ஸ்பெஷல்

ஜனங்களின் கலைஞனாகவே வாழ்ந்த சின்னக் கலைவாணர்!

ச. ந. கண்ணன்

நடிகர் விவேக்கின் மரணம் தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. நடிப்பிலும் அதனால் கிடைக்கும் புகழில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கலைஞராகவும் கடைசிவரை இருந்தார் விவேக். அதனால் தான் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அத்தனை கலைஞர்களும் அவர் நட்ட லட்சம் மரக்கன்றுகளைப் பற்றி பேசிவிட்டுச் சென்றார்கள். ஒரு நடிகரின் மரணத்தில் பசுமைப்புரட்சி பற்றிய பேச்சுகள் எழுவது அபூர்வம் தான். விவேக்கால் அதைச் சாத்தியமாக்க முடிந்துள்ளது. என்ன ஒரு மகத்தான, அர்த்தமுள்ள வாழ்க்கை. 

1961-ல் கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரில் பிறந்தார் விவேக். விவேகானந்தன் என்கிற பெயரை சினிமாவுக்காக விவேக் என மாற்றிக்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம். படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேரமாக சட்டம் பயின்றார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். மெட்ராஸ் ஹியூமர் கிளப்பில் தனது பங்களிப்பை அளித்தார். அதன் வழியாகவே இயக்குநர் கே. பாலசந்தரின் அறிமுகம் விவேக்குக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்கள் நகைச்சுவை எழுத்தாளராகவே கே.பி.யிடம் விவேக் பணியாற்றினார். பிறகுதான் நடிக்க வாய்ப்பளித்தார் கே.பி.

1987-ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் பாலசந்தர் அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். கே.பி.யின் அறிமுகங்கள் சோடை போனதில்லை என்பதை விவேக்கும் நிரூபித்தார். 

முதல் படத்தில் நடித்த முதல் ஷாட்டிலேயே ரத்தம் சிந்தி நடிக்கறாண்டா என பாலசந்தர் இவரைப் பாராட்டியுள்ளார். தான் நடித்த முதல் ஷாட்டில் படியில் இருந்து இறங்கியபோது கால் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துள்ளது. அதைப் பார்த்துவிட்டு தான் பாலசந்தர் அப்படிக் கிண்டல் அடித்திருக்கிறார். 

பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்து நடித்த புதுப்புது அர்த்தங்கள் படம் மிகப்பெரிய புகழை விவேக்குக்கு அளித்தது. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்று விவேக் பேசிய வசனம் அவரை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. 

எனினும் கவுண்டமணி - செந்தில் கோலோச்சிய காலக்கட்டத்திலும் வடிவேலும் திரையுலகில் புயலென அறிமுகமாகி பல படங்களில் நடித்த 90களில் விவேக்குக்கு உடனடியாக பெரிய திருப்புமுனை நிகழவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து நடித்து வந்தார். சிறிய வேடங்களில் பல படங்களில் தென்பட்டார். இந்த நிலையில் அஜித்துடன் இணைந்து நடித்த காதல் மன்னன் படம் விவேக்குக்குத் தேவையான புகழையும் பெயரையும் பெற்றுத் தந்தது. 1999-ல் வெளியான வாலி படமும் அடுத்த வருடம் வெளியான குஷி படங்களும் விவேக்கின் நகைச்சுவைக்குச் சிறகுகள் அளித்தன. இதன்பிறகு விவேக்கைக் கையில் பிடிக்க முடியவில்லை. ஒரு மகத்தான நகைச்சுவைக் கலைஞராக விவேக் உருவெடுத்தது இந்தக் காலக்கட்டம் தான். 

2000-ம் ஆண்டுப் பிறகு தமிழ் சினிமாவின் நெ.1 நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் விவேக். அவர் நடிக்காத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வரிசையாகப் படங்கள் வெளிவந்தன. கமல் தவிர எல்லாப் பெரிய நடிகர்களின் படங்களிலும் விவேக் இடம்பெற்றார். அவருக்கென்ன தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். கதாநாயகனுக்கு இணையாக ஸ்டைல் செய்வது, வேகவேகமாக வசனம் பேசுவது, அடப்பாவிங்களா என அவ்வப்போது ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவது என விதவிதமான முயற்சிகளில் தனது நகைச்சுவையை மெருக்கேற்றினார். இதனால் விவேக் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கைத்தட்டல் காதைப் பிளந்தது. 

2000-ம் ஆண்டில் விவேக்கும் வடிவேலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாகக் கோலோச்சினார்கள். மகத்தான காலக்கட்டம் அது. அழகி போன்ற படத்தில் கதையின் சுவாரசியத்துக்காக விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் இடையில் சேர்க்கப்பட்டன.

2001-ல் வெளியான மின்னலே படத்தில் - எனக்கு ஐ.ஜி.யைத் தெரியும், ஆனா அவருக்கு என்னைத் தெரியாது என்கிற நகைச்சுவை வசனம் விவேக்குக்குப் பெரிய பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. 2002-ல் வெளியான ரன் படம் பாடல்களால் மட்டுமல்லாமல் விவேக்கின் நகைச்சுவைக்காகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சாமி படம் விவேக்குக்கு மைல்கல்லாக அமைந்தது. 

அடுத்ததாக, சமூகசீர்த்திருத்தக் கருத்துகளைத் தனது நகைச்சுவைக் காட்சிகளில் சேர்த்துக்கொண்டது அவருக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. நகைச்சுவை வசனங்களில் பெரியார், காமராஜர், அப்துல் கலாம், காந்தி ஆகியோரின் பெயர்களை அடிக்கடிப் பயன்படுத்தினார். இதனால் நகைச்சுவையிலும் சமூக் கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். இதற்காக 2009-ல் விவேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 

200 படங்களுக்கும் அதிகமாக நடித்த விவேக் ஐந்து முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். ரன், சாமி, பேரழகன், உன்னருகே நான் இருந்தால், ரன், பார்த்திபன் கனவு, அந்நியன், சிவாஜி போன்ற படங்கள் விவேக்குக்கு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன. 2006-ல் கலைவாணர் விருதைப் பெற்றார். 

சந்தானம், யோகி பாபுவின் வரவுக்குப் பிறகு படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் அவர் தொடர்ந்து நடித்து வந்தார். இடைவெளியில்லாமல் 30 வருடங்களுக்கும் மேலாக நடித்து வந்தார் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், யோகி பாபு என பல போட்டிகளுக்கு மத்தியிலும் கடைசியாக விஜய், அஜித் படங்களில் நடித்துள்ளார் விவேக். நீடித்த உழைப்பும் சலிக்காத ஈடுபாடும்தான் அவரைத் தொடர்ந்து முன்னணிக் கலைஞராக நிலைநிறுத்தியது. 

2014-ல் தனுஷுடன் இணைந்து நடித்த வேலையில்லா பட்டதாரி படம் விவேக்குக்கு மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு பாலக்காட்டு மாதவன், வெள்ளைப் பூக்கள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்த விவேக், சந்தானம் கதாநாயகனாக நடித்த சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்தார். 

நகைச்சுவை நடிகர் என்பவர் கதாநாயன் போல் அழகான தோற்றத்துடனும் ஸ்டைலாகவும் இருக்கலாம் என்பதை நிரூபித்தவர் விவேக். இதனால் நகரம், காதல் சார்ந்த கதைகள் கொண்ட படங்களில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஷங்கர் இயக்கிய பாய்ஸ், சிவாஜி, அந்நியன் படங்களில் விவேக் நடித்துள்ளார். மூன்றிலும் நல்ல கதாபாத்திரங்கள் விவேக்குக்குக் கிடைத்தன. விவேக்குக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த ஷங்கர் கூறியதாவது: மூன்று படங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது எனக்கு மெசேஜ் செய்வார். என்னுடைய சிறந்த 10 கதாபாத்திரங்களில் மூன்று நீங்கள் அளித்தவை தான் என்பார். அந்த மூன்று படங்களின் வெற்றிகளுக்கும் உங்களுடைய நகைச்சுவைக் காட்சிகள் முக்கியக் காரணம் என நான் அவரிடம் தெரிவிப்பேன் என்றார். 

கடைக்காலத்திலும் விவேக்கின் தேவை தமிழ் சினிமாவுக்கு இருந்தது. அஜித் நடித்த விஸ்வாசம், விஜய் நடித்த பிகில் படங்களில் விவேக் நடித்தார். கடைசியாக ஹரிஷ் கல்யாணுடன் நடித்த தாராள பிரபு படத்திலும் பாராட்டுகளைப் பெற்றார் விவேக். யாதும் ஊரே யாவரும் கேளிர், இந்தியன் 2 என அவர் நடித்த இரு படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

30 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடித்த விவேக், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் முதல்முறையாக கமலுடன் இணைந்து நடித்தார். பட அறிவிப்பு வெளியானபோது 2019 ஆகஸ்டில் இதுகுறித்து ட்விட்டரில் விவேக் கூறியதாவது: நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சாருக்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள் எனத் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

விவேக் கதாநாயகனாக நடித்த வெள்ளைப்பூக்கள் படம், 2019-ல் வெளியானது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றார்கள். முதலில் இதுபோன்ற சீரியஸ் படத்தில் நடிக்க மிகவும் யோசித்தேன். மேலும் படக்குழுவினர்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆனால் கதை பிடித்திருந்தது. அமெரிக்கா சென்றபிறகு என்னை நன்குக் கவனித்துக்கொண்டார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் போன்று வேறு எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. கடைசி சில நிமிடங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தும். எனவே தான் செய்தியாளர்களிடம், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெளிப்படுத்தி விட வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தேன். எல்லாமே ஃபர்ஸ்ட் ஷோ வரைக்கும் தானே என்று படம் பற்றி கூறினார் விவேக். 
 

சமூகப் பணிகளால் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நெருங்கிய நண்பராக இருந்தார். தொலைக்காட்சிக்காக அவரைப் பேட்டியெடுத்தார். அதன்மூலம் இருவருடைய நட்பும் அதிகம் பேசப்பட்டது. கிரீன் கலாம் என்கிற பெயரில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு தரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டார். கடைசியாக இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு, கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்க்கும் யாரும் அது ஒரு சினிமா நடிகருடைய சமூகவலைத்தளம் என்று நம்பமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமா பற்றி குறைவாகவும் சமூக அக்கறையுடன் அவர் கலந்துகொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அதிகமாகவும் உள்ளன. 

வேறு எந்த நகைச்சுவை நடிகரும் நடிப்பைப் பாராட்டுவதற்காக போனில் அழைக்க மாட்டார்கள். ஆனால் விவேக் சார் பலமுறை என்னை போனில் அழைத்து என் நடிப்பைப் பாராட்டியிருக்கிறார் என்கிறார் யோகி பாபு. விவேக் கதாநாயகனாக நடித்த 2015-ல் வெளியான பாலக்காட்டு மாதவன் பாடல் வெளியீட்டு விழாவிலும் இசையமைப்பாளர் அனிருத் இதேபோல பேசினார். நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார் யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர் வரை அந்தப் பாடல் சென்றடைந்தது. ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்தபடி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன் என்றார். 

கடந்த வருடம் பாடகர் எஸ்.பி.பி. மறைந்த பிறகு மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் விவேக். கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன் என்றார். 

2019-ல் தமிழ்ச் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டார் நடிகை ரம்யா பாண்டியன். அவருடைய புதிய புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எனினும் அவர் மிகக்குறைவான தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார். இதையடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது: பண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன், தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதைச் சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரைத் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று எழுதி பிரபல இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரையும் டேக் செய்தார். இந்த அக்கறையை வேறு யார் வெளிப்படுத்துவார்?

விவேக்குக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வனி என்ற இரு மகள்கள் உள்ளார்கள். மகன் பிரசன்னகுமார் 2015 அக்டோபரில் காய்ச்சலால் இறந்தார். பிரசன்னகுமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், அவர் சென்னை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மூளைத்தண்டுவட செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுயநினைவை இழந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பிற உறுப்புகளும் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார். இது விவேக் வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து விவேக்குக்கு ஆறுதல் சொன்னார்கள். சோதனையான அக்காலக்கட்டத்தைப் படங்களில் நடித்துதான் மீண்டு வந்தார். 

மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, கண்ணியம் காத்த அனைத்து ஊடகங்களுக்கும் என் நன்றிகள். என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று ட்விட்டரில் எழுதினார் விவேக். பிறகு உதயநிதி நடித்த மனிதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப தடுமாறிக்கொண்டு வருகிறேன். மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று ட்வீட் செய்தார். இறந்துபோன மகனைப் பற்றி உருக்கமான ஒரு கட்டுரை எழுதினார்.  இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை என அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய வார்த்தைகளை எப்போது படித்தாலும் உருக வைக்கும். 

பல்வேறு சமயங்களில் திரைத்துறை தொடர்பாகத் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். 

படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் சில நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளாதது பற்றி 2016-ல் காஷ்மோரா செய்தியாளர் சந்திப்பில் விவேக் கூறியதாவது: 

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி நயன்தாரா வரவில்லை. இப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கதாநாயகிகள் வருவதில்லை. கேட்டால், செண்டிமெண்டாக ஒன்று சொல்கிறார்கள். விழாக்களுக்கு வந்தால் படம் சரியாக ஓடுவதில்லை. எனவே வரவில்லை என்கிறார்கள். அவர்கள் இதுபோல இன்னொன்றும் செய்யலாம். கடைசிக்கட்ட சம்பளத்தையும் தயாரிப்பாளர்களிடம் வாங்காமல் இருக்கலாம். அதையும் செண்டிமெண்டாக வைத்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர்களுக்கும் இதனால் லாபமாக இருக்கும் என்று வேடிக்கையாக ஆலோசனை வழங்கினார். (விவேக்கின் இந்தக்குற்றச்சாட்டுக்கு நயன்தாரா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பதில் அளித்தார். பட விழாக்களில் கலந்துகொள்ளாத நடிகைகளைத் தண்டிக்கவேண்டும் என்று விவேக் சார் சொன்னது என்னைப் பற்றித்தான். கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் தராமல் விட்டுவிட்டால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை என்னவென்றால் என்னுடைய சம்பளத்தைப் பல சமயங்களில் விட்டுக்கொடுத்துள்ளேன். சில படங்களுக்கு என் சம்பளத்தைக் குறைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்புவது கவலை அளிக்கிறது என்றார்.)

2018 ஏப்ரலில், காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் எனத் திரையுலகினருக்கு விவேக் வேண்டுகோள் விடுத்தார். 

அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி - இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை! கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்றார். 

2019 ஜூன் மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விவேக், ஊடகங்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூறியதாவது: 

நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஊடகங்கள் இந்தளவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள். சந்தோஷம் தான். கலைஞர்களைப் போற்றுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இதே நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் வேறு விஷயங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதையும் நீங்கள் ஒளிபரப்பி, மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமை. பல இடங்களில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிட்லப்பாக்கம், மனப்பாக்கம் பகுதிகளில் பொதுமக்களே ஏரிகளைத் தூர் வாருகிறார்கள். அதேபோல நிறைய பேர் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செய்வதை விடியோ எல்லாம் போடுகிறார்கள். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். 

நடிகர் சங்கம் என்பது இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் உள்ள சின்ன அமைப்புதான். இருந்தாலும் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்துகொண்டு வாக்களிப்பதால் இதை மக்கள் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று நீங்கள் இதை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய அந்த ஊடகக் கடமையையும் பாராட்டுகிறேன். அதே போல மக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற குளம் தூர் வாருதல், மரம் நடுதல், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை வீடுகளில் பலர் அறிமுகப்படுத்துதல்... என இதையெல்லாம் கூட மக்களுக்கு எடுத்துச்சென்று பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

திரையுலகில் இப்படிப் பேச இனி யார் வருவார்? 
 

2016-ல் சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலுக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் விவேக் சந்தித்தார். பிறகு அவர் கூறியதாவது: புயலால் சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன. எனவே, வெளிநாட்டு மரங்களுக்குப் பதிலாக நம் மண்ணுக்கான மரங்களை நடவேண்டும். புயலுக்கு ஆல மரம், வெளிநாட்டு வாகை மரம் தாக்குப்பிடிக்கவில்லை. அரச மரம், முருங்கை மரம் போன்றவை தாக்குப்பிடித்தன. ராஜமுந்திரியில் இருந்து மரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து இங்கு நடவேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன் என்றார். 

பள்ளிப் பாடத் திட்டத்தில் மரம் நடுதல் குறித்த விஷயங்களைச் சேர்த்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்று 2018 மே மாதத்தில் தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை விடுத்தார். மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வுப் பாடங்களைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்துக்குச் சென்றார் நடிகர் விவேக். கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதன்படி அமைச்சர் வீரமணியைச் சந்தித்து தன்னுடைய கோரிக்கை மனுவை அளித்தார். மரம் நன்கு வளர்த்த மாணவர்களுக்கு அரசு பாராட்டுப் பத்திரம் வழங்கினால் அது அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும் விவேக் வேண்டுகோள் வைத்தார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று விவேக் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார். பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு கூர்ந்து பரிசீலிக்கவும் என்றார். 
 

அவருடைய வெளிப்படையான பேச்சுகளால் சில எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். 

2019 செப்டம்பரில் பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விவேக் பேசியது சர்ச்சைக்கு ஆளானது. 1960-ல் இரும்புத்திரை என்கிற படம் வெளியானது. நடிகர் திலகம் சிவாஜியும் வைஜெயந்தி மாலாவும் நடித்த படம் அது. அந்தப் படத்தில் நெஞ்சில் குடியிருக்கும் என்றொரு பாடல் உண்டு. நெஞ்சில் குடியிருக்கும் என்கிற வார்த்தைகளுக்கு அப்போது பெரிய தாக்கம் இல்லை. ஆனால் அந்த நெஞ்சில் குடியிருக்கும் என்கிற வார்த்தைகளுக்கு மகத்துவமும் மந்திர சக்தியும் வந்தது, தளபதி வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்த பிறகுதான் என்று பேசினார்.

விவேக்கின் இந்தப் பேச்சுக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜியின் அருமையான பாடலைப் பொது மேடையில் விவேக் கிண்டலடித்திருக்கிறார். இதுபோலத் தொடர்ந்து செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டது. இதற்கு விவேக் பதில் அளித்தார். 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி, நெஞ்சில் குடி இருக்கும். அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதைச் சொல்லும்போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க என்றார். 

2018-ல் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று விவேக் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியது. 

அன்புள்ள மாணவர்களே, குழந்தைகளே! கோடை வெயிலாக இருந்தாலும் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும். விளையாடி முடித்தபிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். மாணவிகள், தங்கள் அம்மாக்களுக்குச் சமையலறையில் உதவுங்கள். கூடவே சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள், தங்களுடைய அப்பாவின் அலுவலகத்துக்குச் சென்று, அவர் குடும்பத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள் என்று ட்வீட் செய்தார்.

விவேக்கின் இந்த ட்வீட்டுக்கு உடனடியாக எதிர்ப்புகள் கிளம்பின. பெண்கள் என்றால் சமையலறைக்கும் ஆண்கள் என்றால் பணியிடங்களுக்கும்தான் செல்லவேண்டுமா? ஏன், மாணவர்கள் சமையலறைக்கும் மாணவிகள் பணியிடங்களுக்கும் செல்லக்கூடாதா என்கிற கேள்வியை எழுப்பிப் பலரும் விவேக்கின் ட்வீட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

இதையடுத்து தன்னுடைய ட்வீட்டுக்கு விளக்கம் அளித்து விவேக் கூறியதாவது: தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்து பெற்றோரும் ஆமோதிப்பர். என்னைப் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி என்றார்.

கடந்த வருடம் தன்னுடைய புதிய புகைப்படங்களை வெளியிட்டார் விவேக். அந்தப் புகைப்படங்கள் அதிகப் பாராட்டைப் பெற்றன. நிர்மல் வேதாச்சலம் எடுத்த புகைப்படங்களில் வெள்ளை உடைகளுடன் வெள்ளை திரைச்சீலை பின்னணியில் விவேக் போஸ் கொடுத்தார். சால்ட் அண்ட் பெப்பரில் உள்ள விவேக்கின் தோற்றமும் அழகான புகைப்படங்களும் பாராட்டுகளைப் பெற்றன. ஆடை வடிவமைப்பாளர் சத்யாவும் அவருடைய குழுவும்தான் இதற்கு முழுக் காரணம் என்றார் விவேக். 

கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தார் விவேக். இதுபற்றி விவேக் விளக்கம் அளித்ததாவது: அரசியலுக்கோ, என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களைப் பார்க்கவில்லை. தமிழ்த் துறவி அருட்பா தந்த வள்ளலார் (1823 - 1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம் என்று கூறினார். 

ஜனங்களின் கலைஞன், சின்னக் கலைவாணர் போன்ற பட்டங்கள் சும்மா கிடைக்கவில்லை என அப்பட்டங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து காண்பித்துள்ளார் விவேக். இன்னொரு ஜனங்களின் கலைஞன் தமிழ்த் திரையுலகுக்கும் தமிழ் சமூகத்துக்கும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT