ஸ்பெஷல்

கர்ணன் என்ற ஒற்றைக் கல்!

10th Apr 2021 04:02 PM | எஸ். மணிவண்ணன்

ADVERTISEMENT

கல் வெறும் கல் அல்ல. ஒரு கல் அமைதியான கூட்டத்தைப் பெரும் போராட்டமாக மாற்றும். ஒரு கல் நீண்டதொரு போராட்டத்தைப் பெரும் கலவரமாக மாற்றும். ஒரு கல் ஆதிக்க மனப்பான்மையின் அடிவயிற்றில் கனத்தை ஏற்படுத்தும். ஒரு கல் அடக்குமுறையின் பெரும் எழுச்சியை வெளிப்படுத்தும். ஒரு கல் அதிகாரத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு கல் அனைத்திற்கும் துணிந்துவிட்டதை அறிவிக்கும். ஒரு கல் பெரும் பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும். எனில் ஒரு கல் தீர்வையும்கூட ஏற்படுத்தும்!

இவ்வாறு தீர்வை எதிர்பார்க்கும் மக்களின் சார்பிலிருந்து வீசப்பட்டுள்ளது கர்ணன் எனும் கல். புறக்கணிப்பின் பெரும் கொதிப்பில் வெந்து தவித்து அடிப்படை உரிமைகளுக்காக அன்றாடம் நடையாய் நடக்கும் சாமானிய மக்களின் ஆயுதமாக மாறியுள்ள கல், கர்ணன். அந்தக் கல் விழவேண்டிய இடத்தில் சரியாக விழுந்துள்ளது.

ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும். அந்தக் கல்லால் ஏற்படும் காயங்களும் காயங்கள் தரும் வலிகளும் வலிகள் மறைய எழும் தழும்புகளும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும்.

உண்மைகள் மட்டுமல்ல சில நேரங்களில் வரலாறும் கசக்கச் செய்யும். ஏனெனில் அதுவொரு பெரும் உண்மை. வரலாறு கூறும் கதையைவிடப் பெரும் கதையை ஒருவனால் படைத்துவிட முடியுமா என்ன? கர்ணன் ஒரு வரலாறு.

ADVERTISEMENT

புராணக் கதைகள் யாரைப் பற்றி பேசியுள்ளன, யாருக்காக பேசியுள்ளன. எதனைப் பேசியுள்ளன என்ற கேள்விகளை, கல் ஏற்படுத்திய தழும்புகள் ஒவ்வொரு முறையும் நினைவுபடுத்த வேண்டும். கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்போது தழும்புகள் தானாக மறைந்துவிடும்.

கல் ஏற்படுத்திய காயத்தில் தழும்புகள் தெரிய ஆரம்பிக்கும்போது, மதத்தை மூளையில் வைத்து வழிபடுவது தானாக உணர்ந்துவிடும். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி பாரபட்சம் காட்டும் புனிதம் ஒரு புனிதமா என்ற கேள்வியை உண்டாக்கும். அந்தக் கேள்வி உருவாகும்போது மதத்தை மூளையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு வரலாற்றை ஏற்றுக்கொள்ளாதவரை கல் வீசுவது ஒருபோதும் நிறுத்தப்படாது.

கல் வீசுவது வன்முறையல்லவா என்ற கேள்வியை ஒரு தழும்பு நினைவுபடுத்துகிறது. உண்மையில் கர்ணனில் பேருந்து கண்ணாடியை இலக்காக வைத்து அந்தச் சிறுவன் வீசும் கல்லைத் தொட்டுப்பார்த்தவர்கள்,  கர்ணனின் புறப்பாட்டைக் கண்டவர்கள் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தவர்கள்.

புராணக் கதைகளாலும், பெயர்களாலும், பொருளாதார இருப்பாலும், திட்டமிட்டுப் புறக்கணிப்பதும், கட்டாயப்படுத்தி அடிமைப்படுத்துவதும் வன்முறை இல்லை என்றால், கல்வீச்சும் பெரிய வன்முறை அல்ல.

கண்ண புராணத்தில் கீதையாக உபசரிக்கும் கண்ணன் எதை உபசரித்தான் என்பதை மட்டும் தூக்கி சுமப்போர், எதைப் பேசாமலேயே விட்டான் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கர்ண புராணத்தைக் காண வேண்டும்.

வாசலில் மேயும் கோழிக்குஞ்சுகள், கால் கட்டிவிடப்பட்ட கழுதை, தவிட்டுக் கலையங்களில் தஞ்சமடைந்த பூனைக்குட்டி, திண்ணைகளில் படுத்துறங்கும் நாய், கூடவே திரியும் மாடுகள், வேலித்தடுப்பில் கட்டப்பட்ட ஆடுகள், ஆசையாய் வாங்கிய குதிரை, மாடசாமியின் மகன் ஏறும் யானை, மண் தரையில் புழுக்கள், மரத்துப்போன கால்களில் ஏறி இறங்கும் மரவட்டை, சிறைச்சாலை கான்கிரீட் சுவர்களில் அலைமோதும் பட்டாம்பூச்சி என அனைவருக்குமானது உலகம் என்றால் வாழும் மக்கள் அனைவருக்குமானவர்களில்லையா?

வாழ்ந்துவிட்ட ஒரு தலைமுறை இனி வாழவேண்டிய தலைமுறைக்காக போராடிப் போராடிப் பார்த்து, அதிகாரத்திற்கு எதிராக சண்டையிட முடியாமல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்வதுதான் தீர்வா?

ஒருவனின் இறப்பில்தான் ஒரு சமூகத்திற்காகத் தீர்வு கிடைக்கும் என்ற எழுதப்படாத சட்டம் எவன் வீட்டுத் திண்ணையில் நடத்தப்படும் நீதிமன்றங்களில் இயற்றப்பட்டது என்ற கேள்வி ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் கேள்வியாக உள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் சூறையாடப்படுவது எந்த அளவுக்கு வன்முறைச் செயலோ அதே அளவிற்கு வன்முறையானதுதான் ஒருவனைத் தற்கொலைக்குத் தூண்டிக் கரிக்கட்டையாக்குவதும்.

வரலாற்றை மாற்றியமைத்து, வாழ்வு முறையை மூடிமறைத்து, உழைப்பை தட்டிப் பறித்து, உரிமையைத் தர மறுத்து உருவத்தால், பேச்சால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டவனின் குரல் கல்லைக் கொண்டு எறிந்து பேசும்போதுதான் சமூகத்தால் காது கொடுத்துக் கேட்கப்படுகிறது.

மதங்களால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தை மெருகேற்றி மெருகேற்றி மதங்களுக்குள்ளாகவே மனிதர்களைப் பிளவுபடுத்தி வைப்பதால் நிகழும் மரணங்கள்தான் புதிய புதிய தெய்வங்களை ஊருக்கு ஊர் உற்பத்தி செய்கின்றன. அவர்கள் தாங்கள் வீழ்த்தப்பட்டதன் சாட்சிகளாக சிலையாகியுள்ளனர்.

விரல் நுனியில் உலகு என்றாகிவிட்ட காலகட்டத்திலும் விரல் பட்டால் தீட்டு என்ற இடைப்பட்ட கண்ணாடிகளை உடைப்பதற்காகத்தான் கல் எடுக்க வேண்டியுள்ளது. பல கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் கிடைத்தும் சில ஊர் மக்கள் மற்ற ஊர்களில் சென்றுதான் பேருந்தைப் பிடித்தாக வேண்டும் என்பது எதனை வலியுறுத்துகிறது?

மக்களை அறிமுகப்படுத்துவதற்கும் அவர்கள் நடத்தும் போரினை அறிவிப்பதற்கும் இப்படிப்பட்ட இருட்டடிப்புகளில் வெளிச்சமிடுவதற்கும் பேசாமல்விட்ட சொற்களைத் தேடித் தருவதற்கும், கர்ணன் வாள் எடுத்தான். அதற்கு அடிப்படையாக இருந்தது அதிகாரத்திற்கு எதிராக வீசப்பட்ட ஒரு கல்.

அதிகாரம் எவ்வளவு பெரிய பூதம். யாதுமற்ற எளிய வாழ்க்கையை வளரவிடாமல் சூறையாடுவதில் இருக்கிறது அதன் வஞ்சம். வீடேறி அடித்து நொறுக்குவது, பீரோவிலுள்ள கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிவது, பெண்களை அலைக்கழிப்பது, சிறுவர்களை முடமாக்குவது என்று அவை வன்மமாகவே நீள்கிறது. தற்போதும் இதன் நீட்சி தொடர்வதுதான் அந்தக் கல்லுக்கான தேவையை ஏற்படுத்துகிறது.

ஆனால், இவ்வாறு பல தலைமுறைகளாக ரத்தமும் சதையுமாக பார்த்து பழக்கப்பட்டு வாழ்ந்துவிட்ட ஒருவன் வீசும் கல் ஒருபோதும் மற்றொரு ரத்தத்தை பதம் பார்ப்பதற்காக வீசப்படுவதே இல்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அவன் தனக்கான இருப்பை, உரிமையை, வாய்ப்பைத் தேடி நிலைநாட்டி எழுந்து நிற்பதற்காக மட்டுமே அதனை வீசுகிறான். அவ்வாறுதான் வீசப்பட்டுள்ளது கர்ணன் என்ற ஒற்றைக் கல்!

 

Tags : dhanush Karnan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT