ஸ்பெஷல்

புதிய சாதனை: ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்கொண்ட பெண்கள்!

தினமணி

ஆஸ்கர் விருதுகளை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேரடியாகவும் இணையம் வழியாகவும் நேற்றிரவு நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷன், டால்பி திரையரங்கம் ஆகிய இடங்களில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களும் விருந்தினர்களும் நியூ யார்க் மற்றும் லண்டனில் அமைக்கப்பட்ட கூடுதல் விழா அரங்கிலும் கலந்துகொண்டார்கள். 

சிறந்த படத்துக்கான விருதை நோமட்லேண்ட் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை குளோயி ஜாவ் (நோமட்லேண்ட்), சிறந்த நடிகருக்கான விருதை ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்), சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  (நோமட்லேண்ட்) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எரிக் (மான்க்) ஆகியோர் பெற்றுள்ளார்கள். சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் படம் பெற்றுள்ளது.

70 பெண்கள், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 17 விருதுகளை பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள். 

சிறந்த இயக்குநர், சிறந்த படம் (அசல் திரைக்கதை), சிறந்த அனிமேஷன் படம், சிறந்த அசல் பாடல் போன்ற முக்கிய விருதுகளை பெண்கள் வென்றுள்ளார்கள்.

2019-ல் 15 பெண்கள் வென்ற நிலையில் இந்தமுறை தான் அதிக எண்ணிக்கையிலான ஆஸ்கர் விருதுகளை பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள். அதாவது 17 விருதுகளை 15 பெண்கள் வென்றுள்ளார்கள். 

63 வயது பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் (நோமட்லேண்ட் தயாரிப்பாளர்களில் ஒருவர்) என இரு விருதுகளை வென்றுள்ளார். அதேபோல சீனாவைச் சேர்ந்த 39 வயது குளோயி ஜாவ் சிறந்த இயக்குநர், சிறந்த படம் (நோமட்லேண்ட்) என இரு விருதுகளை வென்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற 2-வது பெண் மற்றும் முதல் ஆசியப் பெண் என்கிற பெருமையை ஜாவ் பெற்றுள்ளார்.  சிறந்த ஒப்பனைக்கான விருதை முதல்முறையாகக் கருப்பினப் பெண் வென்றுள்ளார். 

சிறந்த துணை நடிகைக்கான விருதை யுஹ்-ஜுங் யோன், மினாரி படத்துக்காக வென்றுள்ளார். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, வெற்றி கண்ட முதல் கொரிய நடிகை. 

2020-ம் வருடம் இந்த வருடத்தை விடவும் அதிகமான பெண்கள், விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள். எனினும் 13 பேர் மட்டுமே வெற்றியாளர்கள் ஆனார்கள். 2018-ல் ஆறு பெண்களும் 2015 மற்றும் 2007-ல் அதிகபட்சமாக 12 பெண்களும் விருதுகளை வென்றார்கள். 

ஆஸ்கர் 2021: முக்கிய விருதுகளை வென்றுள்ள பெண்கள்

பிரான்சஸ் மெக்டர்மாண்ட் - குளோயி ஜாவ் - மொல்லி ஆஷர் (நோமட்லேண்ட் படக்குழு)

குளோயி ஜாவ் - சிறந்த இயக்குநர் (நோமட்லேண்ட்)
குளோயி ஜாவ்,  பிரான்சஸ் மெக்டர்மாண்ட், மொல்லி ஆஷர் - சிறந்த படம் (நோமட்லேண்ட்)
எமரால்ட் ஃபென்னல் - அசல் திரைக்கதை (பிராமிசிங் யங் வுமன்)
டானா முர்ரே - சிறந்த அனிமேஷன் படம் (சோல்)
பிப்பா எர்லிச் - சிறந்த ஆவணப்படம் (மை ஆக்டோபஸ் டீச்சர்)
அலைஸ் டோயர்ட் - சிறந்த ஆவணக் குறும்படம் (கொலட்)
அன்னே ராத் - சிறந்த ஆடை வடிவமைப்பு (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்) (போட்டிப் பிரிவில் ஆஸ்கர் வென்ற வயதான பெண்)
மியா நீல், ஜாமிகா வில்சன் - சிறந்த ஒப்பன் & கூந்தல் அலங்காரம்  (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
மிச்செல் - ஒலி வடிவமைப்பு (சவுண்ட் ஆஃப் மெடல்)
ஜான் பாஸ்கல் - கலை இயக்கம் (மான்க்)
ஹெர் (கேப்ரியல்லா), டியாரா தாமஸ் - அசல் பாடல் (ஃபைட் ஃபார் யூ)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT