ஸ்பெஷல்

'அறிவு' இல்லா அட்டைப்பட அரசியல்: அங்கீகார புறக்கணிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் அமைதி காப்பது ஏன்?

எஸ். மணிவண்ணன்

கலை மக்களுக்கானது. கலைஞர்கள் கலைக்கானவர்கள் என்பார்கள். ஆனால் கலைத்துறையைச் சேர்ந்த சில கலைஞர்களை சக கலைஞர்களே புறக்கணிக்கும் தொடர்கதை இன்றுவரை அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. பாடலாசிரியரும், பாடகருமான அறிவு விவகாரத்திலும் தற்போது இது நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரோலிங் ஸ்டோன் எனும் இசைப் பத்திரிகை எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒளி ஆகிய இரு (இண்டிபெண்டன்ட்) சுயாதீனப் பாடல்கள் குறித்து இம்மாத இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் அவ்விரு பாடல்களை எழுதிய  சுயாதீனப் பாடகர் அறிவின் புகைப்படத்தை புறக்கணித்து அப்பாடல்களைப் பாடிய பாடகர்களை மட்டும் அட்டைப்படத்தில் பயன்படுத்தியுள்ளது. இந்த புறக்கணிப்பு தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

பொருள் செலவு இல்லாமல், தங்களிடமுள்ள இசைக்கருவிகளைக் கொண்டு முழுக்க முழுக்க திறமையை மட்டுமே முதலீடாக வைத்து தனி நபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து சுதந்திரமாக பாடல்கள் மூலம் தமது கருத்துகளை வெளிப்படுத்துவது சுயாதீன இசை.

இசைப்பாடல்களைத் தயாரிக்கும் எந்தவொரு நிறுவனத்தின் தயவையும் சாராமல் மக்களுக்கு பாடல்களைக் கொடுப்பதே இவர்களின் தனித்துவம். தனக்கென தனியொரு அடையாளத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதே இக்கலையின் போராட்டம்.

அப்படி போராடும் ஒரு சுயாதீனப் பாடகருக்கு நேர்ந்த புறக்கணிப்பு குறித்து கலையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். சாமானிய மக்களும் இந்த புறக்கணிப்பு குறித்து பேசுகின்றனர். இதுவே அறிவு போன்ற சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வெற்றி.

ஆனால் இரு பாடல்களையும் வெளியிட்ட மாஜா நிறுவனமோ, அதனைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மானோ, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனோ இதுவரை இதுகுறித்து எந்தவித முரணும் இல்லாமல், அமைதி காக்கின்றனர். மேலும், ஊதியம் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாஜா நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்த விதிகளில் அங்கீகார இருட்டடிப்பும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது.  

ரோஜா திரைப்பட பாடல் வெளிவந்தபோது ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் கூட  ஆரம்பகால கேசட்டுகளில் இடம்பெறவில்லை. இசைத்துறையில் சர்க்ரவர்த்தியான பிறகும் ஹிந்தி திரையுலகால் புறக்கணிக்கப்படும் வலியை உணர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அவர் சார்ந்த நிறுவனத்திற்கு பணியாற்றிய அறிவின் புறக்கணிப்புக்கு அமைதிகாப்பது ஏற்புடையதல்ல.

சுயாதீனப் பாடகர்களாக வேண்டும் என்ற பயணத்தில் பெரும்பாலான கலைஞர்கள் சந்திக்கும் பொதுவான புறக்கணிப்புதான் பாடகர் அறிவு சந்தித்துள்ள புறக்கணிப்பு என்று கடந்து செல்ல இயலாது.

பாடகர் யோகி போன்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் மட்டுமே தமிழில் சொல்லிசை (ராப் இசை) மூலம் மக்களுக்கான பாடல்களை அமைத்து வந்த நிலையில், தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பியவர் பாடகர் அறிவு. இடையில் ஹிப்பாப் ஆதி போன்றவர்கள் வந்தாலும், பிறகு அவர்கள் தங்களது போக்கையே மாற்றிக்கொண்டனர்.

ஆனால், காலா, மாஸ்டர், போன்ற நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த படங்களில் பாடல்களை எழுதியும், பாடியும் புகழ்பெற்ற பிறகு கூட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் தொடர்ந்து மக்களிசைப் பாடல்களை எழுதியும் பாடியும் வந்துள்ளார் என்பதே மகத்தான சாதனை.

மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக எழுதி பாடிய ‘ஆன்டி இந்தியன்’ என்ற பாடல்… குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக பாடிய ‘சண்ட செய்வோம்’ பாடல்… தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்நோலினுக்காக பாடிய பாடல்… ஆணவக் கொலைகள் அதிகரிப்பதைக் கண்டு அமைதி காத்த சமூகத்தை கேள்வி எழுப்பும் விதமாக எழுதி பாடிய ’கள்ள மெளனி’ போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பாடலை இயற்றியமைக்காக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இவ்வாறு தமிழகம் முழுக்க அறியப்பட்ட பெயராக மாறிய அறிவு, சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகி தீ உடன் சேர்ந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் சர்வதேச அரங்கிலும் அறியப்பட்டார்.

மாஸ்டர் திரைப்படத்தின் ’வாத்தி ரெய்டு…’ பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மீண்டும் ஒரு முறை சர்வதேச ரசிகர்களை சென்று சேர்ந்தார்.

அறிவு எழுதிய ’’நீயே ஒளி நீயே வழி ஓயாதிரு உடம்பே…’’ எனும் சுயாதீன பாடலில் சென்னை வட்டார வழக்கு சொற்களும் கையாளப்பட்டிருக்கும். சார்பட்டா திரைப்படத்தில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது. ரசிகர்களிடமும் அப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. எஞ்சாய் எஞ்சாமி, மற்றும் நீயே ஒளி ஆகிய இரு பாடல்களில் மட்டும் சுமார் 1,500 வார்த்தைகளை வைத்து சொல்லவந்த கருத்தை பரவலாக்கியிருப்பார்.

இவ்வாறு தமிழ் சொல்லிசைப் பாடலில் அறிவு மேற்கொண்ட பணிகள் இதுவரை எந்த கலைஞரும் செய்யாதவை. பஞ்சாபைச் சேர்ந்த ஹனி சிங் போன்ற ஹிந்தி மொழி சொல்லிசைப் பாடகர்கள் மட்டுமே தேசிய அளவில் கோலோச்சிய நிலையில், தமிழில் சொல்லிசையைப் பாடி தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் அறிவு.   

தற்போது சமூக வலைதளங்கள் மூலம் ஒரு சில சுயாதீன கலைஞர்கள் தங்களது படைப்புகள் மூலம் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர் என்றாலும் அவர்களுக்கான அங்கீகாரம் முழுவதுமாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். அதுவும் தமிழ் மொழியில் மிகவும் சொற்ப கலைஞர்களே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

கானா பாடல்கள் போல சொல்லிசைப் பாடல்கள் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கானது என்ற பிம்பம் உயர்குடி பிறப்பு மக்களின் பொதுப்புத்தியில் உள்ளது. இந்தியாவில் ஜாதியப் புறக்கணிப்பு எனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறப் பாகுபாடு.

உலக இசை தின சிறப்பு நிகழ்ச்சியையொட்டி கலைகளின் நகரமாக பாரீஸை சேர்ந்த டிஜே ஸ்நேக் என்ற இசைக்கலைஞர் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி ரீமிக்ஸ் வடிவ பாடலில் இருந்து அறிவு இடம்பெற்ற காட்சிகளை முற்றிலுமாக நீக்கி பாடகி தீ மட்டும் நடித்தது போன்ற புதிய விடியோவை வெளியிட்டார்.

இது தொடர்பான விளம்பரம் நியூயார்க் நகர மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதிலும்  அறிவு பெயரும் புகைப்படமும் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டிருந்தது.

நியூயார்க்கில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகை

இசையில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது எனில், பாடலுக்கு கூட்டாக இணைந்து பணிபுரிந்த நிலையில், பாடகி தீயின் புகைப்படம் மட்டும் இடம்பெறும் காரணத்துக்கான கீழான அரசியலை என்ன சொல்வது.

கலைகளின் மூலமாக வேறுபாடுகளைக் களைய முயற்சிக்கும் காலத்திற்கு வந்துவிட்டதாக கருதிக்கொண்டு உள்ளூர் தாண்ட முயற்சிக்கும் வேளையில், சர்வதேச அரங்கில் நேர்ந்த புறக்கணிப்பு நவீன தீண்டாமையை புதுப்பித்து வைக்கிறது.

ஒருவனுடைய படைப்பை கொண்டாடும் உலகம் படைத்தவனை புறம்தள்ளி ஒதுக்குவது எந்தவகையில் நியாயம்?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

SCROLL FOR NEXT