ஸ்பெஷல்

தெறி வெளிவந்து 5 ஆண்டுகள்: விஜய்யின் பாட்ஷா!

ச. ந. கண்ணன்

புலி என்கிற ஒரு எதிர்பாராத தோல்விப் படத்துக்குப் பிறகு விஜய் நடித்த படம் - தெறி. திரையுலகுக்குப் புதிதாக வந்துள்ள இயக்குநர் அட்லி, அனுபவத் தயாரிப்பாளர் தாணு என்கிற வித்தியாசமான கூட்டணியை நம்பி களமிறங்கினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. சொல்லி அடித்தார் அட்லி.

என் அசிஸ்டன்ட் ஒருத்தன் இருக்கான், அடுத்த வருஷம் படம் பண்ணிருவான். அவன் எப்படி படம் எடுக்குறான் பாருங்க என்று ராஜா ராணி (2013) படம் வரும் முன்பே அட்லி பற்றி பில்ட் அப் கொடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். அதேபோல இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு படங்களிலும் பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக முன்னெறியுள்ளார் அட்லி. தமிழ் சினிமாவில் ஷங்கருக்குப் பிறகு அட்லிக்குத்தான் இந்தளவுக்குத் தொடர் மற்றும் பிரமாண்ட வெற்றிகள் கிடைத்துள்ளன.

ராஜா ராணி கதை படத்தின் கதையைச் சொன்னபோது அப்போது அணிந்திருந்த சட்டை மிகவும் ராசியானது என எண்ணிக்கொண்டேன். அதையே அணிந்துகொண்டு சென்று, தெறி படத்தின் கதையைச் சொன்னேன். ஆனால் அதன்பிறகு அது மிகவும் பழையதாகிவிட்டது. எனவே அண்ணனை நம்பி வேறு சட்டையை அணிந்து மெர்சல் படத்தின் கதையைச் சொன்னேன். அதற்கும் சம்மதம் கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது, எனக்கு ராசி, சட்டை கிடையாது, விஜய் அண்ணன் என்று என்று அட்லி, விஜய்யுடனான கூட்டணி பற்றி பிகில் பாடல் விழாவில் உணர்வுபூர்வமாகக் கூறினார். விஜய் - அட்லி கூட்டணியில் இதுவரை மூன்று வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், தெறியின் வசூல்.

ராஜா ராணி வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் இருந்து அட்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு பெரிய படம் பண்ணக் காத்திருந்தார் அட்லி. அப்போது தான் விஜய் கால்ஷீட்டை வைத்திருந்த தாணுவிடமிருந்து அழைப்பு வருகிறது. நண்பன் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது விஜய்யுடன் அட்லிக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அதனால் நம்பிக்கையாக இருந்துள்ளார்.

தாணுவிடம் சென்று கதை சொல்கிறார். அவர் உடனே விஜய்க்குக் கதை சொல்ல அனுப்புகிறார்.

விஜய் சார் அலுவலகத்துக்குச் சென்றேன், கதை சொல்வதற்காக. வெளியில் சங்கீதா அக்கா இருந்தார். அவருக்கு ராஜா ராணி படம் பிடிக்கும். அதனால் சைலண்டா தம்ஸ் அப் காமிச்சு, வெல்டன்.. எப்படியாச்சும் ஓகே வாங்கிடுங்க’ என்று வாழ்த்தினார். அங்கேயே உற்சாகம் தொடங்கிவிட்டது என்கிறார் அட்லி.

2015, ஜுன் 26 அன்று படத்துக்கு சென்னையிலுள்ள கேரளா ஹவுஸில் பூஜை நடக்கிறது. அன்றைய தினமே அட்லியைப் பாராட்டி மகிழ்கிறார் தயாரிப்பாளர் தாணு. அப்போது அவர் பேசியது அதீதமாகத் தெரிந்தாலும் அட்லியின் திறமையைச் சரியாக எடை போட்டுள்ளார் என்றுதான் கூறவேண்டும். அன்று தாணு பேசியதாவது:

தம்பி (அட்லி) சொன்னார், நான் தயாரித்த 33 படங்களில் இது சிறந்த படமாக இருக்கும் என்று. அதைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களைத் தயாரித்துள்ளேன். இது என் திரைத்துறை வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும். 10 கரண் ஜோஹரை உள்ளடக்கிய கவிதைத்தனமான, கமர்சியல்தனமான நல்ல இயக்குநர் அட்லி. இவருடைய பஞ்ச்சுகள் அபாரமாக உள்ளன.

(நிருபர்களைப் பார்த்து) இப்போது இவருடன் பேசி, பழகுவதை நீங்கள் படத்தின் வெற்றிக்குப் பிறகு நினைவு கூர்வீர்கள். தெளிந்த நீரோடையாக உள்வாங்குகிறார். அதை வெளிப்படுத்துவது அதை விடவும் சிறப்பாக உள்ளது. ஆகவே எத்தகையை எழுச்சி என்றாலும் அதற்கு எடுத்துக்காட்டானவர், அட்லி தான்.

ஷங்கர் நேற்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் சொன்னேன். ஷங்கர், உன்னுடைய தலையாய சிஷ்யனாக அட்லி வருவான், எழுதிவைத்துக்கொள் என்றேன். உண்மைதான் சார். என்னுடன் பழகின காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன் என்றார் ஷங்கர். அதற்கு அத்தாட்சியாக இந்தப் படம் இருக்கும்.  ஒரு சிறந்த இயக்குநரை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கிறேன் என்று ஷங்கரிடம் சொன்னேன்.

விஜய்யின் படங்களின் துப்பாக்கிதான் ஹைலைட்டாக இருக்கக்கூடிய படம். நான் அதிகமாக சொல்வதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் சொன்னதெல்லாம் செய்யக்கூடியவன்தான். துப்பாக்கிக்கு 10 மடங்கு இந்தப் படம்.

அட்லி, பாடல் வாங்கும் விதத்தைப் பார்த்து எனக்குச் சிலிர்த்துவிட்டது. படம் வெளிவரும்போது இந்த நாளை நினைவில் கொள்க. அட்லி, உலகின் சிறந்த இயக்குநராக வருவார் என்றார்.

தெறி பட பூஜையின்போது இயக்குநர் அட்லி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எளிமையான, உணர்வுபூர்வமான படம் இது. ராஜா ராணி போல. விஜய்க்காகச் செய்த கதை இது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். ராஜா ராணியில் நான் ஆக்‌ஷன் பண்ணவில்லை. இதில் ஆக்‌ஷன் உண்டு. ஆக்‌ஷன் கூட அடித்தால் கீழே விழுவதுபோல காட்சி இருக்கும். சூப்பர் நேச்சுரலாக இருக்காது. பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் முக்கியமாகப் பிடிக்கும். நான் அவர்களுக்கு ஏற்றமாதிரி கதை எழுதக்கூடியவன்தான்.

படப்பிடிப்பு ஜூலை 1-ம் தேதி ஆரம்பமாகிறது. டிசம்பர் வரை படப்பிடிப்பு நடக்கும். ஜனவரியில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கும்.

தாணு சார் லெஜண்ட்களில் ஒருவர். அவருடன் படம் பண்ணுவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. என்னை அழைத்து இந்தப் படம் கொடுத்துள்ளார். என் வாழ்க்கையின் மிக முக்கிய சாதனையில் இதுவும் ஒன்றாக இருக்கும். அவரிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார் என்பார்கள். சில விஷயம் கேட்காமல் கொடுக்கிறார். இப்படி ஒரு தயாரிப்பாளர். இது அவருடைய 33-வது படம். தாணு சாருக்கு ஒரு சத்தியம் செய்தேன். அவருடைய 33 படங்களில் நான் சிறந்த படத்தைக் கொடுப்பேன் என்று சொன்னேன். அதற்காகப் போராடி வருகிறேன்.

இந்தப் படத்தில் இயக்குநர் மகேந்திரன் சார் நடிக்கிறார். அவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் யோசித்தேன். கதை அவருக்குப் பிடித்தது. இதற்கு நான் நடித்தால் உங்களுக்கு ஓகேவா என்று பிறகு என்னிடம் கேட்டார். நீங்கள் நடித்தே ஆகவேண்டும் என்றேன். மீனாவின் பெண் குழந்தை முதல்முறையாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷின் 50-வது படம் இது. எல்லாப் பாடல்களையும் வாங்கிவிட்டேன். அவர் ஹீரோவாகிட்டார், கொடுப்பாரா என்று யோசித்தேன். எல்லோருக்கும் பிடித்த எல்லாவிதமான பாடல்களும் இதில் உண்டு. அவருடைய பெஸ்ட் ஆல்பம் இது.

படத்துக்குத் தலைப்பு இன்னும் வைக்கவில்லை. வைத்திருந்தால் பூஜையன்றே தெரிவித்திருப்போம்.

விஜய்யுடன் படம் பண்ணவேண்டும் என்பது என் கனவு. நான் அவருடைய ரசிகன். ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி படம் இருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படி படம் இருக்கும். விஜய் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். என் படத்தைப் பிடிக்கிறவங்களுக்கு இந்தப் படமும் பிடிக்கும் என்றார்.

* படத்துக்கு தெறி என்று பெயர் வைத்ததே புதுமையாக இருந்தது. படத்தின் கதைக்குத் துளியும் தொடர்பும் இல்லாமல் இருந்தாலும் வசீகரமாக இருந்ததால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும் 2007-ல் வெளியான அழகிய தமிழ் மகனுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களின் தலைப்பும் ஒரு வார்த்தையில் மட்டுமே உள்ளது. அதை தெறியும் பின்தொடர்ந்தது.

* நல்ல தகப்பன்கள் இருந்தால் மோசமான பிள்ளைகள் தோன்றமாட்டார்கள். இதனால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. இதை வைத்து விஜய்க்கேற்ற திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி. சமீபத்தில் நடைபெற்ற பிகில் பாடல் வெளியீட்டு விழாவில், பிகில் தான் தன்னுடைய மிகச்சிறந்த திரைக்கதை என்று கூறினார் அட்லி. ஆனால் தெறி படத்தின் முதல் பாதி தான் அட்லியின் திறமையை வெகுவாக வெளிப்படுத்தியது. இன்று வரைக்கும் அட்லியால் அதைத் தாண்டி செல்ல முடியவில்லை. விஜய்க்கென்றே தனித்துவமான காட்சிகளை உருவாக்கியிருந்தார். அட்லி உருவாக்கிய காட்சிகளை விஜய்யும் தன் பாணியில் நடித்ததால் வெகுஜனத்துக்கு ஏற்ற படமாக இருந்தது தெறி. இதனால் 2-வது பாதியில் படத்தில் தொய்வு ஏற்பட்டபோதும் சிறப்பான முதல் பாதி படத்தைக் காப்பாற்றியது.

* முதல் பாதியில் பாட்ஷாத்தனமான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி. கேரளாவில் அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஜோசப் குருவில்லா என்கிற பெயரில் மகளுடன் சாதுவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு ஒரு வலுவான பின்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி. மகேந்திரனின் மகனைக் கொன்று பிணத்தைப் பாலத்தின் கீழே தொங்கவிட்டு, மொட்டை ராஜேந்திரனைக் கொண்டு அதை ஒரு பில்ட் அப் காட்சியாக உருவாக்கியது, அமைச்சர் மகேந்திரனிடம் நான் தான் உங்கள் மகனைக் கொன்றேன், உங்களால் ஒன்றும் செய்யமுடியது என்று சவால் விட்டு நடையைக் கட்டுவது, பள்ளி வகுப்பில் ரெளடிகளை அடைத்து, அவர்களுக்கு நகைச்சுவையாகப் பாடம் நடத்துவது என விஜய் ரசிகர்கள் சிலிர்க்கும் விதத்தில் முதல் பாதியில் காட்சிகளை அமைத்திருந்தார் அட்லி.

விஜய் மகள்

* அட்லி படங்களில் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. சமந்தாவின் அப்பா மற்றும் அவர்கள் குடும்பத்தினரை காபி ஷாப்பில் சந்திக்கும் விஜய், சமந்தாவின் குடும்பம் இனி தனக்கு எந்தவிதத்தில் முக்கியமாக இருக்கப் போகிறது என்பதை உணர்த்தும் காட்சியில் நெகிழ வைத்துவிடுவார்.

* அதுவரை சினிமாவில் நடிக்காத மீனாவின் மகளை இதில் நடிக்க வைத்திருந்தார் அட்லி. விஜய் படம் மற்றும் கதையில் உள்ள முக்கியத்துவம் கருதி நைனிகாவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார் மீனா. முதல் பாதியில் மட்டுமல்லாமல் படத்தின் கடைசிக் காட்சியிலும் நைனிகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

* ஜீ.வி. பிரகாஷின் இசையமைப்பில் வெளியான 50-வது படம் இது. படத்தின் பாடல்களை விடவும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. விஜய் கதாபாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அட்டகாசமான பின்னணி இசையை வழங்கினார் ஜீ.வி. பிரகாஷ்.

* எமி ஜாக்சன் வேடத்துக்கு முதலில் கேரள நடிகைகளைத்தான் பார்த்துள்ளார் அட்லி. ஆனால் எல்லாமே ஏற்கெனவே பார்த்த முகங்களாக இருந்ததால் எமி ஜாக்சனை கேரள ஆசிரியை வேடத்துக்குத் தேர்வு செய்தார். கிளாமர் இல்லாத வேடம் என்பதே அவருக்குப் புதிதாக இருந்தது. எனினும் படத்தில் எமி ஜாக்சனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கவில்லை. முதல் பாதியில் சில காட்சிகளில் வருவார். கடைசிக் காட்சியில் மீண்டும் தென்படுவார்.

* மீனா மகள் மட்டுமல்லாமல் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடிகையாக தெறியில் அறிமுகமானார். கடைசிக்காட்சியில் ஒரிரு நிமிடங்களில் தோன்றி ஒரிரு வசனங்கள் பேசுவார்.​

இயக்குநர் மகேந்திரன் நடிகராக அறிமுகமான படம், தெறி. இந்தப் படத்தில் நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்ற மகேந்திரன், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

தாணு சார் அலுவலகத்துல இருந்து அழைத்திருந்தார்கள். சார், ஒரு ஆப்ளிகேஷன். வீட்டுக்கு வரலாமா என்றார் தாணு. அவரிடம்தான் மற்றவர்கள் ஏதாவது கேட்டுப் போவார்கள். அதனால் திகைத்துப் போய்விட்டேன். அதனால் அவர் எதைக் கேட்டாலும் செய்யவேண்டும் என எண்ணியிருந்தேன். என்னைச் சந்தித்து, இந்தப் படத்துல நீங்கள் நடிக்கணும்னு சொல்லி அதற்கு ஒரு கவித்துவமான காரணத்தைச் சொன்னார்.

இதைச் சொல்ல எனக்குக் கூச்சமாக உள்ளது. அவர் என்ன சொன்னார் என்றால், உங்கள் படங்களில் உலகத்தைக் காட்டினீர்கள். நாங்கள், உலகத்துக்கு உங்களைக் காண்பிக்க ஆசைப்படுகிறோம் என்றார். நான் கேட்டேன், இது மிஸ்டர் விஜய்க்குத் தெரியுமா என்று. அவர் சம்மதித்துதான் உங்களைத் தொடர்பு கொள்கிறோம் என்றார். நான் மிகமிக மதிக்கும் கலைஞன், விஜய். அவருடைய பண்பு, அவர் பழகும் விதம் கேள்விப்பட்டு அவர் மீது எனக்கு அன்பு உண்டு. பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.

எனக்கு நடிக்கக்கூடிய சக்தி உள்ளதா, திறமை உள்ளதா எனத் தெரியவில்லை. ஒப்புக்கொண்டேன். விஜய் தன்னிடமுள்ள உயரத்தை செட்டில் காண்பித்துக்கொள்ள மாட்டார். அற்புதமான மனிதர். நல்ல மனிதாக இருந்தால் மட்டுமே இந்த உயரத்தை அடையமுடியும் என்று பேசினார்.

*

2016, ஏப்ரல் 14 அன்று வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் அசத்தியது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் மெச்சும்படி இருந்தது.

முதல் ஆறு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூல் கிடைத்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் தாணு. அப்போது, விஜய் படங்களில் ஆறு நாள்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் தெறி படம் பெற்றது. மேலும், வட அமெரிக்காவில் (அமெரிக்கா & கனடா) 8 நாள்களில் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்தது. (அதாவது 6.65 கோடி ரூபாய்!) வட அமெரிக்காவில் அதுவரை வெளியான விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமையும் ‘தெறி’க்குக் கிடைத்தது.

* உலகளவில் விஜய் படம் ஒன்று ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது தெறி தான். சென்னையில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துச் சாதித்தது. தாணு தயாரித்த படங்களில் அவர் முன்பே சொன்னது போல தெறி தான் பெரிய வெற்றியை வழங்கியது.

* துப்பாக்கிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும், எந்தளவுக்கு வசூலில் முந்தைய படங்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரிப் படமாக விளங்கியது தெறி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT