ஸ்பெஷல்

செம்பருத்தியில் இணைந்த மற்றொரு நடிகை!: சீரியல்களின் மகா சங்கமம் பலனளிக்குமா?

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் மற்றொரு தொடரின் கதாநாயகி இணைந்துள்ளார். இதனால் டிஆர்பி பட்டியலில் பின்தங்கியுள்ள செம்பருத்தி இந்த வாரம் நிலையான ஓர் இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெள்ளித் திரைக்கு இணையாக சின்னத்திரையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்பெல்லாம் பெண்களை மட்டுமே மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆண்கள், இளம் வயதுடையவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குடும்பப் பிரச்னைகளை மட்டுமே பேசி வந்த தொடர்கள், வெள்ளித் திரைக்கு இணையாக காதல், நகைச்சுவை, நட்பு, பெண்ணியம், உறவுச் சிக்கல் உள்ளிட்டவற்றை களமாக வைத்து திரைக்கதைகளை அமைத்து வருகின்றன. இதனால், வெள்ளித் திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத் திரை நடிகர்களும் மக்களால் கொண்டாடப்படுகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, இரு தொடர்களின் சங்கமம் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் வகையிலும், ஒரு தொடரின் ரசிகர்களை மற்றொரு தொடரையும் பார்க்கவைக்கும் நோக்கத்திலும் இரு தொடர்களின் பாத்திரங்களை வைத்து புதிதாக கதைச்சூழல் அமைக்கப்பட்டு தொடர்களின் மகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணிநேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் மூலம் டிஆர்பி பட்டியலில் தப்பிய தொடர்களும் உண்டு. ஏற்கெனவே ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடருடன், செம்பருத்தி தொடர் சங்கமித்து ஒளிபரப்பப்பட்டது. அதன் எபிஸோடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

கிராமத்து பின்னணி கொண்ட ஒரு ஊருல ஒரு ராஜகுமாரியும், நகரத்து பின்னணி கொண்ட செம்பருத்தி தொடரின் பாத்திரங்களும் ஒன்றாக நடித்து வெளியான பகுதிகளை மக்கள் வெகுவாக ரசித்தனர். 

அந்தவகையில் தற்போது சத்யா தொடரில் நடித்து வந்த ஆயிஷாவை செம்பருத்தி குழுவினர் களமிறக்கியுள்ளனர். சத்யா தொடர் கடந்த அக்டோபர் மாதம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சத்யா -2 தொடர் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  இதில் நாயகனாக விஷ்ணுவும், நாயகியாக ஆயிஷாவும் நடிக்கின்றனர். இதில் ரெளடி பேபி சத்யா, நித்யா என இரட்டை வேடங்களில் ஆயிஷா நடிக்கிறார்.

தற்போது ரெளடி பேபி கதாபாத்திரம் செம்பருத்தி தொடரிலும் வரும் வகையில், கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்பருத்தி தொடர் மீண்டும் மக்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக்கொண்டு டிஆர்பி பட்டியலில் நிலையான இடத்தை பெறமுயற்சிப்பது தெரிகிறது.

செம்பருத்தி தொடர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இதுவரை 1,200 எபிஸோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், தற்போது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

ஆதி - பார்வதி இடையேயான காதல் காட்சிகளுக்கு முன்பு இருந்த ரசிகர்கள் கூட்டம் தற்போது சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னணி கதைமாந்தர்கள் மாற்றப்பட்டதும், ஒளிபரப்பும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்ததும் இதற்கான முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

இதனால், இழந்த ரசிகர்களை மீண்டும் பெறும் வகையில், செம்பருத்தி குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாத திரைக்கதையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அனைத்துத் தொடரின் நாயகிகளும் செம்பருத்தி தொடரில் பார்வதியின் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் வேடமிட்டு நடித்தனர். அதற்கான முன்னோட்டங்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து தற்போது சத்யா -2 தொடரின் நாயகி ஆயிஷா, ரெளடி பேபி பாத்திரமாகவே செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார். குடும்பத்தினரின் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் பார்வதிக்கு உதவும் தைரியமான ஆட்டோ ஓட்டுநர் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சத்யா -2, செம்பருத்தி தொடரின் மகா சங்கமமும் செம்பருத்தி தொடருக்கு பலனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT