ஸ்பெஷல்

பிரபுதேவா பிறந்த நாள்: நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சன்!

3rd Apr 2021 11:08 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

பிரபுதேவாவுக்கு இன்று பிறந்தநாள். 48 வயது.

சென்னையில் பிறந்த பிரபுதேவா, இரண்டு வயது வரை மைசூரிலிருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள அம்மா வழிப் பாட்டி வீட்டில் தூரா கிராமத்தில் வளர்ந்தார். பிறகு, பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலில் மயிலாப்பூர் கேம்ப்ரிட்ஜ் பள்ளியிலும் நான்காம் வகுப்பு முதல் சாந்தோம் பள்ளியிலும் படித்தார். மிகவும் பிடித்த கேம்ப்ரிட்ஜ் பள்ளியில் சாந்தோம் பள்ளிக்கு மாறியதால் தனது உற்சாகத்தை இழந்து அமைதியாக மாறினார் பிரபுதேவா. அந்த அமைதியான சுபாவம் தான் இன்றுவரை தொடர்கிறது.

அண்ணன் ராஜு சுந்தரம், பிரபுதேவா, பிரசாத் என தமிழ் சினிமாவின் பிரபல நடனக் கலைஞர் மாஸ்டர் சுந்தரத்துக்கு மூன்று மகன்கள். பிரபுதேவாவின் அம்மா பெயர் மகாதேவம்மா. (சித்தி, மாமன்களும் திரையுலகினரும் அக்கா என்று அழைப்பதால் பிரபுதேவாவும் தன் அம்மாவை அக்கா என்றே அழைத்துள்ளார். அப்பாஜி என சுந்தரம் மாஸ்டரை அழைப்பார்.)  

ADVERTISEMENT

உனக்குப் பிடித்ததை செய்

தந்தை, சகோதரருடன் நடனமாடும் பிரபுதேவா

14 வயது முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா. பதினோறாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டதால் வாழ்க்கை திசை மாறியது. அதுவரை கற்றுக்கொண்டிருந்த நடனத்திறமை கைகொடுத்தது.

தர்மராஜ் மாஸ்டரைக் கொண்டு ஏழாவது படித்துக்கொண்டிருந்த பிரபுதேவா உள்ளிட்ட மூன்று பிள்ளைகளுக்கும் நடனப் பயிற்சியை ஆரம்பித்தார் சுந்தரம் மாஸ்டர். வெஸ்டர்ன் நடனத்தில் பிய்த்து உதறும் பிரபுதேவா முதலில் முறையாகக் கற்றுக்கொண்டது பரதநாட்டியம் தான். மூவருக்கும் கடுமையான பயிற்சியை அளித்துள்ளார் தர்மராஜ் மாஸ்டர். இப்போது கேட்டாலும் அந்தப் பயிற்சியைப் பற்றி வியந்தபடி பேசுவார் பிரபுதேவா. மின்னல் வேகத்தில் நடனம் ஆடும் பயிற்சியை தர்மராஜ் மாஸ்டரிடம் தான் பிரபுதேவா கற்றுக்கொண்டுள்ளார். ஒருநாள் இடைவெளி இல்லாமல் தினமும் ஒன்றே கால் மணி நேரம் மாஸ்டரிடம் கடினமாக நடனப் பயிற்சி எடுத்ததுதான் அவருடைய நடனத் திறமையை வெகுவாக உயர்த்தியது.

மணி ரத்னம் படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர், பிரபுதேவா. ஊட்டியில் நடைபெற்ற மெளன ராகம் படத்தின் படப்பிடிப்புக்கு பிரபுதேவாவையும் அழைத்துச் சென்றிருந்தார் சுந்தரம் மாஸ்டர். ஹோட்டலில் இருந்த மணி ரத்னம், பி.சி. ஸ்ரீராம், தோட்டாதரணி ஆகிய மூன்று பேரிடமும் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் முன்பு தான் கற்று வரும் பரதநாட்டியத்தை ஆடிக்காண்பிக்க, மணி ரத்னத்துக்கு அது பிடித்துவிட்டது. அப்போது பிரபுதேவா 8-வது படித்துக்கொண்டிருந்தார். பனி விழும் நிலவு பாடலில் புல்லாங்குழல் வாசிப்பது போல நடிக்க வாய்ப்பளித்தார் மணி ரத்னம். இதற்குச் சம்பளமாக ரூ. 500 வழங்கினார். இதன்பிறகு தந்தை நடனம் அமைக்கும் படங்களின் படப்பிடிப்புகளுக்கு அடிக்கடிச் செல்ல ஆரம்பித்து, சில பாடல்களில் நடிக்கவும் செய்தார்.

9-வது படிக்கும்போதுதான் அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில் கார்த்திக்கின் பின்னால் முதல் வரிசையில் நன்கு தெரியும்படி ஆடினார் பிரபுதேவா. அந்தப் பாட்டில் ஒரு இடத்தில் சுந்தரம் மாஸ்டரின் ஸ்டைலில் இருந்து மாறுபட்டு நடனம் அமைத்தார் பிரபுதேவா. இதைப் பார்த்த பிறகுதான் சுந்தரம் மாஸ்டர் பிரபுதேவாவின் சினிமா வாழ்க்கை பற்றி திட்டமிட்டிருக்கவேண்டும். அந்தப் பாட்டுக்குப் பிறகுதான் பிரபுதேவாவுக்கு நடனம் ஆடத் தெரியும் என்று அவருடைய பள்ளிக்கே தெரிந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் பிரபுதேவா. ஆனால் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்ததால் பள்ளி வாழ்க்கைக்குத் தடை ஏற்பட்டது. ஃபெயிலான மகனை அடிக்காமல், உனக்குத் தெரிந்ததை செய் எனச் சுதந்திரம் அளித்தார் சுந்தரம் மாஸ்டர். இதனால் 12-ம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்ந்தும் தொடர முடியாமல் சினிமாவே உலகம் என தனக்கான பயணம் நோக்கி நகர ஆரம்பித்தார்.

இதன்பிறகு பிரபுதேவாவின் கனவில் எல்லாம் நடன அசைவுகள் வர ஆரம்பித்தன. தூக்கத்திலிருந்து எழுந்து அதைப் பயிற்சி செய்து பார்த்து அடுத்த நாள் படப்பிடிப்பிலும் அதைப் பயன்படுத்தியுள்ளார். தந்தை நடன இயக்குநராக இருந்ததால் திரையுலகில் சுலபமாக நுழைய முடிந்தது. ஆனால் தனக்கான அடையாளத்தை தன் திறமைகள் மூலம் தேடிக்கொண்டார். வித்தியாசமான நடன அமைப்பின் மூலம் அனைவரையும் காந்தம் போல தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

விளையும் பயிர்...

வெற்றி விழா படத்தில் வானம் என்ன கீழிருக்கு பாடலில் கமலுக்கு பிரபுதேவாவும் பிரபுவுக்கு ராஜு சுந்தரமும் நடனம் கற்றுத் தந்தார்கள். பிரபுதேவா அளித்த கடினமான அசைவுகளை அசால்டாக ஆடி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கமல். தத்தோம் ததாங்கு தத்தோம் பாடலுக்கு நீயே நடனம் அமைத்துவிடு என்று தட்டிக்கொடுத்தார் சுந்தரம் மாஸ்டர். நீ நன்றாக நடனம் அமைத்தால் டைட்டில் கார்டில் உன் பெயரைப் போடுகிறேன் என்று கூறினார் பிரதாப் போத்தன். (ஆனால் அப்படிச் செய்யவில்லை. படத்தின் டைட்டில் கார்டில் என் பெயர் உள்ளதா என இன்று வரை எனக்குத் தெரியாது. பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் பிரபுதேவா.) மாப்பிள்ளை படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்த சிரஞ்சீவி, பிரபுதேவாவை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளார். மாப்பிள்ளை, தளபதி என ரஜினி நடிக்கும் படங்களில் அவர் வழக்கமாக ஆடும் நடனங்களை மாற்றியுள்ளார் பிரபுதேவா. திரையுலகம் முழுக்க பிரபுதேவாவின் திறமையைப் பற்றிதான் அனைவரும் பேசினார்கள். ஒரு வளமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரிந்தது.

நடனத்திறமையால் பாடல்களில் (மட்டும்) நடிக்க வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைத்தது. இந்தப் பாணியே ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. இதயம் படத்தில் ஏப்ரல் மேயில் பசுமையே இல்லை, ஜெண்டில்மேன் படத்தில் ஜிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ராசாவே, சூரியன் படத்தில் லாலாக்கு டோல் டப்பிமா என 90களின் ஆரம்பத்தில் இளைஞர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவராக இருந்தார். பிரபுதேவா நடனமாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் அளித்த ஆரவாரத்தைத் திரையுலகம் கவனிக்காமல் இல்லை.

சூரியன் படத்தில் நடித்ததால் இரு பெரிய வாய்ப்புகள் வந்தன பிரபுதேவாவுக்கு. சூரியன் படத்தை இயக்கிய பவித்ரனின் அடுத்தப் படமான இந்து-வின் கதாநாயகன் ஆனார். ஜெண்டில்மேன் படத்தில் ஜிக்குபுக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பும் கிடைத்தது. (சூரியன் படத்தில் இயக்குநர் ஷங்கர் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.)

கதாநாயகன் வருகை

90களில் தமிழக இளைஞர்களை அதிகம் ஈர்த்தவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.

சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா.

சூரியன் படத்தில் நடித்த ஒரு பாடலிலேயே அசத்தியதால் அப்பட இயக்குநர் பவித்ரன் தனது அடுத்தப் படத்தில் பிரபுதேவாவைக் கதாநாயகன் ஆக்கினார். தேவாவின் பாடல்கள் படம் வெளிவரும் முன்பே ஹிட் ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

அடுத்தது இன்னும் பெரிய வாய்ப்பு. குஞ்சுமோன் தயாரிப்பில் ரஹ்மான் இசையில் ஷங்கர் இயக்கத்தில் நக்மாவுக்கு ஜோடியாக காதலன் படத்தில் நடித்தார் பிரபுதேவா. இளைஞர்களின் நாடிபிடித்துப் பார்த்து உருவாக்கிய படம் போல பாடல்களும் இளமையான காதல் கதையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தது.

இந்தப் படத்தில் பிரபுதேவாவைக் கதாநாயகனாக நடிக்க வைக்க முதலில் ஷங்கர் தயங்கியுள்ளார். ஆனால் பிரபுதேவா தான் சரியாக வருவார் என குஞ்சுமோன் அழுத்தம் கொடுத்து பிரபுதேவாவைக் கதாநாயகனாக நடிக்கவைத்துள்ளார். படம் சூப்பர் ஹிட் ஆனதோடு நான்கு தேசிய விருதுகளையும் அள்ளியது.

சமீபத்தில் காதலன் படம் 25-வது வருடத்தை நிறைவு செய்தது. இதற்கு ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் கூறியதாவது: என் படங்களில் பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டும் என ஆசைப்படமாட்டேன். அதனால் புதுமுகங்களைத் தேர்வு செய்ய ஷங்கரிடம் சொன்னேன். எனக்கு சுந்தரம் மாஸ்டர் நன்குப் பழக்கமானவர். நான் தயாரிக்கும் படத்தில் பிரபுதேவாவை நடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக என் அலுவலகத்துக்கு வருவார். அதனால் ஷங்கரிடம் பிரபுதேவாவைப் பரிந்துரை செய்தேன். ஆனால் அவருக்கு அதில் அந்தளவுக்குத் திருப்தி இல்லை. கதாநாயகனாக நடிக்காத பிரபுதேவாவைத் தேர்வு செய்ய தயங்கினார். எனவே விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டார். பிரபுதேவாவைக் கதாநாயகனாக மக்கள் ஒப்புக்கொள்வது குறித்து அவர்களும் தயக்கம் காட்டினார்கள். பாடல்களில் மட்டுமே நடித்த பிரபுதேவா இரண்டரை மணி நேரப் படத்துக்குத் தாங்குவாரா என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது. கதாநாயகியாக நடிக்க மாதுரி தீட்சித்தை அணுகினோம். ஆனால் அவருடைய தேதிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

பாடல்களும் பிரமாண்டமான காதல் கதையும் அட்டகாசமான நடனமும் பிரபுதேவாவை வெற்றிகரமான கதாநாயகனாக நிலைநிறுத்தியது. இதனால் பிரபுதேவாவின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

தொடர் தோல்விகள்

காதலனின் பெரிய வெற்றியை பிரபுதேவாவால் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியா என ஹாட்ரிக் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் நடனத்துக்காகத் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை பிரபுதேவா எப்போதும் ஏமாற்றியதில்லை.

மின்சாரம் பாய்ந்தது

லக்‌ஷ்மி படப்பிடிப்பில்...

பட அறிவிப்பே பிரமாண்டமாக இருந்தது. ஏ.வி.எம். தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மின்சார கனவு என்கிற அறிவிப்பே ரசிகர்களுக்கு சிலிர்ப்பூட்டியது. அதேபோல ரஹ்மானின் பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டின. படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்துக்கிடந்தார்கள்.

ஆனால் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் முதலில் மறுத்துள்ளார். பிரபுதேவாவின் கால்ஷீட்டை வைத்திருந்த ஏ.வி.எம்., முதலில் ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய சென்றார்கள். ஆனால் ஏற்கெனவே பிரபுதேவா நடித்த மூன்று படங்களுக்கு இசையமைத்துவிட்டேன் என இந்தப் படத்தில் இசையமைக்க ரஹ்மான் முதலில் மறுத்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் புதிய இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்தது ஏ.விஎம். ரஹ்மான் தான், ராஜீவ் மேனின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இப்படித்தான் இந்த அற்புதமான கூட்டணி அமைந்தது.

பம்பாய் படத்துக்குப் பிறகு இன்னும் சில படங்களை ஒளிப்பதிவு செய்துவிட்டு, படங்களை இயக்கலாம் என்றிருந்த ராஜீவ் மேனனுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு எதிர்பாராதது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அசத்தலான பாடல் காட்சிகளை அமைத்தார். அதுவே படத்தை வெற்றியடைய வைத்தது,

வெண்ணிலவே வெண்ணிலவே...

கதாநாயகனும் கதாநாயகியும் தொட்டுக்கொள்ளாமல் ஆடவேண்டும். இதுதான் ராஜீவ் மேனன், வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்குச் சொன்ன சிச்சுவேஷன்.

அது எப்படிச் சாத்தியம் என பிரபுதேவாவுக்குப் புரியவில்லை. உடனே ராஜீவ் மேனனே ஆடிக்காண்பித்தார். அதிலிருந்து நடன அசைவுகளை அமைத்தார் பிரபுதேவா. இந்தப் படத்துக்கு முன்பு லூஸான பேகி பேண்ட் அணிந்துதான் எல்லாப் பாடல்களிலும் ஆடுவார் பிரபுதேவா. அதுதான் பிரபுதேவா பாணி நடனத்துக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் படத்தயாரிப்பாளரின் மகள் ப்ரியா, காஸ்டியூம் டிசைனராக நியமிக்கப்பட்டார். பிரபுதேவாவுக்கு இதுபோல ஒரு தனி ஆடை வடிவமைப்பாளர் பணிபுரிவது முதல்முறை என்பதால் இந்த மாற்றம் உடைகளில் தென்பட்டது. வெள்ளை சட்டை, கருப்பு நார்மலான பேண்ட் அணிந்து பிரபுதேவா நடனமாடியதே தனி அழகைத் தந்தது. இந்தப் படத்தில் பணியாற்றி பிரபுதேவாவைக் கவர்ந்த கேமராமேன் வேணு தான் பிரபுதேவா 2005-ல் இயக்கிய முதல் படமான நுவ்வொஸ்தாவன்டே நேனொத் துன்டானா-வுக்கும் கேமராமேனாகப் பணியாற்றினார்.

மின்சார கனவு படம் வெளிவந்தபோது, படம் பிளாப் என்றே முதலில் முடிவுகள் வந்தன. பிரபுதேவாவுக்கு இன்னொரு தோல்விப்படமா என திரையுலகம் அதிர்ச்சியானது. ஆனால் இளமையான பாடல்களும் பிரபலங்கள் கொண்ட படத்தின் கூட்டணியும் திரையரங்குக்கு ரசிகர்களை இழுத்தன. இதனால் முதல் வாரத்துக்குப் பிறகு ஹிட் என்கிற அந்தஸ்தை அடைந்தது மின்சார கனவு. இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு நடிகர் விக்ரமும் கஜோலுக்கு நடிகை ரேவதியும் டப்பிங் கொடுத்தார்கள்.

காதலன் படத்துக்குப் பிறகு பிரபுதேவா நடித்த இந்தப் படமும் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றது. வெண்ணிலவே, ஸ்ட்ராபெரி கண்ணே பாடல்களுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார் பிரபுதேவா. இதன்பிறகு 2004-ல் லக்‌ஷயா படத்துக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார். 2019-ல் பத்மஸ்ரீயும் 2015-ல் கலைமாமணி விருதுகளும் பெற்றுள்ளார்.

முதல்முறையாகத் தேசிய விருது வாங்கியவுடன் பிரபுதேவாவுக்குச் சிறிய வயதில் நடனம் கற்றுத்தந்த தர்மராஜ் மாஸ்டர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு போன் செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். விருதுகளெல்லாம் வரும் போகும். உன் வேலையைச் சரியாக செய் என்று அப்போதும் அறிவுரை கூறியுள்ளார் தர்மராஜ் மாஸ்டர். அவருக்கு என்னுடைய நடனம் மிகவும் பிடித்தாலும், ஒருபோதும் நன்றாக நடனம் ஆடினாய் என பாராட்டியதேயில்லை என்கிறார் பிரபுதேவா.

மீண்டும் தோல்விகள்

தேவி 2 படத்தில்...

மின்சார கனவு படம் தான் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து பெரிய அளவில் ஹிட் ஆன படம். இதற்குப் பிறகு மீண்டும் நிறைய தோல்விகளைச் சந்தித்தார் பிரபுதேவா. வி.ஐ.பி. ஓரளவு ஓடியது. பிறகு வந்த நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, டைம் என அடுத்தடுத்து தோல்விகள் ஏற்பட்டன. விஜய்காந்தின் தம்பியாக பிரபுதேவா நடித்த வானத்தைப் போல ஹிட் ஆனது. அதேபோல கே. சுபாஷ் இயக்கிய ஏழையின் சிரிப்பில் படமும் ஹிட் ஆனாலும் காதலன், மின்சார கனவு போன்ற பிரமாண்டமான வெற்றி பிரபுதேவாவுக்குப் பிறகு கிடைக்கவில்லை.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் அதிகம் நடிப்பது குறைந்துபோனது. அதற்கு அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளும் படத்தோல்விகளும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நடித்தது போதும் என இயக்குநர் அவதாரம் எடுத்தார் பிரபுதேவா. இதனால் 2004-ல் நடித்த எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு தமிழில் பிரபுதேவா நடிக்க 12 வருடங்கள் ஆகின.

2016-ல் விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். 

தன் அப்பா தாடியுடன் இருப்பதால் பிரபுதேவாவுக்கும் தாடி வைப்பது பழக்கமாகிவிட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் மட்டும் தாடியில்லாமல் நடித்தார். இரட்டை வேடங்களில் நடித்தாலும் தாடியுடன் நடிப்பார் பிரபுதேவா.

பிரபல ஹிந்தி இயக்குநர்

சல்மான் கானுடன் பிரபுதேவா (படங்கள் - twitter.com/PDdancing)

படம் இயக்கவேண்டும் என்கிற பிரபுதேவாவின் ஆசையைத் தொடங்கி வைத்த படம் - சித்தார்த் நடித்த என்கிற நுவ்வொஸ்தாவன்டே நேனொத் துன்டானா தெலுங்குப் படம். முதல் படம் சூப்பர் ஹிட். இந்தப் படம் தமிழில் உனக்கும் எனக்கும் என்கிற பெயரில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்து வெளியானது. மீண்டும் பெளர்ணமி என்கிற மற்றொரு தெலுங்குப் படத்தை இயக்கிய பிரபுதேவா, தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு என இரு படங்களை இயக்கினார். ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த எங்கேயும் காதலும் மற்றும் வெடி ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா அதன்பிறகு ஹிந்திப் பக்கம் சென்றுவிட்டார்.

போக்கிரி படத்தை ஹிந்தியில் வாண்டட் என்கிற பெயரில் சல்மான் கான் நடிப்பில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட் ஆக, பாலிவுட் பிரபுதேவாவை வளைத்துக்கொண்டது. சல்மான் கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் என பெரிய நடிகர்கள் நடித்த படங்களை இயக்கியுள்ளார் பிரபுதேவா. சல்மான் கான் நடிப்பில் 3 படங்களும் அக்‌ஷய் குமார் நடிப்பில் இரு படங்களும் இயக்கியுள்ளார். ஹிந்தி தெரியாமல் தான் இன்று வரைக்கும் ஹிந்திப் படங்களை இயக்கி வருகிறார் பிரபுதேவா. பதிலாக, ஹிந்தி நடிகர்கள் பிரபுதேவாவிடமிருந்து ஓரளவு தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

சொந்த வாழ்க்கை

2019-ல் பத்மஸ்ரீ விருது வாங்கிய மகிழ்ச்சியில் பிரபுதேவா

பிரபுதேவாவின் சொந்த வாழ்க்கையைப் பேசாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. முதலில் நடனக் கலைஞர் ரம்லத்தை 1995-ல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் மூன்று மகன்கள் பிறந்தார்கள். விஷால், ரிஷி ராகவேந்திரா, அதித் தேவா. புற்றுநோய் காரணமாக மூத்த மகன் 2008-ல்  இறந்துபோனார்.

பிரபுதேவா - ரம்லத் காதல் திருமணம், கடைசியில் விவாகரத்தில் தான் முடிந்தது. 2008 முதல் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்திருந்தார்கள். நடிகை நயன்தாராவை பிரபுதேவா காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இந்தத் திருமணத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ரம்லத். இதையடுத்து பிரபுதேவா, நயன்தாரா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் ரம்லத். இருவருக்கும் 2011-ல் விவாகரத்து கிடைத்தது. விவாகரத்து பெற்ற பிறகு நயன்தாராவுடனான காதலும் முறிந்தது. 

பிகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த வருடம் மே மாதம் சென்னையில் திருமணம் செய்தார் பிரபுதேவா. ஊரடங்குக் காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டார்கள். இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபு தேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம், பிரபு தேவாவுக்குத் திருமணம் ஆனது உண்மைதான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறினார். 

இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன்

பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருந்த பிரபுதேவாவுக்கு மேற்கத்திய நடனம் மீது ஆசை வருவதற்குக் காரணமாக இருந்தவர், மைக்கேல் ஜாக்சன். பள்ளி வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மைக்கேல் ஜாக்சன் நடனம் மீதும் ஆர்வம் வந்து வீட்டில் சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி எடுத்துள்ளார். பள்ளிக்காலத்தில் ஒரே ஒருமுறை தான் மேடையேறி நடனம் ஆடியுள்ளார் பிரபுதேவா. அதுவும் மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்குத்தான். இதன்பிறகு பாடும் வானம்பாடி படத்தில் ஆனந்த் பாபுவின் நடனமும் பிரபுதேவாவை ஈர்த்தது. அப்படத்தின் வெற்றி விழாவில், இதுபோல நடனமாட இனியும் ஒருவர் பிறக்கப்போவதில்லை என்று சொல்ல அது பிரபுதேவாவை மிகவும் உசுப்பேற்றியுள்ளது. வீட்டில் எடுக்கும் பயிற்சிகளும் நேரமும் வேகமும் அதிகமாகின.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என 90களில் பிரபுதேவாவை அனைவரும் புகழ்ந்தார்கள். சிறிய வயது முதல் மைக்கேல் ஜாக்சன் மீதிருந்த ப்ரியம் குறையவேயில்லை. ஜெர்மனியில் மைக்கேல் ஜாக்சன் ஆடிய மேடையில் பிரபுதேவாவும் ஆடும் (பரதநாட்டியம்) வாய்ப்பைப் பெற்றார். இருவரும் ஒன்றாக ஆடும்படி நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. ஆனால் சிறிய விபத்து காரணமாக மைக்கேல் ஜாக்சனால் பிரபுதேவாவுடன் இணைந்து ஆடமுடியாமல் போனது. பிறகு மைக்கேல் ஜாக்சன் மும்பை வந்தபோது அவரைச் சந்திக்க மூன்று பேருக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பிரபுதேவா.

Tags : Prabhu Deva Happy Birthday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT