ஸ்பெஷல்

ரஜினி ரஜினிதான்.. படையப்பா படையப்பாதான்..

சுவாமிநாதன்


22 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய, உதாரணமாக முன்வைக்கக்கூடிய முழுமையான ஒரு ரஜினி படம் படையப்பா. 

90-கள் என்பது தமிழ் சினிமாவில் ரஜினியின் பொற்காலம். பணக்காரன் தொடங்கி படையப்பா வரை ரஜினியின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மைல்கல்லை தொட்டன. சூப்பர் ஸ்டாராக தனது ஸ்டைல் மூலம் படத்துக்குப் படம் புதுமையையும் வித்தியாசத்தையும் வெளிப்படுத்தி, ரசிகர்களைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ரஜினி, இந்தக் காலகட்டங்களில் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கமர்ஷியலான மசாலா படங்களைச் செய்தாலும், அது யாரும் மறக்கக்கூடிய படமாக இருந்துவிடக் கூடாது என்பதைப் படத்துக்குப் படம் கவனமாகப் பார்த்துக் கொண்டார் ரஜினி. ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கினார். இதன் விளைவுகளே அண்ணாமலை, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் போன்ற மாபெரும் வெற்றிப் படங்கள்.

படையப்பாவின் தொடக்கம்:

தான் கல்கியின் பெரிய ரசிகன் என்பதைப் பல்வேறு மேடைகளில் ரஜினி வெளிப்படுத்தியுள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினமே ரஜினிக்குப் பிடித்த நூல். அதில் வரும் நந்தினி தேவி கதாபாத்திரம் ரஜினியைக் கவர்ந்திருக்கிறது. படையப்பாவின் தொடக்கம் நந்தினி தேவியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.

நந்தினி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என எண்ணி அதை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார். அப்படி உருவானதுதான் படையப்பா. சிவாஜி ராவ், ரஜினிகாந்த் ஆக மாறி தமிழ் சினிமாவை ஆளத் தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 

இது ரஜினியின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மிக முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று. என்றும் நினைவிலிருந்து அழியாதிருக்கக்கூடிய முக்கியப் படங்களிலும் ஒன்று.

காரணம், இன்றைக்கும் ஒரு வலுவான கமர்ஷியல் திரைப்படம் எப்படி உருவாக வேண்டும் என்பதற்குப் படையப்பா திரைக்கதை ஒரு ஆகச் சிறந்த உதாரணம். படையப்பா வெற்றியின் பெரும் பலம் திரைக்கதை.

படையப்பா திரைப்படம் மூன்று தலைமுறைகளைக் கொண்ட கதை என்பதால், சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டது. படம் பார்த்த ரஜினி இரண்டு இன்டர்வெல் விடுவதுபற்றி யோசித்ததாகவும், கமல்ஹாசனிடம் நடத்திய ஆலோசனையில் அவர் அது வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் பேச்சுகள் உண்டு. அண்மையில் வெளியான பேட்டி ஒன்றில் கே.எஸ். ரவிக்குமார் இதனை உறுதிப்படுத்தியிருப்பார். பிறகு, அந்தப் படம் பெருமளவில் சுருக்கப்பட்டது. 

இன்றைக்கு ஒருசில படங்களில், நீக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகுதான், சில கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், சில காட்சிகளுக்கான காரணங்களும் புரிகின்றன. ஆனால், அத்தனைக் காட்சிகள் நீக்கப்பட்டும் படையப்பா எவ்வித சிதைவும் இல்லாமல் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அதிலிருந்தே அதன் திரைக்கதை வலிமையை உணரலாம். இதற்கானப் பாராட்டு கே.எஸ். ரவிக்குமாரையே சேரும்.

ரஜினி எனும் பிம்பம், இத்தனை வலிமையான திரைக்கதையில் பொருந்தும்போதே அது மாபெரும் வெற்றியைப் பெறுகிறது. படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன பிறகும், காட்சிகள் நினைவிலிருப்பதற்குக் காரணம் ரஜினி. ரஜினியின் வசனங்களும், நடிப்பும் நினைவிலிருப்பதற்குக் காரணம் திரைக்கதை. 

திரைக்கதையில் தொய்வை வைத்துக் கொண்டு ரஜினியின் பிம்பத்தைக் கொண்டு மட்டுமே காட்சிகளை அமைத்தால், அது வெற்றி பெறாது, அப்படியே வெற்றி பெற்றாலும், அது காலப்போக்கில் அழிந்துவிடக்கூடிய வெற்றியாகத்தான் இருக்கும். இதற்கு சமீபத்திய சில படங்களை உதாரணங்களாக முன்வைக்கலாம்.

திரைக்கதை வலிமையின் அவசியத்தை உணரும் ரஜினி, அதில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் கெட்டிக்காரராக இருக்கிறார்.

படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர், மணிவண்ணன், சௌந்தர்யா, சித்தாரா, அபாஸ், செந்தில் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. இவர்கள் அனைவருக்கும் சம அளவில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கதாபாத்திரத்தைத் தூக்கிவிடலாம் என்று சொல்வதற்கு இடமளிக்காத வகையில் அனைவருக்கும் சரியான காரணங்களுடன் காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். அப்படி இருந்தும், காட்சிகளுடன் பொருந்தி தன்னைத் தனியாக அடையாளப்படுத்தி வெற்றி பெறுகிறார் ரஜினி.  

ரஜினி - பாம்பு:

பாம்புக்கும், ரஜனிக்கும் இடையே ஏற்கெனவே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை மூலம் பாம்புக்குப் பயப்படும் ரஜினியே ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவர். இப்படி இருக்க, படையப்பா படத்தில் பாம்பு தொடர்புடைய காட்சியின் மூலம் அறிமுகமாகிறார் ரஜினி. இம்முறை மாறுபட்ட விதத்தில்.

அறிமுகக் காட்சியிலேயே புற்றிலிருந்து பாம்பை எடுத்து அதற்கு முத்தம் கொடுப்பார் ரஜினி. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், "பாம்புப் புற்றுக்குள் கைவிட்டு பாம்பை எப்படி எடுத்தீர்கள், கடித்திறாதா" என்ற கேள்வி ரஜினி கதாபாத்திரத்திடம் படத்தின் இறுதிவரை எழுப்பப்பட்டு வரும்.

ரஜினி - ஸ்டைல்:

அப்பாவாக வரும் சிவாஜி கணேசன், ரஜினியிடம் ஸ்டைலாக ஒரு சல்யூட் அடிக்கச் சொல்லி கேட்பார். ரஜினியும் ஸ்டைலாக அந்த சல்யூட்டை அடிப்பார். கதாபாத்திரத்தைத் தாண்டி சிவாஜி கணேசனுக்கென்று ஏற்கெனவே இருக்கும் பிம்பமும், ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்கெனவே இருக்கும் வரவேற்பும் இந்தக் காட்சியை ரசிகர்களிடம் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

இதன் தொடர்ச்சியாகவே ரஜினியின் ஸ்டைல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும். 

ரஜினியின் ஸ்டைலுக்கு தீனிபோடும் வகையில் படையப்பா-நீலாம்பரி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே, ரஜினி-ஜெயலலிதா இடையிலான மோதல் ஊரறிந்தது. படத்தில் நேரடியாகக் கூறினாலும், கூறாவிட்டாலும் ரசிகர்கள் மனதில் இருக்கும் இந்தத் தாக்கத்தை அழிக்க முடியாது. இதன் பின்னணியில் ரஜினிக்கு நேரெதிர் கதாபாத்திரமாக நீலாம்பரி உருவாக்கப்பட்டிருக்கிறார். எனவே, படத்துக்கும், அதில் வரும் காட்சிக்கும் அப்பாற்பட்டு ஏற்கெனவே ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அவற்றை ரஜினி தனது பாணியில் பூர்த்தி செய்திருப்பார். 

'மேம்' என்று நீலாம்பரியைக் கைதட்டி அழைப்பது, நீலாம்பரியை நோக்கி வித்தியாசமான ஸ்டைலில் நடப்பது, நீலாம்பரி கூலிங் கிளாஸை கழட்டும் நேரத்தில், கையிலிருக்கும் கூலிங் கிளாஸை ரஜினி அணிவது, வேறு யாரையாவது விரும்புகிறாயா என நீலாம்பரி கேட்க, அதற்கு 'யா' என்பதை மிகவும் ஸ்டைலாக கூறி மௌத் ஆர்கனை வாசித்தபடி ரசிகர்களுக்கு விருந்துப் படையலே வைத்திருப்பார்.

வயதான ரஜினியாக வரும்போதுகூட ஸ்டைலில் சதம் அடித்திருப்பார் ரஜினி. உட்காருவதற்கு நாற்காலி இல்லை, அதற்கு ஒரு ஊஞ்சலை கீழே இழுத்து, தானே அமர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் காட்சி. நான் பார்த்துக்கொள்கிறேன் என ரஜினி ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார். வயதானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை என்ற வசம் இடம்பெற இதைவிட ஒரு சிறந்த இடம் இருக்காது என ரசிகர்களே மெச்சும் அளவுக்கு காட்சியமைப்பு இருக்கும்.

ரஜினி - வசனங்கள்:

படையப்பாவுக்கு மற்றொரு பெரிய பலம் வசனங்கள். ரஜினிக்கென்று உள்ள பிம்பங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும், அதேசமயம் படத்தைவிட்டு விலகாத வகையிலும் வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதிகமா ஆச படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை.. என் வழி தனி வழி.. கூடவே பொறந்தது (ஸ்டைல்) என்னிக்கும் மாறாது.. போன்ற பஞ்ச் வசனங்கள் ரஜினியின் நிஜ வாழ்க்கையோடும், திரை வாழ்க்கையோடும் ஒத்துப்போவதால், அந்த வசனங்கள் கூடுதல் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

இதற்கு மேலும் ஒரு உதாரணம் ராஜபகதூர்- அரசியல் காட்சி.

ரஜினியின் படங்கள் என்றாலே, அரசியலுக்கு வருவது பற்றி ஒரு காட்சியோ, வசனமோ, பாடல் வரியோ இருக்க வேண்டும். பாபா சாகேப் பால்கே விருது வாங்கியபோது ரஜினி மேடையில் தனக்கு உதவிய முக்கிய நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். அதில் அனைவரையும் உணர்வுப்பூர்வமாகத் தொட்ட பெயர் அவரது நண்பர் பெயர் ராஜபகதூர்.

படையப்பா படத்திலும் ஒரு காட்சியில் தன் சிநேகிதன் என ராஜபகதூர் பெயரைக் குறிப்பிட்டு அரசியல்வாதி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவார். ராஜபகதூர் கதாபாத்திரம் அரசியலுக்கு வா என்று அழைப்பதுபோன்றும், ரஜினி அதை மறுப்பது போன்றும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

ரஜினி - நகைச்சுவை:

மாஸாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுடனான காட்சியில் சரிந்துவிடக் கூடாது என்பதை அறிந்திருந்தாலும், அந்த இடத்திலும் தன்னைத்தானே கேலி செய்து நகைச்சுவைக்குப் பஞ்சம் வைத்திருக்க மாட்டார் ரஜினி. ஒரு காட்சியில் தனது பார்வையின் மூலமே பணியாளர்கள் அனைவரையும் கிளம்பச் செய்வார் நீலாம்பரி. அதே பாணியை ரஜினியும் கடைப்பிடிப்பார். ஆனால், ரஜினி நண்பர்கள் விலகிச் செல்லமாட்டார்கள். "ஏன்டா மானத்தை வாங்குறீங்க" என ரஜினி முனுமுனுக்கும்விதம் மறக்க முடியாதது.

இதுவே ரஜினியின் பலம். ஜனரஞ்சகமான படத்துக்கு வெறும் மாஸ் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் மட்டுமே போதாதது. தேவைக்கேற்ப நகைச்சுவை அவசியம். நகைச்சுவை நடிகர்களை மட்டுமே சார்ந்திருப்பது கதாநாயக மைய ஜனரஞ்சக சினிமாவுக்குப் போதாதது. இதனால், தனக்கு இயல்பாக வரக்கூடிய நகைச்சுவையை ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பார்.

'மாப்ள அவருதா.. ஆனா, அவர் போட்ட சட்டைய பத்தி நான் பேசமாட்டேன்' வசனம் இன்றைக்கும் மீம்களுக்கு பயன்படுகின்றன. வயதான படையப்பாவாக மாறிய பிறகும் இயல்பான வெகுளித்தனமான நடிப்பில் ரசிக்கக்கூடிய சிரிப்பை வரவைத்திருப்பார்.

இவ்வாறாக ஒரு முழுமையாக கமர்ஷியல் படத்துக்குத் தேவையான உணர்வுகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் எழுதப்பட்ட இந்தக் திரைக்கதையில், தன்னைக் கச்சிதமாக பொருத்திக்கொண்டதே 22 ஆண்டுகளுக்குப் பிறகும் ரஜினியையும் படையப்பாவையும் கொண்டாடத் தூண்டுகிறது.

படையப்பா இன்றைக்கும் மறுவெளியீடு செய்தால், திரையரங்குகள் நிச்சயம் நிரம்பி வழியும். நிரம்பி வழியும் கூட்டங்கள் ரஜனி ரசிகர்களாக மட்டுமே இருக்காது. அதுதான் ரஜினி.. அதுதான் படையப்பா..

இணைய வளர்ச்சிகள் இல்லாத காலத்தில் முழுமையான ரஜினி படமாக வந்த படையப்பா, 2021-இல் வெளியாகி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? சிறிய கற்பனை..

  • முத்து வெற்றிக்குப் பிறகு ரஜினியை மீண்டும் இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்கள் ஃபயர் விடத் தொடங்கியிருப்பார்கள். கே.எஸ். ரவிக்குமார் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியிருப்பார்.
  • பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்ற தகவல் எங்கிருந்தாவது கசிந்திருக்கும். உடனடியாக, "எக்ஸ்குளூஸிவ்.. ஜெயலலிதாவுடன் தனக்கு இருக்கும் பிரச்னையை நேரடியாகத் திரையில் காட்டவே சூப்பர் ஸ்டார் முனைகிறார். அதுவே படையப்பாவாக வரவிருக்கிறது" என்கிற சினிமா பிரேக்கிங் நியூஸ்கள் வந்திருக்கும்.
  • படையப்பா புதிய அப்டேட் என ஆன் போர்ட் (onboard) சிவாஜி கணேசன் என்ற அறிவிப்பு வெளியாகும். ரஜினி படத்தில் சிவாஜியா என எதிர்பார்ப்பு அடுத்தகட்டத்துக்கு அதிகரித்து, மொத்த சமூக ஊடகங்களும் இந்த காம்போ குறித்து பேசத் தொடங்கியிருக்கும்.
  • அடுத்தடுத்து ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், ராதா ரவி, அபாஸ், செந்தில் என அடுத்தடுத்த ஆன் போர்ட் அறிவிப்புகள் வர, படையப்பா ஒரு மாபெரும் மல்ட்டி ஸ்டேரிங் படம் என்று பேச்சுகள் வரத் தொடங்கியிருக்கும். 
  • ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியிருக்கும்.
  • ரஜினியும் சிவாஜியும் சேர்ந்து இருக்கும் படங்கள் ஃபர்ஸ்ட் லுக்காகவும், வயதான படையப்பா படம் செகண்ட் லுக்காகவும் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கும்.
  • படம் வெளியான முதல் நாளில் அனைவரது வாட்ஸ் ஆப் ஸ்டேஸிலும் முடிவில்லாத ரயிலாக ரஜினி பாம்பு பிடிக்கும் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்.
  • ரஜினி கூலிங் கிளாஸ் மாட்டும் காட்சி ஸ்வேக் எனக் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருக்கும்.
  • இவையனைத்திற்கும் மத்தியில் படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்க வசனங்களும், காட்சிகளும் சமூக ஊடகங்களில் நிச்சயம் விமர்சனங்களைச் சம்பாதித்திருக்கும். விவாதத்தை உண்டாக்கியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT