ஸ்பெஷல்

'கயலு'க்குப் போட்டியாக 'ரஜினி': கதையை சுட்ட ஜீ தமிழ்?

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேரன்பு தொடரைத் தொடர்ந்து ரஜினி என்ற தொடர் அறிமுகமாகவுள்ளது. இது டிசம்பர் 27-ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

சமீபகாலமாக மக்களை கவரும் வகையிலான தொடர்களை தயாரிப்பதிலும், ஒளிபரப்புவதிலும் தொலைக்காட்சிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதற்காக ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கையையும் தொலைக்காட்சிகள் குறைத்துள்ளன. 

முன்பு வார நாள்களில் தொடர்களும், சனி - ஞாயிறு போன்ற வார இறுதி நாள்களில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் தற்போது தொடர்களுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பால் வார இறுதி நாள்களிலும் தொலைக்காட்சிகள் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

முன்பு அதிக அளவில் பெண்களை மையப்படுத்தி தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்து வயதினரையும் கவரும் வகையில், தொடர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

அதோடு மட்டுமல்லாமல், முந்தானை முடிச்சு, சுமங்கலி, நாதஸ்வரம் என்ற இருந்த தொடர்களின் பெயர்களும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலும் ராஜா ராணி, சத்யா, கயல், நீதானே என் பொன் வசந்தம் என்று சினிமாவின் தலைப்புகளாகவே வைக்கப்படுகின்றன. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒருபடி மேலே சென்று 'ரஜினி' என்ற பெயரில் புதிய தொடரை ஒளிபரப்பவுள்ளது.

திரைக்கதையைப் போலவே தொடர்களின் தலைப்பும் மனதில் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளன. வெள்ளித் திரைக்கு இணையாக சின்னத் திரை தொடருக்கும் ரசிகர்கள் பெருகியுள்ளதையே இவை காட்டுகின்றன. 

அதோடு மட்டுமல்லாமல், சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத் திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் பொதுமக்களால் கொண்டாடப்படுகின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களுடைய பாராட்டு குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பது என்று சின்னத் திரை நட்சத்திரங்களும் ரசிகர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதால், அவை தொடரின் மீதான மக்களின் நெருக்கத்தை அதிகரிக்கின்றன. 

கரோனா ஊரடங்கு பொதுமுடக்கமும் தொடர்களுக்கான பார்வையாளர்கள் அதிகரித்ததற்கு ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது பழைய தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. இவ்வாறு தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தொலைக்காட்சிகளுக்கு இடையிலான டிஆர்பி-யிலும் போட்டியும் அதிகரித்துள்ளது.

ஒரு தொலைக்காட்சியில் காதலை மையப்படுத்திய தொடர் தயாரிக்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், அதனைப்போன்று முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய தொடர்களைத் தயாரிக்கும் பணிகளில் மற்ற தொலைக்காட்சிகளும் களமிறங்குகின்றன.

அதற்கு உதாரணம், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர். அந்த தொடர் வெளியான ஒரு மாதத்திலேயே மற்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் அதுபோன்றதொரு கதையை பின்புலமாகக் கொண்டு 'ரஜினி' என்ற பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய தொடரை தயாரித்து வருகிறது.

கயல் தொடரில் குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் பணிக்குச் செல்லும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்னைகளும், அதற்கு அவள் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதே மையக்கதை. அதில் நாயகியாக சைத்ரா நடித்து வருகிறார். 

தற்போது 'ரஜினி' தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடரில் நடித்த ஸ்ரேயா அஞ்சன் நடிக்க உள்ளார்.  'கயல்' கதையைப் போன்றே, பணிக்குச் செல்லும் பெண் குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் சமாளித்து, சகோதர சகோதரிகளுக்காக தனது சந்தோஷங்களை தியாகம் செய்வது போன்று 'ரஜினி' முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இது கயல் தொடரின் முன்னோட்டத்தையே நினைவூட்டுகிறது. 

இதனால் சன் தொலைக்காட்சி 'கயல்' தொடரை ஒளிபரப்புவதைப் போன்றே, ஜீ தமிழ் தொலைக்காட்சி 'ரஜினி' தொடரை கையில் எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு எடுக்கப்படும் தொடருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிடுவதில்லை. 

இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரும், 'செம்பருத்தி' தொடரை தொடர்புப்படுத்தி விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இரண்டு தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது. கயலுக்கு போட்டியாக வரும் ரஜினியும் விதிவிலக்கல்ல. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT