ஸ்பெஷல்

90களில் எவரெஸ்ட் உயரத்துக்கு முன்னேறிய சூப்பர் ஸ்டார்!

1st Apr 2021 03:14 PM | எழில்

ADVERTISEMENT

 

அபூர்வ ராகங்கள் முதல் தர்பார் வரை 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. அண்ணாத்த, ரஜினி நடிக்கும் 168-வது படம்.

1975, ஆகஸ்ட் 15 அன்று அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரஜினி. திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. 

80களில் வெளிவந்த படங்கள் ரஜினிக்கு எப்படி அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கான பலமான அஸ்திவாரத்தை உருவாக்கியதோ அதுபோல 90களில் வெளியான படங்கள் ரஜினியை யாரும் தொட முடியாத உயரத்தில் நிறுத்தின. 90களில் பெரிய அந்தஸ்துக்கு ரஜினி எப்படி உயர்ந்தார்? 

1991: ரசிகர்களின் தளபதி

ADVERTISEMENT

தளபதி படப்பிடிப்பில் ரஜினி - மணி ரத்னம்

ஆரம்பமே அட்டகாசம்.

தர்மதுரை, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி என மூன்று தமிழ்ப் படங்களில் நடித்தார் ரஜினி.    

மணி ரத்னத்துடன் முதல்முறையாக (அதுவே இதுவரை கடைசியாகவும்) இணைந்த ரஜினி, ஒரு புதிய ஆக்‌ஷன் ஸ்டாராக அதில் மிளிர்ந்தார். ராக்கம்மா கையத் தட்டு பாடலில் வித்தியாசமான நடனத்தையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். நட்பு, ஆக்‌ஷன், தாய் செண்டிமெண்ட் என பல கலவைகளில் கதையை உருவாக்கியிருந்தார் மணி ரத்னம். 90களில் ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்களின் பிரமாண்டம் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டியது.

1992: மெகா ஹிட்களைத் தொடங்கி வைத்த வருடம்

அண்ணாமலை படத்தில் ரஜினி - குஷ்பு

1992-ம் வருடம் தமிழ் சினிமாவுக்குப் பல விதத்திலும் மிக ராசியாக அமைந்தது.

மணி ரத்னத்தின் ரோஜா, இந்தியா முழுக்க ஹிட் ஆனது. 

இந்தப் படம் மணி ரத்னத்தை இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநராக உயர்த்தியது. அடுத்ததாக ரஹ்மான் என்கிற ஒரு பெரிய கொடையைத் தமிழ் சினிமாவுக்குத் தந்தது. 

தேவர் மகன் என்கிற மகத்தான படம் கமலுக்கு அமைந்தது.     

நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். 

ரஜினிக்கும் ஒரு மகத்தான வருடமாக 1992 இருந்தது. இந்த வருடத்திலிருந்து தான் ரஜினியின் வளர்ச்சி நம்பமுடியாத உயரத்துக்குச் சென்றது.

முதலில் வெளியான மன்னன் படமே அட்டகாசமான வெற்றியை அடைந்தது. ரஜினி - விஜயசாந்தி இடையிலான மோதல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 

அடுத்து, அண்ணாமலை.

ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா என்கிற வெற்றிக்கூட்டணி கைகோத்தது இந்தப் படத்திலிருந்துதான். ஒரு ரஜினி படம் எப்படி இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அதற்கு இம்மியும் குறையாமல் இந்தப் படம் அமைந்தது. தேவாவின் பாடல்களும் ரஜினியின் படங்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்தன. இதை விடவும் இன்னொரு பெரிய வெற்றி ரஜினிக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்று எண்ணவைத்த படம்.

எனினும் அந்த வருடத்தின் இறுதியில் பாண்டியன் என்கிற தோல்விப்படத்தில் நடித்தார் ரஜினி. இதனால் எஸ்.பி. முத்துராமனுடனான கூட்டணி இந்தப் படத்துடன் முடிந்துபோனது. முத்துராமனும் இதற்குப் பிறகு தொட்டில் குழந்தை என்கிற படத்தை இயக்கிவிட்டு அத்துடன் படங்களை இயக்குவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

1993: வெற்றி நடை

எஜமான் படத்தில் ரஜினி - மீனா (படம் - twitter.com/ProductionsAvm)

அண்ணாமலைக்குப் பிறகு வெளிவந்த பாண்டியன் சொதப்பினாலும் 93-ல் எஜமான், உழைப்பாளி என ரஜினி நடிப்பில் இரு படங்கள் வெளிவந்தன. வள்ளி படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். அண்ணாமலையினால் கிடைத்த வெற்றியை எஜமானும் உழைப்பாளியும்க் கட்டிக்காத்தன என்று சொல்லலாம். எஜமான் படத்தில் கிராமத்து வேடத்தில் படம் முழுக்க வேட்டி கட்டி நடித்தது வித்தியாசமாக இருந்தது.

1994: நகைச்சுவை வெற்றி

அண்ணாமலை படத்துக்குப் பிறகு பாட்ஷா படத்தின் திருப்புமுனைக் காட்சியை மட்டும் விவரித்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மருத்துவக் கல்லூரியில் அதன் உரிமையாளரிடம் தங்கைக்காக ரஜினி கெஞ்சும் காட்சி. ஹிந்திப் படத்தில் தேவையில்லை என்று நீக்கப்பட்ட இந்தக் காட்சியை வைத்து பாட்ஷா படத்தின் முழுக் கதையையும் உருவாக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

ரஜினி மறுத்துவிட்டார். அண்ணாமலைக்குப் பிறகு இன்னொரு ஆக்‌ஷன் படம் வேண்டாம். அது அண்ணாமலையை விடப் பெரிதாக இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் ஒரு நகைச்சுவைப் படத்தைத் தந்துவிட்டு பாட்ஷாவைத் தொடங்கலாம் என்று கூறியிருக்கிறார் ரஜினி. சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இது நல்ல யோசனையாகப் பட்டது. வீரா உருவானது.

வீரா படத்தின் அற்புதமான பாடல்களுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. ஆரம்பத்தில் இளையராஜா போட்டு தந்த பாடல்கள் சுரேஷ் கிருஷ்ணாவுக்குத் திருப்தியில்லை. பலரும் பாடல்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் என ராஜாவிடம் சொல்ல அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று மட்டும் சொல்லவும் என சுரேஷ் கிருஷ்ணாவிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இதற்குப் பிறகு மீண்டும் பாடல்களை வேறுவிதத்தில் உருவாக்கினார் ராஜா. அவற்றைத்தான் இன்று வரைக்கும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இரு தாரம் கொண்ட கதைக்கு நகைச்சுவைக் காட்சிகள் சரியாக அமைந்ததால் பெரிய வெற்றியை அடைந்தது வீரா. சரி, இப்போது பாட்ஷாவைத் தொடங்கலாம் எனச் சொன்னார் ரஜினி.

1995: நெருங்க முடியாத உயரத்துக்குச் சென்ற ரஜினி!

பாட்ஷா படத்தில் ரஜினி

ரஜினியிடம் எப்படிப்பட்ட ஒரு ஆக்‌ஷன் படத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அதேபோல அமைந்தது பாட்ஷா. ஆரம்பத்தில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு அவமானங்களை எதிர்கொள்ளும் ரஜினியின் பின்னணி பிறகு விரிந்த போது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். ஐயா, என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேரு இருக்கு... என்று டேபிளில் இரு கைகளையும் வைத்து குனிந்தபடி ரஜினி சொல்லும் அந்தக் காட்சியை எப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்குச் சிலிப்பு ஏற்படும். இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா படம் ஒளிபரப்பாகும்போது அந்தக் காட்சிக்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். 

இந்த வெற்றிக்குப் பிறகு ரஜினி மிகவும் நிதானமாகிவிட்டார். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடிப்பது என முடிவெடுத்தார். பாட்ஷாவின் வெற்றியைத் தாண்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. 

பாட்ஷாவுக்குப் பிறகு கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் முத்து படம் வெளிவந்தது. ரஹ்மான் பாடல்கள் கிராமத்துக் கதைக்குப் புதிய வண்ணம் அளித்தன. மீனாவை ரஜினி சீண்டும் காட்சிகளை அரசியல் பின்னணியுடன் ரசிக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். 

1997: சுமாரான வெற்றி!

பாட்ஷாவின் வெற்றியால் 1996-ல் ரஜினி நடிப்பில் ஒரு படமும் வெளிவரவில்லை. 1997-ல் சுந்தர்.சி இயக்கத்தில் அருணாசலம் படத்தில் நடித்தார் ரஜினி. சுமாரான வெற்றியை கிடைத்தது.  

1999: பாட்ஷாவுக்கு ஈடு கொடுத்த படையப்பா!

படையப்பா படத்தில் ரஜினி - செளந்தர்யா

மீண்டும் ஒருவருட இடைவெளிக்குப் பிறகு படையப்பா படத்தை 1999-ல் வெளியிட்டார் ரஜினி. பாட்ஷாவுக்கு நிகரான ஒரு வெற்றியை ரஜினிக்குத் தந்த படம் இது. கோடை விடுமுறை சமயத்தில் வெளியானதால் ஏப்ரல், மே மாதங்கள் முழுக்க எல்லாத் திரையரங்குகளிலும் மக்கள் வெள்ளத்தைக் காண முடிந்தது. ரஜினி எதிர்பார்த்த ஒரு வெற்றியை கே.எஸ். ரவிகுமார் அளித்ததால் அடுத்த படத்துக்கு சற்று பொறுமையாகவே இருந்தார் ரஜினி. பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2002-ல் தான் பாபா வெளியானது.

90களில் அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா என இமாலய வெற்றிகளை அடைந்தார் ரஜினி. ஏழு வருட இடைவெளியில் மூன்று மெகா ஹிட்கள் என்பது எந்த ஒரு நட்சத்திரத்தையும் தொட முடியாத உயரத்துக்கு அழைத்துச் செல்லும். அதுதான் ரஜினிக்கும் நடந்தது. அதன் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது. ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக உள்ளதால் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

45 வருடங்களுக்குப் பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, அதிகச் சம்பளம் வாங்கும் நடிகராக, அதிக ரசிகர்களைக் கொண்டவராக உள்ளார் ரஜினி. இந்தியாவின் பிரபலமான மூன்று நடிகர்கள் என்றொரு பட்டியல் போட்டாலும் அதில் ரஜினிக்கு நிச்சயம் இடம் உண்டு. இதற்கெல்லாம் முக்கியக் காரணமே 90களில் வெளிவந்த படங்கள் தான். ரஜினியால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மகத்தான காலம் அது. 

Tags : Rajinikanth Phalke movies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT