திறமைகள் தனியாகத் தெரிந்தன. இதனால் நிகழ்ச்சிக்குத் தேர்வானார். முதல் சுற்று நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, வீட்டில் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எம்.பி.ஏ. படிக்க சென்னைக்கு வந்தவர், அப்படியே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இறுதிப்போட்டியை வென்று சாதித்தார். அதுதான் அவருடைய முதல் வெற்றி. மறைந்த நடிகை மனோரமாவின் கையால் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை பெற்றார். அதனைக் கொண்டு எம்பி.ஏ. முடித்தார். இதற்குப் பிறகு வேறு வேலைக்கா போக முடியும்? மீடியா காந்தம் போல கவர்ந்திழுத்தது.

ADVERTISEMENT

நடனம் சுமாராகத் தெரிந்தாலும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதில் சில அவமானங்களையும் சந்தித்து, வைல்ட் கார்டு மூலமாக இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி 2-ம் இடம் பிடித்தார். அது இது எது நிகழ்ச்சி சிவகார்த்திகேயனின் நகைச்சுவைத் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. இன்றைக்கும் இதன் விடியோக்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வப்படுவார்கள். தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதில் திரைத்துறையினருக்கு நன்கு அறிமுகம் ஆனார் சிவகார்த்திகேயன். 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு இயல்பாக வரவில்லை. முதல் நிகழ்ச்சியில் சொதப்பியதைக் கண்டு வீட்டுக்கு வரும் வழியிலேயே அழுதேன். ஒருநாள் நல்ல தொகுப்பாளராக மாறிக்காட்டுகிறேன் என எனக்குள் சபதம் செய்துகொண்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நகைச்சுவைத் திறமையால் 3 படத்தில் சிறிய கதாபாத்திரத்தை வழங்கினார் தனுஷ். பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மெரினா வெளியாகும் வரை எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என்று பாண்டிராஜ் கட்டளையிட, பிறகு தனுஷ் பாண்டிராஜிடம் பேசி 3 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்துள்ளார். அப்போதும் மெரினா தான் முதலில் வெளிவரவேண்டும் என்று கூறியிருக்கிறார் பாண்டிராஜ். 2012 பிப்ரவரி 3 அன்று மெரினா வெளியானது. மார்ச் 30 அன்று 3 வெளியானது. 

முழுப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார் இயக்குநர் எழில். மனம் கொத்திப் பறவையில். படம் சுமாராக ஓடினாலும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு நெருக்கமானார் சிவகார்த்திகேயன்.

பாண்டிராஜின் அடுத்த படத்திலும் நடித்தார் சிவகார்த்திகேயன், விமலுடன் இணைந்து. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் நகைச்சுவையான காட்சிகளும் பாடல்களும் படத்தை வெற்றிகரமாக்கின. 

3 படத்தில் உங்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை, என்னுடைய நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார் தனுஷ். அந்தப் படம் தான் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, அனிருத்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் அது. தாழ்வுமனப்பான்மையால் உள்ள இளைஞன், காதலி, பெண் பயிற்சியாளரின் துணையுடன் வாழ்க்கையில் சாதிக்கும் கதையில் அசத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். பூமி என்னை சுத்துதே பாடல் படத்தின் முத்திரையாக அமைந்தது. டேமேஜான பீஸு நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் என்கிற வரிகள் சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்டது போல இருந்தன. உருக்கமான காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் கலந்த திரைக்கதை, பாடல்கள் என இறுதியில் ஒரு சூப்பர் ஹிட் படம் அமைந்தது சிவகார்த்திகேயனுக்கு.

தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகன் உதயம் ஆனார்.

2013-ல் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் அமைந்ததால் திரையுலகமே அவரைக் கவனிக்க ஆரம்பித்தது. பொன் ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயனை இன்னும் பல படிகள் மேலே ஏற்றியது. ஊதா கலரு ரிப்பன் பாடலையும் நகைச்சுவைக் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இரண்டே படங்களால் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தார் சிவகார்த்திகேயன். 

அடுத்ததாக, மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடி ஹன்சிகா என்று தெரிந்தவுடன் திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் வெளிவரும் முன்பு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். விமர்சனங்கள் சிவகார்த்திகேயனை யோசிக்க வைத்தன. ஹன்சிகாவுடன் நடிக்க பெரிய கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டுமா? நான் நடிப்பதால் என்ன தவறு என எண்ணினார்.இதனால் படத்தில் அவருடைய தோற்றம் மாறியது. அதுவரை பக்கத்து வீட்டுப் பையன் போல தோற்றமளித்த சிவகார்த்திகேயன் நவீன தோற்றத்துக்கு மாறினார். ஹேர்ஸ்டைல், நடை, உடை, நடனம் எல்லாமே நவீனமாக மாறி அப்படத்தில் புதிதாகக் காட்சியளித்தார்.

மான் கராத்தேவுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் படம் வெற்றி பெற்றது. அடுத்ததாக வெளியான காக்கி சட்டை சுமாரான வெற்றியை அடைந்தது. 

பொன் ராமுடன் மீண்டும் இணைந்த ரஜினி முருகன் இன்னொரு வெற்றிப் படமாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்தது. உன் மேல ஒரு கண்ணு பாடலையும் நகைச்சுவைக் காட்சிகளையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். 

2016-ல் ரெமோ, சிவகார்த்தியனுக்கு மேலும் ஒரு வெற்றியை அளித்தது. பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்பதாலேயே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெண் வேடத்தில் அசத்திய சிவகார்த்திகேயன், அதன் வசூல் மழையால் அதிர்ந்து போனார். வசூல் சக்ர்வர்த்தியாக அவர் மாறிய தருணம் அது. இதனால் சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போட்டி போட்டார்கள். இதனால் அவருக்குச் சிக்கல்களும் எழுந்தன.

வளர வளர விமர்சனங்களும் அதிகமாகும். ரெமோ படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளதாகப் பெரிய எதிர்ப்புகள் உருவாகின. 2019-ல் ராஜேஷ் இயக்கத்தில் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்திலும் இதுபோன்ற விமர்சனங்களை சிவகார்த்திகேயன் எதிர்கொண்டார். இந்த விமர்சனங்களை வைக்கும் பலரும் நான் தயாரித்த கனா படத்தை அந்தளவுக்குப் பாராட்டாதது ஏன் என்கிற வருத்தமும் சிவகார்த்திகேயனிடம் உண்டு. 

ரெமோவின் பெரிய வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜாவுடன் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படத்தில் கருத்துகள் தீவிரமாக இருந்ததால் ரசிகர்களுக்குச் சிறிது ஏமாற்றமாக இருந்தது. சிவகார்த்திகேயன் படம் என்றால் ரெமோ போல ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அந்தப் படம் திருப்தி அளிக்கவில்லை. எனினும் ஓரளவு சுமாரான வசூலை அடைந்தது. அடுத்து வெளியான மிஸ்டர் லோக்கலும் தோல்விப் படமாக அமைந்தது. 2018-ல் பொன்ராமுடன் இயக்கத்தில் நடித்த சீமராஜாவும் தோல்வியடைந்தது. எனினும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் வெற்றி பெற்று படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. 

ரெமோவுக்குப் பிறகு மேலும் உயர வேண்டிய சிவகார்த்திகேயன், தொடர் தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்த தருணம் அது. கைகொடுத்தார் பாண்டிராஜ். 

2019-ல் பாண்டிராஜுடன் நம்ம வீட்டுப் பிள்ளைக்காக இணைந்தார் சிவகார்த்திகேயன். இந்தமுறை பெரிய கதாநாயகனுக்காக கதை செய்து, வெற்றி தர வேண்டிய நெருக்கடி பாண்டிராஜுக்கு ஏற்பட்டது. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சிவகார்த்திகேயனுக்கு ஆறுதலாக அமைந்தது. எனினும் மித்ரன் இயக்கத்தில் அடுத்து வெளியான ஹீரோ படம் எதிர்பார்த்தது போல அமையாமல் ரசிகர்களை ஏமாற்றியது. 

இப்போது டாக்டர், அயலான் என இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மார்ச் 26-ல் டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனின் உத்வேகமூட்டும் வாழ்க்கை, பலருக்கும் ஊக்கமாக உள்ளது. சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் வெற்றி கிடைக்காது, சின்னத்திரை நடிகர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற பிம்பத்தை உடைத்தவர் சிவகார்த்திகேயன். சாதாரண பின்னணியில் இருந்து வந்து, தனித்திறமையால் பல வாய்ப்புகளைப் பெற்று தமிழ்த் திரையுலகில் படிப்படியாக முன்னேறியுள்ளார். இப்போது அவரை முன்னுதாரணமாக வைத்துத்தான் இன்னும் பல டிவி நடிகர்கள் வெள்ளித்திரையில் கால் பதித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் போல நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களுக்கு உள்ளது. இதற்காகவே அவர் பல வெற்றிகளைக் காண வேண்டும். 

Tags : Sivakarthikeyan Happy Birthday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT